கொடி பிடிக்க வா! கோஷம் போட வா..! குடியிருப்பு கேட்காதே..!

- அ.செ.புவனேசுவரன்

‘குடிசை பகுதிகளை கொளுத்து இல்லை இடித்து தரைமட்டமாக்கு’ என கடந்த 22 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளன..! சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) என்கிற பெயரில் ஒருங்கிணைந்த கூவம் ஆறு மறுசீரமைப்பு பணியின் கீழ், கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள ஏழை,எளிய மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகளாக அறிவித்து அகற்றி, இந்த மக்களை சென்னைக்கு வெளியே புற நகரில் வீசி எறிந்து வருகிறார்கள்!  .

அந்தப் பட்டியலில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரத்தை 247 குடியிருப்புகளை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கியுள்ளனர்.

25 ஆண்டுகளாக இங்கிருந்து பல இடங்களுக்கு வேலைக்கு சென்று வந்த நாம் இனி எங்கு செல்லமுடியும் என்ற பதட்டமும், அரசு கூறிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற சொல்பிரயோகங்களும் அந்த மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளன! பகலில் கொளுத்தும் வெயிலிலும், இரவில் கொட்டும் பனியிலும் அவர்கள் இடிக்கப்பட்ட சிதிலங்களில் அமர்ந்திருக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன!

2018 – 2019 அரசாணைப்படி, புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்ந்தாலே பட்டா பெறும் உரிமை இருக்கிறது! இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, ஆக்கும் கரங்களைக் கொண்டவர்கள்! சென்னை மாநகரத்தின் உண்மையான இயங்கு சக்தியே இந்த மாதிரியான எளிய மனிதர்கள் தான்! சென்னை உருவாக்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் இந்த மக்களின் பங்களிப்பு உள்ளது.

ஆற்றின் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனில், பங்கிங்காம் கால்வாயைச் சுருக்கி சென்னை வேளச்சேரி-கடற்கரை வரை பறக்கும் இரயில் பாதைக்கான கட்டமமைப்புகள் இரயில்வே ஸ்டேஷன்களையும்,. சென்னை மதுரவாயல்- துறைமுகம் மேம்பாலம் ஓட்டுமொத்த கூவத்தில் பாதி ஆற்றை மண்கொட்டி தூண்களை நிறுவி தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2015 சென்னை மூழ்க இதுவும் ஒரு காரணம். அரசின் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பதற்குச் சான்று தான் 6000 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இன்று 600 ஏக்கராக மாறி உள்ளது என்பதும் கொருக்குப்பேட்டை குப்பை மேடும், துரைப்பாக்கம் குப்பை மேடும்…ஆக்கிரமிப்பு இல்லாமல் வேறென்ன..?

தொல்காப்பியப் பூங்கா முதல், மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக கல்லூரிகள், ராமபுரம் மியாட் மருத்துவமனை வரை பல ஷாப்பிங் மால்களும், தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஆற்றின் பாதையில் ஆக்கிரமிப்பாகத் தெரியவில்லையா..?

அவ்வளவு ஏன்..?  சென்னை விருகம்பாக்கம்  ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கால்வாயை ஆக்கிரமித்து  கட்டப்பட்டவையே!

படித்தவர்கள், பணம் உள்ளவர்கள் மிக பிரம்மாணட் கட்டிடங்களை ஆற்றங்கரைகளில் நிறுவ எப்படி அனுமதித்தீர்கள்..?

2019 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக பொதுப் பணித்துறைக்கு கடும் கண்டணம் தெரிவித்து ரூபாய் 100 கோடி அபராதம் விதித்தது. ”நீர் நிலைகளை, தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.ஆனால், அதனை அகற்றி, காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகமே, தானும் அவற்றை ஆக்கிரமித்துள்ளதுதான் கொடுமை. விலை மதிப்பில்லாத நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, அரசுத் துறைகளின் கட்டுமான பணிகளுக்காக, நீர் நிலைகளை தமிழக அரசு ஒதுக்கி வருவது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது” என்று சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது!

குடிசைகள், தெருக்கடைகள் ஏன் உருவாகிறது. சென்னையின் ஒரு வீடு வாடகைக்கு எடுப்பது என்பது அத்தனை எளிதாக என்பது தொண்ணூறுகளில் இருந்தது போன்று இல்லாததே காரணம். குடிசை மாற்று வாரியம் – 1971 உருவாக்கப்பட்ட திட்டம் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் மட்டுமே அதிகம் குடியிருப்புகளை உருவாக்கியதைக் காணலாம். அதே போன்று வீட்டு வசதி வாரியச் சட்டம் – 1961 –ம் அதிகம் சென்னையில் தான் பணியாற்றி இருக்கிறது.    காரணம் ஒன்று தான். சென்னை தமிழகத்தின் பிற நிலமற்ற குடிகள் விவசாயம் பொய்த்துப் போன பின் தொழிலாளர்களாக பிழைத்துக் கொள்ளலாம் என்று வந்ததன் விளைவே இந்த குடியிருப்புகள்..! வீடற்றவர்கள் ஆற்றங்கரையிலும், அரசு பொது நிலத்திலும் வீடு கட்டி வாழத் துவங்குகிறார்கள்.

அங்கு குடிசைகள் போடத் துவங்கும் போது உள்ளூர் ஆளும் கட்சிக்காரர்கள் எதிர் கட்சிக்காரர்கள் என்றில்லாமல் கூட்டணி அமைத்து பணம் பெற்றுக் கொண்டே சென்னையின் பல நீர்நிலைகள், ஆறுகள், ஏரிகள், அரசு பொது நிலங்கள் குடிசைகளாக மாறி, குடிநீர், மின்சாரம் என்று வழங்கப்பட்டு குடியேறியவர்கள் உழைத்து ஒரளவிற்கு மேலே வந்தவுடன் செங்கல் கட்டிடங்களாகக் கட்டிக் கொள்ளத் துவங்குகிறார்கள்.

இதற்கு அரசு தான் காரணம். விவசாயம் வீழ்வதற்கான சட்ட,திட்டங்களும், அரசு பரவலாக்கிய தொழிற் முன்னேற்றம், தொழிற் பூங்காக்கள், வாகன உற்பத்தி என்று தொழிற் புரட்சியை சென்னை போன்ற நகரங்களைச் சார்ந்து  உருவாக்கி வைத்திருப்பதுமே காரணம்.

அதைவிட அரசு நிலங்கள், ஆற்றின் கரைகள், ஏரிகள் என்று எந்த ஆக்கிரமிப்புகளும் ஏழைகளைத் தான் முதலில் அகற்றுகிறது. பணக்காரர்களுக்கு மறு வரையறை என்ற சட்டத்தின் வாயிலாக சட்டத்திற்கு புறம்பாக, அனுமதி வாங்கியதை விட பல விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அரசால் சட்டத்தால் மறு வரையறை செய்யப்படுகிறது. ஆனால் 1970 முதல் இன்று வரை ஏழைகள் இந்த குடியிருப்புகளில் இருந்து சென்னைக்கு வெளியே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற சதுப்பு நிலங்களிலும் குடியமர்த்தப் படுவது தான் பெருந்துயர்.

1999 முதல் இந்த துயரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. 2005, 2010 ,2015 மற்றும்  2019 என்று ஒவ்வொரு பெரு மழைக் காலத்திலும் முதலில் பாதிக்கப்படுவது இது போன்று இடம் பெயர்த்தப் பட்டவர்கள் தான். சரி மழை காலம் தானா என்றால் குடியேறியவர்களின் பிழைப்பு இடம் சென்னை, அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி கல்லூரி சென்னையில். காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இன்றளவும் அந்தப் பெண்களும், ஆண்களும் படிக்கும் பிள்ளைகளும் தினமும் 25-30 கிலோ மீட்டர் பயணித்து தான் சென்னைக்கு வந்து தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகள் படித்து முன்னேற வேண்டும். வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னை சிந்தாதரிப்பேட்டையில் கால்வாயை ஒட்டி வாழ்ந்து வந்த 700 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். பிள்ளைகளின் தேர்வு நேரமாக உள்ளது. அவகாசம் கொடுங்கள் என கேட்கப்பட்டதைக் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் இடித்து தரைமட்டமாக்கினார்கள்!

சிங்காரச் சென்னை என்பது ஏழைகளற்றது என்பதை மக்களின் தரம் உயர்த்துவது என்பதை மாற்றி ஏழைகளை சென்னையை விட்டு அகற்றுவது என்பது என்று அரசு மாற்றிக் கொண்டதன் விளைவே, சிந்தாததரிப்பேட்டை, தீவுத்திடல் சத்தியவாணி நகர் அகற்றம், தலைமைச் செயலகம் எதிரில் 18.5 ஏக்கர் நிலப்பரப்பில் குடிமக்களை அகற்றியது என்று பல கட்டங்களாக தற்பொழுது அரும்பாக்கம் இராதாகிருட்டிணன் நகரில் வந்து நிற்பது. இந்த மக்களிடம் பேசினால் தாங்கள் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்படுகிறோம் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.

‘நகரத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இம்மக்களுக்கு நகரத்திலேயே வீடுகள் கட்டிக்கொடுக்காமல் தொலை தூரங்களுக்கு அவர்களை தூக்கி அடிப்பதற்கு பெயர் நவீன தீண்டாமையன்றி வேறல்ல..! நகரத்திற்குள் திடீர்,தீடீரென ஆபீசர்கள் குடியிருப்பு,காவலர்கள் குடியிருப்பு எல்லாம் எப்படி எழ முடிகிறது..?

யானை போவது தெரியாதாம் பூனை போவது தெரியுமாம் கதையாக ஆறு, ஏரி, குளங்கள் என்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 1950 வரை இருந்த வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை பதிவேடுகளை இந்த அரசு ஆராய்ச்சி செய்து ஏழை எளியோரை அகற்றி பல பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நொளம்பூர் ஏரித் திட்டம் என்ற மனை விற்பனைகள் என்று நிகழ்த்திய சட்டப்பூர்வ ஆக்கிரமிப்புகள் கொஞ்சமா.. நஞ்சமா..?

வசதியான வர்க்கம் வாழ்வதற்குத் தானே  ஆட்சிகளும், சட்டங்களும்..!

சட்டம் சிலந்தி வலை போன்றது. சிறு பூச்சிகள் சிக்கி அழிகின்றன, திமிங்களங்களோ சட்டங்களையே அறுத்து திமிறித்  திளைக்கின்றன!

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டப்படி அரசு கையகப்படுத்திய 1500 ஏக்கர் நிலம், எங்கே போனது சென்னையில் தானே இருக்கிறது.. அந்த இடங்களில் லட்சக்கணக்கில் வீடுகளைக் கட்டலாமே. தேசிய வீட்டுவசதிக் கொள்கை, ராஜீவ் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டக் கொள்கை என அனைத்து கொள்கைகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு நகருக்குள்ளேயே வீடு கட்டித் தரச் சொல்லி உள்ளனவே! இதையெல்லாம் ஏன் அமல்படுத்த முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு,கொடி பிடிக்கவும்,கோஷம் போடவும்,போஸ்டர்கள் ஒட்டவும் மட்டுமே இந்த மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஜீவித்திருப்பதற்கான அடிப்படை வாழ்வாதரங்களை கூட இவர்களால் உத்திரவாதப்படுத்த முடியவில்லையே!

சென்னை நகரப் பரப்பளவில் குடிசைப்பகுதி என்பது அதிகபட்சம் ஒன்றிரண்டு சதவிகிதம் மட்டுமே! அதை அகற்றி அடுக்குமாடி வீடு கட்டும் போது அரைசதவிகிதம் போதுமானது. அதைக் கூட  ஏழைகளுக்குத் தர மனமில்லை என்றால், இந்த பூமிப் பந்து சுழல்வதை விட சுக்கு நூறாக உடைந்து நொறுங்கட்டுமே!

கட்டுரையாளார்; அ.செ.புவனேசுவரன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time