பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் பாஜக!

-சாவித்திரி கண்ணன்

அதீத பணபலம், அதிகார பலம் தரும் தைரியத்தில் பாஜகவினர் அளப்பரிய குற்றங்களை அஞ்சாமல் செய்யும் துணிச்சல் பெற்றுவிடுகின்றனர். பாஜகவில் பாலியல் எக்ஸ்பிளாய்டேசன் அதிகமாக நடப்பது தொடர் செய்தியாக இருந்தன! பெண்கள் பாதுகாப்பாகவோ, கண்ணியமாகவோ இயங்க முடியாது என்றால் அது என்ன கட்சி? அது என்னவிதமான கலாச்சாரம்..? இது ஏதோ கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, பாஜகவில் பெண்கள் நிலை குறித்த வெளிப்படையான விசாரணை கோரும் ஒரு விவகாரமாகும்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியே கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்திலேயே ஒரு விசாகா கமிட்டி அமைக்க வேண்டிய அளவுக்கு தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன…! சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று கட்சியின் உள் அரங்கில் ஒரு முறை பேசினார். அதாவது கமலாலயம் காமாலயமாக மாறிவருகிறது என்பதை பகிரங்கமாகவே எச்சரித்தார்!

ஆனால், அந்த குற்ற்ச்சாட்டில் அன்று அதிகமாக தொடர்பிருப்பதாக சொல்லப்பட்ட எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி தான் தரப்பட்டது. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு தகுதியாக தன்னை முன்மாதிரியாக காட்டும் தலைமை அங்கு இல்லையோ என்னவோ..?

கே டி ராகவன் தொடர்பான வீடியோ பதிவுக்கு ஆராய்ச்சி எதுவும் அவசியமில்லை. அது பட்டவர்த்தனமான உண்மை! எந்த ஒரு மானஸ்த்தனாக இருந்தாலும் இந்த நேரம் இது வெளியானதையடுத்து நாண்டுகிட்டு செத்திருப்பான். ஆனால், எவ்வளவு தைரியமாக விளக்கம் அளித்து, தன்னை இன்னும் உத்தனமனாக காட்டிக் கொள்கிறார் பாருங்கள். அந்தக் கட்சியும் விசாரணை என்று வைத்து இதை ஊத்தி மூடப் பார்க்கிறதேயன்றி, உண்மை சுடவில்லை அவர்களுக்கு!

திமுகவில் நடிகர் ராதாரவி இருந்த போது, நடிகை நயன்தாராவைப் பற்றி வரம்பு மீறி பொது நிகழ்வில் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. உடனே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டவரை உடனே தன் கட்சியில் இணைத்துக் கொண்டது பாஜக!

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் டபுள்யூ.ஆர்.வரதராஜன் என்ற செயல்திறனுள்ள, வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட தலைவர் மீது பத்தாண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. அதை அவர் உறுதிபட மறுத்த போதும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுத்தன! மார்க்சிஸ்ட் கட்சி ஒரு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால், நிருபணமாகவில்லை. எனினும், குற்றச்சாட்டினால் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்ப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டார்! ”.., எப்பேர்ப்பட்ட மானஸ்தன்” என்று அவர் இன்றும் நினைவு கூறப்படுகிறார்.

ஆனால், இது மிக பட்டவர்த்தனமாக வீடியோவில் அம்பலமான நிலையில் எந்த சிறு அவமான உணர்வுக்கும் ஆளாகாமல், குற்ற உணர்வே இல்லாமல் கே.டி.ராகவன் பேசுவது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. என்னா மாதிரி அம்பலப்பட்டு இருக்கிறோம் எனக் கூனி குறுகி இருக்க வேண்டாமா..? அட, குறைந்தபட்சம் உன்னை நீயே தனிமைப்படுத்திக் கொண்டு அமைதி காத்திருக்கலாமே! இன்னும் ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பொதுவாக காதலிலோ,காமத்திலோ ஈடுபடும் ஒருவன் சம்பந்தப்பட்ட எதிர்பாலரிடம் பேசும்போது, தன் ஈகோவையும், ஆணவத்தையும் முற்றிலும் தொலைத்துவிடுவதே இயல்பு. ஆனால், அந்த காம உணர்வு வெளிப்படும் நேரத்திலும் முகத்தில் அதிகாரத்தையும், ஆணவத்தையும் படரவிட்டவனாக – அதாவது தொலைகாட்சி விவாதங்களில் காட்டும் அதே திமிர் நிறைந்த முகபாவத்துடன் வெளிப்படுகிறார் கே.டி.ராகவன்…! எந்த அளவுக்கு ரத்ததிலும், சித்தத்திலும் ஆணவ குணம் நிரம்பி இருந்தால் இப்படி இருக்க முடியும் என்று வியப்படையாமல் இருக்க முடியவில்லை!

எல்லாம் அவரது அரசியல் குருவின் வளர்ப்பு அப்படி! இதே போன்ற குற்றச்சாட்டுகள் கே.டிராகவனின் அரசியல் குருவான இல.கணேசன் மீது கடுமையாக எழுந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. கே.டி.ராகவன் பொதுச் செயலாளர் பதவியை ராஜினா செய்தாராம்! அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டாமா..? இதில் இருந்தே கே.டி.ராகவனை பாஜக பாதுகாக்கிறது என்பது உறுதிப்படுகிறதே! ஏனென்றால், கே.டி.ராகவனுக்கு இருக்கும் அகில இந்திய அரசியல் லாபி அவ்வளவு பலமானது, வலுவானது! இன்னும் சில வருடங்கள் கழித்து கே.டி.ராகவனுக்கும் ஒரு கவர்னர் பதவி கொடுக்கப்படலாம். அதை தமிழ் இந்து போன்ற பத்திரிகைகள் இன்று இல.கணேசன் கவர்னராக்கப்பட்டத்தை கொண்டாடியது போல முதல் பக்க பிரம்மாண்ட செய்தியாகவும், தலையங்கமும் எழுதி குதூகலிக்கலாம்!

நாம் வேண்டுவது எல்லாம் பாஜக கட்சியில் இருக்கும் பெண்கள் பகிரங்கமாக இதை விவாதிக்க வேண்டும். காய்த்திரி ரகுராம் போன்றவர்கள் பூசி மெழுகி எழுதக் கூடாது. நீங்கள் நாட்டுக்கோ, மக்களுக்கோ பாடுபடுவதாக சொல்வது இருக்கட்டும்.முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் பெண் குலத்திற்காக பேசுங்கள்! எவ்வளவு தெனாவட்டு இருந்தால் கே.டி.ராகவன் இப்படியெல்லாம் தன்னை உத்தமனாக காட்டி எழுத முடியும்?

இந்த லட்சணத்தில் இதை ஏதோ அரசியலில் இருக்கும் பிராமணர்களுக்கு எதிராக நடத்தபடும் சதியாக அக்கட்சியினர் பலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள்! இது போலத் தான் பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் இருந்து எழுந்த போது, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட பலரே, ”அது பிராமண சமூகத்திற்கு எதிரான சதி” என்றனர். இப்படியான பாலியல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவை சந்திக்க மறுத்து அவர்களை சாதிய போர்வைக்குள் நுழைத்து வைத்து காப்பாற்றும் போக்கை பிராமண சமூகத்தில் சிலர் மேற்கொள்கிறார்கள்! இது மிகக் கேவலமான அணுகுமுறையாகும்!

எல்லா அரசியல் கட்சிகளிலும் ஆணாதிக்கமுள்ளவர்கள், பாலியல் பலவீனமுள்ளவர்கள் உள்ளனர். ஆனால், ”எங்கள் கட்சி மாறுபட்ட கட்சி, நாங்கள் சுத்த சுயம்பிரகாசமானவர்கள், ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பேர் போன ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர்கள்..”  என்று சொல்லிக் கொண்டு பாஜக படுகேவலமாக பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்டிருப்பது தான் கொடுமை!

இந்த வீடியோவை பொதுவில் வெளியிடும் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து போட்டு காட்டியதாக மதன் ரவிச்சந்திரன்  சொல்கிறார். 30 வருட ஆர்.எஸ்.எஸ் காரனாகவும், இல.கணேசன் தொடங்கி மோடி வரை செல்வாக்கு பெற்றவருமான கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன் சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால், அண்ணாமலை செய்வதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி உள்ளார்.

எல்லாம் அம்பலப்படுத்தப்பட்ட நிலையிலும் கூட, அண்ணாமலையால் சிறிதளவு கூட கடுமையை வெளிப்படுத்த முடியவில்லை. ராகவனை பாதுகாக்கும் தோரணையில் தான் பேசுகிறார். மதன் பாஜகவினரால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பேசியுள்ள நிலையில் பாஜக வன்முறையை ஆதரிக்காது என்று தானே அண்ணாமலை சொல்லி இருக்க வேண்டும்..? ஆனால், அவருக்கு எது நேர்ந்தாலும் அதற்கு எப்படி பாஜக பொறுப்பாக முடியும் என கேட்டுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time