ஒலிம்பிக்கில் ஒற்றைத் தங்கம்! இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம் என்ன..?

-சாவித்திரி கண்ணன்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதலிடம்!

அதிக அளவில் பற்பல இனங்களை,கலாச்சாரக் குழுக்களை கொண்ட நாடுகளில் முதன்மை இடம்!

உலகில் அதிக பணக்கார்களை கொண்ட நாடுகளில் ஆறாவது இடம்!

உலகின் நுகர்வு சந்தை கலாச்சாரத்தில் மூன்றாவது இடம்!

ஆனால், ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மட்டும் 47 வது இடம்!

நம்மை ஒத்த ஆசிய நாடான சீனா ஒலிம்பிக்கில் 38 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 87 பதக்கங்கள் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவால் ஒரு தங்க பதக்கத்தை மட்டுமே பெற முடிந்துள்ளது. இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெங்கல பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளோம். நம்மைவிட மிகச் சிறிய நாடுகளான – அதாவது தமிழ்நாடு அளவு கூட இல்லாத கென்யா, நார்வே, குரேசியா ஆகியவை தலா மூன்று தங்க பதக்கங்களை பெற்றுள்ளன. அவ்வளவு ஏன் பசி, பஞ்சம், பட்டினிக்கு பேர் போன எத்தியோப்பியா மற்றும் சின்னஞ்சிறு பிஜு தீவு கூட தலா ஒரு தங்கபதக்கம் பெற்றுள்ளன! ஆனால், 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் கடைசி முயற்சியாக ஒரே ஒரு தங்க பதக்கம் மட்டுமே  ( நிராஜ் சோப்ரா) பெற முடிந்துள்ளது.

உலகமெங்கும் அடிக்கடி டூர் அடித்து தன்னை உலகப் பெறும் தலைவர்களில் ஒருவராக காட்டி வரும் இந்திய பிரதமர் மோடி இதற்கு மனசாட்சியை தொட்டு விடை தேட வேண்டும். இந்தியாவின் ஆகப் பெரிய பலமிக்க உள்துறை அமைச்சராக வளம் வரும் அமித்ஷா இதற்கு பதில் தர வேண்டும் என்பதோடு நாம் இதை அணுக முடியாது. ஏனென்றால், சுதந்திரத்திற்கு பின்பான இது வரையிலான 19 ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே இந்தியா தங்க பதக்கத்தை – அதுவும் தலா ஒன்று மட்டுமே – பெற்றுள்ளது. தற்போதோ அந்த எல்லைக் கோட்டை மீறமுடியாமல் ஒன்றை மட்டுமே பெற்றுள்ளது.

இதற்கு காரணம் இங்கு இன்னும் உண்மையான ஜனநாயகம் மலரவில்லை. அரசியல், சாதி, மதம் உறவினர் செல்வாக்குகளைக் கடந்து உண்மையான திறமையாளர்களுக்கு வாய்ப்பு தரப் படுவதில்லை. ஒவ்வொரு விளையாட்டையும் வளர்க்க அதுவதற்கு அசோசியேசன்களும், பெடரேஷன்களும் உள்ளன. அதில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு நல்ல சம்பளம், வீடு,கார் உள்ளிட்ட சலுகைகள் ஏராளம்! இதற்கு அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது.

ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக இது போன்ற தலைமை பொறுப்புக்கு வருபவர்களுக்கும் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கும் எந்த தொடர்பும், ஈடுபாடும் இருப்பதில்லை. இன்றைக்கு அமித்ஷாவின் நெருங்கிய உறவினர்கள் சிலர் இந்த மாதிரி பொறுப்புகளுக்கு வந்துள்ளதாக சொல்ல[ப்படுகிறது. இதில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் பணம் சலுகைகளுக்காக இந்த நியமனங்களை செய்துவிடுகிறார்கள். இவர்கள் பொறுப்புக்கு வந்ததும் கரப்ஷன், கமிஷன், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்ற சூழல் உருவாகிவிடுகிறது. இதற்கு மனசாட்சியில்லாத அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்துவிடுகிறது! இங்கே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவுகளில் பசி,பட்டினிகளை பொருட்படுத்தாமலும், கடனை, உடனை வாங்கியும் தீவிரத் தன்மையுடன் இயங்குபவனின் பதக்கம் குறித்த தாகமும், தவிப்பும் ஒரு சிறிதும் அந்த தலைமையால் அங்கீகரிக்கப்படுவதே இல்லை.

சில சிறிய உதாரணங்களை பார்ப்போம். காங்கிரஸ் பிரமுகர் கார்த்திக் சிதம்பரம் டென்னீஸ் விளையாட்டில் ஆர்வமுள்ளவர். அதில் அவர் அரசியல் செல்வாக்கால் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் டென்னீஸ் சங்க பொறுப்பில் வந்தார். அதன் பிறகு டென்னீஸில் உள்ள திறமையாளர்கள் எல்லாம் ஒரங்கட்டப்பட்டனர்! தன் அதிகாரத் திமிரில் அந்த சங்கத்தையே சின்னாபின்னமாக்கினார்.

தமிழ்நாடு பாட்மிட்டன் சங்கத்தில் தலைமை பொறுப்புக்கு தன் அரசியல் செல்வாக்கால் வந்தார் அன்புமணி. அவர் காலகட்டத்தில் ஒரே ஒரு சாம்பியனையாவது அடையாளம் கண்டு உருவாக்கினாரா என்றால் கிடையாது. அதிகார போட்டிகளும், அதிருப்திகளுமாகத் தான் அவர் காலம் இருந்தது.

இந்தியாவின் சார்பில் 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் வீரராக பங்கேற்ற நிஷா மில்லத் இந்தியாவில் சரியான கோச்சரை தராததால் ஆஸ்த்திரேலியா சென்று பயிற்சி எடுத்து வந்தார். அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயற்சி தர மூவர் அனுப்பப்பட்டனர். அவர்களில் இருவருக்கு நீச்சலே தெரியவில்லை…இது போன்ற சூழல்களை மீறித் தான் நாங்கள் வெல்ல வேண்டி இருக்கிறது என்றார்.

இன்னும் சில விளையாட்டு அசோசியேசன்களில் சாதி ஆதிக்கம் கொடிகட்டி பறக்கும். அந்த சாதியைத் தவிர வேறு எந்த திறமையாளரையும் அவர்கள் மேலேறவிடமாட்டார்கள்!

இதில் ஹாக்கி அணி தான் சற்றுவிதிவிலக்காக இருந்தது. அவர்கள் மட்டுமே இது வரை எட்டு தங்க பதக்கங்களை வாங்கி தந்துள்ளனர். இந்த ஒலிம்பிக்கிலும் வெள்ளி பதக்கம் வாங்கியுள்ளனர்.

ஒரு நாடு ஆரோக்கியமான ஜனநாயக நாடா என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அதில் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் கண்டறிந்து அங்கீகரிக்கப்படுவது தான்! சூது,வாது,குறுக்கு வழி இல்லாமல் திறமை குடிசைவாசியிடம் காணப்பட்டாலும் அங்கீகரிக்கப்படும் சூழல் வந்தால், இந்தியா சீனாவை விட ஒருபடி மேலாகவே சாதனை படைக்கும்.

தமிழகத்தின் வட சென்னை பாக்சிங்கிற்கு பேர் போனது. அங்கிருந்து குத்துசண்டை போட்டிக்கான ஒரே ஒருவரைக் கூட அடையாளம் கண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நம்மால் அனுப்ப முடியவில்லை. தென் சென்னையில் டென்னீஸ் விளையாட்டில் சிறந்து விளங்கிய மேல் தட்டு வர்க்கத்தினர் ஒலிம்பிக்கில் இடம் பெற மட்டும் எப்படி வாய்ப்பு கிடைத்தது…?

அதே போல மஹாராஷ்டிராவில் உள்ள மராத்தியர்கள் வீரத்திற்கு பேர் போனவர்கள்! அங்குள்ள சங்கிலி மாவட்டத்தில் விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் குஸ்தி விளையாட்டான மல்யுத்ததிற்கு பேர் போனவர்கள். உண்மையிலேயே மயிர் கூச்செறியும் மல்யுத்தங்களை சர்வசாதரணமாக வெட்டவெளியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் அவர்கள் நடத்திக் காட்டுவது வாடிக்கை. அப்படிப்பட்டவர்களில் எத்தனை பேர் ஒலிம்பிக் மல்யுத்த களத்திற்கு தேர்வானார்கள் என பார்க்க வேண்டும்.

இந்தியாவில் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றாகிவிட்டது. அரசாங்கத்தின் முழு கவனமும் அதில் மட்டுமே உள்ளது. அந்தந்த கட்சியின் ஆட்சியில் அந்தந்த கட்சி ஆட்கள் அதற்குள் நுழைந்து கோடிக்கணக்கில் பணம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் சரத்பவார் கிரிக்கெட் அசோசியேசனை கண்ட்ரோலில் வைத்திருந்தார் என்றால், தற்போது அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தான் அதில் கொடிகட்டி பறக்கிறார். தோணி விருப்ப ஓய்வு பெற்றதன் பின்னணியில் அவர் இருந்ததை யாவரும் அறிவர்.

இப்படியான அரசியல் விளையாட்டுகளை, விளையாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் போது தான் இந்தியாவில் உண்மையான திறமையாளர்கள் அந்தந்த விளையாட்டுகளில் அடையாளம் காணப்பட்டால் தான் ஒலிம்பிக்கில் நாம் சாதனை படைக்க முடியும். இத்தனை இடர்களையும் கடந்து இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த, நீராஜ் சோப்ரா, பி.வி.சிந்து, மீராபாய் ஜானு, லவ்லினா போரோஹைன்,ரவிக்குமார் தாஹியா, பஜ்ரங் பூனியா, இந்திய ஹாக்கி அணி ஆகியவர்களை வாழ்த்தி வணங்குவோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time