சமூக வரலாற்றை, வாழும் சம காலத்தோடு இணைக்கும் “சுளுந்தீ”

- பீட்டர் துரைராஜ்

இது 18 ம் நூற்றாண்டு நாயக்கர் கால சமூகத்தை துல்லியமாக  சித்தரிக்கும் நாவல்!

சாதிகளுக்கிடையிலான நுட்பமான மோதல்களும், ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கான சூழ்ச்சிகளும், அதனால் ஏற்படும் பேரழிவுகளும், பாதிப்பு ஏற்படுத்துவர்களின் பதற்றமும், பாதிக்கப்படுவர்களின் சீற்றமுமான வரலாற்றில் நாம் இழந்ததையும், மீண்டதையும் பல அரிய தகவல்களுடன் படு விறு, விறுப்புடன் சுவைபடச் சொல்கிறது இரா.முத்துநாகுவின் ’சுளுந்தீ

ஒரு சமுதாயம் எந்தக் காலத்திலும், அதனளவில் நிறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது ‘அரசு இரகசியம்’ என்றால், அப்போது ‘அரண்மனைக் கமுக்கம்’; இப்போது ‘காவல்துறை’ என்றால், அப்போது ‘குடிபடை’ , இப்போது ‘அரசாங்க வேலை’ என்றால், அப்போது ‘அரண்மனை ஊழியம்’. இப்போது குடியுரிமை சட்ட மசோதா என்றால், அப்போது குடி நீக்கம் …என இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே சமகாலத்தை, அக்கால நடவடிக்கைகளோடு நாம்  ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

இரா.முத்துநாகு  எழுதியிருக்கும்  நாவல் “சுளுந்தீ“. கதை 18 ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நடக்கிறது. கன்னிவாடி அரண்மனை நாவிதனாக இருந்தவன் ராமன்;  அவன் மகன் மாடன். இவர்கள் ஊடாக கதை நகர்கிறது.

“சாதியைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் சாதியை விட்டுவிட்டால் இந்தச் சமுதாயத்தில் பேச  என்ன இருக்கிறது..? ” என்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் அப்போது தமிழ் துறை பேராசிரியராக இருந்த வீ.அரசு குறிப்பிட்டார். இந்த நாவலைப் படிக்கையில் அவர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

இந்த நாவல் பண்டுவம் (மருத்துவம்) செய்யும் நாவிதர்களை மட்டும் பேசவில்லை. தச்சன், சாணார், நாயக்கர்,  மலைவாழ் பளியர் மக்கள், விவசாயம் செய்யும் குடியானவர்கள், இராவுத்தர்கள் என்கிற முஸ்லிம் படையினர், ஏசு சபை பாதிரிகள், இடையர்கள், விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்ட தெலுங்கு பேசும் குடிகள் ,பிராமணர்கள் என அனைவரையும் பேசுகிறது. முத்துநாகு பத்திரிகையாளராக இருந்தவர்; எனவே  வரலாற்று நாவலாக இருந்தாலும், எளிய வார்த்தைகளையே பயன்படுத்தி உள்ளார்.  இதுவரை இந்த நாவல் ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது. இரண்டு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு பண்டுவம் பார்த்துவரும் ராமன் அரண்மனையாருக்கு நாவிதம் செய்து வருகிறான். அவனுக்குத் தெரியாத இரகசியம் இல்லை. ஆனாலும்  வேலைகளைச் செய்து வரும் அவன் மக்களோடு மக்களாக பழகுகிறான். ஊரில் நடப்பதை அரசனிடம் சொல்லுகிறான். ஒரு சித்தரிடம் அணுக்கமாக இருந்து அவரிடம் உள்ள வித்தைகளையெல்லாம் கற்றுக்கொள்கிறான். ஆனாலும் தளபதி இவனை எப்படியாவது மாட்டிவிடப் பார்க்கிறான். இவரது மகன் மாடனிடம் ஊரார் சவரம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். அவனுக்கு போர்வீரனாகும் ஆசை இருக்கிறது. இது சிக்கலாகிறது. குதிரையேற்றமும் இவனுக்குத் தெரியும். மாடனோடு சண்டைபோட, நாடே ஒருவனை  அனுப்புகிறது.

இதில் பண்டுவம், மூலிகைகள் பேசப்படுகின்றன. பண்டுவத்திற்கு பயன்படும் செந்தூரத்திலிருந்து வெடிமருந்து தயாரிக்கப்படுவதால் செந்தூரத்தை வாங்க அரண்மனை உத்தரவு தேவைப்படுகிறது அதனால்தான் ‘வெடி மருந்து’ என்றப் பெயரை இன்றும் பயன்படுத்துகிறோம். பண்டுவத்தொழில் செய்பவர்கள் அரசபடைகளால்  கொலை செய்யப்படுகிறார்கள். பண்டுவம் செய்ய சீடர்கள் வருவதில்லை. அரசப்படைக்கு பயந்து,  தான் தொழில் செய்வதை வெளியில் சொல்லுவதில்லை. தொழில் அழிகிறது. உணவுக்குப் பயன்படும் உப்பு, வெடிக்கும் பயன்படுகிறது (வெடி உப்பு என்ற பெயர் புழங்குகிறது பாருங்கள்).

இதே காரணத்தினால் நெருப்புக்கும் கட்டுப்பாடுகள் வருகின்றன. அம்மன்கோவில்களில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். இதிலிருந்து சுளுந்திக் குச்சி மூலமாக நெருப்பை மக்கள் வீட்டிற்கு எடுத்து வருவர். ஏனெனில் இந்த மரத்தில்  நெருப்பு அணையாது. இதற்கு தடை விதிக்கிறது அரசு. சுளுந்திக் குச்சியை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகிறது. ‘சுளுந்தீ’ இதுதான் நாவலின் தலைப்பு .

நாம் இயல்பாக கதையோடு ஒன்றிப்போக முடிகிறது.  திண்டுக்கல்லில்  எப்படி தோல் ஆலைகள் தோன்றின ! ஏன் முஸ்லிம்கள் அதிகம் தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் சொல்லலாம். கன்னிவாடி அரண்மனையின் (அதாவது ஜமீன்) கடைக்கோடி நகரம் திண்டுக்கல். எனவே அங்கு தோல் ஆலைகள் நிறுவப்படுகின்றன.  அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்த  குதிரைகளை முஸ்லிம்கள்தான்  பழக்கினார்கள். எனவே காசர்கோடு மரைக்காயருக்கு குதிரைச் சந்தையும், தோல்பட்டறைகளை உருவாக்கவும் மன்னர் உதவிசெய்தார். குதிரைச் சேணம் உள்ளிட்ட தோல் பொருள்கள் மன்னனுக்குத் தேவைப் படுகின்றன.மருத்துவத்திற்கு பயன்பட்ட கஞ்சா ஆங்கிலேயர் வருகையால் போதைப் பொருளாகிறது. ‘சுருட்டுக் குச்சி’ அறிமுகமாகிறது.

இந்த நாவல் மூலிகைப் பெயர்களை, மருத்துவச் செடிகளின் பெயர்களையும், அவை பயன்பட்ட விதத்தையும் நாவலின் போக்கில்  நிறையச் சொல்கிறது. அந்தப் பெயர்களை இந்த நாவலில் இருந்து எடுத்துவிட்டால் பல பக்கங்களை கணிசமாகக்  குறைக்கமுடியும். அவ்வளவு விபரங்கள் சாதாரண  வாசகனுக்குத் தேவையா.. என்று தோன்றக்கூடும். ஆசிரியர் தெரிந்தேதான் இதை எழுதியிருக்கிறார் போலும். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படக் கூடும்.

“என்னோடு யார் வேணுமின்னாலும் மோத விடுங்க. தோத்தா குடியானவனுக்கு செரைப்பேன். இல்லைனா தோத்தவன் சவரத் தொழில் செய்யணும் ” என்று சொன்ன மாடனை  செயிச்சவனுக்கு ‘பத்துக் குழி நஞ்சைநிலம் கொடுத்து அரண்மனை ஊழியமும்’ கொடுக்கப்படும்   என்று எழுபத்திரெண்டு அரண்மனைக்கும் பறையடித்து  தெரிவிப்பதில் தொடங்குகிறது கதை. இதை விவரிக்கும் விதமாகத்தான் இந்த நாவலின் எஞ்சிய பக்கங்கள் உள்ளன. மாடன் வெற்றி பெற்றானா…? என்ன ஆகுமோ..?  என்ற பதட்டத்தோடு நாவல், விறுவிறுப்பாக ஓடுகிறது. தனது ‘தண்டின்’ உண்மையான நீளம் தெரிந்து கொண்டதாலேயே கடைசிவரை நாவிதனுக்கு எதிராக இருக்கும் தளபதியைப் பார்க்கிறோம்.

நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேற்றப்பட்ட தெலுங்கு பேசும் சாதிகளுக்கு, தமிழ்க் குடிகளின் நிலத்தினைப் பிடுங்கிக் கொடுக்க, குலவிலக்கம் எனும் பாண்டியர் காலத்திய அரச சூழ்ச்சியையும், அதன் பின்னணியில் இருந்த தெலுங்கு பேசும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும் நாவல் விளக்கியுள்ளது!.

ஒரு ஊரில் நாவிதனின் பங்கு எத்தகையது என்பதை இந்த நாவல் மிக விரிவாகப் பேசுகிறது.  நம் முன்னோர்களின் வாழ்வியலை முழுமையாகப் பதிவு செய்து, வரலாற்றில் முத்துநாகு இடம் பெற்று விட்டார் . இடைச் சவரம் செய்யும்போது ‘ தண்டப் பிடிச்சு ஒரு விதப்பைய லெகுவாக துருத்தி பொத்தினாற்பில சவரம் செய்யும் போது பலருக்கு, அவன் பொண்டாட்டி கைபட்டது போல தண்டு விரைக்கும். சிலருக்குப் பொதபொதவெனக் களிதம் இறங்கும்’ என்று இயல்புகளைச் சொல்லுகிறார். ஒருவன் இறந்து போனால், எந்த சாதிக்காரனுக்கு, நாவிதன் என்னென்ன சடங்குகள் செய்வது ! சவரக்கத்தியை வைத்து, அரசனுடைய எதிரிகளை தீர்த்துக் கட்டியது எப்படி ?  அரசாங்க கமுக்கங்களை, ஒருவருடைய அந்தரங்க விஷயங்களை எப்படி ஒரு நாவிதன் பாதுகாக்க வேண்டும் என்பதையெல்லாம் சுவைபட விவரித்துள்ளார் ஆசிரியர்.

யார் யாரிடம் எப்படி நடக்க வேண்டும்; தமது கடமைகள் என்ன  என்பதை  தன் மகனுக்கு சொல்லும் பக்கங்கள் அற்புதமானவை. இது அவர்களின் இனவரைவியல் குறித்த நூல்  என்று பேரா.ஒ.முத்தையா முன்னுரையில் கூறுகிறார்.   ‘1904 ஆம் ஆண்டு இறந்த பிச்சைப் பண்டிதர் மொய்க்கணக்கு ஓலைச் சுவடியாய் கிடைத்தது. அதில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை மொய் எழுதப்பட்டுள்ளது. இது நாவிதத் தொழிலுக்காக மட்டும் கிடைத்ததா’ என்று கேட்கிறார் இந்தப் பேராசிரியர்.  நாவலைப் படித்துவிட்டு, இந்த நூலின் முன்னுரையைப் படியுங்கள். நாவலின் சாரம் கிட்டும்.

ஆண்டுக்கணக்கில் பாடாய்படுத்திய ஆனந்தா வருடப் பஞ்சம் ‘கிணறு’ என்ற கண்டுபிடிப்பை கொடுத்தது !   ‘குல நீக்கம்’ நடந்த கதைகளைச் சொல்லுகிறது. பூர்வ குடிகளின் நிலத்தை அபகரிக்க நடந்த குலநீக்கம்,  இதனால் வெகுண்டெழுந்த மக்களின் கதைகளைச் சொல்லுகிறது.குலநீக்கம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க விதிக்கப்படும் விதிகள் கொடுமையானவை.  இந்த மக்கள் செஞ்சியில் இருக்கும் சுல்தான்படைகளோடு சேருவதைச் சொல்லுகிறது. இவர்களில் அரசனுக்கு எதிராக குரல் கொடுத்த மருதப்ப ஆசாரி கதையைச் சொல்கிறது. குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் அரசனுக்கு எதிராக திரண்டு விடாமல் இருக்க அவர்களுக்கு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் சேசுசபை சாமியாரான ஆல்வரேசு கதையைச் சொல்லுகிறது. அரண்மனையாருக்கு ஆலோசனை சொல்லும், சாதி கடந்த குலகுரு பற்றி பேசுகிறது. சைவ மடங்களின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டக் கதையைச் சொல்லுகிறது.

சின்னாளப்பட்டியில் ஏன் பட்டுசேலை நெய்ய வேண்டும் ?  ‘நெசவுக்கு  பாவு நூல் ஒன்னோடு ஒன்னு சிக்காம இருக்கணும். அதற்கு குறைவான மழ, ஈரவாட அடிக்காத காத்து, நல்ல வெயிலு அடிக்கிற எடம் வேணும்’ என்கிறார். மக்களின் பல்வேறு பழக்கவழக்கங்களுக்கு , மூட நம்பிக்கைகளுக்கு கலகப் பாத்திரங்கள் மூலமாக விளக்கம் சொல்லுகிறார். வடக்குத் தேசத்திலிருந்து அரண்மனை எல்லைக்கு புதுசா வந்த ரெட்டி குலத்தினர் மூலமாக ‘ இட்லி’ வந்த கதையைச் சொல்லுகிறார்.செஞ்சிப் படைகள் பிரியாணியைத் தருகிறார்கள்.

நாம் அன்றாடம் புழங்கும் சொலவடைகளுக்கு நாவல் மூலம் விளக்கம் அளிக்கிறார். ‘உப்புக் குறவன்’ மாதிரி முழிக்கிறான். ஆங்கிலேயர்களுக்காக  தடைசெய்யப்பட்ட கடற்கரைகளில் இருந்து, உப்பு காய்ச்சி எடுத்து குறவர்கள்  விற்பனை செய்வார்கள். அவர்கள் விலையைக் குறைத்துத்  தரவில்லையென்றால்,  குடிப்படையிடம் சொல்லிவிடுவதாக மிரட்டும் போது முழிப்பது உப்புக் குறவன். ‘வெங்கம் பய’,  ‘ஈத்தரப்பய’ போன்ற வார்த்தைகளின் மூலகாரணங்கள்  ஆச்சரியமளிக்கின்றன.

மொத்தத்தில் இந்த நாவல் ஒரு வரலாற்று ஆவணம். இந்த நாவலை மறுமுறையும் படிக்க தோன்றுகிறது. முத்துநாகு தொடர்ந்து எழுத வேண்டும். தமிழகத்திற்கு இன்னொரு ‘தொ.பரமசிவன்’ கிடைத்துள்ளார்.

ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை- 606806/பக்கங்கள் 480/ விலை.ரூ.450.   கைபேசி;  99948 80005

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

அறம் இணைய இதழ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time