குடியரசுத் தலைவர் வந்தார், கருணாநிதி படத்தை திறந்தார்! வானாளவப் புகழ்ந்தார்! ஆக, மத்திய பாஜக அரசும், மாநில பாஜக கட்சியும் அங்கீகரித்த ஒரு விழாவாக நடந்தது! – தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்! ஆனால், 1920 ல் அமைந்த நீதிக் கட்சி அரசின் தொடக்கமே தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தொடக்கமாக ஏன் கருத முடியாது என்பதன் பின்னணியில் பல சுவாரசியமான சுட்டெரிக்கும் உண்மைகள் உள்ளன.
கருணாநிதி 1937 ஐத் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாகக் கொண்டார்! அதனால் தான் 1997 ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வந்த சூழலில் அறுபதாம் ஆண்டுவிழாவை நடத்தினார். ஜெயலலிதா சுதந்திரம் பெற்ற பிறகு அரசமைப்பு சட்டம் உருவானதை கணக்கிட்டு 1952 ஐத் தான் தமிழ்நாடு சட்டமன்றம் உருவானதாகக் கருதி 2012 ல் அறுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடினார். தற்போது ஸ்டாலினோ, 1921 ஐ கணக்கிட்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார்.
நீதிக் கட்சியின் ஆட்சியை ( 1920 ) தொடக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவை கருணாநிதியே கொண்டாடவில்லை. 1970-71 ல் அவர் தான் தமிழகத்தின் முதல்அமைச்சராக இருந்தார். அப்படி அவர் கொண்டாடதற்கான முக்கிய காரணம், முதல் நீதிக் கட்சியின் முதல் பிரதம அமைச்சரும் மற்ற அமைச்சர்கள் அனைவருமே தெலுங்கர்களாக இருந்ததும், அதில் தமிழர்களுக்கு முற்றிலும் பிரதிநிதித்துவமே இல்லை என்பதால் நடேசன், சுப்பராயன் உள்ளிட்டவர்கள் நீதிக்கட்சியில் இருந்து விலகிய அளவுக்கு நிலைமை சென்றதுமாகும்.
அதுவும் முதல் 17 ஆண்டுகளில் சுப்பராயலு ரெட்டியார், சர்.பிட்டி.தியாகராயர், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, குர்மா வெங்கிட ரெட்டி போன்ற ஆந்திர பகுதியை சேர்ந்த அல்லது தெலுங்கு வம்சா வழியில் வந்தவர்களே பெரும்பாலும் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாததாகும். (இந்த கட்டுரையின் முகப்பை அலங்கரிப்பவர்கள்) ஆக, தமிழர்களே இல்லாத ஒரு அமைச்சரவையைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தை தொடக்கமாக வைத்தும், பெரும்பாலும் தெலுங்கர்களே தொடர்ச்சியாக பிரதம அமைச்சர்களாக இருந்ததுமான ஒரு மதராஸ் சட்டமன்றத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா என்று எப்படி கொண்டாட முடியும்? இந்தக் கூத்து தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் நடக்காது!
ஏனென்றால், அன்றைக்கு இந்தியாவில் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி சென்னை மகாணத்தில் மட்டும் சட்டமன்றம் தோற்றுவிக்கப்படவில்லை. பம்பாய், வங்காளம், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஒரிசா, அஸ்ஸாம் ஆகிய இடங்களிலும் சட்டமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் எதுவுமே இந்த நூற்றாண்டை ஏன் கொண்டாடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். காரணம், அன்று அடிமை ஆட்சியின் கீழ் அதிகாரமற்ற ஒரு அமைப்பாக – இரட்டை ஆட்சிமுறையில்- அமைக்கப்பட்டது தான் அந்த சட்டமன்றம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு புகழ்பாடி, உரிமைகளையும், பதவி வாய்ப்புகளையும் வேண்டிக் கேட்கும் அமைப்பாகத் தான் அது இருந்தது.
அமைச்சர் எ.வ.வேலு இந்த நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான நியாயத்தை சொல்லும் போது, ”1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டப்பேரவை தொடங்கி வைக்கப்பட்டது ” என்று சொன்னார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கோமகன் என்றழைக்கும் அந்த அடிமை மரபு இன்னும் நம்மிடமிருந்து விட்டுப் போகவில்லை என்பதையே அவரது விளக்கம் காட்டுகிறது.
சரி, 1937 ஐ தொடக்கமாக வைத்து கருணாநிதி சட்டமன்ற விழாவை கொண்டாடியதற்கு திமுகவின் கொள்கை விளக்க செம்மல் எ.வ.வேலு தரும் விளக்கத்தை பார்க்கலாம்.
”1937-ம் ஆண்டில் மதராஸ் மாகாணச் சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது என்பதன் அடிப்படையில் 1989-ம் ஆண்டில் சட்டப்பேரவையின் பொன்விழா கொண்டாடப்பட்டது.”
ஆக, அவரே, மதராஸ் சட்டமன்றம் என்ற சொற்பிரயோகத்தை வெளிப்படுத்திய வகையில் அன்று அது தமிழ்நாட்டுகான சட்டமன்றமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். அதாவது, ஏற்கனவே இருந்த மதராஸ் சட்டமன்றத்தில் மேலவை என்ற அவை கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகழ்வை எப்படி தொடக்கமாக கொள்ள முடியும்..? மேலவை சேர்க்கப்பட்டது அவ்வளவு முக்கிய நிகழ்வு என்றால், அந்த மேலவையை எம்.ஜி.ஆர் ஒழித்துகட்டிய பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் ஏன் மீண்டும் புதுப்பிக்கவில்லை? ஏதாவது ஒரு சாக்கிட்டு விழாக்களை கொண்டாட வேண்டும் என்பதை தவிர நியாயமான காரணம் எதுவுமில்லை.
சரி, ஜெயலலிதா 1952 ஐ தொடக்கமாக வைத்து தமிழ் நாடு சட்டமன்ற 60 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடியதற்கு என்ன நியாயம் சொல்ல முடியும்..? சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் சட்டம் உருவான பிறகு 1952 ல் அமைந்த ராஜாஜி அமைச்சரவையை ஜெயலலிதா தொடக்கமாகக் கொள்கிறார். அப்போதும் அது மதராஸ் சட்டமன்றமாகத் தான் இருந்தது! அதில் இருந்த மொத்தமுள்ள 15 அமைச்சர்களில் ஆறு பேர் தான் தமிழர்கள். மற்ற ஒன்பது பேரில் தெலுங்கர் -6, கர்நாடகத்தினர் -2. மலையாளி -1.ஆக, அதுவும் சுதந்திரத்திற்கு பிறகான மதராஸ் சட்டமன்றத்தின் 60 ஆண்டுவிழாவாகத் தான் கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். இப்படியெல்லாம் கொண்டாடும் போது அந்தந்த மாநில முதல்வர்களையும் கூட அழைத்திருக்கலாம்.
கருணாநிதி தனக்கு செளகரியமான ஒரு ஆண்டை தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாக கொண்டாடினார். அதற்கு ஏட்டிக்கு போட்டியாக ஜெயலலிதாவும் ஒரு ஆண்டை நிர்ணயித்துக் கொண்டாடினார். ஸ்டாலினோ ஒரு ஆண்டை நிர்ணயித்துக் கொண்டாடுகிறார். ஆட்சிக்கு யார் வருகிறார்களோ, அவரவர்கள் தங்கள் செளகரியத்திற்கு ஏற்ப தமிழ்நாடு சட்டமன்றம் உருவான வரலாறை மாற்றப் பார்க்கிறார்கள். இந்த மூன்று நிர்ணயிப்புகளுமே உண்மைக்கு மாறானவையாகும்.
உண்மையில் தமிழ்நாடு என்ற மாநிலமே 1956 ல் தான் உருவாக்கப்பட்டது. அதாவது மதராஸ் மாகாணத்தில் இருந்த ஆந்திரா 1953 ல் முதன்முதலாக பிரிந்து தனி மாநிலமாகிறது. அதற்கு பிறகு தான் கேரள, கர்நாடக பகுதிகள் தவிர்த்த அன்றைய தமிழக நிலப்பரப்பிற்கு ஏற்ப 205 சட்டமன்ற தொகுதிகள் கண்டறியப்படுகின்றன. இதற்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் அமைந்த முதல் சட்டமன்றமான 1957 தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாகும்.
இதை ஒத்துக் கொள்ள ஜெயலலிதாவின் இந்திய தேசியப் பார்வை ஒத்துக் கொள்ளவில்லை. அதே போல இதை ஒத்துக் கொள்ள கருணாநிதியின் திராவிடப் பார்வை இடம் தரவில்லை.
ஆனால், வரலாறு என்பது நிகழ்ந்து விட்ட ஒன்று! அதை, மன்னர்களோ, ஆட்சியாளர்களோ மாற்ற முடியாது. தென் இந்திய மாநிலமான ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் கேரளாவிலும் அந்தந்த மாநிலம் உருவான நாளை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி தமிழ்நாடு உருவான வரலாறை விமரிசையாக கொண்டாடுவதில்லை. தமிழ்நாடு என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஐயா சங்கரலிங்கனார், தமிழ் நாட்டிற்கான எல்லை போராட்டங்களை நடத்திய ம.பொ.சி, நேசமணி உள்ளிட்ட தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவுகூறாமல் தமிழ் நாட்டிற்கான எந்த விழாவும் முழுமை பெற முடியாது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத் திறப்பிற்கான விழா என்றால் குடியரசுத் தலைவர் வருவாரோ மாட்டாரோ என்ற நினைப்பில் கூட அதிரடியாக 1920 ல் அமைந்த நீதிக் கட்சியின் ஆட்சியை ஸ்டாலின் தொடக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு என கணித்திருக்க கூடும். இதில் என்ன தவறு இருக்க போகிறது என்று கூட நினைத்திருக்கலாம்.
அந்த முதல் சட்டமன்றம் என்பது அன்றைய மதராஸ் மாகாணத்தில் கல்வி அறிவு, சொத்து உள்ளவர்கள் மட்டுமே –அதுவும் பெண்கள் தவிர்த்த ஆண்கள் மட்டுமே – ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த சட்டமன்றம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஒட்டுமொத்த மதராஸ் மாகாணத்திலுமே மொத்தம் 16,555 பேர் மட்டும் தான்! அதாவது, மொத்த மக்கள் தொகையில் 2.9% பேர்தான் வாக்களிக்கும் தகுதி பெற்று இருந்தனர். அதிலும் ஓட்டளிக்க வந்தவர்கள் 25% த்தினர் தான். அதாவது, மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்தனர். இப்படி, விரல்விட்டு எண்ணத்தக்க, மேல்தட்டு மக்களால் ஓட்டு போடப்பட்டு, மேல்தட்டு மக்களை மட்டுமே தேர்ந்தெடுத்த சட்டமன்றத்தை, எப்படி மக்களை பிரதிபலிக்கும் சட்டமன்றமாக கொள்ள முடியும். ..? இதனால், நீதிகட்சி அரசை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் ஆகாது. அது, சமூக நீதிக்கான தொடக்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது தமிழ் நாடு சட்டமன்றத்திற்கான தொடக்கமாக முடியாது!
Also read
அந்த முதல் சட்டமன்ற அமைச்சரவையில் தமிழர்களுக்கோ, பிற்படுத்தப்பட்ட, மற்றும் தாழ்தப்பட்டவர்களுக்கோ, இஸ்லாமியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கோ, பெண்களுக்கோ பிரதிநிதித்துவம் இல்லை. ஏனெனில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒரு பிரதம அமைச்சர், இரண்டு அமைச்சர் ஆகிய பொறுப்புகளை மட்டுமே அனுமதித்தனர். ஆகவே, சுதந்திரம் பெற்று, அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு என்ற தனி நிலப்பரப்பு வரையறை செய்யப்பட்ட பிறகான சட்டமன்றமே தமிழ்நாட்டிற்கான முதல் சட்டமன்றமாகும்! இந்த யதார்த்தத்தை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை. ஆனால், வரலாறு நிகழ்ந்துவிட்ட ஒன்று. அதை ஒரு போதும் மாற்ற முடியாது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
*திருக்குறள் ஒப்புவித்து, 7 மற்றும் 10 வயது இளம் சிறுவர்கள் உலக சாதனை !*
*1330 குறளையும் 30 நிமிடத்திற்குள் மனப்பாடமாக ஒப்புவித்து ஒரு லட்சம் ரூபாய் பரிசை வென்றனர்!!*
*திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!!!*
*தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலதிபர் வி.ஜி சந்தோஷம் பரிசளித்து பாராட்டு !!!*
✍️MGR TV ஹமீது✍️
https://m.facebook.com/story.php?story_fbid=1228381614292895&id=100013632037906
———————————-
*30 நிமிடங்களுக்குள் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனைகளை படைத்துள்ள 2 சிறுவர்கள் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.*
இது குறித்த விபரம் வருமாறு…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கடலாடிதாங்கலை சேர்ந்த ஆறுமுகம், சுசான்னா இல்டா தம்பதியரின் மகன்களான 10 வயதுடைய ஆபிராம் மற்றும் ஜோஸ் மற்றும் 7 வயதுடைய அருணிஷ் ஷேண்டோ ஆகியோர்
கண்டமங்கலம் ஒன்றியம், நவமால் காப்போரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளி படங்களோடு
திருக்குறளையும் தினமும் விரும்பி படித்து வந்ததுடன்,
திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிப்பதிலும் தனி திறமை பெற்றுள்ளனர்.
சிறுவர்களிடம் காணப்பட்ட இந்த தனி திறமையை கண்டறிந்த, அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு ,
விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து
திருக்குறள் மனப்பாடமாக ஒப்புவிக்கும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி ,
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (ஆகஸ்டு-3/21) விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் கலைமாமணி வி. ஜி சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஆறுமுகம்,மற்றும் பேராசிரியர் வேல்முருகன், ஆசிரியர் தமிழ் தம்பி, அருண் தாமஸ் ஆகியோர் கண்காணிப்பாளராக முன்னிலை வகித்தனர்.
10 வயது சிறுவன் ஆபிராம் ஜோஸ், 33.05 நிமிடத்தில் 1330 குறள் களையும் மனப்பாடமாக ஒப்பித்தான். அதேபோல்
7 வயதுடைய அருணிஷ் ஷேண்டோ 25.47 நிமிடங்களில் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனைகளை படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான், சிறுவர்கள் இருவருக்கும் பாராட்டு சான்றிதழையும், விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் விஜி சந்தோஷம் சார்பில் அளிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் நோக்கத்துடன் திருக்குறள் மனப்பாடமாக ஒப்புவிக்கும்
உலக சாதனைகளை நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
@
MGR TV NEWS
99410 86586