களங்கம் துடைத்து காப்பாற்றப்படுகிறார் கே.டி.ராகவன்!

-சாவித்திரி கண்ணன்

கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைமை மிக ஜரூராக களம் இறங்கி அவரது களங்கத்தை போக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது. அகில இந்திய அளவில் அவரை காப்பாற்ற நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், பியூஸ்கோயல் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். மதன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது..!

ராகவன் விவகாரம் குறித்து போடப்பட்ட கமிட்டியின் தலைவி மலர்கொடி பேசியதில் இருந்தே இந்த விசாரணை குழுவே ராகவனை சிக்கலில் இருந்து காப்பாற்றி, புனிதப்படுத்தத்தான் என நாம் புரிந்து கொள்ளலாம்!

மலர்கொடி பேசியுள்ளதை கவனியுங்கள்;

இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் எப்படி ராகவனுடன் பேசினார், ஏன் பேசினார், அவர் பாஜகவின் உறுப்பினரா..? என்பதை வர கூடிய நாட்களில் விசாரிக்க உள்ளோம். ‘ராகவனை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டும் என்று ஏதாவது சதி வேலை செய்யப்பட்டதா.?’ என்று விசாரிப்போம். ‘இதற்காக திட்டமிட்டு அந்த பெண் பயன்படுத்தப்பட்டாரா..?’ என்பது குறித்தும் விசாரிப்போம்.’’ என்று மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

அதாவது, அவர்கள் கண்ணோட்டத்தில் ‘பாதிக்கப்பட்டு இருப்பது பெண்ணல்ல, ராகவனே!’

நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்த கே.டி.ராகவன் ஒரு போதும் தண்டிப்படவும் போவதில்லை. பாதிக்கப்படவும் போவதில்லை. ”ஊர் உலகம் கேவலமாக பேசும். ஆகவே, ஒரு ராஜீனாமா கடிதம் தாங்க..! உங்களை சுத்தசுயம்பிரகாசமானவர் என நிரூபித்துவிட்டு பின்னால் உள்ள வந்துக்கிடலாம்” என்று தான் சொல்லப்பட்டிருக்கும்.

இன்றைய தினம் மதன் வெளியிட்ட மற்றொரு ஆடியோ அந்த கட்சித் தலைமைக்கு எப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர், அவர்களின் யோக்கியதை என்னவென்று தெரிகிறது!

கே.டி.ராகவன் செய்திருப்பது பெரும் குற்றம் என்பதை அண்ணாமலை அந்த உரையாடலில் வெளிப்படுத்திய போதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரம் தனக்கு இல்லை என்பதையும் கூறத் தவறவில்லை. “நீங்க கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க. அவர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பார்கள். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிடாதீர்கள்.’’ என்று அண்ணாமலை கூறுவதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளது.

பெண்களுக்கு நியாயம் வேண்டும். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் இந்த வீடியோவை கண்டிப்பாக வெளியிடுங்கள். நீங்களும் பத்திரமாக இருங்கள்.’’

“நான் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். பெரும்பாலும் டெல்லியில் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் இதை (வீடியோவை) அங்கே காட்டவேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம்”

இவையெல்லாம் அண்ணாமலை யூடியுபர் மதனிடம் பேசியவை! இதன் மூலம் மாநில கட்சித் தலைவராக இருந்தாலும் தன்னால் ராகவன் மீது  நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும். பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் அதிகாரத்தில் உள்ளவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்தியதாகத் தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இத்துடன் நில்லாமல் மிக அதிகமாகவே லூஸ்டாக் செய்கிறார் அண்ணாமலை! அதில், ”ஆறுமாதம் பொறுத்திருங்கள்’’ என்கிறார். பிறகு, ”வெளியிடுவதாக இருந்தால் வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்கிறார்!

‘’இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், மதன் ரவிச்சந்திரன் என்ற பிராண்ட் நிற்கும். ஆனால், 15 மிகப் பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்..’’ என்கிறார்.

என்ன பேசுகிறோம் எனத் தெரிந்து தான் பேசினாரா..என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர்ந்து பேசுகிறார்!

இவற்றில் இருந்து நமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது! முட்டாள்களையும், ஆட்டுவித்தால் ஆடுபவர்களையும் தான் பாஜக தலைவராக நியமிக்கிறது. உண்மையான திறமைசாலியோ, விழிப்புணர்வு உள்ளவனோ பாஜகவில் தலைவராக வர முடியாது!

எல்.முருகன் என்ற தலித்தை அவர்கள் தலைவராக்கலாம். அண்ணாமலை என்ற பிராமணரல்லாதவரை தலைவராக்கலாம். ஆனால், கட்சியின் உண்மையான தலைவராக கே.டி.ராகவன் போன்றவர்களே இருப்பார்கள் என்பது தான் எழுதப்படாத விதியாகும்.

இந்த நெருக்கடிகள் தந்த மன அழுத்தங்களே அண்ணாமலை மதனிடம் பேசிவற்றில் அவரை அறியாமல் வெளிப்பட்டுள்ளது! ‘தன்னை பொம்மையாக்கி, ராகவனை கொண்டு ஆட்டுவிக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் தெரியட்டும் ராகவனின் யோக்கியதை என்னவென்பது..?’ என்று கூட அண்ணாமலை நினைத்திருக்க வாய்ப்புண்டு!

மோடிக்கும்,அமித்ஷாவிற்கும் இணையான பவர் உள்ளவர் சந்தோஷ்! இவர் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சிக்கு வந்துள்ளவர். அரசு பதவிகளை தவிர்த்துவிட்டு அரசாங்க பதவிகளில் உள்ளவர்களை வழி நடத்துபவர். அவர் ஒரு பிராமணர். அவரை மீறி அமித்ஷாவோ,மோடியோ கூட செயல்பட முடியாது! அந்த பிராமணரின் பரிபூரண ஆசி பெற்றவர் தான் ராகவன்! மேலும் நிர்மலா சீதாராமனின் பேரன்பினை பெற்றவர். ‘ஒரு பிராமணத் தலைவர் என்ன தவறு செய்தாலும் பெரிதாக பாதிப்புக்கு ஆளாகமாட்டார்’ என்பது தான் பாஜகவில் எழுதப்படாத நியதியாகும்.

முன்னாளில் டாக்டர் கிருபாகரன் என்ற தலித் தலைவர் பாஜகவின் தமிழகத் தலைவராக இருந்தார். அவர் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் அன்றைய தினம் ஒவ்வொரு நகர்விலும் இல.கணேசன் செக் வைத்தார். பதவி காலத்தில் அவர் அடைந்த அவமானங்கள் கடைசியில் அவர் திமுகவில் சேருமளவிற்கு கொண்டு சென்றது.

பாஜகவின் அகில இந்திய மகளிர் அமைப்பின் தலைவி வானதி சீனிவாசன் ஏன் பெண்களுக்கு ஆதரவாக வெளிப்படாமல் மெளனம் காக்கிறார்! அவர் இதையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பார்! ராகவன் விஷயத்தில் வானதி ஏதாவது பெண்களுக்கு ஆதரவாக பேசினால், அவர் எதிர்காலமே தொலைந்துவிடும் என அவருக்கு தெரியும் தானே! அப்புறம் கட்சிக்குள்ளேயே, ராகவனின் ஆதரவாளர்கள் ”உன் யோக்கியதை தெரியாதா..வானதி..?’’ எனப் பேச வருவான்..? எதற்கு வம்பு..?

ஆக, இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன!

# பாஜகவில் பெண்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் இயங்கி முன்னேறி வர இயலாது!

#  பிராமணர்கள் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படமாட்டார்கள்.

கே.டி.ராகவனை போல வேறு எவனாவது இப்படி அம்பலப்பட்டு இருந்தால் இந்த நேரம் சல்லடையாகி இருக்கக் கூடும். ஏன்..? திமுகவில் ஒரு தலைவர் இப்படி சிக்கி இருந்தால் கூட பாஜககாரன் அதை சும்மாவிட மாட்டான்!

பங்காரு லட்சுமணன் என்ற பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்தார் பங்காரு லஷ்மணன் என்ற தலித் தலைவர். அவர் லஞ்சம் வாங்கும் விஷுவல் ஒன்று வெளியான போது, அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு காணாமல் போனார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் அல்லது ஏற்கனவே கே.டி.ராகவனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரேனும் நேரடியாக வெளி வந்து புகார் கொடுக்காத நிலை தொடருமானால்..ராகவன் ஒரு சிறிதும் பாதிப்பில்லாமல் – சங்கராச்சாரி கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கே போய் வந்தாலும் அதே பீடத்தில் அதே மரியாதையுடன் உட்கார்ந்தது போல –  ராகவனும் மீண்டு வருவார்.

ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் மதன் ரவிச்சந்திரனை மட்டும் நம்பி இராமல் தமிழக மகளிர் ஆணையத்தில் புகார் தர முன்வர வேண்டும். அல்லது தமிழக மகளிர் ஆணையமே இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரித்தால், அந்த பெண்கள் முன்வர தயாராக இருப்பார்கள்! அந்த பெண்கள் துணிந்திடாத பட்சத்தில் மதனின் சதி திட்டத்திற்கு துணை போனதாக அவர்களே தண்டிக்கபடவும் வாய்ப்புள்ளது!

தற்போதைய நிலையில் தமிழக அரசு பாஜகவுக்கு எதிராக செல்லாது என்பது தான் உண்மை! பல  விவகாரங்களில் பத்திரிகையாளர் மதன் ஏற்கனவே திமுகவிற்கு எதிராக மிக வன்மமாக செயல்பட்டவர். அவதூறு பிரச்சாரங்கள் செய்தவர். அவர் தற்போது பாஜக தலைமையால் கைவிடப்பட்ட நிலையில் திமுக அரசு மதனை தூக்கவும், தண்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இதோ இன்று கலைஞர் செய்திகளில் வெளியான பதிவு அப்படியே கீழே தரப்படுகிறது;

”தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல். அப்படி களம் இறக்கப்பட்டவர் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனலைத் தொடங்கி அதன் மூலம் பா.ஜ.கவை எதிர்க்கும் தலைவர் பற்றி சர்ச்சைக் கருத்தை பேசி வந்துள்ளார். அதில், அவர் வீடியோ வெளியிடுவதன் நோக்கமே தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதற்காகதான் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம், அவதூறு கருத்துக்களை பதிவிட்டுவந்த மதன் ரவிச்சந்திரன் மீது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டலாம் என கூறப்படுகிறது.”

ஆக, உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மதனை கைது செய்ய பாஜக, திமுகவிற்கு சிக்னல் தந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

எனவே, நாம் மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் கே.டி.ராகவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளி வந்து புகார் சொல்லாவிட்டால், களங்கங்கள் களையப்பட்டு அவர் புனிதமானவராக்கப்பட்டு விடுவார் என்பதே யதார்த்த நிலையாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time