காந்தி ஆஸ்ரம அடையாளத்தை அழிக்க 1,200 கோடி திட்டம்!

-சாவித்திரி கண்ணன்

காந்தியின் ஆஸ்ரம வாழ்க்கையே அவர் வாழ்ந்த எளிமை, கைத்தறி உள்ளிட்ட கிராம கைத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, லட்சிய வாழ்க்கைக்கான அடையாளம்! அதாவது காந்தி வாழ்ந்த இடமே அவரது லட்சியங்களை பறை சாற்றுவதாய் இருக்கும்! அது தான் பாஜக அரசின் பிரச்சினையாகிவிட்டது! அந்த மனுஷனை அழித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சுவிட முடியவில்லையே! அவர் வாழ்ந்த இடமே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக உள்ளதே. லட்சக்கணக்கான மக்கள் விரும்பி வந்து தரிசித்து, அவரது உணர்வுகளை உள்வாங்கி, செய்திகளை எடுத்துச் செல்லும் திருத்தளமாக இருக்கிறதே! நம்ம ஆட்சியில் இதற்கொரு தீர்வு காணாவிட்டால் கோட்சேவின் தியாகத்தையும், சாவர்க்கரின் வழிகாட்டுதலையும் நாம் அலட்சியப்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவோமே.. என யோசித்தனர். அதன் விளைவாக உருவானது தான் 1,200 கோடி திட்டம்!

காந்தியை ஒரு போதும் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் மக்கள் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். ஆனால், நமது சித்தாந்தப்படி அவரை அரவணைத்து, ஆரத்தழுவி தான் அழிக்க வேண்டும் என்று யோசித்தனர். அதன் விளைவாக அவரது ஆஸ்ரமத்தை 1,200 கோடி செலவு செய்து புதுப்பிக்கப் போகிறோம் என அறிவித்துள்ளனர்.

காந்தியின் ஆஸ்ரமம் எளிமையின் சின்னமாக மிக உயிர்ப்புடன் திகழ்கிறது! காந்தியின் வாழ்க்கையை செய்தியை சொல்வதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஏராளமான காந்தியவாதிகள் – சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பங்களாக அங்கு நிரந்தரமாக தலைமுறையாக தங்கி சேவை செய்து வருகின்றனர். 322 ஏக்கர் கொண்ட மொத்த பிராந்தியத்தில் 55 ஏக்கரில் காந்தி நினைவு ஆஸ்ரமம் செயல்படுகிறது. அருகே பள்ளிக் கூடம் உள்ளது.

இந்த பகுதியில் காந்தி ஆஸ்ரமம் தொடங்கிய போது அருகில் சுடுகாடு தான் இருந்தது. 1917 முதல் 1930 வரை காந்தி இங்கு தங்கி இருந்தார். தண்டி யாத்திரையை இங்கிருந்து தான் தொடங்கினார். காந்தியின் மறைவுக்கு பிறகு மிகவும் முக்கியத்துவம் பெற்று வந்த இடத்தின் மீதும், இதன் சுற்று வட்டாரத்தின் மீதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தது. ஏனெனில், இங்கு பல உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற வி.வி.ஐ.பி.க்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த இடத்திற்கு ஒரு மவுசு ஏற்பட்டுவிடுகிறது. பல ஆடம்பர ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள் முளைக்கின்றன. இந்த பின்னணியோடு இந்த விவகாரத்தில் பாஜக அரசு செய்யும் இந்த 1,200 கோடியிலான மிக ஆடம்பர வேலைகளை நாம் பார்க்க வேண்டும். இந்த ஆடம்பர ஏற்பாடுகள் காந்தியத்திற்கு முற்றிலும் எதிரானது. அவரை தவறாக தோற்றப்படுத்தும் முயற்சியாகும்.

காந்தியை வெறும் காட்சிப் பொருளாக்கிவிடுவதன் மூலம் காலி செய்துவிட திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கு உலக முழுமையும் உள்ள காந்தியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை பாஜக அரசு பொருட்படுத்த வில்லை.

புகழ்மிக்க இந்த ஆஸ்ரமத்தில் தான் காந்தி சுய தேவைகளை சுயமாக பூர்த்தி செய்து கொள்வதான உடல் உழைப்பு சார்ந்த தனது பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டார்! தலித் மக்கள் உள்ளிட்ட பல சாதி, மத சமூகத்தவருடன் ஒன்றாக கலந்து வாழும் கம்யூன் வாக்கையை கட்டமைத்தார்! ராட்டையில் நூல் நூற்பது, தறி நெய்வது மற்றும் காதி இயக்கத்தை பரப்புவது போன்ற செயல்பாடுகளில் அவர் இந்த ஆசிரமத்தில் வசித்தபடி ஈடுபட்டிருந்தார். ஆதார கல்வி திட்டத்தை இங்கு தான் செயல்படுத்தினார். சபர்மதி ஆசிரமம் பற்பல தேசிய, அரசியல், சமூக செயல்பாடுகளுக்கான பரிசோதனைக் கூடமாகவே விளங்கியிருக்கிறது. நூல் நூற்பதற்கு சிரமமாக இருந்த பழங்கால இராட்டையின் வடிவமைப்பில் பல்வேறு விதமான பரிசோதனைகள் ஆசிரமவாசிகளால் செய்யப்பட்டு அதன் வடிவமைப்பு படிப்படியாக மேம்படுத்தப் பட்டது! . யங் இந்தியா, ஹரிஜன் முதலான பத்திரிகைகளை இங்கு இருந்து தான் அவர்  பல ஆண்டுகள் நடத்தியிருக்கிறார்.

காந்தி வாழ்ந்த இல்லம் தற்போது அங்கு பல தலைமுறைகளாக காந்தியுடன் வாழ்ந்த அவரது சகாக்களின் வாரிசுகளால் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு வராண்டா , காந்தியின் அறை, அன்னை கஸ்தூரிபாய் அறை, விருந்தினர் அறை, சமையல் என எளிமையுடன் ஹிருதய் குஞ்ச் எனும் பெயரில் குடிலாக மஹாத்மாவும் கஸ்தூரிபாவும் வசித்த இருப்பிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே அவர் உபயோகப்படுத்திய பல பொருள்கள் இன்றும்  பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வினோபாவே மற்றும் மீராபென் ஆகியோர் தங்கி இருந்த குடில். பிரார்த்தனை செய்யும் இடமான உபாசனா மந்திர் உள்ளிட்ட அம்சங்களும் காந்தி ஆஷ்ரமத்தில் அவற்றுக்குரிய பிரத்யேக அடையாளத்துடன் காந்தியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக வீற்றிருக்கின்றன. காந்தி ஸ்மாரக் சங்கரஹாலயா எனும் அருங்காட்சியகம் மற்றும் காட்சிக்கூடத்தில் காந்திஜியின் 34,066 கடிதங்களும், 8,633 கையெழுத்துப்  பிரதிகளும் ,155 பாராட்டுக்கடிதங்கள் மற்றும் 210 சுதந்திரப்போராட்டம் பற்றிய புகைப்படங்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன! இங்குள்ள ஆவணக்காப்பகத்தில் பல நூல்கள், வாழ்த்து மடல்கள், புகைப்பட மூலங்கள், ஆவணங்கள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. இவை  தவிர, மாநாட்டு அரங்கம்,   திரைப்படக்கூடம், கலையரங்கம், நூலகம் போன்றவைகளும் உள்ளன! இவற்றின் கதி இனி என்னாகும் எனத் தெரியவில்லை.

சபர்மதி ஆறு பாய்ந்து செல்லுகின்ற இடத்தின் அருகே தான் காந்தியடிகளின் தியானம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ந்த பகுதி இருக்கிறது. அந்த இடத்தில் தற்போதும் காந்திய அன்பர்கள் சென்று காந்தியின்  சிந்தனைகளை , சித்தாந்தங்களை விளக்கிக்  உரையாற்றுவது வழக்கமாக இருந்தது. இதையெல்லாம் தொடர்ந்து எப்படி பாஜக அரசால் சகித்துக் கொள்ளமுடியும். இப்போதும் பாஜக பெண் தலைவர் பூஜா பாண்டே காந்தியின் உருவ படத்தை சுட்டதை நாம் அறிவோம் தானே!

காந்தியை முதன்முதலாக கோட்சே சுட்டுக் கொன்றார். அந்த குண்டு அவர் உடலை மட்டுமே அழித்தது. ஆனால், அவர் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக மக்களால் நேசிக்கப்பட்டவரானார். அவரது மதச்சார்பின்மை மேலும் நன்கு வலுப்பட்டது. இதைப் பொறுக்காத பாஜக காந்தி பிறந்த குஜராத்திலேயே அரச வன்முறைகளை நிகழ்த்தி ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை நர வேட்டையாடியது. இதன் மூலம் இரண்டாவது முறையாக காந்தியைக் கொன்றனர். ஆயினும் அவர் புகழை அழிக்க முடியவில்லை.

ஆகவே, தற்போது அவரது ஆஸ்ரமத்தை புதுப்பிக்கிறோம், நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் அழிக்கின்றனர். முதலாவதாக இந்த 1,200 கோடி ஆடம்பரத் திட்டத்தின் மூலமாக அவரது எளிமையான தவ வாழ்க்கைகான அடையாளங்களை அழிக்கின்றனர். அவரது சீடர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக காந்தியின் ஆஸ்ரமவாசிகள் தாங்கள் வெளியேற்றப்படுவது குறித்தும், தங்களைக் கலந்து பேசாமல் அரசாங்கம் தானடித்த மூப்பாக காந்தியின் அடையாளங்களை சிதைக்கத் துணிவதை எதிர்த்தும் தெருவில் இறங்கி போராடி பார்த்தனர். அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிறைய அறிவுஜீவிகளும், காந்திய அன்பர்களும் குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் பொருட்படுத்தவே இல்லை. தற்போது அவர்களில் பலர் போராடும் திரானியை இழந்து அரசு கொடுக்கும் நஷ்ட ஈட்டை பெற்றுக் கொண்டு கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர்.

பிரபல வரலாற்று ஆய்வாளரான இராமச்சந்திர குகா, ”காந்தியின் புனிதமான இமேஜை குழிதோண்டி புதைக்கும் முயற்சியாகத் தான் அவர் வாழ்ந்த இடத்தில் பாஜக அரசு கை வைக்கிறது. காந்தி ஏதோ அகமதாபாத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரை குஜராத்திற்கானவராகவோ, அல்லது இந்தியாவிற்கானவராகவோ கூட சுருக்கிவிட முடியாது. அவர் மனித குலத்திற்கானவர். இன்று இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரமல்ல, இனி பிறக்கப் போகும் மனித குலத்திற்கும் அவரே ஒளிவிளக்கு. அவரை அழிக்கத் துடிக்கும் பாஜக அரசின் எண்ணம் ஏற்க முடியாதது” எனக் கூறியுள்ளார்.

பாஜக அரசின் படுபாதக செயல்களிலேயே மன்னிக்க முடியாதது காந்தியின் அடையாளத்தை சிதைப்பதாகும். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் காந்திய அன்பர்கள் உலகம் முழுக்க கண்கலங்கியவாறு பார்க்கின்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time