புதுப்புது மாநகராட்சிகளும், நகராட்சிகளும் வளர்ச்சியா..?

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவிலேயே நகரமயமாதல் மிக அதிகமாக நடப்பது தமிழகத்தில் தான்! விவசாய நிலங்களெல்லாம் வேக,வேகமாக விழுங்கப்பட்டு புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே உள்ளன! இதன் உள்ளார்ந்த நோக்கம் வளர்ச்சியா..? இதன் பின்னணி என்ன..? விளைவுகள் என்ன..?

”எங்க ஊரும் மாநகராட்சி ஆகிவிட்டது” என்பது மக்களில் சிலருக்கு மகிழ்வைத் தரலாம்! ஆகா, இனி பெரிய சாலை வசதிகள் செய்து தரப்படும், போக்குவரத்து வசதிகள் மேம்படும்! பெரிய,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள் தோன்றும், தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் அதிகமாகும்..! என்றெல்லாம் யோசிக்க தோன்றும்.

இது மட்டுமல்ல, சிற்றூர்களின் இயல்பான வாழ்க்கை சீர்குலையும், சிறு தொழில்கள் நசிந்து காணாமலடிக்கப்படும். விளை நிலங்களெல்லாம் விலை பேசப்பட்டு கான்கிரிட் கட்டிடங்கள் எழும்பும். ஏரி, குளங்கள் எல்லாம் மண் மேடிட்டு மூடப்பட்டு, ரியல் எஸ்டேட்டில் விற்பனையாகும்! விவசாயம் கைவிடப்படும்! இயற்கை அதன் இயல்பை இழக்கும். கட்டிடங்கள் மேன்மேலும் கட்டுவதற்கு ஆற்றுமணல் அள்ளப்பட்டு ‘ஸ்வாகா’ ஆகும்! நகர்மயமாக்கம் அதிகமாகும் இடங்களில் எல்லாம் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும்! ஏனென்றால், தார் சாலைகளும் ,சிமெண்ட் சாலைகளும், கான்கிரீட் கட்டிடங்களும் பெய்யும் மழை நீரை நிலத்திற்குள் விடாமல் தடுத்துவிடும்!

நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு பெயர் வளர்ச்சியா..?

இதனால் நாம் உணர வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு சிறு நகரங்களும் மாநகராட்சியாய் மாற்றம் காண்பது மாபெரும் பேரழிவின் தொடக்கம்! ஒவ்வொரு பேரூராட்சியும் நகராட்சியாக மாறுவது என்பது நரகத்திற்கு நகர்வதன் தொடக்கமாகும்!

இந்தியாவிலேயே முதன்முதல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட முதல் முனிசிபல் கார்ப்பரேசனாக 1687ல் உருவானது மதராஸ். இதற்கு சுமார் நாற்பதாண்டுகளுக்கு பிறகு உருவாயின கல்கத்தா, மும்மை,டெல்லி போன்ற நகரங்கள்! 1941 வரை இந்தியாவில் இவை நான்கு மட்டுமே மாபெரும் நகரங்கள்!

அவ்வளவு ஏன் நமது தமிழகம் என்று எடுத்துக் கொண்டால் கூட 1970 வரை சென்னை மட்டுமே மாநகராட்சி! அதன் பிறகு மதுரை-1971 லிலும், கோவை 1981 லிலும், மாநகராட்சியாயின!

1994 ல் திருச்சி, சேலம், திருநெல்வேலி மாநகராட்சிகளாயின!

2008 ல் ஈரோடு,திருப்பூர், தூத்துகுடி,வேலூர் மாநகராட்சிகளாயின!

2014 ல் தஞ்சாவூர், திண்டுக்கல் மா நகராட்சிகளாயின!

2019 ல் நாகர்கோவில்,ஆவடி, ஓசூர் ஆகியவை மாநகராட்சிகளாயின!

தற்போதோ தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி தமிழ் நாட்டில் 21 மாநகராட்சிகள் !

இந்த அறிவிப்புகளின் பின்னணியில் உலக வங்கிகள், மற்றும் நமக்கு நிதி உதவி தந்து நாட்டை கடனாளியாக்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிதி அமைப்புகளின் அழுத்தம் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அந்த காரணத்தை சொல்லி 1,500 கோடி, இரண்டாயிரம் கோடி பண உதவிகள் கிடைக்கின்றன! சாலைகள், பாலங்கள் உருவாக்குதல், குடி நீர் வசதி செய்தல், குப்பை அகற்றுதல்… என திட்டங்கள் தீட்டி இந்த பணத்தை வாங்குவதற்காக அரசுகள் நாட்டின் முகத்தையே மாற்றிக் கொண்டுள்ளன. நகரங்கள் உருவாகும் போது கூடவே வறுமையில் உழலும் சேரிகளும் சேர்ந்தே உருவாகும் என்பதே நம் அனுபவங்களாகும்!

தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்டால் அதை சுற்றியுள்ள பகுதிகளான பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள்  மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தற்போது விளை நிலங்களாக உள்ளவை எல்லாம் விலை நிலங்களாகிவிடும். இது ரியல் எஸ்டேட் என்ற தொழிலைத் தான் வளர்க்கும்.

சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட அடையாறு, திருவான்மியூர் பகுதிகள் எல்லாமே நல்ல விவசாய பூமியாகத் தான் இருந்தது. அந்த பக்கம் கோடம்பாக்கத்தையடுத்துள்ள பகுதிகள் விவசாய நிலமாகத் தான் இருந்தது.பிறகு ‘கிரேட்டர் சென்னை’ என்று சொல்லி சென்னையை விரிவுபடுத்துகிறேன் என்பதாக தெற்கே சோழிங்க நல்லூர் வரையிலும், வடக்கே மணலி, அம்பத்தூர் வரையிலும், மேற்கே வளசரவாக்கம் வரையிலும் ஆக்கிரமித்துவிட்டார்கள்!

இதே போன்ற நிலை தற்போது திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளுக்கும் விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்படவுள்ளது. செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை கண்ணுக்கு தெரியாத, கவனத்திற்கு வராத அழிவுகளை ஏற்படுத்தப் போவது சர்வ நிச்சயமாகும்!

இந்த அழிவுகள் போதாது என்று புதிய நகராட்சிகள் என்பதாக,  பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு,  குன்றத்தூர், நந்திவரம்- கூடுவாங்ஞ்சேரி, பொன்னேரி,  திருநின்றவூர், சோழிங்கர்,  இடங்கனசாலை,  தாராமங்கலம்,  திருமுருகன் பூண்டி,  கூடலூர்,  காரமடை,  கருமத்தம்பட்டி,  மதுக்கரை,  வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை,  அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு,  முசிறி, இலால்குடி ஆகிய பேருராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதானது மிகப் பெரும் கவலையளிக்கிறது!

இந்தியாவில் 1901 ல் நகரமயமாக்கம் வெறும் 11.4% மாகத்தான் இருந்தது.

2001 –ல், அதாவது நூறாண்டுகள் கடந்த நிலையில் 28.5% மாகத் தான் இருந்தது.

2017 ல் அது 34% மாக உயர்ந்தது. தற்போதோ 37% மாக உயர்ந்துள்ளது! அதாவது இந்தியாவில் மூன்றில் ஒரு பாகம் தற்போது நகரமயமாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் நகரமயமாக்கம் இந்தியாவின் வேறெந்த மாநிலத்தைவிடவும் அதிகமாக 53% மாக உயர்ந்துள்ளது!

இப்படி இருக்க வேளாண் நிதி நிலை அறிக்கையில், ”தமிழகத்தின் விளை நிலப்பரப்பை இத்தனை லட்சம் ஏக்கர் கூடுதலாக்கப் போகிறோம், ஏரி,குளங்களை அழியாமல் பாதுகாத்து நிலத்தடி நீரை வளமாக்கப் போகிறோம்” என்றதெல்லாம் ஒரு போதும் சாத்தியமாகப் போவதில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டம் என்ற பெயரிலும், பாஜக அரசில் அடல் நகர்புற புதுப்பித்தல் திட்டம் என்ற பெயரிலும், திமுக அரசு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரிலும் பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டு நகர்புறங்களை விரிவுபடுத்தும் திட்டம் படு வேகமாக நடந்து வருகிறது! இதன்படி 500 நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகையில் 73 சதவிகித மக்களை நகர்புற கட்டமமைப்புக்குள் கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சி தான் இந்த புதிய, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கும் திட்டமாகும்! அதாவது இதன் மூலம் கிராம மக்கள் தொகையை வெறும் 27 சதவிகிதமாக்கும் முயற்சி நடக்கிறது! விவசாய நிலப்பரப்புகள் சுருங்குவதும், நகர்புற நிலப்பரப்புகள் விரிவாக்கப்பட்டுக் கொண்டே செல்வதுமான இப்படியான முயற்சிகள் வருங்காலத்தில் பெரும் உணவு பற்றாகுறையையும், வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையுமே அதிகப்படுத்தும். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அந்த ஆன்மாவை தொலைக்கும் முயற்சிகள் தான் படு தீவிரமான நகரமயமாக்கல்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time