அபார லாபம் தரும் போக்குவரத்து துறையில் அநியாய நஷ்டம் எப்படி?

- பீட்டர் துரைராஜ்

“போக்குவரத்து  துறை பத்தாண்டுகளாக படு நஷ்டத்தோடு இயங்குகிறது.. அதிக  பணியாளர்கள், ஓய்வூதியம், டீசல், வட்டிச் செலவினங்கள் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று நிதி அமைச்சர் ப.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த நஷ்டம்? எப்படி ஏற்படுகின்றது நஷ்டம்..? என்பதை  இங்கு விளக்குகிறார் சிஐடியு  தொழிற்சங்கத்தைச் சார்ந்த கே.ஆறுமுக நயினார் .

மாணவர்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்கு இலவசப் பயணம், உழவர் சந்தைகளுக்கு,  பேருந்துகளில் விவசாயிகள் காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம்…, மாற்றுத் திறனாளிகளுக்கு , நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு என பலவகையான இலவசங்களும்,கட்டணச் சலுகைகளும்  அரசு போக்குவரத்து துறை வழங்கி வருகின்றன. இப்படி ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்துவிட்டு, அய்யயோ நஷ்டமாகிறதே எனச் சொன்னால் எப்படி?

இது போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு  ஆகும் கட்டணத்தை,  போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால், இதற்கான  தொகை வர வேண்டியதாக  கணக்குக் காட்டினால் (Book adjustment),   போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் ஓடுவதாக சொல்லவேண்டி இருக்காது” என்றார் ஏஐடியுசியைச் சார்ந்த, தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழக சங்கங்களின் பொதுச் செயலாளரான ஆர்.ஆறுமுகம்.

அதிக பணியாளர்களால் நஷ்டம் என அமைச்சர் கூறியுள்ளார். உண்மையில் பணியாளர் பற்றாக்குறை தான் நிலவுகிறது. வண்டி ஓட்டினால் தான் அன்றைக்கான சம்பளம் என்பது தான் தற்போதைய நிலைமை . அதே சமயம் அதிகாரிகள் சற்று அதிகமாக உள்ளனர்.போக்குவரத்து கழகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, அது அதற்கு தனித் தனி அலுவலகங்கள், அதிகாரிகள் அவர்களுக்கான கார்,பெட்ரோல்,டிரைவர் என்ற ஆடம்பரச் செலவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து,அவர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகளை அடியோடு நிறுத்தினால் நஷ்டம் வராது.

“ஷேர் ஆட்டோ, மாக்சி ஆட்டோ, டிரெக்கர் போன்ற வாகனங்களினால் நகரப் பேருந்துகளின் வருமானம் குறைகிறது. கிராமங்களில் ஓடுகின்ற மினிபஸ்கள்,  சாலை வசதி இல்லாத  உட்புற கிராமங்களுக்குச் செல்வதற்காக முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில்  அனுமதிக்கப்பட்டன. அவை அதிக பட்சமாக  4 கி.மீ. தூரம் வரை மட்டுமே முக்கிய சாலைகளில் பயணிக்க வேண்டும். ஆனால்  சட்டவிரோதமாக  நகரத்தின் முக்கிய சாலைகளில்   செல்கின்றன. இதனால்  நகரப் பேருந்துகளின் வருமானம் அடிபடுகிறது.

பொருட்களை வாங்குவதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு இயங்குகிறது. அதில் போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை  இயக்குநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சந்தை கிடைக்கும் விலையை விட, இந்தக் குழுவினால் வாங்கப்படும் பொருட்களின் விலை அதிகம்.  உதாரணமாக,  சந்தையில் பேருந்துகளின் பக்க கண்ணாடியின் (Side Mirror)  விலை  400 ரூபாய் என்றால், அதே கண்ணாடியை அரசுப் போக்குவரத்து கழகங்கள்  1200 ரூபாய் விலைக்கு வாங்குகிறார்கள். இது போல ஒவ்வொரு பொருளிலும் நடைபெறும் முறைகேடுகளால் ஏற்படும் இழப்புகளை தவிர்த்தாலே அரசு போக்குவரத்து கழங்கள் நஷ்டத்தில் இருந்து கணிசமாக மீண்டுவிடும்.முதலில் அரசின் பொதுத் துறை என்றாலே அதை முறைகேடாக பணம் எடுப்பதற்கான சுரங்கமாகக் கருதும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மனநிலை மாற வேண்டும்.

பேருந்துகளை இயக்குவதில் நேர நிர்வாகம் ஒரு முக்கியமான மூலதனமாகும். மக்கள் கூட்டம் அதிகமாக வரும் நேரங்களில் சம்பந்த ரூட்டில் போகும் பேருந்துகளுக்கு அபார லாபம் கிடைக்கும். அப்படிப்பட்ட பீக் அவர்சை தனியார் பேருந்துகள் இலாபம் அடையும் வகையில், நேரம் ஒதுக்கித் தருவார்கள். உதாரணமாக,  முதலில் புறப்படும் காலை 6 மணி பேருந்தில் அதிகப்பயணிகள் பயணிப்பார்கள் என்றால், அந்த நேரத்தை தனியார் பேருந்திற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அனுமதி வழங்குவார். அதற்கு அடுத்துப் போகும்  அரசுப் பேருந்துகள் கூட்டம் இல்லாமல் போகும். அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தனியார் முதலாளிகளுக்காக அரசு போக்குவரத்து கழகத்தை நஷ்டத்திற்கு ஆளாக்கும் அதிகாரிகளை களை எடுக்க வேண்டும்.அடுத்ததாக அரசு பேருந்துகள் நன்றாக இயங்கி, சிறப்பாக லாபம்பார்க்கும் ரூட்டுகளில் தனியார் பேருந்துகளுக்கு விட்டுத் தர ஆட்சியாளர்கள் மட்டத்தில் பேரம் நடக்கும். சம்பந்தப்பட்ட ரூட்டை பெறுவதற்கு சில கோடிகள் லஞ்சம் கொடுத்து, தனியார் நிறுவனம் அபகரிக்கும். இப்படி தான் போக்குவரத்து துறை நஷ்டமாகிறது! ஆனால், அதற்கு பொறுப்பேற்கும் அமைச்சர்கள், அதிகாரிகளோ பெரும் கோடீஸ்வர்கள் ஆகிறார்கள் என்றால், எங்கு தப்பு நடக்கிறது..?

அரசுப் பேருந்துகளுக்கு சேசிஸ் வாங்க விற்பனை வரி, மோட்டார் வாகனவரி , என பலவாறாக ஒரு பேருந்துக்கு ஓராண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் அரசுக்கு வரியாக போகிறது. கடன் வாங்கும் போது அதற்கான வட்டியை அரசுக்கு போக்குவரத்து கழகங்கள் தருகின்றன. பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகள் சேவை செய்வதால் வரிகளை தள்ளுபடி செய்யலாம். இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் போக்குவரத்து கழகங்களில்  இழப்பு ஏற்படுகிறது என்று  நிதி அமைச்சர் என்று சொல்லுவது சரியானதல்ல” என்றார் ஆர்.ஆறுமுகம்.

இது தவிர அரசு பேருந்துகளுக்கு பெட்ரோல்,டீசல் போடுவதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வரியாக மத்திய அரசிற்கு போகிறது.

“பொதுமக்களை ஏற்றிச் செல்லும் இரயில்களில் லாபமில்லை. சரக்கு இரயில் களில்தான் இரயில்வே துறைக்கு  லாபம் கிடைக்கிறது. அதே போலத்தான் நகரப்  பேருந்துகளை இயக்குவதினால் லாபமில்லை. தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள்  ஓடுகின்றன. இதில் வெளியூர்களுக்குச் செல்லும் 10,000 பேருந்துகளினால்தான் லாபம் கிடைக்கிறது. பயணிகளின் வசதிகளுக்குத்தான் அரசுப் பேருந்துகள் முன்னுரிமை கொடுக்கின்றன. பேருந்துகள் சரியான நேரத்தில்  இயங்குகின்றன. தனியார் பேருந்துகளின்  இருக்கைகள் நிரம்பும் வரையில் பேருந்து நிலையத்தை விட்டு நகராது.’’ என்றார் கே.ஆறுமுக நயினார்.

“சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனப் போக்குவரத்தில் நல்ல இலாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சரக்குப் போக்குவரத்தை நடத்த,  போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு அனுமதிக்க  வேண்டும்.   சேசிஸ் உற்பத்திகளை, அரசு நிறுவனமான  பாரத மின்பகு நிறுவனத்திற்கு கொடுக்கலாமே! ஏன் அசோக் லேலண்ட்  நிறுவனத்திற்கு தர வேண்டும். அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன; டையர், டியூப் செய்யும் ஆலைகளை  போக்குவரத்து கழகங்கள் தங்கள் டெப்போக்களில் நிறுவலாம். இதற்குப் பெரிய முதலீடு தேவையில்லை. பேருந்துகளை கட்டும் பாடி பில்டிங் வேலைகளை போக்குவரத்து கழகங்கள் சொந்தமாக வைத்துள்ளன. ஆனால்,அதை முடக்கி வைத்துள்ளனர். யாருக்காக இந்த முடக்கம்? இதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதனால் ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும். இது போன்ற சீர்திருத்தங்களை செய்ய நேர்மையான நிர்வாக அணுகுமுறை முக்கியமாகும்.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஓட்டும் பேருந்துகளில் இலாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பேருந்து 300 கி.மீ. தூரமாவது பயணித்தால் நல்லது. எனவே,  அதிகபட்சமாக  பேருந்துகளை உபயோகப் படுத்த வேண்டும்.  போக்குவரத்து கழகங்களுக்கிடையில் பேருந்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில் ஓடிய வண்டிகளை,  நகரப் பேருந்துகளாக ஓட்டலாம். இதனால் பேருந்துகள் அதிக அளவில்  பயன்பாட்டில் இருக்கும் ” என்றார் ஓட்டுநராகவும் பணியாற்றிய  ஆர்.ஆறுமுகம்.

“27,000 பேருந்துகளை (வழித்தடங்கள்) வைத்துக்கொள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால் 20,000 பேருந்துகளே நம்மிடம் உள்ளன. ஒரு மாநிலம் வளர்ச்சி அடைவதற்கு போக்குவரத்து முக்கியமானது. நன்கு வளர்ச்சி அடைந்த  மாநிலங்களைப் பார்த்தால் அங்கு போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு அங்குள்ள போக்குவரத்து வசதிகள் முக்கியமான காரணமாகும்.

போக்குவரத்து அதிகமாக இருந்தால் நகர்மயமாக்கல் நடக்கும். புதுப்புது குடியிருப்புகள் உருவாகும். புதிதாக பேருந்து ஓடும் போது அதில் கூட்டம் இருக்காது. ஆனால், போகப்போக போதுமான  பயணிகள் வந்துவிடுவர். இதனால் நகரத்தின் நெருக்கடி குறைகிறது. சாலைகள், பாலங்கள் போல போக்குவரத்தும் கட்டமைப்பு வசதிகளில் முக்கியமானது ஆகும். பொதுப் போக்குவரத்து  அதிகமாவதினால் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை மக்கள் குறைத்துக் கொள்வார்கள்.  இது  சுற்றுச் சூழலுக்கு நல்லது. பொதுப் போக்குவரத்தினால் விபத்துகள் நடக்காது” என்றார் சிஐடியுவின் மாநிலச் செயலாளராக இருக்கும் கே. ஆறுமுக நயினார்.

rb_related title=”Also read” total=”2″]

” ஆம்னி பஸ்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் பல ஆண்டுகளாக வைத்துவருகிறோம்” என்றார் ஆர்.ஆறுமுகம். “ரதி மீனா, பர்வீன் டிராவல்ஸ், கேபிஎன் போன்ற  பேர் பெற்ற தனியார் நிறுவனங்களே போதுமான பயணிகள் இல்லாததால் தங்களது சேவைகளை குறைத்துக் கொண்டு விட்டன. சென்சார் வைத்த நவீன  வண்டிகள் வந்துவிட்டன. இதற்கேற்றார் போல பேருந்துகளைப் பராமரிக்கும் வகையில் பணிமனைகளை நவீனப்படுத்த வேண்டும்” என்றார் கே.ஆறுமுக நயினார்.

பேருந்துகள் தொடர்ந்து  இழப்பைச் சந்தித்து வருகின்றன என்ற வாதம்,  அதில் பணியாற்றி வரும் போக்குவரத்து ஊழியர்களின் மனோபாவத்தைப் பாதிக்கும். இது ஒரு நிறுவனத்திற்கு நல்லதல்ல. இருக்கின்ற வாய்ப்புகளை செம்மையாக பயன்படுத்தி நேர்மையான நிர்வாகத்தை உறுதிபடுத்த வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.

– பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time