வீழ்த்தப்பட்ட அமெரிக்கா..! வெல்ல முடியாத ஆப்கானிஸ்தான்!

-சாவித்திரி கண்ணன்

ஆப்கானிஸ்தான் எப்போதுமே ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிராகவே தொடர்கிறது. வெறும் 3.9 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. தன்னை ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷை 1919ல் வீழ்த்தியது! தன்னை அடிமைபடுத்த முயன்ற ரஷ்யாவை 1996ல் தோற்கடித்து பின்வாங்க வைத்தது. தற்போது அமெரிக்காவை பின்வாங்க வைத்துள்ளது. எத்தனை உயிர் பலிகளுக்கிடையிலும் அயராமல் போராடி அன்னியரை வெளியேற்றிய தாலிபான்களை சீனாவும், பாகிஸ்தானும் சினேகம் பாராட்டுவது எதனால்..? தாலிபான்கள் தலை தூக்குவது இந்தியாவிற்கு ஆபத்தா..?

உலகின் மிகத் தொன்மையான கலாச்சாரத்திற்கு பேர் போன நாடு. இஸ்லாமிய தேசமாவதற்கு முன்பு புத்தமதமும், இந்து மதமும் கோலோச்சிய தேசம்! ஒரு கட்டத்தில் உலகின் சோசலிச நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டதும் உண்டு! அதீத ஆன்மீகத் தேடல் கொண்டவர்களும், அதி பயங்கர தீவிரவாத பேரழிவை நிகழ்த்துபவர்களும் சங்கமிக்கும் பூமியாகவுமுள்ளது!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை அகில உலக தாதாவாக அறிவித்துக் கொண்டு, அரபு நாடுகளின் அரசியலில் அத்துமீறி தலையீடுகளை நிகழ்த்தி வந்த அமெரிக்காவின் மீதான கோபத்தை வெளிப்படுத்த அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்தியதோடு நில்லாமல் அமெரிக்காவின் இரு மாபெரும் வர்த்தக கட்டிடங்களை விமான தாக்குதல் நடத்தி, தரைமட்டமாக்கி அதிர்ச்சியூட்டியது பின்லேடன் தலைமையிலான அல்கைதா அமைப்பு!

அந்த அவமானத்தை தாங்க முடியாமல் ஆப்கானிஸ்தான் மீது கண்மூடித்தனமான விமான தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. அத்துடன் நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஆப்கானில் மிக நவீன அமெரிக்க ராணுவத்தை களமிறக்கியது அமெரிக்கா. அத்துடன் அங்கேயுள்ள அந்த மக்களில் சிலரைக் கொண்டு தனக்குகந்த ஒரு ஆட்சியை ஸ்தாபித்தது. அந்த சின்னஞ் சிறிய நாட்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரும், அமெரிக்க படையும், அவர்களின் நவீன ஆயுதங்களும் 20 ஆண்டுகளாக களம் கண்டும் தாலிபான்களை ஒடுக்க முடியவில்லை. இன்றைய நிலவரப்படி தாலிபான்களின் எண்ணிக்கை 85,000 தான்!

அமெரிக்க படைகளின் பின்வாங்கல் ஏன்?

தாலிபான் வசம் நாட்டின் நாற்பது சதவிகித நிலப்பரப்பு வந்துவிட்டது. எவ்வளவு நவீன உளவு சாதனங்கள், வேவு பார்க்கும் சாட்டிலைட்டுகள், காமிராக்கள் இருந்தும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான தாலிபான்களைக் கொன்று குவித்த பிறகும் எந்த முன்னேற்றத்தையும் அமெரிக்கப் படைகளால் எட்ட முடியவில்லை! ஒன்றல்ல, இரண்டல்ல, இருபதாண்டுகள் – அப்பாவிற்கு பிறகு மகன் என்பதாக – அமெரிக்க ராணுவத்தினர் சென்று  அல்லலுற்றது தான் கண்ட பலன். பின்லேடனை கொல்ல முடிந்தது. ஆனால், அமெரிக்க படைகளின் இருப்பானது, அங்கே பின்லேடன்களைப் போல ஆயிரக்கணக்கானவர்களை  உருவாக்கிய வண்ணம் இருந்தது. இராக்கில் சதாம் உசேனை வீழ்த்த முடிந்தாலும், ஐ.எஸ்சை வளர்த்தது தான் அமெரிக்கா கண்ட பலன்!

நெடிதுயர்ந்த மலைகள், பாறைகள் இவற்றுக்கிடையே பசி, பட்டினியுடன் லட்சியம் ஒன்றே குறிக்கோளாக – இறை நம்பிக்கையை பற்றாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் – இயங்கிய  தாலிபான்களை, சம்பளத்திற்காக வேலை செய்யும் ராணுவ வீரர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை.

ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 2,488. மற்ற நாட்டு வீரர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இது, அமெரிக்க மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்னொரு நாட்டுக்காக நம் ராணுவ வீரர்கள் ஏன் உயிர் துறக்க வேண்டும். குடும்பத்தை பிரிந்து ஆண்டுக்கணக்கில் அவதிப்பட வேண்டும். ஆகவே, ஆப்கான் அரசின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும், ஆயுதங்களும் தந்து திரும்ப வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலுப்பட்டது. இதையடுத்து டிரம்ப் அதிபராக இருக்கும் போதே 2018 முதலே தாலிபான்களிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு தரக்கூடாது. வாபசாகி திரும்பும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது…என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 11 க்குள் அமெரிக்க படைகள் முழுமையும் வாபஸாகிவிடும் என உத்திரவாதத்தை அமெரிக்க அதிபர் பைடன்  தந்துள்ளார். இதற்கிடையில் அமெரிக்கா, இந்தியா,சீனா உள்ளிட்ட அனைத்து தூதரக அதிகாரிகளும் அவசர,  அவசரமாக ஆப்கானில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இனி ஆப்கான் என்னாகும்..?

கடந்த 20 ஆண்டுகால போரில் ஆப்கானில் ராணுவம்,போலீஸ் தரப்பில் சுமார் 76,000 பேருக்கும் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், சமாதான தூதுவர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், பெண்கள், குழந்தைகள்.. என மக்கள் தரப்பில் சுமார் 80,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேட்டோ நாட்டு படைகளும், அமெரிக்க படைகளும் முற்றிலும் விலகிய பிறகு ஒரு சில மாதங்களுக்குள் அரச படைகளை சுலபமாக வீழ்த்திவிட்டு, தாலிபான்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தான் அனைவரின் கணிப்பாக உள்ளது. தாலிபான்கள் இத்தனை எதிர்ப்புகளையும் கடந்து உயிர்ப்புடன் இருப்பதற்கு மக்களில் கணிசமான ஒரு பிரிவினருக்கு அவர்கள் மீது மரியாதையும், அனுதாபமும் இல்லாமல் சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது. தாலிபான்களின் அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் ஆப்கான் மக்கள் நன்கு அறிவார்கள்.

அதுவும் பெண்கள் விவகாரத்தில் படுபிற்போக்கானவர்களாக கடந்த காலங்களில் அவர்கள் வெளிப்பட்டுள்ளனர். 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அவர்கள் படிக்க அனுமதிகாதது, பெண்கள் முழு புர்காவுடன் வெளிவராவிட்டால் கடுமையான தண்டனை வழங்குதல்,திருட்டு மற்றும் முறைகேடான பாலியல் உறவுகளுக்கான தண்டனையாக கைகளை வெட்டுதல், சிரச்சேதம் செய்தல் அகியவற்றை நடுவீதியில் நிறைவேற்றுதல் என்பதான அதிரடி அராஜகங்களுக்கு பேர் போனவர்கள்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் பெண்கள் படித்து பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துவிட்டனர். அனைத்துவிதமான தொழில்கள், வியாபாரம் என ஆப்கான் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.அவ்வளவு ஏன், இன்றைய ஆப்கான் நாடாளுமன்றத்தில் 69 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பிரம்மாண்ட மாற்றங்களை அப்படியே அவர்கள் தொடர அனுமதிப்பார்களா..? என்பது தெரியவில்லை.

இஸ்லாத்தில் சுன்னி பிரிவை சேர்ந்தவர்களான தாலிபான்கள் கடுமையான ஷரியத் சட்டங்களின் படி ஆட்சியை கொண்டு செலுத்த நினைப்பவர்கள்! ஆகவே, மக்களில் கணிசமானவர்கள் ஒருவித அச்சத்துடன் தான் எதிர்காலத்தை எதிர் நோக்குகின்றனர்.

இந்தியாவின் நிலைபாடு;

இந்தியாவிற்கு ஆப்கானுடன் நீண்ட நெடுங்காலமாக கலாச்சாரப் பிணைப்புகள் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு – பள்ளி, கல்லூரிகள், சாலைகள் உருவாக்கப்படவும், பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தவும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய்களை தந்துள்ளது. ஆப்கான் மூலமாக இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலை எடுக்க கூடாது என்பது தான் இந்தியாவின் கவலையாகும். அத்துடன் ஆப்கான் தீவீரவாதத்தை இந்தியாவிற்கு எதிராக திருப்ப பாகிஸ்தானும், சீனாவும் துணை போகுமோ என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருக்கிறது.

பாகிஸ்தான் – சீனா என்ன செய்யும்..?

ஆப்கான் நம்மைக் காட்டிலும் பாகிஸ்தானுக்கு தான் பயங்கர தலைவலியை தந்து கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க படைகள்- தாலிபான்கள் மோதலால் ஆப்கானில் இருந்து சுமார் 50 லட்சம்  பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். அவர்களில் 35 லட்சம் பேர் இன்று வரை பாகிஸ்தானில் தான் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். மேலும் அகதிகளை ஏற்கும் மனநிலையோ,சக்தியோ  பாகிஸ்தானுக்கு கிடையாது. இப்போதே இந்தச் சுமையை அதனால் தாங்க முடியவில்லை. அத்துடன் ஆப்கானில் இருப்பதை போலவே, பாகிஸ்தானிலும் தற்போது தாலிபான்கள் அமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. அதையும் பாகிஸ்தான் அச்சத்துடன் தான் பார்க்கிறது. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் தனக்கு ஆதரவான அல்லது தன் செல்வாக்கை செலுத்த முடிந்த ஒரு அரசு உருவாவதை பாகிஸ்தான் விரும்பும். அதற்காக காய் நகர்த்தும்!

rb_related title=”Also read” total=”2″]

ஆப்கானில் உள்ள குழப்பத்தை பயன்படுத்தி ஆப்கானில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா இப்போதே திட்டமிட்டு தாலிபான் தலைவர்களை அழைத்து பேசி வருகிறது. ஏற்கனவே, சீனா தாலிபான்களுக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகமும் இந்தியாவிற்கு இருக்கிறது. தெற்காசியாவில் பலவீனமான, குழப்பமான நிலையில் உள்ள நாடுகளை கையில் எடுத்துக் கொண்டு சில காலமாக சீனா தனக்கான அரசியலை செயல்படுத்தி வருவதை இலங்கை விவகாரத்திலேயே பார்த்த அனுபவம் நமக்கு உண்டு தானே! இந்த வகையில் ஆப்கானில் நடக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்த வண்ணம் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time