நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால்,
’’நிச்சயமாக எதிர்க்கிறேன்’’ என்பது தான் என்னுடைய பதில்!
’’கல்வி என்பது மாநில அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? மத்திய அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?’’ என்றால்,சந்தேகமே இல்லாமல் சொல்வேன்;
’’மாநில அரசின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்!
அதே சமயம் ,மத்திய அரசிடம் ஆலோசனை கலந்து செயல்பட வேண்டும்!’’
ஆனால்,தற்போது தமிழகத்தில் நடைபெறும் நீட் தொடர்பான உணர்ச்சிகரமான அரசியல் நாடகங்கள் சகிக்க முடியாதவை! கடந்த மூன்றாண்டுகளில் அனிதா தொடங்கி தற்போது ஜோதி துர்கா,ஆதித்யா,மோதிலால் வரை 16 மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? யார் இதற்குப் பொறுப்பேற்பீர்கள்?
உண்மையில் இவை தற்கொலைகளல்ல! அரசியல் கொலைகள்! இந்த மரணங்களுக்குத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தான் முக்கிய குற்றவாளி! இது ஒரு கையாகாலாத அரசு! இதை அரசு என்று அழைப்பது கூடத் தவறு! இது புளுகு மூட்டைகளின் கூடாரம்! அரசியல் தற்குறிகள் அரியாசனத்தில் ஏறிவிட்டனர்!
ஏன் இந்திய மாநிலங்கள் எதிலும் இது போன்ற நீட் தற்கொலைகள் நிகழவில்லை! தமிழகத்தில் மட்டும் ஏன் நடக்க வேண்டும்? ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தங்கள் இயலாமையை மறைத்துக் கொள்ளக் கையாளும் தந்திரம் தான் நீட் எதிர்ப்புணர்ச்சி நாடகங்கள்! அதன் விளைவான மரணங்கள்!
என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்யவில்லை? என்று பார்ப்போம்!
2010 ல் இருந்து என்ன செய்தீர்கள்?
நீட் தேர்வு வருவதற்கான துவக்கம் 2010 ல் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவப் படிப்பை முறைப்படுத்தும் மசோதாவில் வெளிப்பட்டது.அது அப்போதே இந்திய அரசின் கெஜட்டில் பதிவானது. இதைத் தொடர்ந்து நாடு முழுதும் நடைபெற்ற விவாதத்தில் 2012 ஆம் ஆண்டு நீட் முன்மொழியப்பட்டு 2013 லேயே நீட் தேர்வு அமலானது.
அன்று அதை ஆந்திரா,குஜராத்,தமிழகம்,மேற்கு வங்கம் ஆகியவை எதிர்த்தன! எதிர்த்தற்கான காரணமாக வேறுபட்ட பாடத்திட்டம் மாநிலங்களில் உள்ளது என்பது சுட்டிக் காட்டப்பட்டது! இந்த நியாயத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம் நீட்டுக்கு தடை விதித்ததோடு நடத்தப்பட்ட நீட் தேர்வைத் தள்ளுபடி செய்துவிட்டது.
Also read
ஆனால்,மத்திய அரசும்,இந்திய மருத்துவ கவுன்சிலும் எல்லா மாநிலங்களும் ப்ளஸ்1,ப்ளஸ்2 பாடத்திட்டங்களை NCRT எனப்படும் தேசிய கல்வி மற்றும் பயிற்சி கழகத்தின் வழிகாட்டுதல் படி மேம்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டன! அதை அனைத்து மாநிலங்களும் ஏற்று அவ்வாறே செய்தன! ஆந்திரா,கேரளா,கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களும்,வட மாநிலங்களும் அந்தந்த மாநில சிலபஸ்ஸில் குறிப்பாக ப்ளஸ்1, ப்ளஸ்2வின் பிசிக்ஸ், கெமிஸ்டிரி,பயாலஜி ஆகிய பாடங்களை NCERT வழிகாட்டுதல் படி மாற்றின! இதில் CBSC பள்ளிகள் உடனே தங்களைத் தகவமைத்துக் கொண்டன! ஆனால், இந்தியாவில் தன்னை புதிய கல்வி போக்கிற்கேற்ப தகவமைத்துக் கொள்ளாத ஒரே மாநிலமாகத் தமிழகம் மட்டுமே இருந்தது! இதற்கு அன்று ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!
2016 ல் இந்த வழக்கு, மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்க்கு வந்தது! நீட்டை நீதிமன்றமும் அனுமதித்தது! ஆனால்,தமிழகம் தனக்கு விதிவிலக்கு வேண்டியது.அதுவும் அன்றைய பாஜக அரசால் தரப்பட்டது! ஆனபோதிலும், கிடைத்த இந்த வாய்ப்பில் அடுத்த வருடத்திற்குள்ளாக பள்ளி இறுதி வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றத் தமிழக அரசு முயற்சிக்கவில்லை! தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் பாடத்திட்டத்தையும் பயிற்சியையும் தமிழக அரசு வழங்க முன்வரவில்லை! மாறாக மீண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது!
இரட்டை வேடம் போடுகிறது அதிமுக அரசு!
மற்ற பல அரசியல் கட்சிகளும் நீட்டிற்கு எதிராகப் போராட்டங்களை தீவிரப்படுத்தின! இதனால். நீட் எப்படியும் தடுக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மனதில் விதைக்கப்பட்டது! இந்த தவறான பிம்பத்தை அழுத்தமாகக் கட்டமைத்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சரியான வாதங்களைக் கூட வைக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக அரசு! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,சமூக ஆர்வலர் தங்கவேலு ஆகியோர் நீட் எதிர்ப்பு வழக்கில் செய்த முயற்சியில் பத்தில் ஒரு பங்கைக் கூட அதிமுக அரசு செய்யவில்லை என்பதோடு,வழக்கை வலுவாக நடத்த கஜேந்திரபாபு அவர்கள் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரையும், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனையும் சந்தித்துக் கொடுத்த ஆவணங்களையும் பாயிண்டுகளையும் சிறிதும் பொருட்படுத்தவில்லை! பொதுத் தளத்தில் நீட்டை எதிர்ப்பது போலப் பாவனைக் காட்டிக் கொண்டு, நிர்வாக ரீதியாக நீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக அரசு கை கொண்டுவருவது பித்தலாட்டத்தின் உச்சமாகும்!
இதற்குச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நமது சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றி பிப்ரவரி 2017ல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அதிமுக அரசு! அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதை எந்த காரணமும் சொல்லாமல் மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.இந்த தகவலைக் கூட வெளியில் சொல்லாமல் தமிழக அரசு ஏமாற்றி வந்தது.பிறகு தான் இது கண்டறியப்பட்டது. ’’காரணம் சொல்லாமல் திருப்பி அனுப்பபட்ட நிலையில், இந்த மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பி வலியுறுத்த நமக்கு வாய்ப்புள்ளது,ஆகவே,அனுப்ப வேண்டும்’’ என்று நீதிபதி ஹரிபரந்தாமன் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.ஆனால்,அதற்கு இன்று வரை தமிழக அரசு இசையவில்லை!ஏனென்றால், மீண்டும் நிர்ப்பந்தம் தருவதன் மூலம் மோடிக்கு சங்கடத்தை உருவாக்கிவிடக் கூடாது என்று கமுக்கமாக இருக்கிறது அதிமுக அரசு! மத்திய அரசுக்கு தாசானுதாசனாக இருப்பதில் தான் இன்றைய ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர்.
எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்று மனதார நம்பினால் அதை முழுமூச்சாக எதிர்க்க வேண்டியது தானே! உண்டு,இல்லை என்று மோதிப் பார்க்க வேண்டாமா? முடியாவிட்டால் சிலபஸை வேகமாக மாற்றவாவது வேண்டும்! இரண்டுமே இல்லாமல் நீட் எதிர்ப்புணர்ச்சியை ’கேம்பிளிங்’ ஆக்க கூடாது.
என்னைப் பொறுத்த வரை எதிர்த்தாலுமே கூட. நீட்’ எழுதுவதற்கு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தயாராகவுள்ள தமிழகத்தில், அதற்குகந்த பாடத் திட்டங்களையும்,முறையான பயிற்சி வகுப்புகளையும் சிறப்பான முறையில் செய்திருக்க வேண்டும்.
பலனற்ற பயிற்சி மையங்கள்!
நீட் எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் ஆர்வம் காட்டிய நிலையில் தமிழக அரசோ காலதாமதமாக 412 நீட் இலவச பயிற்சி மையங்களைத் தோற்றுவித்தார்கள்! ஆனால்,அவை முறையாக நடந்தனவா? பாதிக்கு மேற்பட்ட நாட்கள் அவை திறக்கப்படுவதேயில்லை! அப்படியே திறந்தாலும் நீட்டுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தக் கூடிய தகுதியான பயிற்சியாளர்கள் இல்லை! ஏனெனில்,அவர்களுக்குப் பயிற்சிக்கான ‘மெட்டிரியல்’ தரப்படவில்லை! நீட்டுக்காக NCERT பதிப்பித்துள்ள COMPLETE NEET GUIDE என்ற நூல் ஆசிரியர்களுக்குத் தரப்பட்டிருக்க வேண்டும்! ஆனால்,ஏதோ கணக்குக் காட்டவும்,காசு பண்ணவும் நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன! இதனால்,எந்த பலனும் இல்லாமல் போனது!
இதனால் தான் சென்ற ஆண்டு நீட் எழுத முன்வந்த 17,630 அரசுப் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையில் பாதியளவுக்கும் குறைவாகவே விண்ணப்பித்தனர்! அதிலும் பலர் தேர்வு நேரத்தில் எழுதாமல் பின்வாங்கிவிட்டனர்! காரணம் அவர்களை அரசு தயார் செய்யவில்லை! பெருமளவு மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் தமிழில் தான் எழுதுகின்றனர்! ஆனால்,இன்னும் கூட அதற்கான புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அவர்களுக்கு வழங்கவில்லை! இது எவ்வளவு பெரிய துரோகம்!
நாம் நீட்டை எதிர்க்க வேண்டும் என்று ஒருமித்து முடிவெடுத்தால் எதிர்ப்போம். ஆனால்,அதற்காக நம் பாடத்திட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்ற மறுப்பது ஏற்புடையது அல்ல! பயிற்சி மையங்களை உருவாக்கி நம் மாணவச் செல்வங்களை முழுமூச்சாகப் படிக்க வைப்பதில் பின்னடைவு கூடாது!
நீட் ஒன்றும் கம்ப சூத்திரமில்லை! மூன்றே பாடங்கள்! பிசிக்ஸ்,கெமிஸ்டிரி,பயாலஜி! இதில் 180 கேள்விகள்! ஒவ்வொன்றுக்கும் நான்கு மார்க்! மொத்தம் 720 மதிப்பெண்! முறையாகப் பாடத்திட்டங்களை ’அப்டேட்’ பண்ணிக் கொண்டால்,சிறந்த பயிற்சி தரப்பட்டால், தமிழக மாணவர்கள் தான் இந்தியாவிலேயே முன்னணியில் வருவார்கள்!
எப்போதுமே எட்டாக் கனி தானா?
இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவக் கல்லூரிகள் 465. இதில் தமிழகத்தில் மட்டுமே 48 உள்ளன! இதிலிருந்து தமிழக மாணவர்களின் தரத்தைப் புரிந்து கொள்ளலாம்! இதற்கு மேலும் இன்னும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் வரவுள்ளன! அரசு கல்லூரிகளில் 3100 சீட்டுகள் தமிழக மாணவர்களுக்கானவை.அத்துடன் தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டாவாக உள்ள இடங்களையும் சேர்த்தால் சுமார் 5,000 இடங்களை ஏழை,எளிய குடும்பத்து மாணவர்கள், குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பெற இயலும்! ஆனால், ’நீட்’ வருவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவ கல்வி வாய்ப்பு பெற்றனர்.ஆனால் ’நீட்’டால் அந்த வாய்ப்பும் இல்லாமல் ஒருவரோ,இருவரோ தான் வாய்ப்பு பெறுகின்றனர்! மொத்த மாணவர்களில் 60% க்கும் அதிகமானவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களே! அப்படியிருக்க, இது எவ்வளவு பெரிய கொடுமை! இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நீட் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இது தான் நிலைமை என்றால், நமது போராட்டத்தினால் என்ன பயன்?
மருத்துவ கல்வியை அதிகப் பணம் கொடுத்துப் படித்து வருபவன் நல்ல சேவையைக் கண்டிப்பாகத் தரமாட்டான்! பணத்திற்காக நம் உயிரைப் பறிக்கவும் தயங்கமாட்டான்! அதனால்,ஏழை,எளிய வீட்டுக் குடும்ப பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு அதிகமாகப் போய்ச் சேருவது தான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்லது! கொரானா காலத்தில் கூட அரசு மருத்துவர்கள்,குறிப்பாக பணம் செலவழிக்காமல் படித்து வந்த மருத்துவர்கள் இருந்ததால் தான் நாம் பிழைத்தோம்! இதை மனதில் வைத்து வசதியுள்ள நடிகர் சூர்யா போன்ற நல்லவர்கள் அனைவரும் இலவச நீட் பயிற்சி மையங்கள் தொடங்கி,ஏழை,எளிய மாணவர்களுக்குப் பயிற்சி தந்து நீட் சவாலை எதிர்கொள்ள உதவ வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன்.அது வரை நீட்டை எதிர்க்க வலுவான சட்ட போராட்டத்தை அரசும்,அரசியல் கட்சிகளும் நடத்திக் கொண்டு வரட்டும்!
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும்,தகுதியையும் வளர்ப்பதற்கு எந்த ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடத் துப்புக் கெட்ட தமிழக ஆட்சியாளர்கள், ஏதோ தாங்கள் நீட்டை ரத்து செய்துவிட முடியும் என்ற பொய்யான நம்பிக்கையை விதைப்பது பஞ்சமா பாதகமாகும்! இந்த ஆட்சியாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி 16 மாணவர்களின் தற்கொலைக்கு தண்டனை வழங்க வேண்டும்!
அருமை இந்த பதிவு நீட் பற்றிய சரியான புறிதலை மக்களுக்கு ஏற்படுத்தும்
ரத்தினச் சுருக்கமாக, நீட்டின் வரலாற்றை எளியவர்களுக்கு புரிய வைக்கும் பதிவு…யார் இதில் குற்றவாளி என்றும் அறிய வைக்கும் பதிவு…இறுதியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் சூர்யா ஏற்பார் என நம்புவோம்…