காலை பிடித்தாலும், சாதி மீறிக் காதலித்தால் மரண தண்டனையே!

-சாவித்திரி கண்ணன்

அவன் நன்றாக படித்த இளைஞன், ஹிந்து மதத்தை சேர்ந்தவன், உ.பியின் கொராக்பூர் உனாவுலி கிரமத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளரும் கூட! பார்க்க அழகான தோற்றம் கொண்டவன்! பெயர் அனிஷ் கன்னோஜியா! முதலமைச்சர் ஆதித்திய நாத்தை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு  ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர செயற்பாட்டாளர்!

அவனை தீப்தி மிஸ்ரா என்ற பெண் காதலித்தாள்! அவனும் அவள் அழகால், பேச்சால் ஈர்க்கப்பட்டான்! எனினும், அந்தக் காதலை பெண் பிராமண குலம் என்பதால், அவன் முதலில் தவிர்த்துப் பார்த்தான். ஆனால், காலப் போக்கில் காதலில் வீழ்ந்தான். இருவரும் காதலித்தனர்! அவன் வீட்டில் ஒத்துக் கொண்டாலும், பதற்றம் இருந்தது.  பயந்தனர். பையனோ தலித்! பெண்ணோ பிராமண குலம்! ஆகவே, தான் பயம். அவள் வீட்டைத் துறந்து பிடிவாதமாக வந்ததால் இருவருக்கும் கல்யாணம் நடந்தது.

ஆனால், வாழக் கொடுத்து வைக்கவில்லை. பெண் வீட்டார் பையனை ஆள் வைத்து தாக்கி உயிர் பறித்து விட்டனர். தேவகாளி பஜாரில் வெட்ட வெளியில் ரத்தம் சொட்டச், சொட்ட வெட்டி சாய்க்கப்பட்டான் இளைஞன். இந்த கொலையை உத்திரபிரதேசத்தின் எந்த பிரதான கட்சித் தலைவரும் கண்டிக்கவில்லை. பையனுக்கு ஆதரவாக சந்திர சேகர ஆசாத் போன்ற சில சிறிய தலித் தலைவர்கள் மட்டுமே குரல் கொடுத்தனர். உத்திரபிரதேசத்தின் மிகப் பெரிய தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தனக்கான  முக்கிய வாக்கு வங்கியாக பிராமண சமூகத்தை கருதுகிறது. சமஸ்கிருதத்தை காப்பதற்காக மாயாவதி குரல் கொடுத்து வருகிறார். பிராமணர்களின் நலன் காப்பதே பிரதானமாகிவிட்டது மாயவதி அம்மையாருக்கு!

ஆர்.எஸ்.எஸ், பாஜக அமைப்புகளும் தங்களுடைய ஆள் கொல்லப்பட்டதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஒரு அம்பேத்காரிஸ்ட் தனது டிவிட்டரில், ”ஒரு இந்துவாக இருந்தும், ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தும், யோகியின் அன்பை பெற்றவனாக இருந்தும் ஒரு தலித்திற்கு இது தான் நிலைமையா..?” எனக் கேட்டு இருந்தார்!

அதற்கு, ”அவன் ஆர்.எஸ்.எஸ்காரன் என்றால்  ஷாகாவில் அவனுக்கு சொல்லி இருப்பார்களே குல வழக்கத்தை மீறுதல் எவ்வளவு பாவச் செயல் என்று!” என்பதாக வேறொருவர் பதில் சொல்லி இருந்தார்.

இது தான் உத்திரபிரதேசம்! இங்கே சாதி மாறி கல்யாணம் செய்வதோ, மதம் மாறிக் கல்யாணம் செய்வதோ மன்னிக்க கூடிய குற்றமல்ல. தண்டனைக்குரியது என்ற பொது புத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொலைக்கு காரணமானவர்கள் சும்மா பேருக்கு கைது செய்யப்பட்டு சுலபத்தில் வெளி வந்து விடுகிறார்கள். இந்த சம்பவத்தை உத்திரபிரதேசத்தின் எந்த பிரதான பத்திரிகையும், ஆங்கில பத்திரிகை உள்பட சிறிய செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை. காரணம், உ.பியின் மிகப் பெரும்பாலான பத்திரிகை நிருபர்கள் பிராமணர்களாக உள்ளனர் என்கிறார் என் வட இந்திய பத்திரிகை நண்பர்.

இங்கே எவ்வளவு படித்தவர்கள் அந்தஸ்துள்ளவர்களாக இருந்தாலும், சாதி மாறிக் கல்யாணம் செய்வது மன்னிக்கப்படுவதில்லை. சமீபத்தில் பெண்ணும், பையனும் ஒரே இடத்தில் வேலை செய்யும் டாக்டர்கள் என்ற வகையில் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக வலுப் பெற்று கல்யாணம் செய்ததில் பெண்வீட்டாரின் பெற்றோர், எங்கள் கையால் சாக விரும்புகிறீர்களா..அல்லது நீங்களாகவே முடிவைத் தேடிக் கொள்கிறீர்களா..?  எனக் கேட்டதில் காதல் தம்பதி இருவருமே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

உத்திரபிரதேசத்தை பொறுத்த அளவில் இரு சாதிகளின் அதிக்கத்தில் தான் அந்த மாநிலமே உள்ளது. ஒன்று பிராமணர், மற்றொன்று தாக்குர். சுதந்திரம் பெற்ற முதல் நாற்பதாண்டுகளில் ஐந்து பிராமண முதல்வர்களையும் மூன்று தாக்குர் முதல்வர்களையும் பார்த்தது தான் உத்திரபிரதேசம்! சுதந்திரத்திற்கு முன்பிருந்து 1937 தொடங்கி 1989 வரை – அதாவது மண்டல் கமிஷன் அறிக்கை வரும் வரையிலான – 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் பிராமண முதல்வர்கள் ஆதிக்கத்தில் தான் உத்திரபிரதேசம் இருந்துள்ளது. உ.பி.யின் மக்கள் தொகையில் வெறும் 10% சதமானவர்களே பிராமணர்கள்!

இதையடுத்து தாக்குர் 8.5% மானவர்கள் தான்! வி.பி.சிங் அவர்கள் தாக்குர் சாதி தான். ஆனால், சாதியைக் கடந்து செயல்பட்டு மண்டல் அறிக்கையை அமல்படுத்தினார். அதன் பிறகு உபியில் எந்த ஒரு பிராமணரும் முதல்வராக முடியவில்லை. பிற்பட்டவர்கள், தலித்துகள் கைகளே ஓங்கின! தாக்குரின் ஆதிக்கமும் கணிசமாக குறைந்தது. ஆயினும் பாஜகவின் எழுச்சியானது நிலமையை மீண்டும் பின்னோக்கி தள்ளியுள்ளது. தாக்குர் தங்களை ஷத்திரியர்களாக கருதுபவர்கள். கடந்த காலங்களில் மன்னர்களாக சிற்றரசர்களாக, ஜமீந்தார்களாக மிராசுதார்களாக செல்வமும், செல்வாக்கும் கொண்ட பிரிவினர். இன்னமும் தங்களை அவ்விதமே கருதுகிறார்கள்! தற்போதைய முதல்வர் யோகி ஆதித்திய நாத் தாக்குர் சாதியைச் சேர்ந்தவராவார்.

rb_related title=”Also read” total=”2″]

இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான கொடுர குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. தேசிய ஆவண காப்பக தகவல்கள்படி 2000 ஆவது ஆண்டு தலித்துகளுக்கு எதிராக மொத்தம் 25,000 சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. 2010 ஆம் ஆண்டில் 32,000 சம்பவங்கள் நடந்துள்ளன. 2019 ஆண்டில் 45,935 சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 25% உத்திரபிரதேசத்தில் மட்டுமே நடக்கிறது. இதில் தலித் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு சம்பவங்கள் கணிசமானவையாகும். உத்திரபிரதேசத்தை பொறுத்த அளவில் அங்கு தலித்துகள் கொடி பிடிக்கவும்,கோஷம் போடவும், தாழ் பணிந்து கால் அமுக்கவும் தான் என்ற எண்ணம் இன்னும் விலகவில்லை. ஆகவே அவர்களில் அக்கிரஹாரப் பெண்ணையோ,ஷத்திய பெண்ணையோ காதல் செய்வோருக்கு மரண தண்டனை எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தப் பட்டு வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time