பிறப்பும், சாதியும் அர்ச்சகராகத் தடையாகுமா..?

- சாவித்திரி கண்ணன்

ஆட்சிக்கு வந்ததும், ”அர்ச்சகர், ஓதுவார்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்தது திமுக அரசு! அவ்வளவு தான்! பரம்பரை, பரம்பரையாக மட்டுமே இது வரை அர்ச்சகர் நியமனங்களை செயல்படுத்தும் கூட்டம் ”இது ஆகமவிதிகளுக்கு எதிரானது” என்று கோர்ட்டுக்கு சென்றுவிட்டது! ஆகமவிதி என்பது இறைவனை வழிபடும் பக்தி முறைகள் சம்பந்தமானதா..? அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிழைப்பு தொடர்பானதா..?

ஆகமவிதிகள் என்று சொல்லப்படுவது வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு பற்றியதாகும். கருவறையின் அமைப்பு, வழிபடும் சிலையின் வடிவமைப்பு, எந்தெந்த திசையில் என்னென்ன இருக்க வேண்டும். எப்படி வழிபாடு அமைய வேண்டும் என்பது தான்! இதில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என ஆகம விதிகளில் சொல்லப்படவே இல்லை. ஆனால், இதை தங்கள் பிழைப்பாகவும் , வருமானத்திற்கான வாய்ப்பாகவும் ஆக்கிக் கொண்ட கூட்டத்தினர் இப்படியான ஒரு வியாக்கியானம் செய்வதோடு, ”மற்றவர்கள் இறைவனின் திருமேனியை தீண்டினால் தீட்டாகிவிடும்” என்று வாதம் வைத்து வருகின்றனர்.

முன்னாளில்  அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழிபாட்டுத் தலங்களே உருவாகத நிலையில் உருவ வழிபாட்டை எதிர்த்தவர்களே இவர்கள்! ‘வேதமே அனைத்தும்’  ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆதிசங்கரர் வழி நின்றவர்கள் தான் இவர்கள்! பிற்காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும், மக்கள் திரளினரும் ஆங்காங்கே கோவில்களை உருவாக்கிய போது, அதில் அர்ச்சராக இருப்பதன் மூலம் சமூக அந்தஸ்தும், வருமானமும் கிடைக்கிறது என்பதால் மெல்ல,மெல்ல கோவில்களுக்குள் ஊடுருவி வருமானம் தரும் அனைத்து முக்கிய கோவில்களையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அந்த தொழிலை பரம்பரைத் தொழிலாகவும் மாற்றிக் கொண்டனர். கோவில்கள் அரசாங்கம் வசம் வந்த பிறகும், அரசே சம்பளம், சலுகைகள் ஆகியவை தந்த பிறகும் கூட இந்த நிலைமைகள் மாறாமல் தொடர்ந்தன.

இந்த நிலையில் தான் கருணாநிதி 1970 ஆம் ஆண்டு அனைத்து பிரிவினரில் இருந்தும் அர்ச்சகராவதற்கான முயற்சி எடுத்தார். உடனே உச்ச நீதிமன்றம் சென்றனர். இரண்டாண்டுகளாக நடந்த அந்த வழக்கில் 1972 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ”அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோர முடியாது.” என தெளிவாக தீர்ப்பளித்தது. ஆயினும் அப்போது கடுமையான பிராமண லாபி தந்த அழுத்ததால் கருணாநிதியால் தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் போனது.

1996 ஆம் ஆண்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான மந்திரங்களை அடையாளம் கண்டு கற்பிக்கும் ஏற்பாட்டை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் செந்தமிழ் சதுரரும் கிருபானந்த வாரியாரின் சீடருமான சத்தியவேல் முருகனார் மூலம் செய்த போது, சோ உள்ளிட்டவர்கள், ”சமஸ்கிருந்த மந்திரங்களுக்கென்று ஒரு சக்தி உள்ளது. மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதை இறைவனே ஏற்கமாட்டான், அவனுக்கு மற்ற மொழிகள் புரியாது” எனக் கூறிய போது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. ஆட்சியாளர்களின் தீவிர முயற்சியால் ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என்று மட்டுமே போர்டு வைக்க முடிந்தது.

திமுக அரசு  2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசாணையை வெளியிட்டது. அதன் பிறகு, மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் சென்னை, திருச்சியில் வைணவக் கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் துவங்கி,  206 பேருக்கு பயிற்சிகள் தந்து இறுதியில் மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன.

அப்போதும் ஆதி சிவாச்சாரியார் சங்கம் நீதிமன்றத்திற்கு ஓடியது. பிறகு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, 2015-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், “ அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஏற்க இயலாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அதற்கு இடம் தராது. சட்டத்திற்கு உட்பட்டே எவையும் அனுமதிக்கப்படும். அதன்படி சொல்லப்படும் ஒரு மரபோ அல்லது வழக்கமோ சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26-ல் கூறப்படும் பாதுகாப்பு வளையத்திற்கு மாறாக மீறுமானால், நிச்சயமாக சட்டம் அதன் ( ஆகம) விதிகளை மேற்கொண்டு செயல்பட்டே தீரும்.”

ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு உரிய ஒரு குறிப்பிட்ட ஆகமம் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பிரிவினர் (denomination) தான் அர்ச்சகராக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினாலும், சட்டப் பிரிவு 16 (5)-ன் படி அப்படியே செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அது சாதி மற்றும் பிறப்பு அடிப்படையில் வரையறை செய்யுமானால் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால்,  கோயிலின் ஆகமவிதிகளைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்” என்பதாக தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது!

இருப்பினும், அர்ச்சகர் பயிற்சி படித்து முடித்தவர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கப்படாமல் ஒரு வலுவான லாபி இருந்து வருகிறது.

2018 ல் கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏன் இப்படி செய்ய முடியவில்லை என்ற குரல் பலமாக எழுந்ததைத் தொடர்ந்து இரண்டே இரண்டு பிராமணர் இல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அர்ச்சகர் பயிற்சி முடித்து, முறைப்படி தீட்சையும் வாங்கிய 203 பேர் பல வருடங்களாக காத்துக் கொண்டுள்ளனர்.

அதாவது மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றாலும் செயல்படுத்த முடியாத ஒரு அம்சமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் உள்ளது!

இந்த நிலையில் ஸிரிதரன் என்பவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் ஒரு தீவிரமான சாதி வெறியராக மட்டுமின்றி, திராவிட இயக்க வெறுப்பாளராகவும் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

சமீபத்தில் இவர் ஒரு வழக்கு தொடுத்தார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு எத்திஸ்ட். ஆகவே, அற நிலையத் துறையின் ஆலோசனை குழுவிற்கு தலைமை வகிக்க கூடாது என உத்திரவிடக் கோரி இருந்தார். இதற்கு நீதிமன்றம் கடும் கண்டணம் தெரிவித்து, இவரை ஐந்தாண்டுகள் எந்த பொது நலவழக்கும் போடக் கூடாது என தீர்ப்பளித்தது.

இந்த மனிதர் தான் ஆகமத்தின் பெயரால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் சிவனின் முகத்தில் இருந்து தாங்கள் பிறந்து பிறவி எடுத்தவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியுள்ளது.

எல்லோருக்கும் என்ன ஆச்சரியம் என்றால், ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் பெஞ்ச் விசாரணையில் இருக்கும் போது எப்படி ஒரு தனி நீதிபதி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது…? நடந்து வரும் வழக்கோடு தங்களை இணைத்துக் கொள்ள மட்டுமே அவர்கள் வேண்டுகோள் விடுக்க முடியும்..!  இதை அறியாமல் நீதிபதி எப்படி தடையாணை தந்தார். அரசு வழக்கறிஞர்கள் ஏன்  சொல்லவில்லை? ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தெளிவாக உறுதிபடுத்திய ஒரு விவகாரம் மீண்டும், மீண்டும் எப்படி கோர்ட்டுக்கு வருகிறது.

rb_related title=”Also read” total=”2″]

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட வழியுண்டா..?

சாதி அடிப்படையில் வேலை என்பதை இந்திய அரசியல் சட்டம் ஏற்காது! ஆகம விதிகளிலேயே குறிப்பிட்ட சாதி தான் அர்ச்சகர் ஆக முடியும் என்பது சொல்லப்படவில்லை. அந்தந்த கோவில்களுக்குரிய சுவாமி அலங்காரங்கள், அர்ச்சனை மந்திரங்கள், நைவேத்தியம் செய்யும் முறை, தீபாரதனை காட்டும் வழிமுறை இவை தெரிந்தால் போதும். ஆகம பயற்சி முடித்து, தீட்சையும் வாங்கியவர் அர்ச்சகராகலாம்! உண்மையான பக்திக்கு சாதியோ, ஏற்றத் தாழ்வோ தடையாக இருக்கமுடியாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time