சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன.
காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம்.
காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் நமது விடுதலை இயக்கத்தை வழிநடத்தினர்.
விடுதலை பெற்ற இந்திய மக்களுக்கு. ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனித உரிமை ஆகியவை பாரபட்சமின்றி வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது.
இவற்றை இயக்கும் கருவியாக பாராளுமன்ற ஜனநாயகமும் அதை ஆட்டுவிக்கும் ஆதார சுருதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் நமக்கு வழங்கப்பட்டன.
அடிப்படை அரசியல் சாசன கூறுகளாக உள்ள வாக்குரிமை, சட்ட வழியின் மாண்பு, பிரச்சினைகளை தீர்க்கும் முறைமை, சுய அதிகாரமுள்ள அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தின் ஆளுமையும் அதன் விளக்கமும் , உரிமைகள் ,மற்றும் கூட்டாட்சி முறை (Federalism) போன்ற கூறுகள் நமக்குகிடைத்தன.
புதிய இந்தியா பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட ஒரு ஜனநாயக, மதச்சார்பு இல்லாத நாடாகவே இயங்க வேண்டும் என்ற கொள்கைவழி நேருவிற்கு மட்டுமின்றி, பகத் சிங் ,காந்தி, நேதாஜி முதல் அம்பேத்கர் வரை அனைத்து மக்கள் நலன் சார்ந்த தலைவர்களின் கனவும் எதிர்பார்ப்பும் அதுவே ஆகும்.
ஆனால், காவிச் சிந்தனையாளர்களின் கண்ணுக்கு ஜவகர்லால் நேரு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதஎதிரியாய் தெரிந்தார்! ஒரே காரணம், அவர் அந்த கொள்கையில் பற்றாக இருந்தார் என்பதுதான்.
கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியா சந்தித்த சோதனைகள் ஏராளம்!
ஆனால், இன்று நம்முன்னே உள்ள ஒரு மிகப்பெரிய கேள்வி , போராடிப் பெற்ற அரசியல் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் மக்களுக்கு சீராக தடையின்றி கிடைக்கிறதா?
வெளிப்படைதன்மையை உறுதிப்படுத்தும் தகவல் அறியும் உரிமை, ஆளுபவர்கள் பதில், சொல்ல நிர்பந்திக்கும் லோக்பால் உரிமை, உணவு,கல்வி மற்றும் சுற்றுசூழல் உரிமைகள் போன்றவை சட்டமாக்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த மோடி இவைகளை பேணி காத்தாரா அல்லது அழித்து ஒழித்தாரா?
இன்று என்ன நிலைமை?
லோக்பால் அமைப்பு மற்றும் தகவல் அளிக்கும் ஆணையர்கள் செல்லாக் காசு போல் குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ளன.
சி பி ஐ, மற்றும் சி வி சி ஆகியவை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாற்றப்பட்டன.
நீதித்துறையையும், ராணுவத்தையும், சீர்குலைக்க,வளைக்க பகீரத முயற்சிகள் நடைபெறுகிறது.
அரசோ புள்ளிவிவரங்களை இருட்டடிப்பு செய்தலும், தவறான தகவல் தருவதையும் தொடர்ந்து செய்கிறது.
இதே தகிடுத்த்தம்தான் ஜி டி பி கணக்கு எடுப்பிலும் காட்டப்படுகிறது! சரி, கொரோனா தொற்றுக்கணக்கு , இறப்புகணக்கு இவைகளை விட்டுவைத்தார்களா என்றால் இல்லை!
தடுப்பூசிகள் தயாரிப்பு, கொள்முதல் மற்றும் விநியோகத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது கடுகளவும் கிடையாது.
தகவல் அறியும் உரிமை நமக்கில்லையா? தகவல்கள் தர மறுப்பது ஜனநாயக விரோதப் போக்கல்லவா?
நமது ஜனநாயக ஆட்சிமுறை எப்படி இயங்குகிறது ?
அரசின் அரசியல் செயல்பாடு, ஜனநாயகத்தின் மையக்குறியான பாராளுமன்றத்தை முடக்குவதிலும் விவாதங்கள் மற்றும் பகுத்தாய்தலை தடுப்பதிலும் குறியாக உள்ளது எதை உணர்த்துகிறது?
இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் எதிர்கட்சி தலைவர்களை வேவு பார்ப்பது அவர்களது தொலைபேசிகளையே உளவு சாதனமாக மாற்றி வேவு பார்த்தல் மற்றும் திருடுதல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் அரசே ஈடுபடுதல் ஆகியவை அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைத்து, சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் செயலன்றி வேறென்ன?
கூட்டாட்சி முறை பற்றி கேட்கவே தேவையில்லை. ஜி எஸ் டியில் தொடங்கி மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தலைமை என்ற இலக்கு நோக்கித்தான் சட்டங்கள் இயற்றப்படுகிறது, காய்கள் நகர்த்தப்படுகின்றது.
அரசியல் சாசனம் கூறும் கூட்டாட்சி முறை காலால் மிதிக்கப்படுகின்றது.
ஒரு கட்சி ஆட்சியை நிலைநாட்டுவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. ஆனால் அதற்கு நம்முடைய அரசியல் சாசனத்தில் இடமில்லாத்தால் சட்டத்திறகு புறம்பாக,சுய அதிகார அமைப்புகள், அரசியல் சாசன அமைப்புகள் ( தேர்தல் ஆணையம், நீதி மன்றங்கள் மற்றும் நீதிபதிகள், கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம்)ஆகியவற்றை செயலிழக்கச்செய்ய சட்ட விரோத முறைகளில் முயல்கின்றனர்.
ஜனநாயகத்தை , சட்ட மாண்பை நிலைநாட்டுவதில் முதன்மையாக இருக்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை ஆளும் கட்சியையும் ,அரசையுமே முதலில் சாரும். ஆனால் இங்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடப்பதென்ன?
அரசியல் உரிமைகள் (எழுத்தரிமை, பேச்சுரிமை) இன்று எந்த அளவிற்கு மறுக்கப்படுகின்றன,நசுக்கப்படுகின்றன!
கேள்வி கேட்பவர்களை எல்லாம் ‘தேசவிரோதி ‘என்றோ ‘தீவிரவாதி ‘ என்றோ முத்திரைகுத்தி, பத்திரிக்கையாளர்களை,மாணவர்களை , உரிமைப்போராளிகளை, அடித்தட்டு மக்களின் பாதுகாவலர்களை, ஆதிவாசிகளின் நண்பர்களை, உண்மையை உரக்கக்கூறும் கல்வியாளர்களை பொய்வழக்கு புனைந்து இன்றும் சிறையிலடைத்து சிரிக்கவில்லையா இந்த ஆட்சியாளர்கள்?
பொய்வழக்கு போடுவதோடு நில்லாமல், உளவு சாதனங்களை( பெகாசஸ்) பயன்படுத்தி மடிக்கணினிகளில் (laptops) தீய பொருட்களை (planting malware) நுழைக்கவில்லையா?
ஜனநாயக நாட்டில் அரசும் , ஆளும்கட்சியும் இரு வேறு அமைப்புகளாகும். அரசு, அனைத்து மக்களுக்கும் பொதுவான அமைப்பு. ஆளும்கட்சி அனைவருக்கும் பொதுவான அமைப்பல்ல,குறிப்பிட்ட கொள்கையில் பற்றுடையோரின் (மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்) அமைப்பு.
இதை மறந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுங்கட்சியின் நலனுக்காக அரசு இயந்திரத்தை வளைப்பதும் , கண்காணிப்பு மற்றும் மட்டுப்படுத்தும் ஐனநாயக அமைப்புகளை முடக்குவதும் மோடி அரசின் வாடிக்கையாக உள்ளது.
அரசு இயந்திரங்களான காவல்துறை மற்றும் Enforcement Directorate, I T மற்றும் C B I , I B, R& AW, N I A போன்ற அனைத்து அமைப்புகளும் நடுநிலை தவறி வேண்டியவர் வேண்டாதார் , இந்து அல்லது இந்துக்களல்லாதார் என்று பேதம்பார்த்து நடந்து கொள்வது தொடர்கதையாகவில்லையா இந்த ஏழு வருடங்களில்?
மத வெறியையும் காழ்ப்புணர்ச்ச்சியையும் தூண்டிவிட்டு சிறுபான்மை சமூகத்தினரை இந்து மத வெறியர்கள்-பா ஜ கட்சியினரின் கைத்தடிகள் – தாக்கினாலும் ,கொன்றாலும் வழக்கு என்னவோ சிறுபான்மையினர் மீதே தொடுக்கபட்டதை ‘அக்லக் ‘வழக்கில் தொடங்கி ஷகீன்பாத் தாக்குதல், ஜாமியா இஸ்லாமியா மாணவர்கள் வரை எண்ணிலடங்கா நிகழ்வுகளை பார்த்து மரத்துவிட்டது!
நடுநிலைமை, சட்டத்தின் மாண்பு( due process of law) பிரச்சினைகளுக்கு நியாயமான சட்டபூர்வமான தீர்வு போன்ற அடிப்படை அரசியல் சாசன கூறுகள் யாரால் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன?
அரசின் ஜனநாயக விரோதப் போக்கை தட்டிக்கேட்க, தடுத்து நிறுத்த் உச்ச நீதி மன்றம் தவறும் பட்சத்தில் இந்திய மக்களுக்கு விடிவு ஏது? என்னதான் வழி?
இதற்குமுன் இது போன்ற சவால்களை எமர்ஜெனசி காலத்தில் இந்திய மக்கள் சந்தித்தனர். எமர்ஜென்ஸி 21 மாதங்களில் முடிவுக்கு வந்தது!. ஆனால் இன்றோ அறிவிப்பு ஏதுமின்றி உரிமைகள் பறிக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் தொடர்நிகழ்வாகத் தொடர்கிறது.
எதற்காக, யாருக்காக யாரைக்காப்பாற்ற இந்த வேவு நடவடிக்கை?
அதுவும் வெளிநாட்டு உளவு சாதனத்தை பயன்படுத்தி வேவு பார்த்து தகவல் திரட்டும்பொழுது நம துஅந்த தகவல்கள் வெளிநாட்டினர் -குறிப்பாக இஸ்ரேல் நாடும் அதன் அமைப்பான N S Oநிறுவனமும் – இந்தியர்களின் தகவல்கள்- கண்களில் படுவது நமக்கு குந்தகம் விளைவிக்குமல்லவா?
எதிர்கட்சிளை எதிர் கொள்ள பயந்து பாராளுமன்ற அவைக்கு வருவதையும், விவாதத்தில்பங்கெடுப்பதையும் தவிர்த்து நாடாளுமன்ற இரு அவை களையும் முடக்குகிறது மோடி அரசு. முக்கியம் வாய்ந்த சட்டங்களை எந்த விவாதமும்,கலந்தாய்வும் இன்றி செலக்ட் கமிட்டியின் பரிசீலனையையும் தவிர்த்து முப்பது நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டதாக கூச்சல் குழப்பத்தினூடே அறிவிக்கப்படுகிறது.
மதவெறியும்,வெறுப்பணர்வும் ஆதிக்க வெறியும் அடக்குமுறையும் தனியார்க்கு தாரைவார்க்கும் தாராளமயமும் இன்று மோடியின் தலைமையில் கைகோர்த்து வலம் வருகின்றன.
rb_related title=”Also read” total=”2″]
யதேச்சதிகாரத்தை விரட்டியடித்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும், இழந்த உரிமைகளை வென்றெடுக்கும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
ஜனநாயகத்தை நிலைநிறுத்தி சட்டத்தின் ஆட்சியை ஓங்கச்செய்து, பகையும், காழ்ப்புணர்வும் நீக்கி சம உரிமைகளும் சம நீதியும் உறுதிப்படுத்தப்படும் இலக்கை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.
அனைத்து எதிர்கட்சிகளும் தற்போது ஓரணியில் திரண்டு குரலெழுப்பத்தொடங்கியள்ளது நல்லஆரம்பமே. நாட்டையும் சமுதாயத்தையும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கட்சியினர் நன்கு உணர்ந்து தங்களது வெட்டி பந்தாக்களையும் ,அரிப்புகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு புதிய போருக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வெற்றிகள் மட்டுமே சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளையும் ரணங்களையும் ஆற்றாது. அரசியலைத் தாண்டி பொது வெளியிலும் நாம் ஒரு முறைமையை – மத நல்லிணக்கம் சகோதரத்துவம் – என்ற கேடயத்தை தாங்கி சம உரிமைகளுக்காகவும், சம வாய்ப்புகளுக்காகவும் , சமூக நீதிக்காகவும் சளைக்காமல் போராடுவோம்.
“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்”
கட்டுரையாளர்; ச. அருணாசலம்.
Leave a Reply