பாடப் புத்தகங்களில் சாதி திணிப்பும், சாதி மறுப்பும்!

-சாவித்திரி கண்ணன்

பாடப் புத்தகங்களில் உள்ள மிக முக்கிய தலைவர்கள், தமிழின் ஆளுமைகளை சாதி பின்னொட்டுடன் குறிப்பிட்ட வழக்கம் பல காலமாகவே தொடர்ந்துள்ளது.

பெயருக்கு பின்னால் உள்ள சாதி பின்னொட்டை தூக்கி எறியும் செயலை சுதந்திர போராட்ட காலத்திலேயே பெரியார் செய்துவிட்டார். அவரைப் போலவே பல்வேறு தலைவர்களும் செய்தனர்.

சுதந்திர போராட்ட காலத்திலும், திராவிட மறுமலர்ச்சி தோன்றி பெருவெள்ளமென பாய்ந்த காலகட்டத்திலும் சாதி அடையாளத் துறப்பு இயல்பாகவே நடந்தேறியது. பொதுவுடமை சித்தாந்த இயக்கங்களிலும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சாதி அடையாளத் துறப்பு மிக இயல்பாக இருந்ததை கண் கூடாக கண்ட மண் தான் இது! அப்படி இருக்க, பாட நூல்களில் தலைவர்கள், முக்கிய ஆளுமைகளின் பின்னொட்டாக சாதிப் பெயர் குறித்த அடையாளம் எப்படி, யாரால் திணிக்கப்பட்டதோ தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே தெருப் பெயர்களின் பின்னிருந்த சாதிப் பெயர்கள் அழிக்கப்பட்டன.

பாரதியாரை நல்லவேளையாக சுப்பிரமணிய பாரதியார் என்றே அன்று முதல் பாட புத்தகத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். சுப்பிரமணிய ஐயர் என குறிப்பிடாததற்கு நன்றி சொல்வோம். ஏனென்றால், அவரே சாதி மறுப்பு பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ’’ஜாதி,மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்!’’ என்பது போன்ற ஏகப்பட்ட சாதிமறுப்பு பாடல்கள்!

அதே போல, ”தமிழன் என்று சொல்லடா – தலை நிமிர்ந்து நில்லடா’’ என்று தான் நாமக்கல் இராமலிங்கனார் எழுதினார். அவர் ஒன்றும் ’பிள்ளை’ என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எழுதவில்லையே..! அவரை போய் இராமலிங்கம் பிள்ளை எனக் குறிப்பிடும் ஞான சூனியங்கள் ஒரு காலத்தில் பாடநூல் குழுவில் இருந்துள்ளனர் போலும்.

தமிழ் தாத்தா உ.வே.சா என்று தான் அவரை அழைக்கிறோம் ஐய்யரு தாத்தா என்று தான் அழைக்கவில்லையே..!  பிறகெதற்கு உ.வே.சாமிநாதய்யர் என்று சொல்வானேன். சாதிபெயர் முக்கியம் என்றால், அப்புறம் அவர் தமிழ் தாத்தாவாக ஒரு போதும் இருக்க முடியாது.

தமிழ்த் தாய்க்கு மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய, ’’நீராருங் கடலுடுத்த..’’ என்ற வாழ்த்து பாடல் தான் தான் காலம் கடந்தும் நிற்கிறது. அப்படிப்பட்ட பெருமகனாரை சாதி பெயருடன் குறிப்பிட்டு இருந்ததே பேரவலம் தானே!

முத்துலெட்சுமி அம்மையார் பெண்குலத்திற்கே முன்மாதிரியானவர், பின்பற்றதக்கவர் பொதுவானவர். அவரை ரெட்டியார் என்ற சாதி அடையாளத்திற்குள் சிறைப்படுத்தினால், அது அவரை சிறுமைப்படுத்துவதாகிவிடாதா…?

சாதிப் பற்றாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய ஆளுமைகளை  உங்கள் சாதிக்கானவராக நீங்கள் நிலை நிறுத்த முற்பட்டால் இழப்பு உங்களுக்குத் தான்! அப்புறம் அந்த பெரிய ஆளுமையை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள்! நீங்கள் மட்டுமே தூக்கி சுமக்க வேண்டும்.

பொதுவாக சங்க காலத்தில் தமிழர்களிடம் சாதிப்பாகுபாடு இல்லை. தொழில் ரிதியான அடையாளங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க கால புலவர்கள் பெயர்களின் பின்னால் சாதி பின்னொட்டு கிடையாது. அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகளின் சாதி நமக்கு தெரியாது! இவர்கள் தமிழின் அடையாளங்கள், முகவரிகள்!

தமிழர்கள் தொழில்களைக் கொண்டும், வாழ்ந்த நிலப்பரப்பின் அடையாளம் கொண்டும் தான் அழைக்கப்பட்டனர்.

பாட்டுபாடி இசை வளர்த்தோர் பாணன் என அறியப்பட்டனர்.

கோவினங்களான பசுக்களை பேணி வளத்தோர் கோனார் என அழைக்கப்பட்டனர்.

மருத நிலத்தில் தண்ணீர் வழிந்து வரும் பள்ளமான பகுதிகளில் விளை நிலங்களை கண்டறிந்து வேளாண் தொழில் செய்தோர் வேளாளர் என்றும் பள்ளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆக, சங்க காலத்தில் தமிழ் மரபில் சாதிகள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இடையில் தான் திணிக்கப்பட்டு, உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டது.

ஆதிச்ச நல்லூர், கீழடி, சிவகளை..என எந்த அகழாய்விலும் தமிழர்களின் சாதி அடையாளத்தை சுட்டும் எதுவும் கண்டெடுக்கபடவில்லை. ஆக, சாதி என்பது இடையில் வந்தது. அதை இடையிலேயே தொலைத்திடுவோம்.

இந்த மாற்றம் – பாடத்திட்டங்களில் சாதி பெயர்களை நீக்கும் செயல்பாடு – சென்ற அதிமுக ஆட்சியில் 2019 லேயே கொண்டுவரப்பட்ட நிலையில், அது இப்போது தான் நடைபெற்றது போல ஒரு ஆங்கில நாளிதழ் விசாரிக்காமல் எழுத, அதை ஒட்டி இது ஒரு விவாத பொருளானது. ஆனால், இன்றைய பாட நூல் கழகத் தலைவர் திண்டுகல் லியோனி இதற்கு தெளிவாக பதில் சொல்லிவிட்டார்.

”ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்ற பெயர் நாமக்கல் ராமலிங்கனார் என்று உள்ளது. 12-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உ.வே.சாமிநாத ஐயர் என்ற இடத்தில் உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 9-ஆம், வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயர் மனோன்மணியம் சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கடந்த 2019-ஆம் ஆண்டில் புத்தகங்கள். அதில் மாற்றப்பட்டுள்ளன. அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். பாடநூல் கழக தலைவராக இருந்தவர் வளர்மதி. அவர்களின் காலத்தில்தான் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.”

”மானுடம் வெல்ல, அளப்பரிய சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் பெயருக்குப் பின்னால், அவர்களைக் குறுகிய வட்டத்தில் அடைத்து வைத்திருந்த சாதிப் பெயரை, பாடநூல்களில் இருந்து நீக்கிய நிகழ்வு,  பல்துறை ஆளுமைகளைப் பெருமைப்படுத்தி, பொதுமை மாந்தர்களாக  அவர்களை மாணவர்கள் உணரச் செய்திடும் நடவடிக்கை” என பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை வரவேற்றுள்ளது.

ஆனால், அன்று அதிமுக ஆட்சியில் அமைதி காத்த பா.ம.க தலைவர் மருத்துவர் ராமதாஸ் இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது. வட இந்தியத் தலைவர்கள் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும்” என ராமதாஸ் கூறியுள்ளார்.

வட இந்தியாவைத் தான் இப்போது எல்லா வகையிலும் தனக்கு முன் மாதிரியாக எடுத்து மருத்துவர் செயல்படுகிறார் போலும். தமிழ்நாடு பல விவகாரங்களில் மிகுந்த முற்போக்குடன் இயங்குவதை அவர் உணர்ந்தவர் தானே. வட இந்தியாவில் இட ஒதுக்கீடு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இடஒதுக்கீடு அறிமுகமானதே..! அப்போது, வட இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லை, ஆகவே, தமிழகத்திலும் தேவை இல்லை என வாதம் வைத்தால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ.. அது போலத் தான் இந்த அவரது வாதமும் உள்ளது. படுபிற்போக்கு சக்திகளான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடன் அவர் வைத்துக் கொண்ட சகவாசம் சமத்துவ நாயகராக ஒரு காலத்தில் திகழ்ந்த மருத்துவரை சாதி நாயகராக நிலை பெறச் செய்துவிட்டது போலும்!

சரி, நடந்தவை நல்லவையே! இப்போது போல முன்னர் பலமுறை சாதி துறப்பு வலியுறுத்தப்பட்டு, பின்னர் சந்தடி சாக்கில் யாரும் அறியா வண்ணம் உள்ளே நுழைந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. சாதியை உறவுகளுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால், தமிழ் உணர்வுக்கோ, மானுட நேயத்திற்கோ அது தடையாகிவிடக் கூடாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time