ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறித்து பல உலக நாடுகளும், ஐ.நா சபையும் அச்சம் தெரிவித்து வருகின்றன.
”அங்கு தற்போது மக்கள் சந்திக்கும் பேராபத்து உலக நாடுகளுக்கே அசிங்கம், பெரும் தோல்வி” என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.
”அமெரிக்கா ஆப்கான் மக்களை அந்தோவென கைவிட்டுவிட்டது. இது மாபெரும் துரோகம்” என இங்குள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள்!
”இனி’ ஆப்கானில் கொலைகள் நடந்தேறும்,கொடூரங்கள் நடந்தேறும்” என பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்!
இப்படியான பார்வைகள் சில யதார்த்தங்களை உணராமல் அல்லது உள் வாங்க விரும்பாமல் வெளிப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.
”ஆப்கான் தாலிபான்கள் அதி பயங்கரவாதிகள், அவர்கள் வசம் அந்த நாடு செல்வதை ஏற்க முடியாது” என வெளியிலிருந்து கொண்டு சொல்வதற்கு நாம் யார்? அதில் நாம் என்ன தான் செய்ய முடியும்..?
ஆனானப்பட்ட அமெரிக்காவும், நேட்டோ நாடுகளின் படைகளும் லட்சக்கணக்கான தங்கள் நாட்டு வீரர்களை களம் இறக்கி, கோடானுகோடி பணம் செலவழித்து தாலிபான்களுக்கு எதிராக பெரும் யுத்தம் நடத்தி தோல்விடைந்து வெளியேறுகிறார்கள்! இதில் அமெரிக்கா ஆப்கானில் உள்ள ராணுவத்திற்காக செலவழித்த தொகை கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் ஆயிரம் கோடி பில்லியன் டாலர்கள்! அத்துடன் அதன் மறு நிர்மாணத்திற்கு செலவழித்த தொகை 882 பில்லியன் டாலர்கள்! அதாவது ஒட்டுமொத்த இந்தியாவிற்கான ஐந்து ஆண்டுக்கான பட்ஜெட் தொகையை தமிழ் நாட்டின் அளவில் பாதி அளவுகூட இல்லாத மக்கள் தொகை கொண்ட ஒரு சின்னஞ் சிறிய நாட்டிற்கு தந்துள்ளது! இது தவிர, ஜெர்மன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளும்,ஏன் இந்தியாவுமே கூட ஆப்கான் மேலெழுந்து வருவதற்கு பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தந்துள்ளது! இவ்வளவு அள்ளித் தந்து இருபதாண்டுகளாக அந்த நாட்டை போஷித்துவிட்டு தான் அனைவரும் வெளியேறினார்கள்!
அப்படி வெளியேறும் போது, ”நாங்கள் நிறைய பயிற்சிகளை ஆப்கான் நாட்டுவீரர்களுக்கு தந்துள்ளோம். நிறைய நவீன ஆயுதங்களும் தந்துள்ளோம். இனி அவர்கள் நாட்டை அவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.” என்றனர்.
ஆனால், அந்த நாட்டு அரசாலும், இராணுவத்தாலும் இருபது நாட்கள் கூட தாக்குபிடிக்க முடியவில்லை.
அமெரிக்க அதிபர் பைடன் , ”அரசியல் தலைவர்கள் போராடாமல், நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள். சில இடங்களில் இராணுவம் போராட முயற்சிக்காமலேயே சரிந்தது. தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கினோம். ஆனால் தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் விருப்பத்தை மட்டும் அவர்களுக்கு எங்களால் தர முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்டேட்மெண்ட் சாதாரணமானதல்ல! தாலிபான்களிடம் போராடாமல் அந்த நாட்டு அதிபர் அஸ்ரப் கனி விமானம் முழுக்க பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்! இப்படிப்பட்டவர் தான் இந்த நாட்டுக்கு இது நாள் வரை தலைவராக இருந்துள்ளார்! அவரது ஆட்சிக்கு உதவிகரமாக இருந்த அதிகாரிகள், அரசு ஊழியர் கூட்டமும் குடும்பத்தோடு தப்பி ஓடுகிறது…! பொது மக்கள் ஓடவில்லை. அந்த நாட்டு மக்களில் சுமார் 60 சதவிகிதத்தினர் ஏழை, எளிய விவசாயிகள்! இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது அந்த நாட்டு அதிபரோ, அந்த நாட்டு அரசாங்கமோ மக்கள் ஆதரவை பெற்று இருக்கவில்லை. அவர்கள் மக்களுக்காக இல்லை, ஆகவே அவர்களுக்காக மக்கள் எப்படி போராடுவார்கள்..?
இளைஞர்கள் பலர் காபூலில் ஆங்காங்கே கூட்டமாக நின்று தாலிபான்களை வாழ்த்தியும், அமெரிக்கா சென்றதை வரவேற்றும் கோஷம் எழுப்பி உள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் தெரிவிக்கின்றன!
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்த போது ரத்த ஆறு ஓடவில்லை. அரசின் ராணுவம் எதிர்க்காமல் ஓட்டம் பிடித்தது. ”பொது மக்களுக்கு எங்களால் எந்த பிரச்சினையும் இருக்காது. அவரவர்கள், அவர்களின் வீடுகளிலேயே இருக்கலாம்” என தாலிபான்கள் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் எங்கேயும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. அமெரிக்க ராணுவம் தான் அத்துமிறி பதற்றத்தின் காரணமாக காபூல் விமான நிலையத்தில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றது. ஆயினும், அதற்கு உணர்ச்சிவசப்பட்டு தாலிபான்கள் எதிர்வினை ஆற்றவில்லை.
தாலிபான்களைப் பற்றி அவநம்பிக்கையுடன், இழிவான கருத்துகளையும், விமர்சனங்களையும், பொய்யான அவதூறுகளையும் பரப்பி வருபவர்கள் தான் ஒரு வகையில் பயங்கரவாதிகள்!
ஆப்கானிஸ்தானுக்கு மிக நெருக்கமான நாடான பாகிஸ்தானில் தாலிபான்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் தான் ஆப்கானில் என்ன நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படும் நாடாகும். ஏற்கனவே பல லட்சம் ஆப்கான் அகதிகளை தன் நாட்டில் வைத்து காப்பாற்றி வருகிறது பாகிஸ்தான்! அப்படி இருந்தும் பாகிஸ்தான் தாலிபான்களை விரோதியாக கருதவில்லை. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தாலிபான்களை எதிர்க்கவில்லை. சீனா மிக நேசத்துடன் தாலிபான்களை அனுசரித்து வரவேற்றுள்ளது.
இருபதாண்டுகளுக்கு முன்பு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த போது பல தவறுகளை செய்தனர். பெண்களின் சுதந்திரத்தை ஏற்க மறுத்தனர். பழமை வாய்ந்த பாறையில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையை தகர்த்தனர்! நடு ரோட்டில் வைத்து கொடூர தண்டணைகள் தந்தனர். இவை உலகத்தால் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. அமெரிக்கா அன்று தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி ஆட்சி மாற்றம் செய்ய இதுவும் ஒரு காரணமானது. ஆனால், அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அன்னிய நாடுகளிடம் வாங்கித் தின்று அடிமை சேவகம் செய்தனர். சொந்த நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தவில்லை. அந்த ஆட்சியாளர்கள் போவது நல்லது என்ற நிலைக்கு மக்களில் கணிசமானோர் வந்தனர். இருபதாண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி ஐம்பதாயிரத்திற்கும் அதிகாமானவர்களை உயிர் தியாகம் செய்தும் அழியாமல் வீரார்ந்து போராடும் தாலிபான்கள் மீது மக்களுக்கு ஒரு கரிசனம் இருந்திருக்க வேண்டும். அப்படியான மக்கள் ஆதரவு இல்லாமல் ஒரு போராளி இயக்கம் ஜீவித்து இருக்க முடியாது! வெற்றிக் கனியை சுவைக்கவும் முடியாது.
இதனால் தான் அமெரிக்கா சென்ற ஆண்டு அதாவது பிப்ரவரி, 2020 ல் தாலிபான்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசியது! தாங்கள் விலக விரும்புவதாகவும், அதற்கு தாலிபான்களின் மீது நம்பிக்கை ஏற்பட்ட வேண்டும் என்றால், நீங்கள் அல்கொய்தா, ஐ.எஸ்.எஸ் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போகக் கூடாது என்றும், எங்கள் மீது எந்த தாக்குதலும் செய்யாமல் இருந்தால் 14 மாதங்களில் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோம் என உத்திரவாதமளித்தது. அவ்விதமே தாலிபான்கள் நடக்கிறார்களா என்பதை அமெரிக்கா உறுதிபடுத்திக் கொண்ட பிறகே, ஆப்கானில் இருந்து வெளியேறி உள்ளது. நேட்டோ நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டனர். அந்தப்படியே வெளியேறி வருகின்றனர்.
ஆக, சம்பந்தப்பட்ட நாடுகளும் அந்த நாட்டு மக்களும் ஒப்பந்தம் செய்தோ, உடன்பட்டோ தான் இந்த மாற்றங்கள் சாத்தியமாகி உள்ளன! தாலிபான்கள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் பயின்று இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பது போலத் தெரிகிறது! எப்படியானாலும், சம்பந்தப்பட்டவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு எல்லாம் சுமூகமானால் சரிதான்! இதில் தவறுகள் ஏற்பட்டாலும் அதன் விளைவை அவர்கள் தான் அனுபவிக்கப் போகிறார்கள்! நாம் செய்ய வேண்டியதெல்லாம் தேவையில்லாமல் இஸ்லாமிய துவேஷத்தை இந்த விவகாரத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதே!
rb_related title=”Also read” total=”2″]
அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தும், ”தாலிபான்களை ஒடுக்க இந்தியா முன்வர வேண்டும்” என்றெல்லாம் இங்கே சில அதிக பிரசங்கிகள் எழுதுவதும்,பேசுவதும் இந்திய நலன்களுக்கு நல்லதல்ல! ஆயுதமேந்திய தாலிபான்களை விட, அகமெல்லாம் வெறுப்பை சுமக்கும் சில நூலிபான்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நடந்து வருவதை அமைதியாக அவதானித்து, இந்திய நலன்களுக்கு உகந்த முடிவுக்கு நாம் வருவதே புத்திசாலித்தனமாகும்! இலங்கையை வசப்படுத்தியது போலவே, சீனா ஆப்கானை வசப்படுத்தி தன் ஆதிக்க கரங்களை விரிவுபடுத்த உள்ளது என்பது மட்டும் சர்வ உண்மை. இதைக் குறித்த எச்சரிக்கை தான் நமக்கு தற்போது நமக்கு அதி முக்கியமாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
முன்பிருந்த தாலிபான்கள் போல் இப்போதும்.இருப்பார்கள் என்று முடிவுக்கு வரக்கூடாது இப்போது மக்கள் விரும்பும்.தாலிபான்கள் இவர்கள் இதுவரை எவரையும் அவர்கள் துப்பாக்கிக்கு இரையாக்கவில்லை. திருந்தியவர்கள் போல்.இருக்கிறார்கள்
மக்கள் நலம் நாடா சுரண்டல் அரசியல் தலைவர்களுக்கு இந்த முடிவுதான் என்று ஆப்கன் மக்கள் உலகை எச்சரித்துள்ளது
ஆப்கானிஸ்தான் மக்கள் புலம்பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைய நினைப்பது அங்கிருந்து வெளியேறக்கூடிய விமானங்களின் மூலம் தப்பிக்க நினைப்பது இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான கொடுக்கும் முறைகளும் உச்சத்தில் இருந்தது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தாலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் ஏன் ஆப்கானிஸ்தான் தவிர்த்து வெளியே இருக்கக்கூடிய அனைத்து நாட்டு மக்களுக்கும் தாலிபான்கள் மீது துளியளவும் நம்பிக்கை இருக்காது வரக்கூடிய காலகட்டங்களில் தாலிபான்களின் போக்கினை பொறுத்தே யூகிக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம்
ஆப்கானிஸ்தான் மக்கள் புலம்பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைய நினைப்பது அங்கிருந்து வெளியேறக்கூடிய விமானங்களின் மூலம் தப்பிக்க நினைப்பது இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே பெண்களுக்கு எதிரானஅடக்ககுமுறைகளும் உச்சத்தில் இருந்தது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தாலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் ஏன் ஆப்கானிஸ்தான் தவிர்த்து வெளியே இருக்கக்கூடிய அனைத்து நாட்டு மக்களுக்கும் தாலிபான்கள் மீது துளியளவும் நம்பிக்கை இருக்காது வரக்கூடிய காலகட்டங்களில் தாலிபான்களின் போக்கினை பொறுத்தே யூகிக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம்
“ஆயுதமேந்திய தாலிபான்களை விட, அகமெல்லாம் வெறுப்பை சுமக்கும் சில நூலிபான்கள் மிக ஆபத்தானவர்கள்”, என்ற தங்கள் கருத்து மிக உண்மையுள்ள வரலாற்று நிதர்சனம். இது போன்ற நடுநிலை விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள் அதிகம் தேவை.
திரு கண்ணன் அவர்களுக்கு,
மிகவு அருமையான கட்டுரை. நான் எதிர்பார்த்த கருத்துகள் அனைத்தும் இங்குஇடம் பெற்றிருக்கிறது. தகுந்த ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி
நக்கீரன் சந்திரமோகன்
காலத்திற்கு ஏற்ற அருமையான ஆழமான பதிவு. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்.