சமூகத்தின் மனசாட்சியாக ஓலித்த மக்கள் நீதிபதி கிருபாகரன்!

-சாவித்திரி கண்ணன்

பல நேரங்களில் இவரது தீர்ப்பை படிக்கும் போது நீதித்துறையின் மீது மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் மீதே ஒரு நம்பிக்கை பிறக்கும்! ”எளிய மக்களின் ஏக்கங்களையும், நோக்கங்களையும் உள் வாங்கி அவர்களின் மனசாட்சியாக இவர் வெளிப்படுகிறாரே..!” என்று வியந்த  நிகழ்வுகள் பற்பல!

நீதித் துறையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் புரிந்து கொள்ளாமல் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு சொல்லக் கூடியவர்களை பார்த்தும், கேட்டும், வெறுப்பும், விரக்தியும் அடைந்த பெருந்திரளான மக்களின் மாற்று எதிர்பார்ப்பாக நீதிபதி என்.கிருபாகரன் வெளிப்பட்டார்.

சில நீதிபதிகள் சமூகத்தில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டு உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து சமூகத்தை பார்ப்பார்கள்! அவர்களுக்கு தரப்படும் உச்சபட்ச மரியாதைகளும், சமூக அந்தஸ்தும் அவர்களின் நிறத்தை மாற்றிவிடுவதுமுண்டு!

அந்த காலத்தில் பல நேர்மையான மக்கள் நீதிபதிகள் இருந்துள்ளனர். கிருஷ்ணசாமி ரெட்டியார், கிருஷ்ண ஐயர்..போன்ற பலர் இருந்துள்ளனர். சமீபத்தில் பி.கே.மிஸ்ரா, வி.கே.சர்மா, ஓ.சின்னப்பா ரெட்டி(ஆந்திரா), கே.பி.சிவ சுப்பிரமணியன், ஹரி பரந்தாமன், சந்துரு,கண்ணன் ஆகியோர் வரிசையில் நீதிபதி கிருபாகரனும் தனக்கானதொர் தனித்த அடையாளத்துடன் திகழ்ந்தார்!

கிருபாகரன் எல்லா தரப்பு எளியவர்களுக்காகவும் இடையறாது தன் குரலை ஒலித்தவண்ணம் இருந்தார்! ஒரு சமயம் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ 30 முதல் 40 வரை லஞ்சம் கேட்கிறார்கள் என்று ஒருவர் வழக்கு போட்டார். அதை விசாரித்த போது அரசு தரப்பில் மறுத்து வாதம் வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி கிருபாகரன் பேசியதாவது;

”விவசாயிகள் இரவு பகல் என விழித்து பாம்புக்கடி போன்ற வலி வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர், அதிகாரிகள்!

லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காத அவர்களை சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்று கேலி செய்து வருகின்றனர். சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவிக் கொண்டிருக்கின்றது. இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?” என்று கடுமையாகப் பேசினார்.

தமிழகத்தில் உழைக்கும் எண்ணம் அருகி வருவது குறித்து ஒரு முறை வேதனையுடன் அவர் பேசியதாவது, ‘’நூறு நாள் வேலைத் திட்டம் அருமையானது. ஆனால் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி, பொழுது போக்குகின்றனர். இது மிகவும் கேவலமானது!

வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு அதிகம் உழைக்கின்றனர். நம்மவர்கள் அதிகக் கூலி கொடுத்தும் வேலை பார்ப்பதில்லை. இதைத் தொடர விட்டால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். அடுத்த தலைமுறையினர் அவர்களிடம் கூலியாட்களாக இருப்பார்கள்’’ எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு பற்றிய சிக்கலான உணர்ச்சிகரமான விவகாரத்தில் மிகத் தெளிவான பார்வையுடன் அவர் தன் தீர்ப்பில் பேசியிருக்கிறார்;

”நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை மறுப்பதற்கில்லை. ஆனால், மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 9.3% பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக பாடதிட்டத்தை மேம்படுத்தாமல் தமிழக அரசு செய்த தவறே. அதேபோல தகுதியான ஆசிரியர்கள் இல்லாததும் மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம். நீட் விலக்கு கோரிய விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஆரம்பத்திலேயே நிராகரிக்காமல், கடைசி நேரத்தில் நிராகரித்த மத்திய அரசின் செயல் ஏற்கதக்கதல்ல’’ என ஒரே சமயத்தில் மாநில, மத்திய அரசுகள் இரண்டிற்கும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ் மொழியின் மீது அவருக்கு மிகுந்த பற்று இருந்தது. ஆனால், மொழியின் பெயரிலான வன்முறை அரசியலை அவர் கடுமையாகச் சாடினார்;

”தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் விடுதலை என்ற போர்வையில் சில அமைப்புகளும் கட்சிகளும், பதற்றத்தையும் அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மத்திய அரசும் மாநில அரசும், ‘மொழி’ என்பது ஒரு தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அது எந்தவித பிரச்சனையையும் தூண்டி விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார். மதம் மற்றும் மொழி ஆகிய இரண்டையும் வைத்து பிரிவினையை தூண்டுவதை அனுமதிக்க முடியாது. மக்களை பிளவுபடுத்தும் அனைத்து சக்திகளையும் எதிர்க்க வேண்டும். ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் ஆனால், நாட்டிற்கு எதிராக நடத்த முடியாது” என்று தெளிவுபடக் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தின் போது அவர் பேசியதாவது; அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பது ஏன்?,  உரிய நேரத்திற்கு ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வராமல் இருப்பது தொடர்பான நடவடிக்கைகள் என்ன..?,   கிராமபுற மற்றும் மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடுவது அறமல்ல.  ஆசிரியர்கள் கடமைகளை செய்யாவிட்டால், மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று ஆசிரியர்களின் குற்றங்களையும், முக்கியத்துவத்தையும் ஒரு சேர கவனப்படுத்தியுள்ளார்!

இந்தியாவிலேயே மிக அதிகமாக – அதுவும் அரசின் அனுமதியோடு – தமிழகம் மது கலாச்சாரத்தில் சீரழிவது குறித்த ஆழ்ந்த கவலை நீதிபதி கிருபாகரனுக்கு இருந்தது. அதை தனது விடைபெறும் நிகழ்விலும் வெளிப்படுத்தினார். ‘’மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் வன்முறையில்லாத வடிவங்களில் போராடுவதை தடுக்கவோ, கைது செய்யவோ கூடாது’’ என ஒரு முறை தீர்ப்பளித்தார். மேலும்,

”குடியிருப்பு பகுதிகளுக்குள் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது, அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யக்கூடாது, கடைகள் திறக்க வேண்டாம் என கிராம சபைகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கிராமங்களில் மதுபானக் கடைகளை திறக்க கூடாது. டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது மக்களின் நலனுக்கு கேடு, ஆனால் அரசு கடைகளை அதிகப்படுத்த நினைப்பது, அவர்கள் பணம் ஈட்ட நினைப்பதை காட்டுகின்றது. மேலும், டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து மக்கள் தினமும் போராடும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணர்ந்து  மக்களின் உணர்விற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். எனவே கூடுதல் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவுகளையும், இடத்தை மாற்றம் செய்யும் விதிகளையும் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகள் விஷயத்தில் உச்ச நீதிமன்ற விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்கவேண்டும். மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை வரவேற்போம்’’ என்று மிக தைரியமாக கூறியுள்ளார்.

அவரது தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்க சில;

# இளைய தலைமுறையினர் டிக்டாக், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாக இருப்பதை தடுக்க  தடை.

# கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற, இரு குழுக்களை அமைத்து, கணக்கெடுத்து கோயில் சொத்துகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

# தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சலுகையை பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கே வழங்க வேண்டும்.

# நீர் நிலைகளை பாதுகாக்க சமரசத்திற்கு இடமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

# ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையாக பெயர்ப் பலகை வைக்க வேண்டும் .

# எய்ம்ஸ் மருத்துவமனை அதீத காலதாமாவது குறித்து மிக நாசூக்காக ‘’மதுரையில் மூன்று  ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாக’  தெரிவித்திருந்தார்.

# தன் பணியின் கடைசி நாளான்று,  ”மைசூருவில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளைச் சென்னைக்கு மாற்ற வேண்டும். சென்னையில் உள்ள மத்திய கல்வெட்டியல் பிரிவுக்கு, தமிழ் கல்வெட்டியல் பிரிவு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்!

# ”எம்.பி.க்கள் எந்த மொழியில் கடிதம் அனுப்புகிறார்களோ, அந்த மொழியில்தான் மத்திய அரசு கடிதம் அனுப்ப வேண்டும்’’ என்ற  உத்தரவை, தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்த வழக்கில், பிறப்பித்தார் நீதிபதி என்.கிருபாகரன்.

ஹெல்மெட் கட்டாயம் என தீர்ப்பளித்த போது, சமூக தளத்தில் தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டத்தையும் அவர் ஒரு முறை நினைவு கூர்ந்தார். அந்த தீர்ப்பில்,”ஹெல்மெட் போடாதவர்களின் வண்டியை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்” என அவர் அறிவுறுத்தியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இது போல, ”வரம்புக்கு மீறி பேசுகிறார் என்றும், அரசை சாடுவது போல சாடிவிட்டு, தீர்ப்பு வழங்கும் போது கடுமையை குறைத்துக் கொள்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தனவே…” என்று நீதிபதி ஹரிபரந்தாமனிடம் கேட்ட போது, ”நீதிபதி கிருபாகரன் பேசும் போது அரசுக்கு கடுமை காட்டிவிட்டு, தீர்ப்பு சமயத்தில் இயல்பாக தீர்ப்பு வழங்கிவிடுகிறார் என்று விமர்சிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீதிபதிகளுக்கும் ஒரு எல்லை வரை தான் பேசவோ, செல்லவோ உரிமை உண்டு. அந்த எல்லையைக் கடந்து அரசை விமர்சிப்பது, தீர்ப்பளிப்பது நடைமுறை சிக்கல்களையே தோற்றுவிக்கும். ஆகவே, தன் எல்லையை உணர்ந்து அவர் பேசியதாகவும், தீர்ப்பு வழங்கியதாகவுமே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்குள் மக்கள் நலன் சார்ந்த பார்வை மிக ஆழமாக இருந்தது..’’என விளக்கமளித்தார்.

நீதிபதி கிருபாகரன் இளகிய மனம் படைத்தவர் என்பதற்கு பல உதாராணங்கள் உள்ளன! சட்டம் என்பது இறுக்கமாக இல்லாமல் ஆதரவற்றவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகவும் அவர் தீர்ப்புகள் இருந்தன! கூலித் தொழிலாளியின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்டுவிட்டது தொடர்பான வழக்கில், ”அந்த ஏழைப் பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடும், மாதந்திரமாக ரூ7,500 உதவித் தொகையும், 450 சதுர அடியில் ஒரு வீடும், உரிய சிகிச்சைகளும் வழங்க வேண்டும்’’ என்று உத்திரவிட்டார்.

ஒரு சமயம் முளை வளர்ச்சி குன்றிய தங்கள் பத்து வயது மகனுக்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனளிக்காத நிலையில், அவனை தொடர்ந்து பராமரிப்பதில் உள்ள பல சிக்கல்களைக் கூறி, ஆகவே, ”தங்கள் மகனை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என ஒரு ஏழை பெற்றோர் விண்ணப்பித்தனர். வழக்கை விசாரிக்கும் முன், ”அந்த சிறுவன் குணமாக வாய்ப்புள்ளதா..?” என மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தரக் கேட்டார். அந்த அறிக்கையில் ”அந்த சிறுவனை ஒரு போதும் குணப்படுத்த முடியாது” என்றனர் மருத்துவர்கள்! அந்த அறிக்கையை பார்த்து கண்கலங்கிவிட்டார், கிருபாகரன். பிறகு அரசு அந்த ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது சிறு நிதி உதவி தர அரசு பரிசீலிக்கும்படி’ கூறினார்.

அவரே கூறியுள்ளது போல, விவகாரத்து கேட்டு வந்த சுமார் 1,000 தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளார்.

இவ்வாறாக தான் நீதிபதியாக பணியாற்றிய 12 ஆண்டுகள் அவர் மக்கள் நெஞ்சில் நீங்காத வகையில் இடம் பெறத்தக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவை அடுத்த தலைமுறையில் வரும் நீதித்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time