இப்படியும் ஒரு மனிதன் இருக்கமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் உடுமலை செந்தில்!
கோவை உடுமலையை பூர்வீகமாகக் கொண்ட செந்திலுக்கு சிறுவயது முதலே நாட்டியத்தை தவிர வேறொன்றும் தெரியாது! அதிலும் கோயில்களில் ஆடுவதென்றால் அலாதி ஆர்வம்! உடுமலை பாகவதர்,முத்துசாமி பிள்ளை,கணபதி ஸ்தபதி அகியோரிடம் நாட்டிய சாஸ்த்திர மரபுகளை நன்கு கற்று உள்வாங்கிய செந்தில் அந்த நாட்டியக் கலையை, மரபின் தொடர்ச்சியான மக்கள் கலையாக வளர்த்தெடுப்பதில், நடைமுறைப் படுத்துவதில் பேரார்வம் கொண்டவராக உள்ளார்!
கடந்த முப்பதாண்டுகளாக நாட்டியமே மூச்சு என்று வாழும் செந்தில், நமது மரபில் கோவில்களில் சுவாமி நடை புறப்பாடுகளிலும், பிரதோஷங்களிலும் முற்காலத்தில் தேவதாசி மரபில் வந்தவர்களாலும்,அதற்கென்றே தங்கள் வாழ்வை ஒப்புவித்துக் கொண்டவர்களாலும் ஆடப்பட்ட நாட்டியக் கூறுகளை மீட்டெடுத்து தானே ஆடி வருகிறார்! நாட்டியக் கலை தொடர்பான ஆய்வுக்காக சிற்ப செந்நூல் உள்ளிட்ட சிற்ப நூல்களை படித்து தயாரானவர்!
ஆடற்கலையின் முதல்வன் சிவன்! தென் இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நாட்டிய மரபு உண்டு! அதற்கான சிலைகளும்,சின்னங்களும்,குறியீடுகளும் அந்தந்த கோயில்களிலேயே உண்டு! அந்த கோயில்களில் அவை பிரத்தியட்சமாக இல்லையென்றால்,அந்த கோயில் தொடர்பான பதிகங்களில்,புராணங்களில் உண்டு! அவற்றை தேடிக் கண்டடைந்து,அதன்படியான ஒரு நாட்டியத்தை அந்தந்த கோயில்களில் மீண்டும் ஆடுவதை ஒரு வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார்!
அந்த வகையில் செந்தில் இது வரை நாட்டியம் ஆடாத பிரதான கோயில்களே தென் இந்தியாவில் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் பிரதோஷம் தோறும், மழையென்றாலும்,புயல் என்றாலும்,கொரானா ஊரடங்கு என்றாலும் 19 ஆண்டுகளைக் கடந்து இருபதாவது ஆண்டாக பிரதோஷ நடனங்களை ஆடி வருகிறார்!
தஞ்சை பெரிய கோயில்,திருவாரூர் தியாகராஜர் கோயில்,திருத்துறை பூண்டி சிவன் கோயில்,திருவாவடுதுறை ஆதீனக் கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயில்,திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயில்,சீர்காழி சட்டநாதர் கோயில்,மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், குமரி குகநாதன் கோயில், சுசீந்திரம் தாணுமான ஐயன் கோயில்,காஞ்சி ஏகாம்பரேஷ்வரர் கோயில்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்,மயிலை கபாலீஸ்வரர் கோயில்,கேரளா மீன்கொளத்தி பகவதி கோயில்,எர்ணகுளம் ராமநாத் கோயில்,செகந்திராபாத் ஷீரடி சாய்பாபா கோயில்,திருப்பதி ஏழுமலையான் கோயில்…இப்படியாக இது வரை 479 கோயில்களில் பிரதோஷ நாட்டியம் ஆடியுள்ளார்.இன்று 480 தாவது பிரதோஷ தாண்டவத்தை ஒரு சாதாரண குக்கிராமத்தில் சிவலிங்கத்தின் முன்பு ஆடுகிறார்! இத்தனை ஆண்டுகளில் ஒரு பிரதோஷத்தைக் கூட இவர் தவறவிட்டதில்லை!
Also read
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் நாட்டியம் ஆடியதற்காக கோயில் நிர்வாகம் இவருக்கு பொற்கிழி வழங்கியுள்ளது! நவராத்திரி விழாக்கள்,கந்த சஷ்டிக் கவச விழாக்கள்..என எதிலும் எங்காவது செந்தில் நாட்டியம் ஆடிக் கொண்டிருப்பார்! இந்த நூற்றாண்டில் செந்தில் அளவுக்கு கோயில்களில் நாட்டியம் ஆடும் வாய்ப்பு பெற்ற இன்னொரு மனிதனைக் காணமுடியாது.அதற்கென்றே தெய்வம் இவரை படைத்துள்ளதோ..என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! தொடர்புக்கு; 9443720690
The great living dancer god bless you brother m.subramanianatoutloo.com