சிறைச் சாலைகளா..? சித்திரவதைக் கொட்டடியா..? கொலைக் களமா..?

- பீட்டர் துரைராஜ்

“இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5569 சிறைக்கைதிகள் இறந்து போனதாக மக்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். 2018 – 2019 ஆம் ஆண்டு முதல் 27.7.2121 வரையுள்ள காலத்தில்  தமிழ்நாட்டில் 232 சிறைக்கைதிகள் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. அதாவது உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக காவல் மரணம் அதிக அளவில் அடையும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மனிதவள மேம்பாட்டுக் குறியீடு(HDI) என பலதுறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, சிறைக்கைதிகளின் சித்திரவதைகளிலும் ‘சிறந்து’ விளங்குகிறது என்ற அவப்பெயரை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு சாத்தன்குளம் காவல்நிலையத்தில் பென்னிக்ஸ் இமானுவேல் அவரது தந்தை  ஜெயராஜ்,  அடித்துக்கொள்ளப்பட்டனர். இந்தப் படுகொலைகளை இந்தியாவே உற்றுப்பார்த்தது. ஆனாலும் அதிகாரிகளின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டதா என்றால், இல்லை.

பாளையங்கோட்டை மத்திய சிறையில், முத்துமனோ என்ற 26 வயது சட்டம் படித்த இளைஞன்,  சிறைக்குச் சென்ற அரைமணிநேரத்தில்  கைதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் அடித்துக் கொல்லப்பட்டார். சிறை அதிகாரிகளின் துணையோடு நடந்த கொலை என்று சொல்லி, இறந்தபோனவரின் உடலை, 60 நாட்களுக்கு மேலாக  வாங்க மறுத்து அவரது கிராமத்தினர் போராடினர். தமிழக அரசு முத்துமனோவின் குடும்பத்திற்கு பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது. வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

“வங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடிய விஜய் மல்லையாவையோ, அல்லது  ஒரு ஆளுங்கட்சி பிரமுகரையோ கைது செய்தால் இப்படி நடத்துவார்களா ! சமூகத்தில் மேல்தட்டில் உள்ளவர்களை கைது செய்யும் போது,  சட்டப்படி செய்ய வேண்டியதை மட்டுமே அவர்கள் செய்வார்கள் ” என்றார் ஓர் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி. “71 சதவீத காவல் சித்திரவதைகள், வறியவர்கள் , ஏழைகள், தட்டிக் கேட்க நாதியற்றவர்கள்  மீதுமே நடக்கின்றன” என்கிறது காவல் சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சார இயக்கம் (National Campaign against Custodial Torture).

‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (Jaact- TN) என்ற அமைப்பு,  ‘சாத்தான்குளம் சாற்றுரை’ ( Sathankulam Declaration) என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்படுபவரின் உரிமை, கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்,  நீதிபதி, விசாரணை அதிகாரி, மருத்துவர் – போன்றவர்களின் கடமைகளை இது தொகுத்துச்  சொல்லுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள், குற்றவியல் நடைமுறைகள்  ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சாற்றுரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டம் இயற்றி, அமலாக்கினால் காவல் மரணங்களைத் தடுக்க முடியும்.

“சாத்தான்குளம் படுகொலை நடந்து முடிந்த ஓராண்டையொட்டி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்  உருவானது. இந்த அமைப்பு மாவட்டந்தோறும் செயல்படுகிறது. இதில் விசிக, தமுமுக, எஸ்டிபிஐ இளந்தமிழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது காவலர்கள் இன்னமும் சிறையில் உள்ளனர். காயமடைந்த இறந்துபோன பென்னிக்ஸ் இமானுவேல்,  ஜெயராஜ் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது, தகுதிச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் வினிலா மீது வழக்குப்பதிவு செய்ய  வேண்டும். இமானுவேல், ஜெயராஜ் இவர்களின் காயங்களைப் பார்க்காமல்,   நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதி சரவணன் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்திருந்தால்,  இன்று அவர்கள் இருவரும்  உயிரோடு இருந்திருப்பார்கள் ” என்றார் அந்த கூட்டியக்கத்தின்  செயலாளரான மீ..பாண்டியன்.

“காவல் சித்திரவதைகள் இருட்டறையில் நடைபெறுகின்றன. அசாதரணமான சூழலில் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. இத்தகைய வழக்குகளில் நீதிமன்றச்  செயல்பாடுகளும் சீரானாக  (not uniform) இருப்பதில்லை. எனவே காவல் சித்திரவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், காவல் சித்திரவதை செய்தமைக்காக,  1912 ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய வரலாறு உண்டு” என்றார் சாத்தான்குளம் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வரும்  வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன்.

காவல் சித்திரவதைக்கு எதிரான, ஐ.நா. வின் இணக்கவிதிகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதற்கான ஏற்பினை(Ratification) இந்தியா வழங்கவில்லை. அதாவது காவல் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை இந்தியா இன்னமும் இயற்றவில்லை.

‘ கடந்த இரண்டு ஆண்டுகளில், கொரோனாவை முன்னிட்டு பொதுமுடக்கம் நடந்தது. இதனால் திருட்டு,கொலை போன்ற குற்றங்கள் குறைந்தன. ஆனால் இதே காலத்தில் காவல் சித்திரவதைகள் அதிகரித்தன ‘ என்கிறது தில்லியைச் சார்ந்து செயல்படும் காவல் சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சார இயக்கம்.

‘சிசிடிவி கேமராக்களை காவல்நிலையங்களில் பொறுத்த வேண்டும். வாசல், லாக்கப் அறை, ஆய்வாளர் அறை, குளியலறையின்  வெளிப்புறங்களிலும் சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். அதனை 18 மாதங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘இதனை சிபிஐ, அமலாக்கப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளும் கடைபிடிக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளது. ஆனால் ” சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இந்த கேமிராக்கள், அப்போது  வேலை செய்யவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட போதும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. இது போன்ற சமயங்களில் மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் தன்கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க (Command Responsibility) வேண்டும்”  என்கிறார் கூட்டியக்கத்தின் தலைவரான  தியாகு.

சராசரியாக வாரத்திற்கு ஒருவர் நீதிமன்ற காவலிலோ, காவல்துறை காவலிலோ இருக்கும்போது தற்கொலை செய்துகொள்ளுகிறார். இது காவல் சித்திரவதை கணக்கில் வருவதில்லை.  நுங்கம்பாக்கம் இரயில்நிலையத்தில் ஸ்வாதியை கொன்றதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம் குமார் சிறையில் இருந்த மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் 12 இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவர் தனக்குத் தானே எப்படி இதனை முறை உடலில் மின்சாரம் பாய்ச்சிக் கொள்ள முடியும்..? அதுவும், இந்த பிரேத பரிசோதனை அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே, ராம்குமாரின் குடும்பத்திற்கு தரப்பட்டது. இந்த தாமதமே ஒரு மிகப் பெரிய அநீதி தானே!

முதல் தகவல் அறிக்கை, மருத்துவ சோதனை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு,  விரைந்து வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற  குற்றங்களைத்  தடுக்க முடியும். சிசிடிவி கேமரா பதிவுகளை,   மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உண்மைக் குற்றவாளிகளைக்  கண்டுபிடிக்க, இத்தகைய கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டும். சக அதிகாரிகளை காப்பாற்றுவது என்ற நினைப்பில்  தவறிழைத்தவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த உதவாது.

“ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைபெறும் குற்றங்களில் கைது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவரை 24 மணிநேரத்தில் நீதிபதியிடம் ஆஜர் படுத்த வேண்டும். அழைப்பாணை இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது. கைது செய்யப்பட்டவுடன், அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும். பெண்கள், குழந்தைகளை காவல்நிலையத்தில் விசாரிக்கக் கூடாது. அவர்கள் வீடுகளுக்குச் சென்று விசாரிக்க வேண்டும்” என்ற குற்றவியல் நடைமுறைகள்  அமலாவதை உறுதி செய்ய மாவட்ட, வட்ட அளவில் சட்ட ஆணையம் உருவாக்க வேண்டும். காவலர் புகார் ஆணையம் (State and District Police Complaints Authorities). உருவாக்கப்பட வேண்டும் என்று சாத்தான்குளம் சாற்றுரை தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒருவன் சிறைக்கு வருவதாலேயே அவன் அடிமை அல்ல. சிறைக் கைதிகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை உணர்ந்தால்தான் அவர்களை கண்ணியமாக நடத்த முடியும்.”சேலம் அருகில் இடையப்பட்டி என்ற ஊரைச் சார்ந்த  முருகேசன் என்பவர் சோதனைச் சாவடி அருகே கடந்த வாரம் (22.6.21) அடித்துக்கொல்லப்பட்டார். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். அந்த  வழக்கில் தொடர்புடைய அதே  ஏதாப்பூர் காவல்நிலையம்  விசாரித்தால் நீதி கிடைக்காது”  என்றார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சார்ந்த கோ.சுகுமாரன்.

காவல் மரணங்களைத்தான் இந்தக் கட்டுரை பேசியிருக்கிறது. வெளியில் தெரியாத காவல் சித்திரவதை சம்பவங்கள் எத்தனையோ ? அதிகாரிகள் மனதில் உள்ள ‘பண்ணையார் மனோபாவம்’ மாறினால் தான் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற புரிதல் வரும்.

தேவையாக இருந்தால் மட்டுமே ஒருவரைக் கைது செய்ய வேண்டும். மற்றவர்களை பிணையில் விட வேண்டும். அதீத காலத்திற்கு ஒருவரை சிறையில் வைத்திருக்கக்  கூடாது. 84 வயதான மாதையா (சந்தனக் கடத்தல் வீரப்பன் உறவினர்)  34 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இவரை வெளியில் விடுவதால்  சமூகத்திற்கு என்ன கேடு வரப்போகிறது. இவரைப் போன்றவர்களை முன்விடுதலை செய்து, பரோலில் அனுப்பி  சிறைவாசிகளின் எண்ணிக்கையை  குறைக்கலாம். இந்த சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி என்ன செய்யப் போகிறார் ?

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time