வெறுமே சீன் போடுகிறார்களா…? சீரியசாக நடவடிக்கை பாயுமா..?

-சாவித்திரி கண்ணன்

கடந்த ஆட்சியாளர்கள் எதில் தான் முறைகேடு செய்யவில்லை..? எதையும் விட்டு வைக்கவில்லை.

மக்கள் நலன் காக்க ஆட்சிபீடம் தரப்பட்டது. ஆனால், சதா சர்வ காலமும் சுருட்டுவதே தொழிலாக ஆட்சி நடத்தியுள்ளனர் அதிமுகவினர் என்பது தெரிய வருகிறது.

நூறாண்டுகளுக்கு மேலாக எல்லாம் இன்னும் ஸ்டிராங்காக இருக்கும்படி கட்டிடங்கள் எழுப்பபட்டு கண் எதிரே சாட்சியமாக இருக்கின்றன! நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரன் கூட, இவ்வளவு அநீதியாக தான் போட்ட திட்டங்களிலேயே சுரண்டியதில்லை.

ஒரு குடும்பம் குடியிருக்க வெறும் 280 சதுர அடிபோதும் என்று நினைத்த ஆட்சியாளர்களின் நோக்கத்திலேயே பழுதுள்ளதே! இந்த அளவிற்குள்ளான இடத்தில் தான் அவர்கள் சமைத்து, குளித்து, கழிவுகளை வெளியேற்றி, துணி துவைத்து, தூங்கி எழ வேண்டும் என்றால், அப்படி முடிவெடுத்த அமைச்சரை ஒரு நாள் குடும்பத்துடன் வந்து இங்கு தங்கி வாழ்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும்.

இப்படிக் கட்டிக் கொடுக்கும் வீட்டையும் இவ்வளவு தரம் குறைந்ததாக காண்டிராக்டர் கட்டிக் கொடுக்கிறார் என்றால், அவ்வளவு கமிஷனை அவரிடம் அடித்திருக்கிறார்கள். அவர் தன் பங்கிற்கு தரம் குறைந்த கட்டுமனத்தை தந்து பணத்தை மிச்சப்படுத்தி உள்ளார். அவரை, ”என்னய்யா இப்படிக் கேவலமாக கட்டிடம் கட்டித் தந்துள்ளாயே…” என்று கேட்கும் திரானி அன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு அவனிடம் பிடுங்கி தின்று இருக்கிறார்கள்!

இந்த பி.எஸ்.டி காண்டிராக்டர் தான் சென்ற ஆட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்துள்ளார். அதாவது வேலைகள் பலருக்கு பகிர்ந்தளிக்கபடாமல் ஒரு சிலருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு முக்கியமான விதிமுறை மீறல் தான்!

இந்த காண்டிராக்டர் கட்டிய கட்டமைப்புகளின் பட்டியலை பார்த்தால் தலை சுற்றுகிறது. ”தமிழ் நாட்டில் அனேகமாக எல்லா வேலைகளையும் இவர்கள் தான் செய்திருப்பார்களோ…. ” என நினைக்கும் அளவுக்கு பிரமிக்கவைக்கிறது…!

அண்ணா பல்கலையில் உள்ள கேம்பஸ், தர்மபுரி இன்ஞினியரிங் காலேஜ், கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை, கரூர் உள்ளிட்ட ஏகப்பட்ட இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கால் நடை மருத்துவ பூங்கா, ஏரிகள் சீரமைப்பு..என பற்பல திட்டப்பணிகளை செய்துள்ளனர்.

இவர்கள் தற்போது திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு இடங்களில் மருத்துவ கல்லூரிகளைக் கட்டி வருகின்றனராம்!

நாமக்கல்லில் இவர்கள் கட்டித்தந்த மருத்துவ கல்லூரி கடும் சேதாரத்திற்கு உள்ளானது.

250 கோடி மதிப்புள்ள புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் ஒரிரு வருடங்களிலேயே விரிசல், பழுது என அல்லோகலப்படுகிறது. இது என்றைக்கு இடிந்து விழுந்து நோயாளிகள் பலியாகப் போகிறார்களோ?

ஒரே நிறுவனத்தால் எத்தனை இடங்களில் வேலை செய்து தரமுடியும்..? அவர்கள் காண்டிராக்ட் எடுத்துவிட்டு சப் காண்டிராக்டருக்கு அடிமாட்டு ரேட்டுக்கு பேசி வேலை தருவர். ஆக, உழைப்புக்கு உரிய ஊதியம் இல்லையென்றால், சப்காண்டிராக்டர் தரக்குறைவான வேலையை தான் செய்து தருவார். இதை தவிர்க்க வேண்டுமானால், அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரியமான காண்டிராக்டர்களுக்கு நேரடியாக வேலை வழங்க வேண்டும்.

இவர்கள் விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 25 கோடி செலவில் கட்டிய தடுப்பணை 33 நாட்களிலேயே விழுந்து நொறுங்கியது. அப்போதும் ஒரு சில பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்தார்களேயன்றி தடுப்பணை கட்டிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை இல்லை. இதே நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டிய மற்றொரு தடுப்பணையின் கீழ்பகுதி சிமெண்ட் உதிர்ந்து நொறுங்கிய செய்தியும் வந்தது. இவ்வளவு அசம்பாவிதங்கள் நடந்தும், தரக்குறைவான கட்டுமானங்களை கட்டுபவர்கள் எனத் தெரிய வந்தும், இவர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து வேலைகளை கொடுத்து வந்தனர், சென்ற ஆட்சியாளர்கள்! இதில் எந்த ஒரு குற்றவுணர்வும் இவர்களுக்கு இல்லை என்பது தான் கவலையளிக்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே இந்த நிறுவனம் தமிழக அரசிடமிருந்து 1,500 கோடி பெறுமானமுள்ள கட்டுமானத்திட்டங்களை பெற்றுள்ளது.

எந்த தைரியத்தில் இவர்கள் தினசரி பத்திரிகையில் இன்று தங்களின் விளக்கத்தை விளம்பரமாக வெளியிட்டு உள்ளார்களோ தெரியவில்லை. அதில் கொரானா நோயாளிகள் அங்கு தங்கியதாலும்,சில இயந்திரங்களை அங்கு அப்போது கொண்டு சென்றதாலும் கட்டுமானம் சிதைந்துவிட்டது என்கிறார்கள். கொரானா நோய் என்ற மாயைக் கொண்டு இன்னும் என்னவெல்லாம் கதைகட்டுவார்களோ.. ! தரமில்லாத சிமெண்ட்! தரமில்லாத மணல் மற்றும் சிமெண்ட் மணல் விகிதாச்சாரம் முறையாக பின்பற்றப்படாதது ஆகியவையே சிமெண்ட் பூச்சு உதிர்வதற்கு காரணமாகும். இந்த கட்டிடத்தை மேல் பூச்சு செய்து பயன்படுத்த நினைத்தால் வருங்காலத்தில் பெரும் உயிழப்புகளுக்கு காரணமாகிவிடும்.

இப்படி இந்த அளவுக்கு கெட்ட பெயர் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஆளும் கட்சி தொடர்ந்து வேலை தந்து வந்ததை ஏன் அன்றைய எதிர்கட்சியான திமுக கேள்வி எழுப்பவில்லை? எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்து தடுக்கவில்லை. பெயரளவுக்கு ஒரு கண்டண  அறிக்கை தந்து விட்டு விட்டார்கள்..! அப்படியானால்,அவர்கள் சென்ற ஆட்சியிலேயே எதிர்கட்சியினரையும் சேர்த்தே கவனித்தனரா..? என்ற கேள்வி வருகிறது. இந்த நிறுவன உரிமையாளர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், கொரானா நிதி கொடுக்கும் சாக்கில் உதயநிதியோடு முதல்வரை சந்தித்து 25 லட்சம் கொடுத்துள்ளார்.

சென்ற ஆட்சியில் இவர்கள் பெற்ற வேலைகளின் சொச்சத்தை தற்போதும் செய்து வருகின்றனர். அப்படி என்றால், அந்த வேலைகளை தடங்களின்றி தொடர்வதற்கும், கடைசி பேமண்ட்டை ரிலீஸ் செய்வதற்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் ஏதாவது கையூட்டு கொடுத்தார்களா…? என்று தெரியவில்லை. அப்படி வாங்கி இருந்தால், இந்த ஆட்சியாளர்களும் சிறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ததோடு, விவகாரத்தை மூடிவிடுவார்கள்.

நியாயப்படி இந்த மேற்படி விவகாரத்திற்கு சான்றிதழ் தந்த செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகிய இருவரும் கண்டிப்பாக கிரிமினல் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டும். சென்ற ஆட்சியில் ஓ.பி.எஸ் நன்றாக பணம் பண்ணினார். இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடந்தால் ஒ.பி.எஸ் தண்டிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட காண்டிராக்டர் 120 B குற்றவியல் சட்டப்படி கண்டிப்பாக ஏழு ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியிருக்கும்.

இந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைத்து, இந்த நிறுவனரை ஒரு கிரிமினலாக அறிவித்து  இந்த அரசு நடவடிக்கை எடுத்தால் தான் நமக்கு ஒரளவுக்கேனும் மீது நம்பிக்கை துளிர்க்கும்…!

போகிற போக்கை பார்த்தால் கடந்த ஆட்சியில் இருந்த அனைத்து அமைச்சர்கள் மீதும் வழக்குகள் பாயலாம் என்றுகூட தோன்றுகிறது! அது அவசியம் என்று கூட சொல்லலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time