இருபதாண்டு கால அந்நியர் ஆக்கிரமிப்பு! ஆட்சியாளர்களின் அதி மோசமான முறைகேடுகள்! அமெரிக்க ஆதரவுள்ள படித்த மேல்தட்டுவர்க்கத்தின் ஆடம்பரமான, ஊதாரித்தனமான வாழ்க்கை.. போன்றவற்றை பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களில் சிலர், ‘கொள்கை வெறியுடன் மலைமுடுக்குகளில் மறைந்திருந்து உயிர் கொடுத்து போராடிய தாலிபான்கள் வந்தால் வரட்டுமே’ என்று நினைத்தது உண்மைதான்! ஆனால், தற்போது பெண்களை ஒடுக்க துடித்த தாலிபான்களை எதிர்க்க துணிந்துவிட்டனர் பெண்கள்!
சட்டம் ஒழுங்கு எதுவுமில்லை; கேள்வி கேட்க முடியாது; தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! யார் உயிருக்கும் உத்திரவாதமில்லை. யார் வீட்டுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் கொண்ட தாலிபான்கள்! அரசு அலுவலங்கள் எதுவும் செயல்படவில்லை. இப்படி ஒரு தேசம் இருக்குமானால் அது எப்படி இருக்கும்..?’’ அது ஆப்கானிஸ்தான் போலவே இருக்கும் என்பதுதான் பதில்.!
பெண்கள் காய்கறி கடைக்கு போய் கால் கிலோ கத்தரிக்காய், வெண்டைக்காய் கொடுங்கள் என்று கேட்டு வாங்குகிற மாதிரி AK 47 கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரலாம்! தெருவுக்கு தெரு சாக்லேட் ஐஸ்கிரீம் இருக்கிற மாதிரி ஏகே47 விற்கும்! உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையா ? சட்டென சுட்டு போட்டுவிடலாம். இதுதான் அந்த நாள் ஆப்கானிஸ்தான். 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆண்டனர். உலகத்திலேயே மோசமான ஒரு அரசாங்கம் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அரசாங்கத்தை அவர்கள் நடத்தினர்.பெண்களை மோசமாக நடத்தினர். எவரும் அரசாங்கத்தை எதிர்த்து எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அடுத்த நிமிடம் அவர்கள் கதை முடிக்கப்படும்.
நகராட்சி குப்பை வண்டியில் குப்பைகளை அள்ளுகிற மாதிரி தெருக்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட பிணங்களை கழிவு வண்டிகளில் அள்ளித் தூக்கிக் கொண்டு போய்ப் போடுவார்கள். செத்தது யார் என்கிற எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.. இது இவர்களுடைய பழைய கதை. இப்போது இவர்கள் மீண்டும் 20 ஆண்டுகள் கடந்து ஆப்கானிஸ்தானத்தை மீண்டும் ஆள வந்திருக்கிறார்கள். அதாவது, துப்பாக்கி முனையில் தான் மறுபடியும் ஆள வந்திருக்கிறார்கள். தனது ராணுவ பலத்தால் கையகப்படுத்தி கடந்த 20 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கு ஒரு ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்!’ ஆகிவிட்டது. இனிமேல் தனக்குக் கட்டுபடியாகாது. செலவு அதிகமாகிறது என்று உணர்ந்த அமெரிக்கா அங்கிருந்து வெளியேற முடிவு செய்தது. அமெரிக்காவின் ஆதரவு அதிபர் தன்னால் முடிந்த அளவுக்கு ஹெலிகாப்டரிலும், விமானங்களிலும் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.
இப்போது தலைமை இல்லாத ஆப்கானிஸ்தானாக அந்த நாடு நிற்கிறது. இவர்கள் கடந்த காலங்களில் பிற கருத்துக்களை, மாற்றுச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஜனநாயகத்தை ஜீரணிக்க முடியாத அஜீரணக் கோளாறு மிக்கவர்கள். மலைப்பகுதியில் மிக உயரமாக வானளாவ ஓங்கி வடிக்கப்பட்டு இருந்த புத்தர் சிலையை அடித்து நொறுக்கியவர்கள். இவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஒரு சமூகப் போராளி அப்துல் அலி மசாரி! மக்களிடம் செல்வாக்குப் பெற்ற மரியாதைக்குரிய சமூக சிந்தனையாளரான அந்தச் சமூக போராளியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் தலிபான்கள். அவரும் இவர்களை நம்பி இவர்களோடு சமரசப் பேச்சுவார்த்தைக்கு வந்தார்.சமரசப் பேச்சு பேச வந்தவரை அங்கேயே சமாதியாக்கிவிட்டனர். 1995 ல் இந்த சம்பவம் நடந்தது.
அமெரிக்க ஆட்சி நடந்த போது அந்தப் பகுதி மக்கள் அப்துல் அலி மசாரி நினைவாக வானளாவ ஒரு சிலையை நிறுவி வைத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அவரது நினைவு நாள் வெகு எழுச்சியுடன் நடத்தப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட அப்துல் அலி மசாரியின் சிலையை தற்போது தலிபான்கள் உடைத்து விட்டனர். இதுதான் இவர்கள் மாறிவிட்ட லட்சணம். நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம்; கொஞ்சமும் மாறவில்லை; சிறுத்தைகளின் புள்ளிகளை மாற்றிவிட முடியாது… என்று மீண்டும் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்கள் தலிபான்கள்.
மூன்று மாவட்டங்களில் உள்ளூர் எதிர்ப்புப் போராளிகள்( local resistance force) என்னும் தலைப்பில் முகமது என்பவரின் தலைமையில் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் சில தலிபான் தலைவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். எந்த ஒரு அரசாங்கமும் உள்நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் இயங்க முடியாது; செயல்பட முடியாது என்பது வரலாறு. உண் நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதற்கு நெகிழ்வுடன் கூடிய ஜனநாயக அணுமுறை தான் ஒரே வழிமுறையாகும்!
சில நாட்களுக்குள்ளாகவே தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் எதிர்ப்பு வலுத்திருக்கிறது ! தாலிபான்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த உடனேயே ஆப்கானிஸ்தானத்தின் தலைமை ரிசர்வ் வங்கியின் தலைவர் ஓட்டம் பிடித்து விட்டார். ஆப்கானிஸ்தான் பேங்க் என்று வழங்கப்படும் அந்த நாட்டின் தலைமை வங்கியின் தலைவரே இனி உயிருக்கு பாதுகாப்பில்லை; இனி அமைதி நிலவாது என்பதைக் கணித்து வெளியேறி விட்டார்.
மக்கள் வங்கிகளில் இருந்த தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர். அகதிகளின் கூட்டம் மந்தை மந்தையாக பாகிஸ்தான் எல்லையில் வந்து எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள். இப்போது பாகிஸ்தானுக்கு இது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. அகதிகளாக வரும் மக்களுக்கு நடுவில் புகுந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தானுக்குள் வந்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவம் தனது சோதனையைக் கடுமையாக்கி இருக்கிறது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எவ்வளவு அகதிகளை வைத்துப் பாதுகாக்க முடியும்..?
மக்கள் வறுமையின் பிடியில் இருக்கின்றனர்..ஏழ்மை தாண்டவம் ஆடுகிறது. ஒரு டாலர் இரண்டு டாலர் கூட கையில் இல்லாமல் மக்கள் வயிற்றுச் சோற்றுக்கு அல்லாடுகிறார்கள். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நாடு ஆப்கானிஸ்தான். உணவுப் பயிர்கள் மட்டுமல்ல, உலகத்தின் ஹெராயின் உற்பத்தியின் 70 விழுக்காடு ஆப்கானிஸ்தானத்தில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. வயல்களில் அபின் விளைகிறது. உலகத்தின் மொத்த போதைப் பொருளில் பெரும்பான்மையான விழுக்காடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுகிறது.
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து இரண்டு டாக்டர் பட்டம் படித்து முடித்த ஒருபெண் தன் சான்றிதழை வாங்க முடியாமல் தவிக்கிறார். அவர் புலம்பி அழும் பேட்டி வீடியோக்களில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி ஏராளமான பெண்கள் “இனிமேல் தங்கள் கல்வியும் வாழ்வும் எதிர்காலமும் பாதிக்கப்படும்…” என்று ஆவேசத்தோடு பேசுகின்றனர்.
ஒரு யதார்த்தை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இருபதாண்டுகால அமெரிக்க அரவணைப்பில் ஆப்கான் பெண்கள் கல்வி கற்று, அறிவில் மேலோங்கி, தங்களின் சுயம் உணர்ந்து வளர்ந்துள்ளார்கள்! அவர்கள் உலக நாகரீகப் போக்கை உள்வாங்கி விட்டனர்! ஆணுக்கு பெண் அடிமை இல்லை என உறுதியாக நம்புகின்றனர். அவர்களை ஒரு போதும் தாலிபான்களால் வீட்டுக்குள் முடக்கிவிட முடியாது!
உள்ளூர் மக்கள் இவர்களை நம்புவதாக இல்லை. நாட்டுக்குள் வந்துவிட்ட தலிபான்களை எதிர்த்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் கடுமையாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வீதிகளில் வந்து முழக்கமிட தொடங்கி இருக்கின்றனர். அலுவலகம் சென்று வந்த பெண்கள் மாத்திரமல்ல, அடுப்படியில் இருந்த பெண்களும் தற்போது வெளியே வந்து தாலிபான்களுக்கு எதிராக ஆயதம் தூக்க தயாராகிவிட்டனர் என்பது தான் நிலைமை!
இந்த பெண்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முன்றால், உலகம் அதை வேடிக்கை பார்க்காது! அதற்கு எதிராக அமெரிக்கா மட்டுமல்ல, அகில உலகமே பெண்களுக்கு ஆதரவாக – தாலிபான்களுக்கு – எதிராக பொங்கி எழக்கூடும்!
இந்திய பல ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி ஆப்கானிஸ்தானத்தில் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தது. அங்கே கிரிக்கெட் மைதானம் , ஏராளமான அணைகள்- சாலைகள்- மருத்துவமனைகள்- என்று வசதிகளை செய்து கொடுத்துள்ளது இந்தியா. அப்படிப்பட்ட இந்தியாவின் தூதரகத்தை நேற்று முன்தினம் அடித்து நொறுக்கி அங்கே இருக்கும் கோப்புகளை எல்லாம் ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி சேதப்படுத்தி இருக்கின்றனர் தலிபான்கள். இதுதான் இவர்களது உண்மையான முகம்.
இவர்கள் திருந்தவில்லை என்று உலக நாடுகள் மெல்ல உணர்ந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகள் இன்னும் தங்கள் கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றாலும், இவர்களை அங்கீகரிக்க மாட்டார்கள். நாடெங்கும் தலிபான்கள் தங்களுடைய கொடியை ஏற்றி வைத்துக் கொண்டே வந்தனர். உள்ளூர் மக்கள் வெளியில் வந்து அவற்றை மிக தைரியமாக இறக்கிவிட்டு, தங்களுடைய ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றுகின்றனர். அப்படி ஏற்ற முயன்ற மக்கள் சிலரை தாலிபான்கள் சுட்டுக் கொள்கின்றனர். துப்பாக்கி முனையில் தலிபான்கள் எத்தனை நாள் தான் தேசத்தை ஆட்டி வைக்க முடியும்? இவர்கள் ஒரு ஜனநாயக ஆட்சியை எப்படித் தந்துவிடுவார்கள்..? அமெரிக்க அதிபரும் “தாலிபான்கள் அத்துமீறினால், நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் ..” என்று எச்சரித்திருக்கிறார்.
தலிபான் தளபதிகள் சீன அதிபரை சந்தித்துப் பேசி இருக்கின்றனர். சீனா இவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம்.. ஓய்கூர் முஸ்லீம்கள் எனப்படும் ஒரு பிரிவினர் மத உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்படுவதால் நீண்ட காலமாக தனி நாடு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது சீன அரசாங்கம். அவர்கள் சீனாவில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாது. அவர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலையில் ஒய்கூர் முஸ்லீம் களுக்கு ஆதரவாக தலிபான்கள் திரும்பி விடுவார்களோ என்னும் அச்சத்தில் தற்போது தலிபான்களைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ள சீன அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், தாலிபான்களுக்கும், சீனாவுக்குமான உறவு நீடிக்க வாய்ப்பில்லை.
அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சையத் சலாஹுதீன் பாகிஸ்தானில் பகிரங்கமாக உலவிக் கொண்டிருக்கிறார். அந்தத் தீவிரவாதியின் தலைக்கு பல ஆயிரம் கோடிகளை விலை வைத்திருக்கிறது அமெரிக்கா. அப்படிப்பட்ட சலாஹுதீன் நேற்றுமுன்தினம் “பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான்களை ஆதரித்து இந்தியாவுக்கு எதிராக காஷ்மீருக்குள் இறக்கி விட வேண்டும்..” என்று சொல்லி இருக்கிறார்.
Also read
உலகத்தின் பயங்கரவாதிகளாகக் கருதப்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இவையெல்லாம் எங்கே போய் முடியும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஆழ்ந்து சிந்திக்க, சிந்திக்க நெஞ்சம் நடுங்குகிறது. தெய்வம்தான் துணை செய்யவேண்டும். பிரார்த்திப்போம். இந்தியர்கள் அனைவரும் நமது தேசத்தின் நலனை முன்னிறுத்தி இந்தியாவுக்கு எது நன்மை எது தீமை என்கிற கண்ணோட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் பிரச்சினையை அணுக வேண்டும். இது மிக முக்கியமான காலகட்டம். எல்லோரும் பொறுமை காத்து நிலைமையைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருப்பது அறிவுடைமை.
கட்டுரையாளர்;
திரு.வீரபாண்டியன்,
சன் தொலைகாட்சியின் முன்னாள் நெறியாளர்,
அரசியல் விமர்சகர்,
‘ஆகட்டும் பார்க்கலாம்’ நூலின் ஆசிரியர்.
ஹமாஸ் தீவிரவாதிகளா. அப்படியெனில் அம்மக்களை அகதிகளாக்கி கொன்றுகுவிக்கும் அநியாயக்கார இஸ்ரேலுக்கு என்ன பேர். நேற்றுவரை அமெரிக்கா ஆண்டது இன்று நடக்கும் பிரச்சினைகளுக்கு யார்காரணம்.நாகரிக இந்தியாவில் குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது தாக்குல் நடத்தியவர்களைகாப்பாற்ற நீதிபதியையே மாற்றியவர்கள் ஆளும் தேசத்தில் வாழும் கட்டுரையாளர் யாரை திருப்திப்படுத்த வரைந்த ஓவியம் இந்த கட்டுரை.