இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் கொரானா பொருளாதார நெருக்கடியில் நாடும், மக்களும் இருப்பதை உத்தேசித்து தங்கள் ஊதியத்தை 30% குறைத்துக் கொள்ளும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது!
இன்றைய சட்டமன்றத்தில் நடந்தது என்ன? பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு..? ஆகியவை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகளுடன் சிறப்பான வகையில் கூடியது! ஆனால், இன்று கூடிய தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியக்குறைப்பு தொடர்பான எந்த முன்னெடுப்போ,விவாதமோ கூட எழவில்லை! ’’தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததுக்கு நீங்கள் தான் காரணம் நாங்கள் காரணமில்லை’’ என திமுக,அதிமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பழிசுமத்திக் கொண்டு சட்டசபை நேரத்தை வீணடித்தார்களே அல்லாமல் அதற்கான தீர்வை நோக்கிக் கூட ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கவில்லை!
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ரூபாய் ஒரு லட்சமாகும்! அந்த ஊதியத்தில் தற்போது நாடும்,மக்களும் சந்திக்கும் கடும் நெருக்கடிகளை உத்தேசித்து 30,000 குறைத்துக் கொள்ளும் தீர்மானமும், மசோதவும் ஒரு மனதாக நிறைவேறியது!
தமிழக எம்.எல்.ஏக்கள் சம்பளம் ரூபாய் 1,05,000. இது தவிரத் தொகுதி அலவன்ஸ்,வாகன அலவன்ஸ்,தொலைப் பேசி அலவன்ஸ்,காம்பன்சண்டரி அலவன்ஸ்,கன்சாலிடேட் அலவன்ஸ்,தபால் அலவன்ஸ்… என்பதாக மேலும் ஒன்றேகால் லட்சத்திற்கும் கூடுதலாக வாங்குகிறார்கள்! 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எம்.எல்.ஏக்களுக்கான ஊதியத்தை தமிழக அரசு 55,000ல் இருந்து இரண்டு மடங்காக உயர்த்திக் கொண்டதோடு மற்ற பல அலவன்ஸ்களையும் அதிகரித்துக் கொண்டது! இதை முன் தேதியிட்டு ஜீலை 2017 எனப் போட்டும் அமல்படுத்திக் கொண்டது! முதலில் கூடுதல் சம்பளத்தை வாங்க மறுத்த திமுகவினர் ஐந்தாறு மாதம் கழித்து விடுபட்டதையும் சேர்த்து பெற்றுக் கொண்டனர்!
Also read
தமிழகத்தில் கொரானா காரணமாக ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.வேலை இழந்துள்ளனர்! வாழ்விழந்துள்ளனர். வேலை இழப்பினால் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது! தனியார் நிறுவனங்களில் மிகப் பலருக்கு அதிமோசமான சம்பளக் குறைப்பு நடந்துள்ளது.ஆனால், இவை எதுவுமே தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளை பாதிக்கவில்லை,உள்ளத்தைத் தொடவில்லை போலும்! தற்போதைய நிலவரப்படி தமிழக எம்.எல்.ஏக்கள் எல்லா அலவன்ஸ்களையும் சேர்த்து இரண்டே கால் லட்சத்திற்கும் அதிகமாக வாங்குகின்றனர்!
மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் பெறும் சம்பளங்கள்;
கேரளா – 42,000, கர்நாடகா – 63,000, ஒடிசா – 35,000, மேற்குவங்கம் – 52,000
Leave a Reply