இந்திய விடுதலையும், அதிகார மாற்றமும் எப்படி நடந்தது..?

-ஆர்.பட்டாபிராமன்

விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின்  Transfer of Power in India  – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன்  விடுதலை இந்தியாவில் அதிக  வெளிச்சம்படாத மனிதர்.

’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி மேனன்  இரு புத்தகங்களை எழுதினார். The Story of the Integration of Indian States 1956ல் வெளியானது. The Transfer of Power in India 1957ல் வெளியானது.

இந்திய விடுதலை எனும் நீள்பாதையின் பயணத்தில், காந்தி- காங்கிரசின் அகிம்சைவழி போராட்டங்கள் தியாகங்களுடனும், புரட்சிகரவாதிகள் எனப்படுவோரின் வன்முறைவழி தியாகங்களுடனும்  மட்டுமல்லாது பிரிட்டிஷாரின் ’இனியும் முடியாது வேண்டாம்- விலகிப் போவோம் விட்டு விடுவோம்’ மனப்போக்கினாலும் ஆகஸ்ட் 15 ஐ நாம் கண்டடைந்துள்ளோம்.

வப்பால பங்குண்ணி மேனன் பிரிட்டிஷ் இந்தியாவில்  கடைசி மூன்று வைஸ்ராய்களின் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர். அரசியல் அமைப்புச்சட்ட ஆலோசகராக இருந்தவர். இந்தியர் என்ற வகையில் புறக்கணிப்புகளுக்கு ஆளானாலும், வைஸ்ராய் அலுவலகத்தில் தவிர்க்கமுடியாத அறிஞராக ஆலோசகராக செயல்பட்டவர். விடுதலை இந்தியாவில் படேலுக்கு பெருந்துணையாக  Ministry Of States  எனும் இலாகா செயலராக இருந்தவர். சமஸ்தானங்கள் இணைப்பு என்ற களச் செயல்பாட்டில் மிக முக்கிய பணியாற்றியவர்.

ஏராளமான தகவல்களும் ஆவணங்கள் சார்ந்த விளக்கங்களும் கொண்ட புத்தகம் Transfer of Power in India.. இந்த நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கைமாற்றி தரப்பட்டது என்பதை நிர்வாக மொழியில் அறியத் தருகிறது இந்த நூல்! அந்த வரலாற்றில் நேரிடையாக சம்பந்தப்பட்ட ஒருவராலேயே எழுதப்பட்டுள்ள புத்தகம். Struggle- Negotiations- Settlement என்கிற பாவம் ஆழத்தோய்ந்த 560 பக்கங்களை கொண்ட புத்தகம்!  பேச்சுவார்த்தை- விவாத வழியில் தீர்வு என்றால், சமரசங்கள் இல்லாமல் வாழ்வு நகராது என்பதை இப்புத்தகம் தீர்க்கமாக சொல்லும்.

ஏறத்தாழ 1906 துவங்கி 1947 விடுதலை வரையிலான காலத்தை இப்புத்தகம் மய்யப் பொருளாக பேசுகிறது!

பிரிட்டிஷ் வைஸ்ராய்கள்- அவருக்கு துணையாக நின்ற செயலர்கள்- அதிகாரிகள், பிரிட்டிஷ் நாடாளுமன்றம்- அமைச்சரவை, சைமன் கமிஷன் கிரிப்ஸ் தூது, காபினட் குழு போன்றவற்றில் இடம் பெற்றவர்களின் சாதுர்யங்கள், அவர்கள் உருவாக்கிய ஆவணங்கள், அவர்களின் அறிவுக்கூர்மை- சில நேரம் காருண்யம் போன்றவற்றை இந்த புத்தகம் தூக்கிக் காட்டுகிறது. இந்த அனைத்திலும் வி பி மேனன் உடன் பணியாற்றியவர்!

இந்தியாவில் அதன் மக்கள் பிரதிநிதிகளாக காந்தி, காங்கிரசில் நேரு- படேல்- ஆசாத்- கிருபளானி- ராஜாஜி, முஸ்லீம் லீகில் ஜின்னா, லியாகத், லிபரலில் சாப்ரு, ஜெயகர் என, எஸ் சி எப் என்பதில் அம்பேத்கர், சிவராஜ் என, சீக்கியர்களில் பல்தேவ்சிங், இந்த விவாதங்களில் ஆவணங்களை நேர் செய்வதில் குறுக்கும் நெடுக்குமாக அளப்பரிய பங்குபணியை செய்துள்ளனர். இந்து மகாசபா பிரதிநிதிகள் இன்னும் மாநில முதல்வர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் எதிரெதிரே பலநேரம் நின்றுகொண்டு பிரிட்டிஷ் பஞ்சாயத்தை முகம் பார்த்து நின்ற காட்சிகள் ஏராளம் புத்தகம் நீள வருகின்றன.

ஏராள பார்முலாக்கள், முன்வைப்புகள்- நிராகரிப்புகள்- முகச் சுளிப்புகள், சுடு சொற்கள், நம்பிக்கையின்மை, சோர்ந்து துவளல், துள்ளி எழுதல் என தலைவர்கள் காட்டிய பாவனைகளை இந்த புத்தகம் நமக்கு தருகிறது.

டொமீனியன் என்ற சொல்லாட்சி கடைவரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மெளண்ட்பாட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருக்க வேண்டப்பட்டார். பாகிஸ்தானில் ஏற்கப்படாமல் ஜின்னா அவர்களே கவர்னர் ஜெனரல் ஆனார். பஞ்சாப், வங்கப் பிரிவினை பவுண்டரி கமிஷன், வகுப்பு கலவரங்கள் – பலிகள் மானுட அலறல்கள் புத்தகத்தில் கேட்கிறது.

மேனன் இப்புத்தகத்தில் கம்பெனி ஆட்சி முடிவுற்று பிரிட்டிஷ் ராணியிடம்  நேரடி ஆட்சி மாற்றம் ஏற்படுவதை தொட்டுக்காட்டுகிறார். முதல் சுதந்திரப்போர்  பின்னணியில் இது நடந்ததை நாம் அறிவோம். 1858 ராணி ஆட்சி என்பதிலிருந்து இந்தியர்களை முனிசிபாலிட்டி, ஜில்லாபோர்டு, கவர்னர் மற்றும் வைஸ்ராய் கவுன்சில், மாகாண சட்டமன்றம், மாகாண மந்திரிசபை, மத்திய சட்டமன்றம், இடைக்கால மத்திய அரசாங்கம்  என இந்த 90 ஆண்டுகளில் மெல்ல மெல்ல அதிகாரப்படுத்துவது  எவ்வாறு நகர்ந்தது என்பது மேனனால் பேசப்படுகிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியர்களை அதிகாரப்படுத்துவது என்பதற்கு எப்படிப்பட்ட எதிர்வினைகள், விவாதங்கள் எழுந்தன என மேனன் சொல்கிறார். மிண்டோ மார்லி, மாண்டேகு செம்ஸ்போர்ட் என வைஸ்ராய்களும், பிரிட்டிஷ் இந்திய செயலர்களும் சில சீர்திருத்தங்களை துவக்கியது பேசப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்ட முயற்சியாக 1919 சட்டம், அதை விரிவுபடுத்தி 1935 சட்டம் வந்தது சொல்லப்பட்டுள்ளது. சைமன் கமிஷன், வட்டமேஜை மாநாடுகள், அவார்டுகள், கிரிப்ஸ் தூது, காபினட் தூதுக்குழு, மெளண்ட்பாட்டன் திட்டம் தொடர்ந்து ஜூலை 18 1947ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இயற்றிய இந்திய சுதந்திர சட்டம் என அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றின்மீதும் தேசத் தலைவர்களின் எதிரும் புதிருமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது!

இந்திய விடுதலை என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பு ஒன்றிற்கான விடுவிப்பாக- பாகிஸ்தான் பிரிவினையாகவும் அமைந்தது.இந்திய தலைவர்கள் இந்த பிரிவினையுடன் கூடிய அதிகார மாற்றம் என்பதற்கான நிர்வாக வேலைகள்  பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். அவ்வேலைகளை பல பக்கங்கள் பட்டியலிட்டு செக் லிஸ்ட் தயாரித்தபோது மலைத்தே போயினர். நாற்காலி, டைப்ரைட்டர் தளவாட சாமான்கள் முதல் உயர்  இராணுவ பிரிப்புவரை அசுரவேலைகளை செய்ய வேண்டியிருந்ததை மேனன் பட்டியலிட்டிருக்கிறார்.

விடுதலை இந்தியா என நாம் கொண்டாடும் இன்றைய இந்தியாவிற்கான அதிகார மாற்றம் எனும் நீள்பாதை எப்படிப்பட்ட போராட்டங்கள், வலிகள், விவாதங்கள் கடந்து தனது எல்லையை எடுத்துக்கொண்டது- சுதந்திரத்தைக் கண்டது என்பதை வி பி மேனன் அழகான அவரது நிர்வாக மொழியில் தந்துள்ளார்.

நவீன இந்தியாவின் அறியப்படாத சிற்பி!

நாராயணி பாசு வி பி மேனன் அவர்களின் கொள்ளுப்பேத்தி…தன் கொள்ளுதாத்தா குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேனன் குறித்து இதுவரை வாழ்க்கை சரிதம் எதுவும் இல்லாத நிலையில் நாராயணி அதை நிறைவேற்றியுள்ளார். V P Menon The Unsung Architect of Modern India என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தனது கொள்ளுதாத்தா குறித்து நாராயணி  மனம் வருந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”என் கொள்ளுதாத்தா என்பதால் அல்ல..இந்திய விடுதலைக்காக பேசப்பட்ட கடைசி முப்பாதாண்டுகளின் அனைத்து ரிகார்டுகளிலும் அவரின் கைவண்ணம் பதித்த மனிதனை நாடு அறியாமல் போய்விட்டதே என்பதால் இந்த மேனன் சரிதை எழுதப்பட்டுள்ளது. அவரின் முக்கியத்துவத்தை நாடு புரிந்துகொள்ளாமல் போய்விட்டது. இந்திய சுதந்திரத்திற்கு செவிலியராக செயலாற்றினார் என மேனனை அழைக்கமுடியும்!”எனக் கூறியுள்ளார்.

இந்தியா ஒரு தேசமாக இருந்ததில்லை!

பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ”இந்தியா எப்போதும் ஒரு தேசமாக இருந்ததில்லை” என்ற சர்ச்சையை பிர்கன் ஹெட் என்பார் துவக்கி வைத்தார். இனியும் ஒற்றை நாடாக இருக்க முடியாது என்றும் கூறினார். இந்தியர்களால் தங்களுக்கான அரசியலமைப்பு சட்டத்தை எழுத முடியுமா என்ற சவாலை முன்வைத்தார். இந்த சவாலை மோதிலால் ஏற்றுக் கொண்டு நேரு அறிக்கை பின்னர்  எழுதப்பட்டது.

1929 டிசம்பரில் காங்கிரஸ் லாகூரில் கூடி முழு சுதந்திரம் கோரியது. முதல் வட்ட மேஜை மாநாட்டில் அது பங்கேற்கவில்லை. பங்கேற்ற காங்கிரஸ் அல்லாதாரிடம் கருத்து அறிந்து கொண்டு பிரதமர் ராம்சே மக்டொனால்டு ஃபெடரேஷன், மக்கள் சபை, மாநில சபை என்ற கருத்தாக்கங்களை ஏற்பதாக அறிவித்தார்.

காந்தியே ஒட்டு மொத்த காங்கிரஸ்!

மார்ச் 1931ல் காந்தி இர்வின் உடன்பாட்டை தொடர்ந்து 2வது வட்ட மேஜை மாநாட்டுக்கு காங்கிரஸ் செல்வது என முடிவானது. மிகப்பெரிய காங்கிரஸுக்கு 16 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கலாம் என வைஸ்ராய் குறிப்பிட்டார். ஆனால் காந்தி மட்டும் செல்வதென காங்கிரஸ் முடிவெடுத்தது.

வட்ட மேஜை மாநாட்டில் காந்திக்கும் மற்றவர்களுக்குமான பிளவு அதிகரித்தது. பிரிட்டீஷ் முழு பஞ்சாயத்தார் ஆயினர். ராம்சே வகுப்புவாத பிரதிநிதித்துவ ’அவார்டில்’ தாழ்த்தப்பட்டோர் தனி வாக்காளர் தகுதி பெற்றனர். காந்தி உண்ணாவிரதத்தின் காரணமாக அம்பேத்கார் காந்தி புரிதலில் உடன்பாடு புனாவில் எட்டப்பட்டது. பொது வாக்காளர்- தனித்தொகுதி முறை ஏற்கப்பட்டது.

இந்தியாவை நான்காக பிரித்து திராவிட நாடு தரலாம் -ஜின்னா!

1942 ஆகஸ்டில் பிரிட்டீஷாரே வெளியேறுங்கள் என்ற கோஷத்தை காந்தி முன்னெடுத்தார். இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைந்த சூழல் அது. பிரிட்டீஷ் நாடாளுமன்றமும் அந்நாட்டு பத்திரிக்கைகளும் காங்கிரஸை கடுமையாக தாக்கின. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாதார் ஹிட்லருக்கெதிரான பிரிட்டீஷ் ஆதரவு நிலை எடுத்தனர். சென்னை கவர்னரை சந்தித்த ஜின்னா, திராவிடஸ்தான், ஹிந்துஸ்தான், பெங்காலிஸ்தான், பஞ்சாபிஸ்தான் என நான்காக நாட்டை பிரிப்பது அவசியம் என்றார்.

1942ல் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவும் யுத்தத்திற்கு பின்னால் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபை என பேசியது. கிரிப்ஸ் ”பின் தேதியிட்ட காசோலை தருகிறார்” என காந்தி நிராகரித்தார். மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை என்பதை காங்கிரஸும் ஹிந்து மகாசபாவும் ஏற்கவில்லை. பாகிஸ்தான் பிரிவினையே ஒரே வழி என்றார் ஜின்னா. கிரிப்ஸ் தூதுக்குழு தோற்று நாடு திரும்பியது.

இந்தியாவில் அதிகாரமாற்றம்

1946ல் வந்த காபினெட் குழுவும் பல்வேறு தலைவர்களை சந்தித்து ஒன்று பட்ட இந்தியா, அதற்கான அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கான விரிவான அதிகாரங்கள் என்பது குறித்து பேசியது. ஜின்னா 6 மாகாணங்களுடன் கூடிய பாகிஸ்தானை வலியுறுத்தினார்.காங்கிரஸ் முதலில் விடுதலை, அரசியல் நிர்ணய சபையில் ஒரே சட்டம் என பேசியது.

பிரிவினை என்றால் சீக்கியர்களுக்கு தனி நாடு என சீக்கியர்கள் பேச துவங்கினர். பிரிவினை என்றால் வங்கமும் பஞ்சாபும் பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. காங்கிரஸும் ஹிந்து மகாசபாவும் இதனை வெளிப்படுத்தின.

அடுத்து வந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஜூலை 3, 1947 திட்டத்தை முன்வைத்தார். இதன்படி ஆகஸ்டு 15ல் இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப்படும். வங்கத்திலும், பஞ்சாபிலும் முஸ்லீம் அல்லாத பகுதிகள் பிரிக்கப்படும். இதற்கான பவுண்டரி கமிஷன் அமைக்கப்படும். இத்திட்ட உருவாக்கலில் வி.பி.மேனன் பெரும் பங்காற்றினார். அதிகார மாற்றம் மாகாணங்களை நோக்கி என்பதை தடுத்து, இரண்டு மைய டொமீனியன்களை நோக்கி என்பதாக நகர்த்தினார். இந்திய விடுதலை சட்டம் ஜூலை 18, 1947ல் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டு அதன்படி ஆகஸ்ட் 15, 1947ல் நமக்கு அதிகார மாற்றம் நடந்தேறியது.

கட்டுரையாளர்; ஆர்.பட்டாபிராமன்,

எழுத்தாளர்,

இடதுசாரி சிந்தனையாளர்,

காந்தியை கண்டுணர்தல் போன்ற நூல்களின் ஆசிரியர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time