இது பயிர் காப்பீடு திட்டமா..? பகல் கொள்ளை திட்டமா..?

-சாவித்திரி கண்ணன்

எல்லா வகையிலும் தனியார் நிறுவனங்கள் நாட்டை கொள்ளைடித்துச் சுரண்ட கதவு திறக்க வேண்டும் என்ற பாஜக அரசு திட்டத்தின் ஒரு அங்கம் தான் பயிர்காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதாகும்! இந்த லட்சணத்தில் ‘இதற்கு பிரதம மந்திரி காப்பீடுதிட்டம்’ என்ற பெயர் வேறு!

சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் பயிர் காப்பீடு என்ற ஒன்று தேவைப்படாமல் தான் எவ்வளவோ சாதனைகள் நடந்துள்ளன! முதலாவதாக இந்த திட்டமே அவசியம் இல்லாதது. அப்படியே அவசியம் என்று கருதினால் லாப நோக்கமில்லாத வகையில் அந்தந்த மாநில அரசே இதை பொறுப்பு எடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு இதில் மூக்கை நுழைத்து தனியாருக்கு சேவை செய்ய துடிப்பானேன்?

”உங்க பயிருக்கு இன்ஸ்சூரன்ஸ் கட்டுங்க, இயற்கை இடர்பாடு ஏற்பட்டால் இழப்பீடு தருகிறோம்” என தனியார் நிறுவனங்களை வைத்து விவசாயிகளுக்கு தூண்டில் போட்டார்கள்! இந்த பயிர்காப்பீடு திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தலா 49% தருவதாகவும், விவசாயிகள் 2% தந்தால் போதுமானது என்றும் சொல்லப்பட்டது.

அதாவது, இரு அரசுகளுமாக 98% பணத்தை தந்துவிடும். விவசாயிகளிடமிருந்து 2% சதமான தொகையை மத்திய, மாநில அரசுகளின் வங்கிகள் கட்டாயப்படுத்தி வசூலித்துவிடும்! இப்படி வசூலிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்கள் தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு தரப்பட்டுவிடுமாம்!

விவசாயிகள் பாதிக்கப்படும் போது அதை, ‘என்ன பாதிப்பு? எந்த அளவுக்கு பாதிப்பு?’ என்பதை கூட மதிப்பீடு செய்வது மாநில அரசின் விவசாயத்துறை தான்! அதை மதிப்பீடு செய்யும் ஆள் வசதி கூட தனியார் நிறுவனங்களிடம் இல்லை. ஆனால், விவசாயிகளுக்கு பணத்தை விடுவிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுடையதாகும்! ஆனால், அவர்களோ, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 5% முதல் அதிகபட்சம் 20% மானவர்களுக்கு மட்டுமே பணம் தருவார்களாம்!

இது ஏதோ தமிழகம் மட்டும் சந்திக்கும் பிரச்சினை இல்லை. இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினை தான் இது!

உழைப்பும் அரசுனுடையது, பணமும் அரசு மற்றும் விவசாயிகளுடையது! அப்படி இருக்க, ஏன் இதில் தனியாரை நுழைக்க வேண்டும்? இந்தியா முழுக்க சுமார் 18 தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு சேவையின் அடிப்படையிலோ, தகுதியின் அடிப்படையிலோ இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெண்டர் விட்டு பணம் பெற்று இந்த பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் பயிர்க்கடன் என்ற பெயரில் விவசாயிகளிடம் பணம் பறித்து ஏமாற்றுவதற்கு லைசென்ஸ் கிடைத்ததாக நினைத்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டி வருகின்றனர்.

இதனால் குஜராத் மாநிலம், தனியார் காப்பீடு நிறுவனங்களே வேண்டாம் என்று சொல்லிவிட்டது!

இதனால், இந்தியா முழுக்க ஒவ்வொரு இடத்திலும் பணத்தை பறிகொடுத்த விவசாயிகள் போராடி வருகின்றனர். நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நடக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கூட 28 வழக்குகள் உள்ளன!

இந்தச் சூழலில் தனியார் நிறுவனங்களை பயிர் காப்பீடு திட்டத்தில் ஈடுபடுத்திய தன் அணுகுமுறையை மத்திய அரசு மறு பரிசீலனனை பண்ணி இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தன் பங்களிப்பை 49% லிருந்து 19% மாக குறைத்துவிட்டது.

இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்கைக் குறைத்துவிட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.  காப்பீட்டு கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருந்த காரணத்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் அதிக காப்பீட்டு கட்டண விகிதம் நிர்ணயம் செய்திருந்ததாலும் இந்த முறை தமிழகத்தில் இரு முறை ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டு மூன்றாவது ஒப்பந்தப் புள்ளியில் இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்) மற்றும் இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரை, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை ரூ.107.54 கோடி  1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு தமிழக அரசு “காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1248.92 கோடி விடுவித்துள்ளது.

மத்திய அரசு மாற்றியமைத்திருக்கும் காப்பீட்டுத்திட்டத்தின்படி, 2016-17-ம் ஆண்டில் 566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்குத் தொகை, 2020-21-ம் நிதி ஆண்டில் 1,918 கோடியாக உயர்ந்துள்ளது. அதனால்,  பயிர் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழக அரசுக்குச் சவாலாக உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் திட்டத்தின் நோக்கமே முடக்கப்பட்டுள்ளது.

இதனால், பயிர் இழப்பினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிற்கு “பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 2021-2022 ஆம் ஆண்டில் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். என சமீபத்திய வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது. உண்மையில் தமிழக அரசுக்கு இது ஒரு மிகப் பெரிய நிதிச் சுமையாகும்!

இந்த யதார்த்தங்களை புறந்தள்ளிவிட்டு பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசு விவசாயிகளை கைவிட்டுவிட்டது. அவர்கள் வயிற்றில் அடிக்கிறது! இது நம்பிக்கை துரோகம் என தமிழக பாஜகவினர் சொல்கிறார்கள்! மத்திய அரசு தன் பங்கை குறைத்தது பற்றி பாஜகவினர் வாய் திறப்பதில்லை.

எதற்காக இந்த குற்றச்சாட்டு என்றால், இந்த முறை நெல், தட்டைபயிறு போன்றவற்றுக்கு இன்ஸ்சூரன்ஸ் தவிர்க்கப்பட்டு, மற்ற பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காப்பீடு செய்யப்படும் என்று சொல்லியதால் தான்!

இன்னும் சொல்வதென்றால், பயிர் காப்பீடு என்கிற முறையே கூட இல்லாமல் பாதிப்புக்குத் தகுந்த இழப்பீட்டை ஊக்கத் தொகையாக அரசே நேரடியாக விவசாயிகளிடம் வழங்க வேண்டும்” என்றும் விவசாயிகள் சொல்கிறார்கள்!

இவ்வளவு அதிக பணத்தை செலவிடும் தமிழக அரசே பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்தி, விவசாயிகளிடம் ப்ரீமியம் பெறலாம். எல்லா ஆண்டுகளும்  இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதில்லை. இயற்கை இடர்பாடுகள் இல்லாதபட்சத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ப்ரீமியம் அரசுக்கு வருவாயாக அமையும். பேரிடர் ஏற்படும் போது மட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதிருக்கும். இத்திட்டத்தை தமிழக அரசு சேவை நோக்கத்துடன் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். ஆனால், தனியார் நிறுவனங்களை பயிர்காப்பீட்டிற்கு பகல் கொள்ளை அடிக்க அனுமதிக்கும் மத்திய அரசு, விவசாயிகள் நலன் காக்க மாநில அரசை அனுமதிக்குமா..? என்று தெரியவில்லை. அப்படி அனுமதிக்க மறுத்தால் அதை ஒரு மாபெரும் பிரச்சினையாக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time