ஹால்மார்க் கட்டாயத்தால் சிறு நகை வியாபாரிகள் காலியாவர்!

தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் நல்ல முயற்சியாக தெரிந்தாலும், நடைமுறையில் படு சிக்கலான சட்டமே இது! ஹால்மார்க் முத்திரை இருப்பதாலேயே தரம் உறுதியாகிவிடாது! இதன் நடைமுறைபடுத்தும் வழிமுறைகளைப் பார்க்கும் போது சிறிய நகை வியாபாரிகளை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியா..? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்யலாம் அரசு?

உலகத்திலேயே அதிகமாக தங்க நகைகளை பயன்படுத்தும் நாடு இந்தியா! அதிலும் தமிழகம் முதலிடம்!

நகை தயாரிப்பாளர்களில் நேர்மையானவர்கள் மிகக் குறைவு! எத்தனை கேரட் தங்கம் என்பதில் தான் அதன் தரம் இருக்கிறது! அது என்ன தரம் என்பதை மதிப்பீடு செய்யும் தொழில் நுட்பம் மக்களுக்கு தெரியாது என்பதால் நகை வியாபாரிகளில் சிலர் ஏமாற்றிவிடுகிறார்கள் என்ற புகார் பரவலாக உண்டு! மிகப் பெரிய நகைக் கடைகளில் சொல்லப்படும் தரம் சரியாக இருக்கும். ஆனால்.செய்கூலி,சேதாரம் என்பதாக போட்டு தீட்டிவிடுவார்கள்! ஆகவே, எளிய , நடுத்தர பிரிவு மக்கள் பாரம்பரியமாக தாங்கள் நம்பி வாங்கும் சிறு வணிகர்களிடமோ, ஆசாரிகளிடமோ நேரடியாக வாங்கிவிடுவார்கள்! அதுவும் குறிப்பாக சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் உள்ள மக்கள் அந்தந்த ஊர் வணிகர்களிடமே வாங்குகிறார்கள்!

நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை உண்டு என்பது ஒரு மரியாதையாக பார்க்கப்பட்டது. விருப்பபடும் அல்லது வசதியுள்ள பெரிய நிறுவனங்கள் ஹால்மார்க் முத்திரை பெற்று விற்பார்கள்! ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு உள்ளது!

இந்தியாவில் தங்கத்தில் நடக்கும் கடத்தல்கள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க ஹால்மார்க்கை கட்டாயமாக்க வேண்டும் என்று Bureau of Indian standedrs (BSI) பல ஆண்டுகளாக அழுத்தம் தந்து வந்தது. அதன்படி இந்தியாவில் இனி அனைத்து நகைக் கடைகளும் தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் ஹால்மார்க் முத்திரை பெற்றுத் தான் விற்பனை செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 16 முதல் அமல்படுத்த ஆரம்பித்துவிட்டது ஒன்றிய அரசு!

ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை ஏன் வியாபாரிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு அவர்கள் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள்;

”ஹால்மார்க் முத்திரை வாங்க மறுக்கவில்லை. ஆனால்,முத்திரையோடு அந்தந்த கடைக்குரிய எச்.யு.ஐ.டி எண்ணையும் சேர்த்து நகையில் பதிக்க வேண்டும் என்பது தான் சிக்கல்! இப்படி ஒவ்வொரு நகையிலும் இதை போட்டு கொடுக்க 9 முதல் 12 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்! இந்த காலகட்டம் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை வாங்கி அரசிடம் தர வேண்டும் என்பது சரியானதல்ல, அவர்களின் பிரைவேசியில் நாங்கள் தலையிட முடியாது .எனவே, ஹால்மார்க் போடுவதுடன் இந்த நடைமுறையை முடித்து தர வேண்டும்” என்கிறார்கள்!

தரமான நகைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அரசு நினைத்து எடுக்கும் ஒரு நடவடிக்கையை நாம் குறைகூற விரும்பவில்லை. ஆனால், அரசின் நோக்கம் தற்போதைய ஏற்பாடுகளில் நிறைவேறுகிறதா..? என்றால், நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகும்.

ஹால்மார்க் முத்திரை என்பது அரசால் தரப்படுவதல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களே அதை தருகின்றன. இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நிறைய முதலீடு தேவை! அந்த முதலீட்டுக்கு தக்க லாபத்தையே தனியார் நிறுவனங்கள் எதிர்பார்பார்கள். இது இயற்கையும் கூட! இந்தியாவில் நகை வியாபாரத்தை மிகச் சிறு வியாபாரமாக செய்பவர்களே அதிகம்! ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்ட் மதிப்பீடு வாங்க கூடுதல் பணம் செலவாகிறது. அந்த செலவு வாடிக்கையாளர்களிடமே வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு நகர்வுக்கும் ஜி.எஸ்.டி, வருமான வரி ஆகியவை கட்ட வேண்டும். இதெல்லாம் கூடுதல் சுமைகள்!

அதனால் தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் கூட இந்தியாவில் உள்ள சுமார் ஆறு லட்சம் நகைக் கடைகளில் இது வரை 91,603 கடைகளே ஹால்மார்ட் வரம்பிற்குள் வந்துள்ளார்கள்! இவ்வளவு கடைகளின் நகைகளையும் சோதித்து முத்திரையிட்டுத் தர இந்தியாவில் எட்டு நூற்று சொச்சம் ஹால்மார்க் மையங்களே உள்ளன. தமிழகத்தில் 35,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றின் நகைகளை சோதித்து தர 104 ஹால்மார்ட் மையங்களே உள்ளன!அதனால், ஹால்மார்க் மையங்களில் பல லட்சம் நகைகள் தேங்கியுள்ளன! இது தொழிலை முடங்க செய்யும் ஒரு நடவடிக்கையாக உள்ளது.

பெரிய கடைகள் தங்கள் செல்வாக்கில் ‘லாபி’ செய்து ஒரளவு சீக்கிரமாக ஹால்மார்ட் முத்திரை வாங்க வாய்ப்புண்டு. ஆனால், சிறிய கடைகளுக்கு அரசு சொல்லும் அத்தனை பார்மாலிட்டியையும் நிறைவேற்றுவது என்பது இயலாத ஒன்றாகும். அதுவும் கம்யூட்டர் வைத்து ஐந்து வருட கணக்கு,வழக்குகளை பராமரிக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல! இந்த தொலில் ரிலையன்ஸ், டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் ஊன்ற தொடங்கிய பிறகே  இது போன்ற நெருக்கடிகள் உருவாக்கப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்!

ஆகவே சிறிய கடைக்கார்கள் காலப் போக்கில் இந்த தொழிலில் இருந்தே காணாமல் போகும் நிலையைத் தான் இந்த சட்டம் ஏற்படுத்துகிறது. அதனால் தான் இன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து சிறு நகை வியாபாரிகளும் இதில் தீவிரமாக பங்கேற்று கடைகளை அடைத்து வீதியில் இறங்கி போராடி உள்ளனர். சென்னையைக் காட்டிலும் மதுரை, கோவை, ராசிபுரம், கும்பகோணம், விருதுநகர், பெரம்பலூர், திண்டிவனம், திண்டுக்கல், தேனீ, சங்கரன் கோவில், கடலூர்…என அனைத்து சிறு ஊர்களிலும் சிறிய நகை வியாபாரிகள் சீரியசாக போராடி உள்ளனர். தற்போது இதில் உள்ள  மற்றொரு பிரச்சினை 14,18,22 ஆகிய கேரட் தங்கங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாகும்!

உண்மையில் என்ன நடக்கிறது என்றால், ஒவ்வொரு நகையையும் ஹால்மார்ட் மையங்கள் தனித்தனியாக சோதனை செய்வதில்லை. உதாரணமாக ஒரு கடையில் 22 கேரட் நகைகள் சுமார் 300 எண்ணிக்கையில் தரப்பட்டு இருக்கிறது என்றால், அதை பொதுவாக மொத்தமாக எக்ஸ்.ஆர்.எப் மெஷினில் போட்டு பார்ப்பார்கள்! அடுத்ததாக ரேண்டமாக ஒரிரு நகைகளை அந்த தொகுப்பில் இருந்து எடுத்து உரைகல்லில் உரசிப் பார்த்து, அதன் பல பாகங்களையும் சுரண்டி ஆஸிட் டெஸ்ட் செய்து முடிவெடுத்துவிட்டால், அந்த தொகுப்பில் உள்ள அனைத்துக்குமே 22 கேரட் என்று தான் முத்திரை குத்துவார்கள்!

இதில் தவறு நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு வேளை வாங்கிய நகை தரம் இல்லை என்று தெரிய வந்தால், அந்தக் கடைக்காரர் தான் அதற்கு பொறுப்பாவார். அதற்கான அபராதமோ, சிறை தண்டனையோ அவர் அனுபவிக்க வேண்டும். ஹால்மார்ட் தங்கம் தான் என முத்திரை தந்த நிறுவனத்திற்கு பாதிப்பு இல்லை. மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்பி வாங்கும் வாடிக்கையாளர் விழிப்புணர்வுடன் இல்லை என்றால், வாடிக்கையாளர் தான் பாதிக்கப்படுவார்! ஹால்மார்க் முத்திரையால் குற்றம் குறைய வாய்ப்புண்டு என அரசு நம்புகிறது.அதற்காக நகை வாங்குபவர்களின் தனிப்பட்ட விபரங்களை அரசு சேகரிக்க கேட்பது நியாயமல்ல. இத்தனை லட்சங்களுக்கு மேல் நகை வாங்குபவர் குறித்த தகவல்கள் அவசியம் என்றால் கூட ஏற்கலாம். ஆனால், ஒவ்வொரு சிறு நகை வாங்குபவர் குறித்த தகவல்களை கேட்பது முறையல்ல. கடத்தல் தங்கத்தை கண்டுபிடிக்க சிறு வாடிக்கையாளர்களுக்கு சிரமம் தரக் கூடாது!

ஹால்மார்க் என்பது ஒரு பொதுவான பாதுகாப்பு அவ்வளவே! ஏமாற்றுகிறவர்களையோ, ஏமாறுபவர்களையோ இது பெரிதாக குறைத்துவிடாது. ஆனால், சிறு நகை வியாபாரிகளை கண்டிப்பாக குறைத்துவிடும். இதனால் பலர் தொழில் இழந்து நடுவீதிக்கு வருவார்கள். எந்த வகையில் பார்த்தாலும் இது நல்லதல்ல! ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிப்பதே! அதிலும், எளிய மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே! ஆகவே, ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்காமல் விட்டுவிட்டு, ஹால்மார்க் கடைகள், ஹால்மார்க் இல்லாத கடைகள் என இருவிதமாக செயல்பட அனுமதிக்கலாம்! எந்தக் கடையில் வாங்குவது என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

இல்லையென்றால், காலப் போக்கில் திமிங்கலங்களே இந்த நகைத் தொழிலில் கோலோச்சும் நிலையை ஏற்படுத்திவிடும். அதைத் தான் பாஜக அரசு விரும்புகிறதோ என்னவோ…?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்-

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time