முதுகெலும்புள்ள – சுய அறிவுள்ள – ஒரு நிதி அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என நினைத்து சந்தோஷப்பட்டேன். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் இந்த சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் மீட்டெடுக்கும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முதல் நன்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தி விடுகிறேன். ஏனென்றால் ஒரு பொலிடிகல் வில் பவர் இல்லாமல் இந்த நிதி நிலை அறிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பும், உறு துணையும் தந்திருக்க முடியாது!
நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை!
முக்கிய அம்சங்களை மட்டும் கவனப்படுத்துகிறேன்.
ஒரு மாநில அரசு சிறபாக செயல்படுவதற்கு மத்திய- மாநில அரசுகளுக்கிடையில் நிதி சார்ந்த உறவுகள் எஜமான – கொத்தடிமை முறையிலன்றி கண்ணியமான சகோதர மனப்பான்மையுடன் அமைவது முக்கியம். மாநில வருவாயையெல்லாம் ஒன்றிய அரசு அபகரித்துக் கொண்ட நிலையில் கிடைக்கும் சிறு துளியில் மாநில நிர்வாகத்தை கொண்டு செலுத்தும் போது ஏற்படும் வலியை நமது நிதிஅமைச்சர் ஏற்கனவே சொல்லி இருந்தாலும், அதை ஒரு நிதிநிலை அறிக்கையில் சுட்டிகாட்டி இருப்பது துணிச்சலான நல்ல அணுகுமுறை!
பெட்ரோல் டீசல் வரிவருமானம் தான் ஒன்றிய அரசின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலில் வசூலிக்கப்படும் வரிவருமானம் ரூ31.80 பைசாவில் ஒன்றிய அரசு 31.30 பைசாவை தான் எடுத்துக் கொண்டு மாநில அரசுக்கு வெறும் 50 பைசாவை மட்டுமே தருகிறது என்பது மிகவும் அநீதியன்றி வேறென்ன?
எனவே, ஒன்றிய – மாநில நிதி உறவுகள் குறித்து கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுனர் குழு நிறுவப்படும் என்பது வரவேற்க தக்க முன்னெடுப்பாகும்! எதுவும் கேட்காமல் கிடைக்காது! அதற்கான ஒரு கருத்துருவாக்க முயற்சி தான் இது!
அடுத்ததாக தரவுகளை மையமாகக் கொண்டு நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்பது காலத்தின் கட்டாயம். பொத்தாம் பொதுவாக பல வாக்குறுதிகள் காலங்காலமாக நிதி நிலை அறிக்கைகளில் தரப்பட்டு கடந்த காலங்களில் நிறைவேற்றப்படுவதே இல்லை.அதற்கு தரவுகள் இல்லாமல், எவ்வளவு பயனாளிகள், அதற்கு எவ்வளவு செலவாகும், அதன் பிறகான விளைவுகள் எப்படி இருக்கும் என சீர்தூக்கி பார்க்காமல் அறிவித்துவிட்டு சென்றதேயாகும். அனைத்து பொது சேவைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகமாவது நன்மை தரக்கூடியதே!
அரசு கொள்முதல் நிலைகளில் வெளிப்படைத் தன்மைகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும் என்பது ஊழல் முறைகேடுகளை கணிசமாக குறைக்கும். ஆனால், இதற்கு எவ்வளவு ஒத்துழைப்பு கிடைக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பழம் தின்று கொட்டை போட்ட மூத்த அமைச்சர்கள் பலர் இதை பொருட்படுத்துவார்களா..? சந்தேகமே!
அதே போல அரசின் உட் தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அவை அனைத்தையும் நிதி துறையின் கீழ் கொண்டு வந்து கண்காணிஒப்பு செய்யப்படும் என்பதற்கும் எவ்வளவு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால்,பி.டி.ஆர் அவர்கள் ஸ்டாலின் ஆட்சிக்கு ஊழலற்ற ஆட்சி என்ற ஒரு நல்ல பெயர் கிடைக்க ரொம்பவே மெனக்கிடுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
அத்துடன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மீட்புக்கு உறுதியாக திட்டமிடுகிறார். தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது, தமிழின் புகழ்பெற்ற படைப்புகளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது, உயர் கல்வித் துறையில் தொழில் நுட்ப புத்தகங்களை தமிழில் கொண்டு வருவது மற்றும் தொல்லியல் ஆய்வுக்கு இந்த நிதியாண்டில் மட்டுமே ஐந்து கோடி ஒதுக்குவது! அதாவது தமிழ் வளர்ச்சிக்கு 80 கோடி! தொல்லியல் ஆராய்ச்சிக்கு 29 கோடி! உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு புத்துயிர் அளிப்பது! பலே,பலே வாழ்த்துகள் அய்யா!
காவல்துறையில் காலியாக வுள்ள 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்படும் எனக் கூறியுள்ளதன் மூலம் காவல்துறை செயல்பாடுகள் மேம்படும். அதிக ஆட்கள் இருந்தால் தான் அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது கூட சாத்தியப்படும்! குற்றங்கள் விரைந்து விசாரிக்கப்படும் என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
அத்துடன் அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டிடங்களிருப்பது உறுதி செய்யப்படும். குற்றவியல் நீதிமன்றப் பணி இடங்கள் முழுமையாக நிரப்படும் என்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகும்!
தேவைப்படும் இடங்களில் புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்படும் என்பது நியாயமே!
அடுத்த பத்தாண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்பது சாத்தியமே இல்லாத பொத்தாம் பொதுவான அறிவிப்பாகத் தான் தெரிகிறது. எத்தனை இடத்தில் தேவைப்படுகிறது? அதற்கு எவ்வளவு செலவாகும் என்ற எந்த தரவுகளும் இன்றி இப்படி சொல்வது பி.டி.ஆருக்கு அழகா..? எனினும் சொல்லப்பட்டதில் பாதி நிறைவேற்றினாலே மிகப் பெரிய பலன்களை மாநிலம் பெறும்!
காசிமேடு துறைமுகம் 150 கோடியில் மேம்படுத்தப்படும் என்பதும் ஒட்டுமொத்தமாக மீனவர்களின் நலனுக்காக 1,149.79 கோடி ஒதுக்கப்படும் என நிதிநிலை அறிக்கை சொல்கிறது. ஒன்றிய அரசின் புதிய மீன்பிடித் தொழில் சட்டங்கள் எளிய மீனவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பேராபத்துகள் குறித்த எந்த கவனமும் நிதி அமைச்சருக்கு இல்லை என்பது தெரிய வருகிறது.
சுற்றுச் சூழல் விவகாரங்களில் முதல் முறையாக ஒரு மாநில அரசு அக்கறை காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக நிலப்பரப்பில் தற்போது 17 சதவிகிதத்திற்கும் குறைவாகவே காடுகள் உள்ளன! அதை 33 சதவிகிதமாக்க தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்த உள்ளது என்பதும் பொதுமக்கள், மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து நம் மண் சார்ந்த மாபெரும் மரம் நடும் திட்டம் அமலாக்கப்படும் என்பதும் பாராட்டத் தோன்றினாலும், காடுகள் குறைவதற்கான கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்களின் அசுரக் கரங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய கொள்கை சார்ந்த பார்வை எதுவும் வெளிப்படவில்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
மேலும் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இயற்கை சூழல் மீளுருவாக்கம் செய்யப்படும் என்பது நல்ல முயற்சி தான். தஞ்சை டெல்டா பகுதியிலேயே நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் கடல் நீர் விளை நிலப் பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளது என சூழலியல் ஆய்வாளர் ஜனகராஜன் ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளார். ஏரி,குளங்கள் முறையாக தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டாலே நிலத்தடி நீர்வளம் தானாக உயரும். ஆழ்துளை பம்பு செட்டுகளின் அதீத பயன்பாடு குறைந்தால் ஒழிய நிலத்தடி நீர்மட்டம் உயராது! ஆகவே,. இந்த விவகாரம் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய உன்னத பணியாகும்!
ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் மையங்கள் அவற்றை சரியாக பாதுகாக்க கட்டிடங்கள் இன்றி பல ஆயிரக்கணகான நெல்மூட்டைகள் மழையில் அழிகின்றன. ஆக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பாதுகாப்ப்பான கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடவே இல்லை. விவசாயம் குறித்த போதுமான புரிதல் அறிக்கையில் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில அரசின் நிதி வருவாய் உள்ளாட்சி அமைப்புகளுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி பங்கீடு தந்து, அவர்களுக்கான கடமைகளையும் கறாராக நிர்ணயித்தால் தான் மாநிலத்தின் சமச் சீரான வளர்ச்சி என்பது சாத்தியப்படும். இந்த புரிதல் அடுத்த நிதிநிலை அறிக்கையிலாவது வெளிப்பட வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்!
அதே போல போக்குவரத்து துறையில் தராமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பென்ஷன் எப்போது வழங்கப்படும் என்பதற்கும் பதில் இல்லை!
கில்லியாக வெளிப்பட்ட கல்விக் கொள்கை!
தமிழகத்தின் வரலாற்று மரபுகளை உள்வாங்கி, தற்போதைய நிலைமைகளுக்கேற்ப, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்பது தான் இந்த நிதிநிலை அறிக்கையிலேயே நமக்கு மிகப் பிடித்த அம்சமாகும்! அதே போல பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ஒதுக்கி இருப்பது நல்ல அணுகுமுறை. இந்த நிதி பள்ளி மாணவர்களுக்கான இலவச திட்டங்களில் இறைக்கபடாமல் தரமான கல்விக்கு உத்திரவாதமளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர வழிவகை செய்ய வேண்டும்.
சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி சுந்தரத் தேவன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது. அதன்படி ஆவண செய்யப்படும் என கூறியுள்ளார் நிதி அமைச்சர். இந்த நிறுவனங்கள் தான் அதிக வேலை வாய்ப்பை தருகின்றன. மத்திய அரசின் கொள்கைகள் இந்த நிறுவனங்களை கடுமையாக பாதிக்கின்றன! ஆகவே, இவர்களை காப்பாற்ற ஒன்றிய அரசையும் தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்.
ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ ரசாயணங்கள் துறையிலும்,விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்துதுறையிலும் 100 கோடி செலவழிக்கப்படும் எனக் கூறியுள்ள நிதி அமைச்சர் மத்திய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஐ.டி.பி.எல்லை தமிழக அரசு எடுத்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் பரிசீலிக்கவில்லை எனத் தெரியவில்லை…?
மின்சாரத் துறையில் ஒரு மின்னல் கீற்று!
சென்ற அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களை முற்றிலும் நிறுத்திவிட்டு, தனியார்களிடம் கூடுதல் விலைக்கு 2,500 மெகாவாட் மின்சாரம் வாங்கியது. இதனால் தான் மின்துறை 1,34,000 கோடிக்கு கடனாளியானது. அதனால், இந்த அரசு தானே மின் உற்பத்தியை செய்யும். அதுவும் 10 ஆண்டுகளை இலக்காக் கொண்டு 17,980 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறியுள்ளது வெகு சிறப்பு. ஆனால், இந்த முயற்சியை மத்திய அரசு தடுக்கும். உபத்திரங்கள் கொடுக்கும். ஏனென்றால், தமிழக மின் துறை மோடியின் நண்பரான அதானியிடம் தான் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி கடனாளியானது. ஆனாலும், அதானியை புறக்கணிக்கும் போது கடும் விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். நாம் சுயசார்பாக மின் தயாரிப்பில் ஈடுபடுவத்ற்கு மத்திய அரசின் மின்சாரக் கொள்கைகளும் தடையாக இருக்கிறது! ஆகவே இது எப்படி செயல்படுத்தபடவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்து தான் சொல்ல முடியும்!
சித்த மருத்துவத்திற்கு என்று தனி பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்படும் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் பழனியில் தொன்மை வாய்ந்த சித்த மருத்துவ கல்லூரி நிறுவப்படும் என்பதும் வரவேற்புக்கு உரியது.
இந்து சமய அற நிலையத் துறை விவகாரத்தில் வருமானமில்லாத 12,959 கோயில்களில் ஒரு கால பூஜையேனும் செய்வதற்கு ரூபாய் 130 கோடி நிதி ஒதுக்கப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்களையும் இதில் இணைத்துக் கொண்டால், அவர்கள் மூன்று கால பூஜை செய்யுமளவிற்கு ஆர்வம் காட்டுவார்கள்!
Also read
சென்ற அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை,பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவித்த காரணத்தால் இந்த அரசு அதற்கான 12,110 கோடி நிதிச் சுமையை ஏற்க வேண்டியதாயிற்று என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்த பயிர்க் கடன் தள்ளுபடியை கலைஞர் தான் ஆரம்பித்து வைத்தார்.சென்ற அரசு இந்த நகைகடன், பயிர்கடன் தள்ளுடியை அறிவிக்க ஸ்டாலின் தான் தூண்டுதலாக இருந்தார். இதில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், தவறானவர்களுமே ஆதாயமடைகின்றனர். ஆகவே, எதிர் காலத்திலாவது ஓட்டு வாங்கும் அரசியலுக்காக இது போன்ற அறிவிப்புகளை செய்யாமல் தவிர்த்தால் தான் தமிழகம் தழைக்கும்.
கடைசியாக தமிழ்நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் வரிவிகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தம் என கூறியுள்ளதன் மூலம் அடுத்த பட்ஜெட்டில் சற்று அதிகமான வரிவிதிப்பை இந்த அரசு கொண்டுவரக் கூடும் எனத் தெரிகிறது. அதே சமயம் சென்ற ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக 65,000 கோடி வரிவருவாய் இழப்பு ஏற்பட்டது என சுட்டிக் காட்டியுள்ளார். ஊழல், முறை கேடுகளை தவிர்த்து நேர்மையான நிர்வாகத்திற்கு உத்திரவாதம் தந்தாலே கூடுதல் வரிவிதிப்புகள் இல்லாமலே அதிக பணம் கஜானாவிற்கு வரும் என்பது தெரிய வருகிறது. ஆகவே நேர்மையான நிர்வாகத்திற்கு அரசாங்கம் உத்திரவாதம் செய்தாலே போதுமானது!
வருங்காலத்தில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு உறுதிபடுத்தப்படும் என நிதி அமைச்சர் உத்திரவாதம் அளித்துள்ளார். இந்த வாக்கு காப்பாற்றபட வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
நிதியறிக்கை சார்ந்து மிக அருமையான ஒரு பார்வையை கொடுத்திருக்கிறீர்கள். சார்பு தன்மை கொண்டதாக இல்லாமல், ஆதரவோடும், விமர்சனப் பூர்வமான அணுகுமுறையோடுமான பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.