வேலுமணி மீதான ரெய்டுகள் நாடகமா..? கண் துடைப்பா..?

-சாவித்திரி கண்ணன்

என்ன தான் நடக்கிறது.. மர்மமாக இருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனைகள் விவகாரத்தில் வேலுமணி குடும்பத்தினர் மிக இயல்பாக இருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள் தண்டிப்பதில் திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களுக்கு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்தே வேலுமணி அண்ட் கோ வினரை சிறைக்குள் தள்ளமுடியும். ஏன், செய்யவில்லை ? என்பது தான் தெரியவில்லை. ஆக, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் ; நீ அழுகிற மாதிரி அழு என்பதற்கேற்பத்தான் ரெய்டு நடந்துள்ளதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

”இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. ஏற்கனவே உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக வேலுமணியை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் போதும். வழக்கை உறுதிபடுத்தி, அவருக்கு உரிய தண்டனையை வழங்கலாம்!” என ஒரு உயரதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், ‘’ வேலுமணி மட்டுமல்ல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே கணக்கில் வராத தங்களின் கறுப்பு பணத்தையும் சொத்துக்களையும் தேர்தல் முடிந்த நேரத்திலேயே வெளிநாடுகளில் பதுக்கிவிட்டனர். ரெய்டு என்ற பேரில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர்களிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அல்லது பினாமி சொத்துக்கள் என எதுவும் சிக்கப் போவதில்லை. ஆட்சி மாற்றம் நடந்தால் இதெல்லாம் நடக்கும் என தெரியாதவர்கள் அல்ல அவர்கள். ஆகவே, இப்போது அதிமுக ஆட்சியின் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டதை போல, அரசிடம் இருக்கும் அனேக ஆவணங்களைக் கொண்டே இவர்களை சிறையில் தள்ளலாம். மாறாக ரெய்டு நடத்தி ஒன்றும் ஆகப் போவதில்லை’’ என்றார்.

ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான டிஜிபி கந்தசாமியை முதல்வர் ஸ்டாலின்  அழைத்து பேசியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தன்னாட்சி கொண்ட ஒரு விசாரணை அமைப்பு இது போன்ற நேரங்களில் முதல்வர் நேரடியாக தலையிடுவது அதிகாரிகளின் சுதந்திரத்தை பாதிக்கும். நேர்மைக்கும்,துணிச்சலுக்கும் பேர் போன டிஜிபி கந்தசாமி, அன்றைய தினம் முதல்வரை சந்திப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்!

சட்டப்படியான ஒரு செயல்பாட்டில் இருக்கும் போது – அதுவும் ரெய்டு நடக்கும் போது – அழைத்து பேசியது சரியான் முன்னுதாரணம் அல்ல’’ என்றே சுட்டுக்காட்டப்படுகிறது. இது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்து விட்டது!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆசியுடன் ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லாமுமாக இருந்தவர் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி. சசிகலா சிறைக்குச் சென்றதால், பங்கு கேட்க ஆளில்லை என தனி காட்டு ராஜாக்களாக கொள்ளையடித்து கும்மாளமிட்டது எடப்பாடி – வேலுமணி கூட்டணி!

முதலமைச்சராக எடப்பாடி இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் வேலுமணியின் ஆக்டோபஸ் கரங்களே நீண்டிருந்தன.  எடப்பாடி வசமிருந்த உள்துறையில் கூட அனைத்தும் வேலுமணியின் விருப்பத்திற்கேற்ப நடந்தது. இதனால் எடப்பாடிக்கு அடுத்த நிலையில், பவர்ஃபுல்லாகவும், கோடிகளை குவிக்கும் கூட்டத்தின் தலைவராகவும் உச்சத்தில் இருந்தார் வேலுமணி.

தனது சகோதரர்களான அன்பரசன், செந்தில் ஆகியோரை உள்ளாட்சித் துறையின் டெண்டர்களை கைப்பற்ற களமிறக்கினார் வேலுமணி. சகோதரர்கள் இருவரும் தங்களின் நண்பர்கள் மூலம் 18 நிறுவனங்களை உருவாக்கி அந்த நிறுவனங்களுக்கே மொத்த காண்ட்ராக்ட்டுகளும் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

ஆட்சியின் நிழல் முதல்வராக வேலுமணி வலம் வர , உள்ளாட்சித் துறையின் நிழல் அமைச்சராக வலம் வந்தார் அன்பரசன். இதன் மூலம் தமிழக முழுவதும் பல ஆயிரம் கோடிகளுக்கான ஒப்பந்தங்கள் வேலுமணியின் சகோதரர்களே மடை மாற்றப்பட்டன ! கோடிகள் குவிந்தது. சொத்துக்கள் பெருகின !

இந்த நிலையில்தான் கோவை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கான  47 டெண்டர்களின் முறையே 346 கோடி மற்றும் 464 கோடி ரூபாய் ஊழல்கள் நடந்திருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்திருந்தது அறப்போர் இயக்கம். அதற்கான பல ஆதாரங்களையும் புகார் மனுவுடன் இணைத்திருந்தார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள், ஒப்பந்தத்தில் ஊழல் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது FIR பதிவு செய்ய கோரும்  பொது நல வழக்கு ஒன்றை அறப்போர் இயக்கம் ஜூலை- 19 , ல்  தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சுக்கு பெஞ்சுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக சட்டமன்றத்தில் டேபிளிங் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையின் நகலை அறப்போர் தாக்கல் செய்தது. சென்னை மாநகராட்சியில் டெண்டர்கள் விடுவதில் இதேபோன்ற ஊழல் முறை பற்றி அறப்போர் இயக்கம்  கூறிய குற்றச்சாட்டுகளை CAG அறிக்கை உறுதி செய்ததையும் கூறி தமிழக அரசு வேலுமணியின் ஊழல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வலியுறுத்தியது. இவ்வளவு அழுத்தம் நிகழ்ந்த பிறகு தான் திமுக அரசு அசைந்து கொடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அறப்போர் இயக்கத்தின் நீண்ட  நெடிய சட்ட போராட்டம் விளைவு தான் தற்போது வேலுமணி மீது FIR.  போடப்பட்டது! ஆனால், இதற்காக அறப்போர் இயக்க நிர்வாகிகள் மீது 30 சிவில்,கிரிமினல் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் தலைமையிலான சென்னை காவல்துறை மூலம் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அனைத்து தடைகளையும் மீறி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நடத்திய சட்ட போராட்டத்தின் தொடர்ச்சிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

அந்த மனு மீது ஏன் முறையான அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை லஞ்ச ஒழிப்புத்துறை?. குறிப்பாக, தேர்தல் காலத்தில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள் என்றவர், கோவை பிரச்சாரத்தில் சிறைக்கு செல்லும் முதல் நபர் வேலுமணி என்று ஆவேசமாகப் பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார்கள்  மீது எந்த கவனத்தையும் செலுத்தவில்லை முதல்வர்மு.க. ஸ்டாலின்.

KCP நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷ் ஏன் சோதனை நடக்கும் போது மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

திமுக தலைமையை வேலுமணி தரப்பு சரி கட்டி விட்டது என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருந்தன! இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 10 ஆம் தேதி திடீரென,  வேலுமணி, அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில் மற்றும் இவர்களின் தொழில்முறை நண்பர்கள், உறவினர்கள் என 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் தொடர்புடைய பங்களாக்கள், அலுவலகங்கள், பண்ணை வீடுகள் என சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 60 இடங்களில் அதிரடி சோதனையை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்த சோதனை அதிமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் பலரும், என்ன இது ? என்ன இது ? என்று துக்கம் விசாரிக்காத குறையாக விசாரித்துக் கொண்டார்கள். எடப்பாடியை தொடர்புகொண்ட தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய அமைச்சர்கள்,  ”ஏற்கனவே எல்லாம் செட்டில்மெண்ட் ஆய்டுச்சுன்னு தானே வேலு சொன்னாப்ல ! இப்போ, இப்படி ஆயிருக்கு ’’ என்று பதட்டமாக விசாரித்திருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடி, ”பெரிசா ஒன்னும் இருக்காது ; அவங்களுக்கும் ஏதோ நடவடிக்கை எடுக்கிறோம் என காண்பிக்கணுமே. சும்மா பயமுறுத்துவதற்காகக்கூட இருக்கலாம்’’ என்று, சமாதானப் படுத்தியுள்ளார்! முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு இந்த அதிரடி சோதனை கிலியை தந்திருந்தாலும் வேலுமணிக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. ரொம்ப கூலாகவே ரெய்டு சம்பவத்தை எதிர்கொண்டிருக்கிறார் வேலுமணி.

தமிழக காவல்துறையில்   இருக்கும் முக்கிய அதிகாரிகள் இருவர் இப்பவும் வேலுமணிக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்.  இப்படி ஒரு ரெய்டு வரவிருக்கிறது எப்போது என்பது எங்களுக்கே முதல் நாள் தான் தெரிய வரும். நாங்கள் தெரிவிக்கிறோம் என்று சொல்லி இருந்தனர். அதன்படி வேலுமணிக்கு 9-ந்தேதி இரவு வேலுமணிக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

10-ந்தேதி விடியற்காலையில் சென்னையிலுள்ள அதிமுகவினர் சிலருக்கு மட்டும்  வேலுமணி தகவல் கொடுக்க, அதிமுகவினர் பலரும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு வந்து விட்டனர். காலை 6 மணிக்கெல்லாம் அங்கு வந்து விட்டது லஞ்ச ஒழிப்பு போலீஸ். ரெய்டுக்கு வந்தனர்.அப்போது, ‘இந்த எம்.எல்.ஏ. வளாகம் முழுவதும் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு எந்த சம்பவம் நடந்தாலும் அவரின் அனுமதி வேண்டும். சபாநாயகரின் அனுமதியை கொண்டு வந்திருக்கீங்களா ? ‘ என்று திமிறாக அதிமுகவினர் கேட்டுள்ளனர்.

அப்போது, ”அவர்களின் கடமையைச் செய்ய வந்திருக்கிறார்கள்.  செய்து விட்டுப் போகட்டும் . ஏன், தடுக்கிறீர்கள் ? வழி விடுங்கள்’’ என்று அதிமுகவினரை கடிந்து கொண்டார் வேலுமணி. அதன்பிறகு அறை முழுவதும் ரெய்டு நடத்திய போலீசாருக்கு அவர்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. வெறும் கையுடன் திரும்பினர் ‘’  என்று விவரித்தனர்.

இந்த நிலையில், 60 இடங்களிலும் நடந்த சோதனையை ஒரே நாளில் முடித்துக்கொண்டது லஞ்ச ஒழிப்புத்துறை. கோவையில் இருந்த அன்பரசனை 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அவசரம் அவசரமாக ஒரு திமுகவிற்கு வேண்டப்பட்ட ஒரு தொழில் அதிபர் – சராயத் தொழிலிலும், லாட்டிரியிலும் சம்பந்தப்பட்டவர் –  சந்தித்து விட்டு சென்றார். கிட்டத்தட்ட 1 மணி நேரம் அந்த சந்திப்பு நடந்துள்ளது. ரெய்டு பற்றி வருத்தம் வேண்டாம் என சமாதானப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் நடந்ததுமே முதல்வர் குடும்பத்தை சேர்ந்தவரிடம் அந்த தொழில் அதிபர் குடும்பம் மூலமாக தொடர்பில் இருந்துள்ளார் வேலுமணியின் அண்ணன் அன்பரசன். இந்த தொடர்புகள் மூலம் சில பேரங்கள் நடந்ததாக தெரிகிறது. பிறகு கமல்ஹாசன் கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்துள்ள கோவைத் தொழில் அதிபரும், திமுக அமைச்சர் ஒருவரும் வேலுமணி சகோதரருடன் ஆழியூரில் சந்தித்து பேர விவகாரத்தில் ஒரளவுக்கு முடிவை எட்டிவிட்டதாக சொல்லப்பட்டது..! இதனைத்தான் எடப்பாடியிடமும் கட்சியின் சீனியர்களிடமும் சொல்லி யிருந்தார் வேலுமணி.

இதைத் தொடர்ந்து சென்ற ஜீனியர் விகடனில் கூட வேலுமணி திமுக ஆட்சிக்கு என்னை தொட்டுப் பாருங்க என சவால் விட்டிருந்தார்.

இப்படி நம்பகமாக இருந்த சூழலில் ரெய்டு நடத்தப்பட்டதில் அன்பரசனுக்கு கோபம். அதனால் தான் அந்த தொழில் அதிபரை அழைத்து தனது கோபத்தைக் கொட்டியிருக்கிறார். ‘’இப்படி எங்களை அசிங்கப்படுத்தியிருக்கக் கூடாது. உங்களை நம்பித்தானே அமைதியாக இருந்தோம்‘’ என்று கடிந்து கொண்டிருக்கிறார் அன்பரசன்.

அப்போது அவரை சமாதானப்படுத்திய தொழில் அதிபர்  அண்ணே , கோபப்படாதீங்க. உங்களுக்கே தெரியும்.. சில இயக்கங்களும் கோர்ட்டில் இருந்த வழக்கும் தான் ரெய்டுக்கு காரணம். உங்களோடு காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம் என விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதுக்குத்தான் இந்த ரெய்டு. இதை போய் பெரிது படுத்துறீங்களே !’’ என்று சொல்லி கூல் பண்ணியுள்ளார் அந்த தொழில் அதிபர்!

அவர் சென்றதும் வேலுமணியை தொடர்பு கொண்டு சந்திப்பில் நடந்ததை விவரித்திருக்கிறார் அன்பரசன். அதனையடுத்து, அடுத்த நாள். திருச்செந்தூரில் சகோதரர்கள் மூவரும் சந்தித்து கடந்த காலத்தில் மோடி, அமித்ஷாவையே சமாளித்தவங்க நாம்! இவங்கள சமாளிக்க முடியாதா..? எனப் பேசி, ரெய்டு ரகளைகளைச் சொல்லி ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

வேலுமணிக்கு எதிரான இந்த சோதனைகளை பொறுத்தவரை தமிழக மக்களையும் ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளையும் முட்டாளாக்குகிறார்களோ என்று தான் தோன்றுகிறது. உண்மையில் இது மக்களுக்குத் தான் சோதனையான காலகட்டம்!

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அமைச்சர்கள் வீரபாண்டியார், கே.என். நேரு உள்ளிட்டவர்கள் மீது குண்டர்சட்டம் போட்டு,பிறகு பேரம் பேசி, ஆனவரை கறந்து கொண்டு வழக்கை இல்லாமல் செய்து விடுவித்த ஜெயலலிதாவின் அணுகுமுறை ஞாபகத்திற்கு வந்தது.லஞ்ச ஒழிப்புத் துறை என்ற அமைப்பும், ரெய்டுகளில் ஈடுபடுத்தப்படும் மாபெரும் மனித ஆற்றலும் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது..!

ஜெயலலிதா, மோடி, ஸ்டாலின்..இப்படி எல்லோரும் ஒரே நாடகத்தை இன்னும் எத்தனை நாளைக்கு தொடர்வார்களோ..! கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்தியாவின் எழுதபடாத விதியா..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time