பறவை குரல்கள்……

-செழியன்.ஜா

அதிகாலை 4 மணிக்கு வீட்டுத்  தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து ஒரு பறவையின் குரல் கேட்கிறதா?.. நிறைய முறை அப்படி கேட்டு உள்ளேன். உங்களில் பலரும் கேட்டு இருக்கலாம். ஏன் விடிவதற்கு முன்பே அந்த பறவை குரல் கொடுக்கிறது?…  பொதுவாக பறவைகள் விடியல் தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பே இருப்பிடத்தில் இருந்து வெளியே கிளம்பு தயாராக இருக்கும். வெளிச்சம் தென்பட்டதும் பறப்பதற்கும், இரை தேடுவதற்கும், ஓயாமல் குரல் கொடுப்பதற்கும் என்று பறவைகளின் முழு செயல்படுகள் விடிந்தே தொடங்கும். ஆனால் அதற்கு முன்பே அதிகாலை 4 மணிக்கு ஏன் குரல் கொடுக்கிறது.. அப்படி குரல் கொடுக்கும் பறவை குயில் ஆகும்.

மனிதர்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள பேச்சு முதன்மையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த உயிரினமும் பேசுவதில்லை மனிதனை தவிர்த்து.  ஆனால் பறவைகள் தகவல்களை பல வழிகளில் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றன.  பல வித குரல் கொடுப்பதன் வழியே மற்ற பறவைகளிடம்  என்ன சொல்ல வருகிறதோ அதனை மிகச் சரியாக பேசுகிறது..

அப்படி ஒரு குரல் தான் அதிகாலையில் குயில் எழுப்பும் குரல் ஆகும். தன் இன பறவைகளுக்கு தான் இங்கே இருப்பதை உணர்த்த, பெட்டை பறவையை அழைக்க என்று குயில் பாட்டு இருக்கும். காகத்தின் கூட்டில் முட்டை இடும் குயில், இனப்பெருக்க காலத்தில் மிகுந்த போராட்டமான வாழ்க்கையினை எதிர்கொள்ளும்.  காகத்தை திசை திருப்ப வேண்டும். முதலில் காகம் கூடு கட்டுகின்றதா என்று கவனிக்கும். அப்படி தெரிந்தால் பெட்டை குயிலை கவர பாட ஆரம்பிக்கும். குயிலுக்கு இரண்டு வேலை. காகத்தை கவனிக்க வேண்டும். பெட்டை குயிலை கவரவேண்டும்…

காகம் நம் வீட்டு முன்பு வந்து குரல் கொடுத்தால் விருந்தாளி இன்று வீட்டுக்கு  வருவார்கள் என்று கிராமத்தில் இன்றும் பேச்சு வழக்கு உண்டு. விருந்தாளிக்கும்-காகத்தின் குரலுக்கும்  தொடர்பு இல்லை. என்றாலும் மனிதர்கள் அருகில் வாழக்கூடிய பறவை ஆகும். மாதம் ஒரு முறை படையில் உணவை கா-கா-கா என்று கூப்பிட்டு உணவு வைப்பார்கள். இன்னும் சிலர் தினமும் உணவு வைப்பவர்கள். நீங்கள் தினமும் உணவு வைக்க தொடங்கினால் உங்கள் வீட்டுக்கு அந்த நேரம் வந்து குரல் கொடுக்க தொடங்கும்… காகத்தின் மூளையில் குரல் கொடுத்தால் இரை வரும் என்பது பதிவாகிவிடும்..

Racket-tailed Drongo

அழுகை, கோபம், சிரிப்பு, ஆச்சரியம் எப்படி முகத்தில் இவ்வளவு உணர்வுகளை மனிதர்களால் காட்டமுடியுமோ அதே போல் பறவைகள் தங்கள் குரல்களை பலவிதங்களில் எழுப்ப முடியும்.   ஒவ்வொரு  சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இந்த பலவித குரல் வழியே தகவல்களை பரிமாறிக்கொள்கிறது..

பறவைகளின் குரல்களை பதிவு செய்து CDயாக விற்பனையாகிறது. இணையத்திலும் https://www.xeno-canto.org/ என்ற இணையதளத்தில் அனைத்து பறவைகளின் குரலும் பதிவு செய்து வைத்து உள்ளனர்.

பறவைகளை தொடர்ந்து பார்த்து வருவதன் மூலம் அவை எழுப்பும் பல வித குரல் கொண்டே எதற்காக இந்த குரல் எழுப்புகிறது என்று கண்டுபிடித்துவிடலாம். பழங்குடி மக்கள் பறவைகளின் குரல் கேட்டு அந்த சூழலை புரிந்து கொள்வார்கள். இறந்த வீரப்பன் தன் வாழ்க்கை முழுவதும்  பறவைகளின் குரலை கேட்டே இடத்தின் சூழலை முடிவு செய்வதை படித்து உள்ளேன். நாம் பழக்கத்தால் மட்டுமே பறவைகளின் குரல்களை புரிந்து கொள்ள முடியும். சில நேரம் பறவைகள் எழுப்பும் குரல் ஒன்று போலவே இருக்கும் ஆனால் மற்ற பறவைகளுக்கு அதன் வித்தியாசம் புரியும்.

பறவைகளின் குரல்களை இரன்டு வகையாக பிரிக்கலாம். 1.இனிமையாக பாடும்,  2.சூழ்நிலைக்கு ஏற்ப பல குரல்கள் எழுப்பும்.. ஆங்கிலத்தில் Songs மற்றும் calls என்று பிரித்து வைத்து உள்ளனர்.

பாடும் பறவைகள் (Songs Birds) என்றே நூற்றுக் கணக்கில் வகைப்படுத்தி உள்ளனர்.  பெரும்பாலும் இந்த வகை பறவைகள் உருவில் சிறியதாக இருக்கும். இன்னும் சில பறவைகள் நடுத்தர அளவு இருக்கும். ஆனால் பெரியதாக இருக்காது..

இவற்றில் நமக்கு  நன்கு  தெரிந்த குயில், பாடும்  பறவையாகும்.. மிக இனிமையாக “கூவு  கூவு  கூவு”  என்று  ஆழமாக பாடும். நின்று சில நிமிடங்கள் கேட்க தூண்டும். பெட்டை  பறவையை கவருவதற்கே ஆண் பறவை பாடும்.  தமிழ்நாட்டில் மிக இனிமையாக பாடும் பறவைகள் கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்க்க முடிகிற சோலைப்பாடி ஆகும் இந்த பறவையின் பாடும் திறன் மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருக்கலாம். அதே போல்  மேற்கு தொடர்ச்சி மலையில் சீகார்ப் பூங்குருவி பாட்டு சிறந்ததாகும்..

இனப்பெருக்க காலத்தில் பெட்டை பறவையை கவர்வதற்கு ஆண் பறவைகள் பாடும் என்றாலும் மற்ற மாதங்களிலும் பாடும் திறன் உண்டு. ஆனால் இனப்பெருக்க நேரத்தில் பாடும் பாட்டு மிக மிக ரம்மியமாக இருக்கும்.. காரணம் பறவைகளின் மூளையில் இருக்கும் திசு ஒன்று இனப்பெருக்க நேரத்தில் நன்கு வளர்ந்து இருக்கும். மற்ற மாதங்களில் அந்த திசு சுருங்கிவிடும். அதனால் திசு நன்கு வளர்ச்சி நிலையில் இருக்கும் காலமான இனப்பெருக்க நேரம் பறவைகளின் பாடும் திறன் அபரிதமாக இருக்கும். இவற்றை Mating Call அன்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

சில பறவைகள் ஒருநாளில் பல வித குரலை எழுப்பும். கொண்டு கரிச்சான் பறவை ஒரு நாளில் ஒவ்வொரு  முறை பாடும்பொழுதும் அதில் வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு பருவக்காலங்களிலும் அதன் குரல் எழுப்பும் விதம் மாறுபடும்..  இப்படியும் பறவைகள் ஒரே விதத்தில் பாடாது பல வித்தியாசங்கள் அதில் இருக்கும்.

Yellow billed babbler
தவிட்டு குருவி

ஆபத்து நேரத்தில் பறவைகள் எழுப்பும் குரல் ஒலி, மிக உச்சத்தில், அபாயகரமானதாக இருக்கும். அந்த குரலின் நேரம் ஒரு நொடி அல்லது இரண்டு நொடி அளவே நீடிக்கும். பறவைகளின் எதிரி என்று பார்த்தால் இரைகொல்லி பறவைகளான கழுகு, வல்லூறு மற்றும், மனிதன், விலங்குகள், பாம்பு போன்றவற்றால்  ஏற்படும்..  எதிரிகள் முட்டை எடுக்க வந்தாலோ, குஞ்சுகளை தூக்க வந்தாலோ, கூடு  அருகில்  வந்தாலோ தாய் பறவைகள் மிக ஆக்ரோஷமாக சண்டையிடும். உருவில் மிகச் சிறிய பறவையான கரிச்சான் பருந்தைகூட துரத்தி விரட்டும். அந்த நேரத்தில் ஆபத்து என்பதை தெரிவிக்க எழுப்பும் குரலை கேட்டு மற்ற வகை பறவைகளும் பாதுகாப்பாக இருந்துக் கொள்ளும்.  தரையில் கூடு கட்டும் ஆட்காட்டி பறவை ஆபத்து நேரத்தில் கொடுக்கும் குரல் “did he do it” என்ற வார்த்தையை சொல்வது போல் இருக்கும். இவற்றை allaram call என்று ஆங்கிலத்தில்  அழைக்கின்றன்ர்.

பறவைகளின் இன்னும் பலவித குரல்களை பார்ப்போம்

  1. இரை தேடும்பொழுது அருகில் இருக்கும் பறவைகளிடம் பேசிக் கொள்ளும். அதற்கு  நீண்டு குரல் எழுப்பாமல், இரண்டு நொடியில் முடிவது போல்  குரல் எழுப்பி பேசிக்கொண்டே இரை சாப்பிடும். இவற்றை ஆங்கிலத்தில் Contact Call  என்று அழைக்கின்றனர்.   தவிட்டு குருவி இரை தேடும்பொழுது இந்த குரலை நாம் மிக நன்றாக கேட்கலாம்.. “கீச் -கீச் -கீச் என்று  இருக்கும்.. ஓயாமல் குரல் கொடுக்கும்.
  2. தூரத்தில் இருக்கும் பறவையை நான் இங்கு இருக்கிறேன் நீ எங்கு இருக்கிறாய் என்பதை தெரிவிக்க அல்லது தன் இருப்பிடத்தை தெரிவிக்க பறவைகள் இதற்கு ஒரு குரல் எழுப்புகிறது. இதற்கும் முதல் வகை குரலில் இருந்து மாறுபாடு இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் separation call என்று அழைக்கின்றனர்.. வானப்பாடி தன் இருப்பிடத்தை தெரிவிக்க இந்த குரல் கொடுப்பதை ஒரு முறை கவனித்து கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அதன் இன பறவை வந்துவிட்டது.
  3. கூட்டில் உள்ள குஞ்சுகள் இரைக்காக தாய் பறவையை எதிர் நோக்கி ஓயாமல் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு  கூட்டில் பல  குஞ்சுகள் இருக்கும் அவற்றில் ஒரு சில குஞ்சுகள்  இரையை அதிகம் பெற வாயை நன்கு திறந்து வைத்துக் கொள்ளும் மற்றும் குரலும் கொடுத்துக் கொண்டே இருக்கும். தாய் பறவை இப்படி குரல் கொடுக்கும் பறவைக்கு இரையை ஊட்டும். இதனால் மற்ற குஞ்சுகளுக்கு இரை குறையலாம் அல்லது தாமதமாகலாம்.. கூட்டில் இருந்து குஞ்சுகள் வெளியே சென்ற பிறகும் ஒரு சில வாரம் இதே போல் குரல்கள் எழுப்பும். இப்படி குஞ்சுகள் இரைக்கு எழுப்பும் குரலுக்கு ஆங்கிலத்தில் begging call என்று அழைக்கின்றனர்.
  4. மனிதர்கள் மற்றவர்கள் போல் பேசுவதை மிமிக்கிரி என்று சொல்வோம்.  பறவைகளில் சில வகையும் இப்படி  மிமிக்கிரி செய்யும். சாதாரணமாக நாம் பார்க்கும் மைனா, கரிச்சான் நன்கு மற்ற பறவைகளின் குரல் போல் அதே குரலை எழுப்பும். காட்டு பகுதியில் பார்க்கமுடிகிற பச்சைசிட்டு, கரிச்சான் வகையான மிக மிக நீண்ட வால் உடைய கரிச்சான் போன்றவையும் மிமிக்கிரி செய்யும்.  வல்லூறு போல் குரல் எழுப்பினால் மற்ற பறவைகள் அங்கு ஆபத்து உண்டு. அதனால் அங்கு செல்லவேண்டாம் என்று முடிவு செய்யும். இப்படி மிமிக்கிரி செய்யும் பறவைகளுக்கு இரைக்கு, இருப்பிடத்திற்கு மற்ற பறவைகளின் போட்டி அதிகம் இருக்காது…
  5. மேலை நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக இந்தியா வரும். பல ஆயிரம் கிலோமீட்டர்  பறந்து வரும்பொழுது கூட்டத்தில் இருந்து பிரிந்துவிடாமல் இருக்க தங்களுக்குள் குரல் கொடுத்து கொண்டே குழுவாக பறந்து வரும். இப்படித்தான் பறவைகள் வானில் பிரியாமல் வந்து செல்கிறது. இந்த பறவைகளின் குரலை நம்மால் கேட்பது சிரமம்.  ஆனால் நமக்கு நன்கு தெரிந்த பச்சைக்கிளி பறக்கும்பொழுது “கீ-கீ-கீ” என்று தங்களுக்குள் குரல் கொடுத்து கொண்டே பறந்து வருவதை பார்க்கலாம். மாலை நேரம் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று வானத்தை பாருங்கள் நிச்சயம் குரல்களுடன் பறந்து வரும் பச்சைக்கிளிகளை பார்க்கலாம்.. இவற்றை ஆங்கிலத்தில் Flight call என்று அழைப்பார்கள். பெரும்பாலும்  வலசை வரும் பறவைகள்தான் இந்த  குரலை அதிகம் எழுப்பும்..
  6. புலி எப்படி தன் வாழும் பகுதியை மரத்தில் ஒருவித வாசனை திரவத்தை பீய்ச்சி அடித்து மற்ற விலங்குகளுக்கு உணர்த்துகிறதோ அதேபோல் பறவைகள் கூடு கட்டும் மரத்தில், இருப்பிடத்தில் இவை என்னுடைய பகுதி என்பதை நிரூபிக்க இதற்கு ஒரு குரல் கொடுத்து அதன் வழியாக வரும் மற்ற பறவைகளுக்கு உணர்த்தும்… இவற்றை ஆங்கிலத்தில் territory call  என்று அழைக்கின்றனர்.
  7. கடைசியாக ஒரு குரலை பார்த்துவிடுவோம். மாலைபொழுது பறவைகள் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று இரவை கழிக்கும். அப்பொழுது அனைத்தும் குரல்களை எழுப்பி ஒரே ஆரவாரமாக இருக்கும். தங்கள் இருப்பிடத்தை தேர்ந்து எடுக்க இப்படி செய்யும். மைனா, காகம் இருக்கும் மரத்தில் மாலை நேரம் சென்று பாருங்கள் இந்த ஆரவார குரல் ஒலியை கேட்கலாம். இருப்பிடத்தில் தங்கிய பிறகு  சிறிய அளவில் மெல்லிய அளவில் குரல்கள் எழுப்பும்..  இவற்றை ஆங்கிலத்தில் Retired call என்று அழைக்கின்றனர். அதாவது இன்றையபொழுதில்  இருந்து ஓய்வு எடுத்து கொண்டு இருப்பதின் அடையாளம் ஆகும்.
Painted stork
மஞ்சள் மூக்கு நாரை

இவற்றை தவிர வேறு வகைகளில் பறவைகள்  சத்தங்கள் எழுப்பும்

சில நீர் புலப் பறவைகளுக்கு  குரல் எழுப்பும் தன்மை கிடையாது. உதாரணமாக நாரைகள், கூழைக்கடா, சில பாறு கழுகுகள் இவைகள் குரல் எழுப்பாது.. நாரைகள் தங்கள்  நீண்ட  அலகை “பட் பட்” அடிப்பதன் மூலம் சத்தம் எழுப்பும். புறா நன்கு குரல் கொடுக்கும் என்றாலும் பறக்க ஆரம்பிக்கும்பொழுது அதன் இறக்கை “பட பட பட” என்று நல்ல சத்தத்துடன் இருக்கும்.. மரங்கொத்தி பறவைகள் மரத்தை அலகால் கொத்தி பொந்து அமைக்கும்பொழுது “டொக்-டொக்-டொக்” என்று சத்தம் கேட்கும். இருவாட்சி பறவை பறக்கும்பொழுது அதன் இறக்கை சத்தம் ஹெலிகாப்டர் பறப்பது போன்று கேட்கும்… ரீங்காரசிட்டு (Hummingbird) தன் இறக்கையை நொடிக்கு 80 முறை அடிக்கும். அப்பொழுது ஹம் ஹம் ஹாம் என்று ஒலி கேட்கும் அதனால்தான் ஹம்மிங்பறவை என்று பெயர் வைத்து உள்ளனர்..

பறவைகளின் குரல்கள் அதன் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும். அனைத்தும் குரல்கள் வழியே பரிமாறிக் கொள்வதால் நீங்கள் பறவைகள் பார்க்க செல்லும்பொழுது அதன் குரல்களை சில நிமிடங்கள் கேளுங்கள். தொடர்ந்து கேட்பதன் மூலம் பறவைகளின் அனைத்து குரல்களும் உங்களுக்கும் புரியத்தொடங்கும். பறவை நோக்குதலில் பறவை குரல் பதிவு மிக முக்கியமானதாக உள்ளது.  பறவைகளின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது,

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time