சுதந்திர தினத்தைக் கூட சரியாக கணக்கிடத் தெரியாதா?

- பெ.இளந்திருமாறன்

நமது ஒன்றிய அரசின் அறிக்கை மற்றும் விளம்பரங்களில் தற்போதைய இந்தியாவின் சுதந்திர தினம் 75 என குறிப்பிட்டு கொண்டாடப்படுகிறது!

பாஜகவும் இந்த சுதந்திர தினத்தை 75 வது சுதந்திர தின ஆண்டாகத் தான் கொண்டாடுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 75 வது ஆண்டை குறிப்பிடும் விதமாக ஒரு லோகோவும் வெளியிட்டு 75 இடங்களில் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்!

உலகத்தில் யாருக்கும் இல்லாத தேசப்பற்று தங்களுக்குத் தான் இருக்கிறது என பறைசாற்றிக் கொள்ளும் பாஜக இப்படி சுதந்திர தினத்தை தப்புத் தப்பாக கணக்கிட்டு கொண்டாடுவதை என்னென்பது..?

சுதந்திரத்திற்காக பாடுபட்ட – உயிர் நீத்த – தலைவர்கள்,தியாகிகள் தற்போது உயிரோடு இல்லை. இருந்தால் கதறி அழுதிருப்பார்கள்!

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து ஆகஸ்ட் 15 1947ம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றோம். ஒவ்வொரு ஆண்டும் நாம்  சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம்.

பொதுவாக வருடாந்திரக் கொண்டாட்டங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

#  வருடம்தோறும் நிகழும் நிகழ்வு – உதாரணம், கபடி போட்டி, கிரிக்கெட் உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள்.  (Occurring Event),

#  நடந்த நிகழ்வின் நிகழ் தினத்தை கொண்டாடுவது.  (Observing Event – Anniversary )

இதில் விளையாட்டுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை கணக்கிடும்  போது முதல் வருடத்தில் நடந்தை 1 என்று கணக்கில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் ஆண்டு 2 என்றும், அடுத்த ஆண்டு 3 என்றும் கணக்கிடவேண்டும்.

பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை கொண்டாடும் போது  ஓராண்டு நிறைந்த பின் தான் முதலாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட வேண்டும்.  நாம் பிறப்பது ஒரு முறை தான்.  ஒவ்வொரு ஆண்டும் பிறப்பதில்லை.  பிறந்த தினத்தைத்தான் கொண்டாடுகிறோம்.  எனவே நாம் முதன் முதலில் பிறந்த நாளை முதலாம் ஆண்டு என்று கணக்கிடுவதில்லை.  அப்படி செய்தால் அது தவறு.

அடுத்ததாக நாம் வருடங்களைக் கணக்கிடும் பொது, முதலாம் ஆண்டு முடிந்தவுடன் இரண்டாம் ஆண்டு ஆரம்பித்து விட்டது.  எனவே, இது இரண்டாம்நிகழ்வு என்று சொல்கிறோம்.  இதுவும் முற்றிலும் தவறு.

தற்போது விவாதத்திற்கு வருவோம்.

வரும் ஆகஸ்ட் 15, 2021 அன்று நாம் கொண்டாட இருக்கும் சுதந்திர தினம் 74வது சுதந்திர நாளாகும். இது அரசின் தரப்பிலும் சில அமைப்புகள் தரப்பிலும்

75வது சுதந்திர தினம் என்று பரவலாகக்  கூறப்பட்டு மக்களை குழப்பி வருகிறது.

இதனை நாம் உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல நம் சுதந்திர தினம் ஒரு அனுசரிக்கப்படும் (Anniversary) நாள்.  மீண்டும் மீண்டும் நிகழும் செயல் அல்ல.  ஆங்கிலேயர்கள் ஒருமுறை தான் நமக்கு சுதந்திரம் அளித்தார்கள்.  ஒவ்வொரு வருடமும் நமக்கு சுதந்திரம் அளிப்பதில்லை. நாம் சுதந்திரம் பெற்ற நாளையே கொண்டாடி வருகிறோம்.  எனவே ஆகஸ்ட் 15 1947 ம் நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.  தவிரவும் 74 ஆண்டுகள் முடிந்து 75 ஆரம்பிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் சரியாகத்த்தான் சுதந்திர நாளைக் கணக்கீடு செய்கிறார்கள்.  ஏன், நமது அண்டை நாடான பாகிஸ்தான் சென்ற) 2020) வருடம் 73வது சுதந்திர தினத்தையும் இந்த (2021) வருடம் 74வது என்று சரியாகக் கணக்கிட்டுள்ளனர்.  நம் நாட்டில் மட்டும் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இதை நாம் உடனே சரி செய்தாக வேண்டும்.

50 ஆவது சுதந்திர தினத்தை நாம் எப்போது கொண்டாடினோம்? 1997 ஆம் ஆண்டு சரியாக கொண்டாடினோம்! ஏ.ஆர்.ரகுமான் வந்தே மாதரம் பாடல் வெளியிடப்பட்டது!

அப்படி இருக்க பாஜக ஆட்சியாளர்கள் மீண்டும், மீண்டும் தொடர்ந்து சில ஆண்டுகளாக இந்த தவறை செய்வது சகிக்க முடியவில்லை. இவ்வளவு சொல்லியும் – உண்மைக்கு புறம்பாக – கணக்கீடு செய்து அறிவித்தால்,  இதற்கு ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ என்னவோ..!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time