”மண்ணின் மக்களுக்கு மத்திய அரசு பணியிடங்களை மறுப்பதா..?” – நீதிபதி அரிபரந்தாமன்

- மாயோன்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணி இடங்களை மற்ற மாநிலத்தவர்கள் அலேக்காக அள்ளிக் கொள்ளும் செய்திகள் அடிக்கடி வந்தவண்ணமுள்ளன! கடந்த 2020 ஆம் ஆண்டு திருச்சி, பொன்மலை ரெயில்வே பணிமனை பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்ட 541 பேரில் 12 பேர் மட்டுமே தமிழர்கள் என்ற தகவல் மாநிலம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  தென்னக ரயில்வேயின் இந்தப் போக்கை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. ஆயினும் அது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடந்து வருகின்றன..!

தென்னக ரயில்வே போல தமிழகத்தில் இயங்கும்  வருமான வரித்துறை, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் பணியிடங்களில் வடமாநிலத்தவர்களை திட்டமிட்டு நுழைக்கும் போக்கில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, அந்த ஆட்சியாளர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி மத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியாளர்கள் வடமாநில பணியாளர்களை இங்கு பணியமர்த்தும் வேலையை  சந்தடியின்றி செய்துவந்ததாக பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். வெளி மாநிலத்தவர் நியமனம் மேலும் கூடுதலானது, பாஜக-வின் ஆட்சி காலத்தில்.

குற்றச்சாட்டுகள் பரவலாக சம்பந்தப்பட்ட தொழிற் சங்கங்கள் மூலமாக வெளியானதை ஒட்டி, சு.வெங்கடேசன் ,எம்.பி, பாராளுமன்றத்தில் இதை ஒரு கேள்வியாக முன்வைத்தார். அவருக்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர்,

தென்னக ரயில்வேக்கு தேர்வு நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்றவர்களின் விவரத்தை வெளியிட்டார்.

டெக்னிசியன், லோகோ பைலட் ,ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பதவிகளுக்கு  தென்னக ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்ட வர்களின் விவரங்கள் அளிக்கப்பட்டது.

2550 டெக்னிசியன் நியமனங்களில், தமிழில் எழுதியவர்கள் 139 பேர் மட்டுமே. மற்றவர்கள் இந்தி உட்பட மற்ற மொழிகளில் தேர்வு  எழுதியவர்கள். அதாவது, 2550 நியமனங்களில் 2,411 நபர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில், ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய 219 பேரில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருக்கலாம்.

இதேபோல, 908 லோகோ பைலட்  நியமங்களில், தமிழில் தேர்வு எழுதி நியமனமானவர்கள் 333 பேர்கள் மட்டுமே; 1180  ஜூனியர் எஞ்சினியர் நியமனங்களில், தமிழில் தேர்வு எழுதி நியமனமானவர்கள் 268 பேர்கள் மட்டுமே.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் இச்சூழலில் இப்பிரச்சினை தமிழக மக்களிடையே புகைச்சலை கிளப்பியது.

இந்த நிலையில், மத்திய அரசுப் பணியிடங்களில் உள்ளூர் மைந்தர்களுக்கு ஒதுக்கீடு கேட்பது சரியா? சட்டபூர்வமாக இது செல்லத்தக்கதுதானா?  ஆகிய கேள்விகள் பலமாக எழுந்துள்ளன.

இந்த வினாக்களுக்கு விடை காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  அரிபரந்தாமன் அவர்களை சந்தித்து பேட்டி கண்டோம். நம்முடைய “அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த பேட்டி:

“ரயில்வே , வருமான வரித்துறை வங்கி ,சுங்க இலாகா, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு உரிய ஒதுக்கீடு கேட்பது நியாயமான கோரிக்கைதான். ‘100 சதவீத  இடங்களையும் எங்களுக்கே கொடுங்கள்’ என்று சம்மந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள்  கேட்பது தான் சட்டப்படி சரியாகாது.

ஒவ்வொரு மாநிலத்து மக்களின் மொழி, பண்பாடு , கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் ஆகியவை  பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது அரசியல் சாசனத்தின் சாராம்சம். மாநிலங்களின் உருவாக்கமும் இதனடிப்படையில்தான். வெளிமாநில ஆட்கள் இன்னொரு மாநில பணியிடங்களில் குறிப்பாக, கீழ்நிலை பதவிகளில் வலிந்து திணிக்கப்படுவது அந்த மாநில மொழி, பண்பாடு , கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் ஆகியவைகளின் மீது தொடுக்கப்படும்  தாக்குதல் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களை தென்னக ரயில்வே நிரப்பும்போது, துப்புரவு பணியாளர்கள், டீ -காபி, போர்வை போன்றவற்றை எடுத்துக்கொடுக்கும் பணியாளர்கள், இளநிலை எழுத்தர்கள் போன்றவற்றிற்கு உள்ளூர் மக்களையே – அதாவது உள்ளூர் மக்களை மட்டுமே – தேர்வு செய்ய வேண்டும். தலைமைப் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், நிர்வாக பொறியாளர் மற்றும் பொது மேலாளர் போன்ற  பெரிய பதவிகளுக்கு இத்தகைய அணுகுமுறையை  மேற்கொள்ளச் சொல்லி  கேட்கமுடியாது. உயர் பதவிகளில்கூட, பெரும்பான்மை பதவிகள் அந்தந்த மாநில மக்களுக்கு அளிப்பதே சரியானது. மத்திய அரசின் மற்ற துறைகளில் ஆள் எடுக்கும் போதும் இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

மத்திய அரசு பணியிடங்களில் அண்மைக்காலமாக உள்ளூர் மொழி தெரியாதவர்கள் நியமிக்கப்படுவதான குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது  இயற்கைக்கு மாறான நிகழ்வு.

அசாம் மாநிலம் இன்றைக்கு கலவர பூமியாக இருப்பதற்கு காரணம்,  அந்த மண்ணின் மைந்தர்கள் அங்கு சிறுபான்மையினராகி விட்டதுதான். வெளியிலிருந்து வந்தவர்கள் எண்ணிக்கையில் அவர்களைவிட அதிகமாகி விட்டனர்.

பங்களாதேஷிகள் உட்பட  இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும், குறிப்பாக வங்காளிகள், வெளியேற வேண்டும் என்று அசாம் மக்கள் மிக பெரிய போராட்டத்தை நடத்தினர். அதற்கு இணங்கிய  அப்போதைய ஒன்றிய அரசின் பிரதமர் ராஜிவ் காந்தி போராட்டகாரர்களுடன் ஒப்பந்தம் போட்டார். 1970-களில் குறிப்பிட்ட ஒரு தேதிக்கு பின்னர், அசாமிற்கு வந்த மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த ஒப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகாலாந்து ,மணிப்பூர், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் கடவுச்சீட்டு முறையை (Inner Line Permit) வைத்திருக்கின்றன. .

வெளிநாட்டு பயணத்திற்குதான் கடவுச்சீட்டு தேவை. ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே வட கிழக்குப் பகுதியில் உள்ள சில  மாநிலங்களுக்கு நாம் செல்லவேண்டும் என்றால்,  கடவுச்சீட்டை கண்டிப்பாக நம் கையில் வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் பொதுவாக அமலில் உள்ள சிவில், கிரிமினல் சட்டங்கள் மிசோரம் ,நாகலாந்து மாநிலங்களுக்கு செல்லுபடியாகாது. இந்திய அரசியல்  சாசன சட்டப் பிரிவு 371ஏ  நாகலாந்து மாநிலத்திற்கு தனியாக சிவில் ,கிரிமினல் சட்டம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 371ஜி மிசோராம் மாநிலத்திற்கு இதேபோன்ற சிறப்பு அதிகாரத்தை கொடுக்கிறது.

மாநிலங்களின் உரிமை, சுயத்தன்மை, இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இத்தகைய  சிறப்பு சட்டங்கள் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏதோ இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்போல, அசாம், மிசோரம் மாநிலங்களில் எல்லைக்கான தகராறு நிலவுகிறது!  இரு  மாநிலத்து காவல்துறையும் துப்பாக்கி சூடு நடத்தி, உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டால், வாழ்வாதரங்கள் பறிக்கப்பட்டால் அந்தந்த மாநிலத்தவர்கள் சொந்த மண்ணிலேயே புறக்கணிக்கப் படுவார்களானால், இது போன்ற வன்முறை நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

மத்திய அரசு மற்றும் அதன் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், அதில்  உள்ள  ஒப்பந்த பணிகளிலும், சம்மந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களே  கீழ்நிலை பதவிகளில் நியமிக்கப்படவேண்டும்.  உயர் நிலை பதவிகளிலும், பெரும்பான்மையானவர்கள் சம்மந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களே  நியமிக்கப்பட வேண்டும். தனியார் தொழில் நிறுவனங்களிலும் இதே முறை பின்பற்றப்பட வேண்டும். இதுவே சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை காபாற்றுவதாகும்.

வெளியில் இருந்து வந்து இங்கு தொழில் செய்யும் ஒரு நிறுவனத்திற்கு டெக்னீஷியன்களை நியமிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று அவர்கள் சொல்லும்போது ,அந்த கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் துப்புரவு பணி செய்வதற்கும், காவல் காக்கும் பணி செய்வதற்கும் இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை வெளியிலிருந்து கூட்டி வந்தோம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலேயே உள்ளூர் மாணவர்களுக்கு இவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முறை (Quota) உள்ளது. கல்வி கற்பதற்கே இந்த வழிமுறை செய்யப்பட்டுள்ளது என்றால், இதன் அடுத்த கட்டமான வேலைவாய்ப்பு மற்றும் தொழிலிலும் இதே அணுகு முறை பின்பற்ற வேண்டியது இயல்பான ஒன்றுதானே!

மருத்துவ படிப்பில் அகில இந்திய கோட்டா   சட்டபூர்வமானது என்றால், உள்ளூர்  பணியை உத்தரவாதம் செய்யும் வகையில் உள்ளூர் மக்களுக்கு கோட்டா கோருவதில் என்ன தவறு இருக்க முடியும். மருத்துவ படிப்பு போன்று, மற்ற படிப்புகளுக்கு அகில இந்திய கோட்டா இல்லாதது போன்று – அதாவது மற்ற படிப்புகள் முழுவதும் சம்மந்தப்பட்ட மாநிலத்து மாணவர்களுக்கே என்பது போன்று – கீழ்நிலை பணிகள் அனைத்தும் அந்தந்த மாநில மக்களுக்கே அளிக்கப்படவேண்டும்.

மத்திய அரசு பணியிடங்களில் எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவீதமும் ,எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் மட்டுமே உள்ளதால் அந்த ஒதுக்கீட்டில்,  எஞ்சும் மத்திய அரசு பணியிடங்களில், வெளி மாநில எஸ்.டி. பிரிவினருக்கு சென்று விடுவதாக சொல்கின்றனர். பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களைப் பொருத்தவரை அவர்களுடைய எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே மத்திய அரசு பழங்குடி மக்களை தேர்வுசெய்யும் போது மாநிலத்திற்கு மாநிலம் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுகோலை கையாள வேண்டும். அவர்களுக்கு கொடுத்தது போக எஞ்சிய இடம் இருந்தால் அதே மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கு கொடுக்கலாம். அதேபோல பழங்குடியினர் கூடுதல் எண்ணிக்கையில் உள்ள மாநிலங்களில்,  பட்டியலினத்தவரின் நிரப்படாத பணியிடங்களை அதே மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு அளிக்கலாம்.

மாநில அரசுகள் இப்பிரச்சினையில் மத்திய அரசுடன் பேசி,  உள்ளூர் மக்களின் பணி பாதுகாப்புக்கு உரிய தீர்வு காணவேண்டும்.

தமிழ்நாட்டில், பழங்குடி இனத்தவர்  மிக சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாலும், பல இடங்களில் சிதறுண்டு இருப்பதாலும், அமைப்பு ரீதியாக ஒன்றுபடாமல் இருப்பதாலும், பட்டியலினத்தவருக்கு  ஒரு மாபெரும் ஆளுமையாக டாக்டர் அம்பேத்கர்  வாய்த்ததுபோன்று ஒருவர் பழங்குடி மக்களுக்கு வாய்க்காத நிலையிலும், தமிழக அளவிலும் பட்டியலினத்தவருக்கு இருப்பது போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருப்பது போன்ற நிலை பழங்குடி இனத்தவருக்கு இல்லாமல் இருப்பதும்  அவர்களுக்கு பழங்குடியினர் என்ற சாதி சான்றிதழ் கிடைப்பதே மிக சிரமமாக உள்ளது. உயர் சாதியை சார்ந்தவர்கள், பழங்குடி இனத்தவருக்கான சான்றிதழ் பெறுகின்ற மோசடி வேலையும் தமிழகத்தில் உண்டு.  மேலும், சாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரி தாசில்தார்.   ஆனால், மோசடி நிகழ்வதை ஒட்டி, பழங்குடி இனத்தவருக்கான  சாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரி வருவாய் கோட்டாட்சியர். பழங்குடி இனத்தவருக்கு  சாதி சான்றிதழ்  கிடைப்பது சிரமமாக இருப்பதால், இவர்களுக்கான நியாமான வேலைவாய்ப்பு  கிடைக்காமல் போகின்ற ஒரு வருத்தமான சூழலும் இருக்கிறது. எனவே, இவர்கள் பள்ளிப் பருவத்தில் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கே பெரும் போராட்டங்களை  நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இது போல சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் உள்ள சிரமத்தை தமிழக அரசு விரைந்து களைய வேண்டும்.

இன்னொரு வேதனை தரக் கூடிய தகவல், தமிழ் ஆட்சி மொழியாக உள்ள தமிழ்நாட்டில், தமிழ்  அறவே தெரியாதவர்கள் அரசு வேலைக்கு வந்துவிட முடிகிறது. கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இது நடக்காது. மண்ணின் மைந்தர்களுக்கு  குறிப்பிட்ட சதவீதம்  வேலை வாய்ப்பு கிடைக்க வகை செய்யும் சட்டம்  கர்நாடகம், குஜராத், மத்தியபிரதேசம் முதலான மாநிலங்களில் உள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சில தினங்களுக்கு முன்பு வரவேற்கத்தக்க ஒரு தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் செய்யும் குழுமங்களிடம் 75 சதவீதம் வேலை வாய்ப்பு கேட்டு பெறப்படும் என்று சொல்லியுள்ளார். அதற்காக சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார். மாநில அரசிடம் இடம் கேட்டு, தண்ணீர் வசதி பெற்று, சலுகைகள்  பலப்பல வாங்கி தொழில் தொடங்குகிறார்கள்.

இத்தகைய  நிறுவனங்களில் தமிழ் நாட்டு மக்களுக்கான பணிக்கு உத்தரவாதம்  செய்யப்பட வேண்டும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்த இங்கிலாந்து அந்த அமைப்பிலிருந்து ஏன் விலகிக்கொண்டது?

ஐரோப்பிய யூனியனில் அது இருக்கும்போது அந்த யூனியன் சட்ட திட்டப்படி அதில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மக்கள்  ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இந்த அடிப்படையில்  கிழக்கு பக்கம் உள்ள  வளர்ச்சி அடையாத ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கிலாந்திற்குள் தாராளமாக  வந்தனர். இதனால் இங்கிலாந்து நாட்டினருக்கு வேலை உட்பட  பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. அதன் விளைவாகத்தான் ஐரோப்பிய யூனியனிலிருந்து அவர்கள் பிரிந்து தனியே சென்று விட்டனர்.

இதுபோன்ற உலக செய்திகள் கூறுவது என்னவென்றால், உள்ளூர் மக்களுக்கு பணி பாதுகாப்பும், பணிக்கு உத்தரவாதமும் வேண்டும் என்பதே” என்றார் நீதியரசர் அரிபரந்தாமன்.

நேர்காணல் ; மாயோன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time