விவசாயத்திற்கு சவாலா காலகட்டத்தில் நாம் உள்ளோம். பழைய காலத்தில் இருந்த பண்ணை அடிமைத்துவத்தை நவீன வடிவில் அமல்படுத்தவே மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டங்களுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கும் மேலாக தலை நகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்! அந்த போராட்டத்திற்கு பகிரங்கமாக சட்டசபையில் ஆதரவு நல்கி, விவசாய பட்ஜெட் தொடங்கப்படுவதற்கு ஒரு தெளிவும்,துணிவும் வேண்டும். அதை நாம் இந்த ஆட்சியாளரகளிடம் பார்க்க முடிந்ததே ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.
அடுத்தகட்டமாக சென்ற அடிமை ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கேடு செய்யும் மத்திய அரசின் கொள்கைகளை மண்டியிட்டு ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தியதை போல நங்கள் செய்யமாட்டோம் என தெளிவாக ஒரு கொள்கை நிலைபாடு எடுத்ததை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.
உழவர் சந்தைகளை வலுப்படுத்தப் போவதாக சொல்லி இருப்பது நல்லது.
மற்றபடி சில மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படுகிறது என்ற அளவில் தான் சொல்ல முடியும்.
பனைமேம்பாடு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். பனைக்கு பேர் போன தமிழகத்தில் இன்னும் பனை ஏறுவது குற்றச் செயலாக அறிவித்த எம்.ஜி.ஆர் போட்ட அநீதியான சட்டம் அகற்றப்படவில்லை என்பதை கவனப்படுத்துகிறோம். பனையை எந்த விதத்திலும் பயன்படுத்த வாய்ப்பின்றி முடக்கப்பட்ட ஒரு சட்டத்தை விலக்காமல் கூடுதல் பனை மரங்களை நடுவதாலோ,வளர்ப்பதாலோ என்ன பயன் இருக்கப் போகிறது…?
நெல் கொள் முதல் விலையை உயர்த்தி உள்ளீர்கள்.ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பின்றி உள்ளதையும், பல்லாயிரம் நெல் மூட்டைகள் பாதுகாத்து வைக்க வழியின்றி வெட்ட வெளியில் அழிந்து வருவதையும் தடுக்க, நெல் கொள்முதல் மையங்களுக்கு உரிய கட்டிட வசதி ஏற்படுத்தப்படும் என்று சொல்லி இருக்கலாமே!
அதே போல உள்ளாட்சி அமைப்புகளை எவ்வாறு அரசு விவசாய வளர்ச்சிக்கு இணைத்துக் கொண்டு செயல்படலாம் என்பது அடுத்த பட்ஜெட்டிலாவது வெளிப்பட வேண்டும்.
என் கருத்தை விடவும் தமிழகத்தின் முன்னோடி விவசாயியான அறச்சலூர் செல்வம் அவர்களிடம் பேசினேன்.அவர் கூறியதாவது;
இது வரையிலான தமிழக அரசியலில் வேளாண்மைக்கு ஒரு பட்ஜெட் போடுவதற்கு முன்பாக விவசாய முன்னோடிகளை அழைத்துப் பேசி விவாதித்து செய்ததில்லை. ஆனால், இந்த முறை அந்த முயற்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தார். சென்னையில் அழைத்துப் பேசியதோடு பல மாவட்டங்களிலும் கலந்துரையாடலை நிகழ்த்தினார். அதில் நானும் பங்கெடுத்தேன்.
இந்த பட்ஜெட்டை ஆகா,ஒகோ என்று சொல்ல முடியாவிட்டாலும், விவசாயத் தளத்தில் சில புதிய சாளரங்களை திறந்துள்ளது! முதன்முதலாக மானாவாரி விவசாயப் பயிர்களான சிறு தானியங்களை பரவலாக்கும் முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளதை வரவேற்கலாம்!
மத்திய அரசானது தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை ஒழித்துக் கட்டி, அனைத்தும் தனியார் வசம் செல்ல முயற்சிக்கும் வேளையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை உயிர்பிக்க, செயல்படுத்த இந்த அரசு முனைவது மகிழ்ச்சியளிக்கிறது! ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இல்லையென்றால், தனியாரின் அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விளை பொருளைத் தர வேண்டியதாகிவிடும்!
வேளாண் பொருள்களை உற்பத்தி செய்ய அக்ரோ இண்டஸ்டிரிஸ் காரிடார் அறிவிக்கப் பட்டுள்ளது, நல்ல முயற்சியே! நம்மாழ்வார் வேளாண் இயற்கை ஆராய்ச்சிமையம் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டு வெறும் மூன்று கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது.
பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கி வந்த நிதியை மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. ஆகவே மாநில அரசு தான் கூடுதல் சுமையை ஏற்று பணம் தருகிறது. இந்தச் சூழலில் இந்த பயிர்காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டு கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.பல இடங்களில் அவர்கள் பயிர் இழப்பீடு தருவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆகவே, அரசே விவசாயிகளுக்கான காப்பீடு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என நாங்கள் கேட்க உள்ளோம்.
Also read
தமிழகத்திற்கு என்று இயற்கை வேளாண்மை கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும். அப்போது தான் நமது பாதை தெளிவானதாக இருக்கும். அதே போல வேளாண் கொள்கையும் வகுக்க வேண்டும். பொதுவாக வேளாண்மையை பொறுத்த வரை மத்திய அரசிடம் தான் அதிகாரம் குவிந்துள்ளது. ஒரு மோசமான பூச்சி கொல்லி மருந்தோ, மரமணு மாற்ற பயிரோ வருகிறதென்றால் அதை தடுக்கும் சக்தி மாநில அரசுக்கு இல்லை. அதே சமயம் நாம் நம்மை தற்காத்துக் கொள்ள திட்டம் தீட்டலாம். அந்த வகையில் வருங்காலத்தில் மேலும் மக்கள் நலன் சார்ந்த விவசாயக் கொள்கைகளை இந்த அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது! என்றார் முன்னோடி விவசாயியான அறச்சலூர் செல்வம்.
//அதே போல உள்ளாட்சி அமைப்புகளை எவ்வாறு அரசு விவசாய வளர்ச்சிக்கு இணைத்துக் கொண்டு செயல்படலாம் என்பது அடுத்த பட்ஜெட்டிலாவது வெளிப்பட வேண்டும்.// good point