ஈழத் தமிழ் அகதிகள் குடியுரிமைக்கு சிவனடியார்கள்  கோரிக்கை!

-மாயோன்

“சிவபுரம் சிவாயசி”என்கிற சிவனடியார்கள் அமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் சமீபத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவ தார்ணா மலர்மகள் பேட்டியின்போது கூறியது:

“இந்தியாவில் , அகதி முகாம்களில் 65 ஆயிரம் ஈழத்தமிழர்களும் முகாமுக்கு வெளியே சுமார் 35 ஆயிரம் ஈழத்தமிழர்களும் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு  பல்வேறு உதவிகள் சலுகைகளை அரசு வழங்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரு வலி நிறைந்த வாழ்க்கை சூழலிலேயே இவர்கள் வாழ்கிறார்கள் !

அகதி முகாம்களில் பிறந்து வாழ்ந்த ஒரே காரணத்திற்காக மிகச் சிறந்த மாணவ மாணவியர் எத்தனையோ பேர் தங்கள் மருத்துவ படிப்புக் கனவை – பல்வேறு உயர் படிப்புகளுக்கு செல்லும் வாய்ப்பை  – பறிகொடுத்து நிற்கின்றனர். இதேபோல  உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் இன்று கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் நன்கு படித்த திறமையுள்ள இளைஞர்களுக்கு அகதி என்ற காரணத்தால் வேலை மறுக்கப்படுகிறது.

ஈழத் தமிழ் அகதிகளின் வேதனையை – வலியை – நன்கு புரிந்தவர், முதல்வர் ஸ்டாலின்! ஆதலால்தான்  ’’இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதன் மூலமே உரிய நீதி கிடைக்கும்’’ என்று அதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆனால் ,மத்திய அரசோ ஈழத்தமிழர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று குறிப்பிட்டு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.

இந்த செயல் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை புண்படுத்துகிறது.

இந்திய அரசானது வரலாற்றை உற்று நோக்கி இப்பிரச்சினையை கையாள வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டனர் 10 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் !

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அங்கு குடியுரிமை பறிக்கப்பட்ட தை எதிர்த்து ஈழத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம் மக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக நேருவும் அன்றைய  இலங்கை பிரதமர் சர்.ஜான் கொத்தலாவலவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தம், இந்திரா- ஸ்ரீமாவோ ஒப்பந்தம், ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று இந்திய அரசின் தொடர்பு இருந்துகொண்டே இருந்தது.

ஈழத் தமிழரின் போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் அக்கறையான தலையீடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா திடீரென ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு பாராமுகமாக நடந்து கொள்வது நியாயமற்றது.

“ஈழத்தமிழர் சட்டவிரோத குடியேறிகள்” என்ற மத்திய அரசின் நிலைப்பாடு தவறானது என்பதற்கு கீழ்கண்ட ஆதாரங்களை தருகிறோம்:

கடல் வழியாக படகுகளில் வந்து இறங்கிய ஈழத்தமிழர்களை அதிகாரிகள் முறைப்படி வரவேற்று அழைத்துச் சென்று முகாம்களில் தங்க வைத்தனர்.

விசா அனுமதியோடு கப்பலிலும், விமானத்திலும் வந்தவர்கள் விசா முடிந்து பின்னர் காவல் துறையில் தம்மை பதிவு செய்து கொண்டு வாழ அனுமதிக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர் தாயகத்திற்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கு வழங்கப்படும் எக்ஸிட் விசா என்னும் வெளியேறுவதற்கான அனுமதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் குடிவரவு  குடியகல்வு துறை அவர்கள் குற்றவாளிகள் என்று குறிப்பிடுவதில்லை.

சட்டவிரோத குடியேறிகள் யார் என்பதை தேசிய குடிமக்கள் பதிவேடு வரையறை செய்கிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து விசா அனுமதி இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய அரசிடம் தங்கள் வருகையை தெரிவித்து பதிவு செய்யாமல் மறைந்து வாழ்ந்தாலும் சட்டவிரோதமாக விண்ணப்பித்து குடியுரிமை ஆவணங்களை பெற்று இந்திய குடிமகன் என்ற போர்வையில் வாழ்ந்தால்தான் அவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் சட்டவிரோத குடியேறிகள்  அல்ல என்பதால் அவர்களை புலம்பெயர்ந்து வாழும் சட்டபூர்வ வாசிகள் எனப்பொருள்படுத்தி  (migrated legal residents) தனியாக வகைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு நிவாரணங்களை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். மேலும் ,ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் தகுதியை வழங்கிட வேண்டும்.

தாய்த் தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அகதிகளாக, 1980-களில் தொடங்கி தலைமுறைகள் தாண்டி வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டியது இந்திய அரசின் தார்மீகப் பொறுப்பும் கடமையும் ஆகும்.” என்றார்

சிவதார்ணா மலர் மகள்.

இந்த சந்திப்பின் போது சிவனடியார்கள் குழகனார் சபரிஷ், இளஞ்செழியன், “சிவபுரம் சிவநாடு” பத்திரிகை ஆசிரியர் சரவண சுந்தர், முந்தி முந்தி சுந்தரபாண்டியன் உடனிருந்தனர்.

குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் திமுக எம்.பி.திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ்  தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா பார்வையிட்ட போது, இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தங்களுக்கு இந்திய குடியரிமை வழங்க வேண்டும், வசிப்பிட பகுதிகளில் போதுமான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பெரும்பாலனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பி.பி.சியிடம் பேசிய ஜெசிந்திரா லாசரஸ், ”தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் 80% மானவர்கள் தங்களுக்கு குடியுரிமை கேட்கின்றனர். தாயகத்துக்கே திரும்பிச் செல்ல விரும்புவோர், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களை கணகெடுத்து மத்திய அரசு அனுமதி பெற்று இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். இதன்படி நடந்தால் அது பல்லாண்டுகாலமாக துயரத்தில் உழலும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு விடிவு கிடைக்கும்!

-மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time