ஒரு தனி நபரோ,சமூகமோ அது எந்த அளவுக்கு நாகரீகமடைந்துள்ளது, பண்பாட்டு ரீதியாக பண்பட்டுள்ளது என்பதற்கான அளவுகோல் பெண்கள் குறித்த பார்வை தான்! பெண்களை சமத்துவத்துடன் நடத்த முடியாத தனி நபரோ,சமூகமோ மேம்பட்ட அடையாளத்தை பெற முடியாது. பாஜக அரசு எவ்வளவு பத்தாம் பசிலித்தனமான அரசு என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று வேண்டாம்!
தேசியப் பாதுகாப்பு அகாடமி இந்திய இராணுவத்தின் முப்படைக்கான பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாடமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனேயில் செயல்படுகிறது.
தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தரைப்படைப் பிரிவில் தேறிய மாணவர்கள் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் ஓராண்டு பயிற்சி எடுத்து அதிகாரி எனும் தகுதி பெறுவர். விமானப்படைப் பிரிவில் பயிற்சி பெற்றமாணவர்கள் ஐதராபாத்தின் இந்திய வான்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்யவர். கப்பல் படை பயிற்சி பெற்றவர்கள் கேரளாவின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி எடுக்க வேண்டும்.
இந்த தேசிய பாதுகாப்பு அகாடமியின் இராணுவம், கடற்படை மற்றும் விமான படையில் சேர்வதற்கும், இந்திய கடற்படை அகாடமி பாடநெறிக்கான கடற்படை அகாடமியில் சேர்வதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த கடந்த ஜூன 29-ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான கல்வித் தகுதி 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானதாகும். நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.வரும், செப்டம்பர் 5-ஆம் தேதி தேசியளவில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது! ஆனால், அதில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தகுதி, திறமையின் அடிப்படையில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்று வருகின்ற நிலைமையில் இதில் ஏன் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பாலின பாகுபாடு காட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்துவந்தது.
இந்நிலையில், குஷ் கல்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த மத்திய அரசு, ” இது நிர்வாக ரீதியிலான முடிவு என்பதால், நீதிமன்றங்களின் தலையீடு தேவையில்லை. தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வில் வாய்ப்பு மறுக்கப்படுவதால், ராணுவத்தில் பெண்கள் நியமனம் குறைவதாகவோ,பாகுபாடு காட்டுவதாகவோ கருதமுடியாது” எனத் தெரிவித்திருந்தது!
இந்த வழக்கின் விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டே, ” தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் எவ்வித பாகுபாடும் பார்ப்பது கிடையாது. இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கொள்கை முடிவாகும்” என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசின் இந்த கொள்கை முடிவு பாலின சமத்துவத்துக்கு எதிரானது. இந்த கொள்கை முடிவு பாலின பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது! இந்திய அரசியல் சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19-க்கு எதிரானது. பெண்களுக்கான சம உரிமையை இது மறுக்கிறது.
இது மத்திய ஆட்சியாளர்களின் மனநிலைப் பிரச்சினை ஆகும். இதை நீங்கள் மாற்றிக் கொள்ளுதல் நலமாக இருக்கும். உத்தரவு பிறப்பிக்குமாறு எங்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான பார்வை யில் முடிவு எடுக்கும்படி பிரதிவாதிகளுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். நாங்கள் ஆணைகளை பிறப்பிப்பதை விட, ராணுவம் தானே முன்வந்து ஏதாவது செய்தால் நாங்கள் அதை விரும்புவோம்.
ராணுவத்தில் ஆண் அதிகாரிகள் மிக உயர்ந்த பதவியை அடையும் உரிமை, பெண் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
Also read
பெண் அதிகாரிகள் தங்களது சக ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பணிபுரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெண்களின் உடலியல் அம்சங்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களின் மனநிலை கட்டாயம் மாற வேண்டும்.” என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க அளவில் தன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ”இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான தீர்ப்பை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய பின்னரும் ஏன் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரவில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் தான், அரசு நடவடிக்கை எடுக்குமா? நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலம் தொட்டே இந்த போக்கு காணப்படுகிறது’’ என்று சுட்டிக்காட்டினார்.
அப்போது, ‘இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாக’ இந்திய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டே கூறினார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ” இந்த பெருமை உங்களை (அரசை) சேராது. நீங்கள் கடைசி வரை எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தீர்கள். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் தான் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையம் சாத்தியமானது. இந்திய கடற்படை, இந்திய விமானப் படையில் உத்தரவுகள் நடைமுறைப் படுத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தில் இதுவரை ஆயுதப்படை, காலாட்படை, எந்திரவியல் படை, பீரங்கிப் படை ஆகியவற்றில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. பெண்களுக்கான நிரந்தர ஆணையத்தை செயல்படுத்தவும் முன்வரவில்லை” என்று தெரிவித்தார்.
வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வில், பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது தொடர்பான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் பாஜக அரசின் பாலின பாகுபாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாலின சமத்துவத்தை அமல்படுத்துவதில் தன் உறுதிபாட்டையும் நிலைநிறுத்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகிவிட்டன!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply