மோசடியை அரங்கேற்ற மோடி கொண்டு வந்ததே பிரதமரின் கிசான் திட்டம்!

-ஜெயகாந்தன்

எந்த ஒரு திட்டத்திலும் யார் பலன் பெறத் தகுதியானவர்கள்,தகுதியற்றவர்கள் என்பது வேளாண் அதிகாரிகளுக்கு துல்லியமாகத் தெரியும்! ஆனால்,மோசடி செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்ட திட்டமாக இதை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் நினைத்து செயல்பட்டதாகத் தான் தெரிகிறது

இந்த திட்டத்தின் மூலகர்த்தா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்! அவர் தான், தன் தேர்தல் வாக்குறுதியில் சிறு,குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நான்காயிரம் இலவசமாக தரப்படும் என அறிவித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதைத் தான் மோடி தேர்தலுக்கு முன்பே கொடுத்து அடுத்த ஆட்சிக்கு அடித்தளம் போடும் எண்ணத்துடன் அறிவித்தார். சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்ட தவணையாக இரண்டாயிரம் தரப்பட்டது.தற்போது வரை ஐந்து முறை தரப்பட்டுள்ளது.ஆனால்,ஒவ்வொரு முறையும் – நான்கு மாத இடைவெளியில் – பலன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பல லட்சங்கள் கூடியது.

மத்திய அரசால் சிறு குறு விவசாயிகளுக்காக வருடத்திற்கு 6000/- மூன்று தவணைகளாக வழங்கப்படுவதே இந்த திட்டமாகும்! வேளாண்துறை,வருவாய்த் துறை,தோட்டக்கலைதுறை ஆகிய மூன்று துறைகள் இதில் சமந்தப்படுகின்றன.முதலில் இந்த திட்டத்தை வருவாய்த் துறை ஆணையர் திரு. சத்யகோபால் வருவாய்துறையின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திடீர் என்று வேளாண்மை முதன்மைஆணையர் திரு. கஜன் தீப் சிங் பேடி வேளாண்மைத்துறையின் மூலமே இதை செய்வார்கள் என்று அறிவித்து விட்டார்.

அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் தேர்தலுக்கு முன்பு துறை அதிகாரிகளை வலுக்கட்டாயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு வைத்து விவசாயிகளை இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க ஆணையிடப்பட்டது.. இந்த அழுத்தத்தால் வேளாண்மை துறையில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் , வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை இயக்குனர் கூட்டு சேர்ந்து ஒரு நபருக்கு 2000 – 3000 வரை கமிஷனாக தனக்கு தெரிந்தவர்கள் , சொந்தக்காரர்கள், நிலம் அற்ற விவசாயிகள் என்றுசேர்த்து பண வேட்டையாடி இருக்கிறார்கள்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20000 – 30000 பேர் வரை தகுதியற்ற நபர்களுக்கு இந்த PM கிசான் பணம்  முறைகேடாகப் போய்சேர்ந்திருக்கிறது..

வட மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் ஆட்களும்,பா.ம.கவினரும் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தகுதியில்லாத , நிலமற்ற பலர் பயனடைந்திருக்கிறார்கள். ஒரே வீட்டில்  அப்பா, மனைவி , 7 ம் வகுப்பு படிக்கக்கூடிய பையன் என்று மொத்த குடும்பமும்  பணம் பெற்று இருக்கிறார்கள் .  வேளாண்மை துறையில் அலுவலகத்தில் வேலைபார்க்ககூடிய ஊழியர்கள் கூட தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் இந்த  தொகையை முறைகேடாகப் பெற்று இருக்கிறார்கள் . சில தகுதியான விவசாயிகள் பதிவு செய்து இருந்தாலும் அவர்களுக்கு   பிரதமரின் இந்த கிசான் நிதிஉதவி அளிப்பதில்லை.. 2000 -3000 வரை பேரம் பேசி கமிஷன் பணம் கொடுத்தால் தான் இவர்கள் அந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து ,பணம் விடுவிப்பார்கள்!

காசுக்காக எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடுவர்களாக வேளாண்மைத் துறையினர் உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறையின் மானம் காற்றில் பறக்கிறது. இதே போல் மற்ற திட்டங்களிலும் மோசடி நடந்திருக்கும் தானே என்று சந்தேகம் எழுகிறது?.  குறிப்பிட்ட 13 மாவட்டங்கள் என்றன்றி தமிழ்நாடு முழுக்க இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

பி எம் கிசான் முறைகேட்டில்  AAO முதல் மந்திரி வரை தொடர்பு இருக்கிறது.. வருடந்தோறும் ஒவ்வொரு AAO விடம் பணம் வசூலித்து உயர் அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி வீடு வரை இந்த பணம் செல்கிறது. கட்டாயப்படுத்தியும் சில இடங்களில்  AAO களிடம் பணம் வசூலித்து மாவட்ட வாரியாக சங்கங்கள் வாயிலாக கொண்டு கொடுக்கிறார்கள்.  இந்த முறைகேட்டில் NADP திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ள BTM /ATM அவர்களின் பங்கு முக்கியமானது.. !

இவர்களில் சிலர் லட்சக்கணக்கில் இந்த திட்டத்தின் மூலம் லஞ்சம் பெற்று இருக்கிறார்கள்.  இவர்களோட பணியே ADA  க்களுக்கு எடுபுடி வேலை பார்ப்பது , கணினி வேலை செய்து தருவது , இன்னும் சிலர்  சொட்டுநீர் பாசன ஏஜென்சி எடுத்துக்கொண்டு, வேளாண் துறையிலும் வேலைபார்த்துக்கொண்டே , தனியாக தொழிலும் செய்கிறார்கள். இதற்கு  அந்த வட்டார வேளாண்மை அதிகாரியும் உடந்தை! பல வேளாண் ஊழியர்களும் தன்னோட குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் இந்த பி.எம். கிசான் உதவி தொகையை முறைகேடாக பெற்று இருக்கிறார்கள்.

வேளாண்மை முதன்மை ஆணையர் அவர்களின் அதீத ஆர்வக்கோளாறால் எந்த திட்டத்தையும் முழுமையாக செய்யமுடியவில்லை என்று துறையில் இருக்கும் AAO க்கள் மன உளைச்சலில் உள்ளார்கள். உதாரணத்திற்கு பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசன திட்டம் , மண் பரிசோதனை என்று ஒரு திட்டத்தை அடுத்து இன்னொரு திட்டம் என மாற்றி மாற்றி கொடுத்து எந்த வேலையையும் அவர்களால் ஒழுங்காக செய்யமுடியாத நிலைமை.

AAO / AO/ADA  அவர்களின் பணி கிராமந்தோறும் சென்று விவசாயிகளை சந்தித்து தொழிநுட்பத்தை எடுத்து கூறி சிறப்பான முறையில் விவசாயம் செய்ய வைப்பது.. ஆனால் அவர்கள் இப்போது செய்யும் வேலை தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு பிரிமியம் தொகை சேகரிப்பது , தனியார் சொட்டு நீர் பாசன நிறுவனங்களுக்கு புதிய விண்ணப்பம் வாங்கி கொடுப்பது என்று வேலை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சில வேளாண் ஊழியர்கள்  சொட்டுநீர் பாசன முகவாண்மையும் தன்னோட குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் எடுத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்..!

தனியார் நிறுவனங்களை வேளாந்துறைக்குள் நுழைத்ததன் விளைவாக, துறை ஊழியர்கள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். PM கிசான் ஊழலை விட மலையளவு ஊழல் மற்ற திட்டங்களில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.  இவர்களால் விவசாயிகளுக்கு எந்தவித தொழில்நுட்பமும் போய்ச் சேர்வதில்லை.  வருகிற திட்டத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது? என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்.  திட்டத்தோட பணத்தை செலவு செய்வது என்கிற ஒற்றை இலக்கை வைத்துதான் ஆணையர் செயல்படுகிறார் என்று புலம்புவது கேட்கிறது.  அதில் முறைகேடு இல்லாமல் தகுதியான நபர்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.  ஒரு காலத்தில் நேர்மையான IAS யாக அறியப்பட்ட பேடி இப்போது அரசியவாதிகள் ஆட்டிவைக்கும் எடுபுடியாக மாறிவிட்டதுதான் வேதனை!

உண்மையில் விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது உழைக்காமல் கிடைக்கும் பணத்தையல்ல! விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான நீர் மேலாண்மைத் திட்டங்கள்,இயற்கை உரங்கள்,விவசாயத்திற்கேற்ற சூழல்,விளை பொருளுக்கு நல்ல விலை…அவ்வளவே! இதை தந்துவிட்டால்,அரசுக்கு விவசாயி பிச்சை போடத் தயாராகிவிடுவான்!

இந்த திட்டத்தில் கூட ஊழலை தவிர்க்க வட்டார வாரியாக சிறுகுறு  விவசாயிகள் ஆதார், குடும்ப அட்டை , சிட்டா  மற்றும் கைரேகை பதிவு செய்திருக்கலாம்.

தேவையான விவசாயிகள் நேரடியாக அவர்களே சென்று பதிவு செய்யக்கூடிய நடைமுறை வேண்டும்.. இதில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த கூடாது.

இணையவழி சான்று சரிபார்ப்பு முறையாக நடைபெற்று இருந்தால் ஊழலுக்கே வாய்ப்பில்லை!

வேளாண்மைத்துறை மக்களிடம் நெருங்கி பழக்கக்கூடிய ஒரு நம்பிக்கையான துறையாகும்! அந்த துறையின் மீதே இவ்வளவு பெரிய முறைகேடு எழுந்திருப்பது அவர்களின் மீதான நம்பிக்கையை நிலைகுலையசெய்திருக்கிறது. நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால்,ஆளும் அரசாங்கம் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதற்கில்லை!

ஏனெனில்,உயர்மட்ட அங்கீகாரத்துடன் தான் அனைத்து ஊழல்களும் நடந்துள்ளன! நான்கு மாவட்டத்தின் இணை இயக்குனர்களை இடமாற்றம் செய்வதாலோ எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை! இடைத் தரகர்கள்,  கம்யூட்டர்,இணையத்தை செயல்படுத்தியவர்கள் என்ற வகையில்18 பேரை கைது செய்கிறார்கள்..! ஆனால்,இவர்களை இயக்கிய அதிகாரிகள்,ஊழியர்களொருவருமே தண்டிக்கப்படவில்லை!  அப்பாவிகளான தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இப்போது குற்றம் செய்தவர்களும்,குற்றத்தை செய்ய கட்டளையிட்டு ஆதாயம் அடைந்தவர்களும் விசாரணை அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.அதாவது திருடனுக்கு நீதிபதி பதவி தரப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தகுதியற்ற முறையில் பணம் பெற்றவர்களை விட்டுவிட்டு தகுதியான முறையில் பணம் பெற்றவர்களின் அக்கவுண்டில் இருந்து பணத்தை அபேஷ் செய்து கொண்டிருப்பது மற்றொரு பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்து வருகிறது.

மீண்டும் சொல்கிறேன்.உழைப்பவன் முறையாக பலனடையும் வகையில் திட்டங்களைப் போடாமல் உழைக்காமல் ஓசியில் பணம் தரும் திட்டங்கள் போட்டால்,அது ஊழலில் முடியாமல் உன்னதமாகவா நடக்கும்?

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time