நேர்மையான அதிகாரிகளை ஆட்சியாளர்கள் வெறுக்கிறார்கள்! – நல்லம்ம நாயுடு

-செழியன் ஜானகிராமன்

சமரசமற்ற ஒரு நேர்மையான அதிகாரியால் எழுதப்பட்ட சமகால வரலாறு!  நேர்மையாக இயங்குவது எவ்வளவு கசப்பான அனுபவங்களைத் தரும், எதிரிகளை உருவாக்கும், நெருப்பாற்றில் நீந்த வைக்கும்… என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார் நல்லம்ம நாயுடு. ஆனால், இவரது நேர்மையின் உறுதிப்பாடு இல்லாமல் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு சென்று இருக்க வாய்ப்பில்லை என அறியும் போது வியப்பாக உள்ளது..! காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரையிலான ஆளுமைகளை சரியாக அடையாளப்படுத்துகிறார்!

நேர்மை என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டியது. ஆனால் அப்படி இருக்கும் சிலரையும் அதில் இருந்து தடம் மாற்றி தங்களை போலவே நேர்மையற்று செயல்பட முயற்சிக்கும்  மனிதர்கள் சூழ்ந்த இடத்தில் ஒருவர் வேலை செய்வது என்பது மிக மிக கடினமே. ஏன் சில நேரம் உயிர் போகவும் வாய்ப்பு உண்டு. அப்படி பல இன்னல்களை சந்தித்து கடைசி வரை தன் பாதையில் பயணித்து நீதியை நிலை நாட்டி இருப்பவர் நல்லம நாயுடு!  காவல்துறையில் உதவி ஆய்வளாராக பணியில் சேர்ந்து டி.எஸ்.பியாக  ஓய்வு பெற்றவர்.

தமிழ்நாடே ஊற்று நோக்கிய ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டவர். இது ஒன்று போதாதா? சோதனைகள் வர. வந்தது. கொஞ்சம் நஞ்சம் இல்லை ஓய்வு பெற்ற பிறகும் தொடர் தொல்லைகளுக்கு உள்ளாகினர்.

நல்லம நாயுடுவின்  வாழ்க்கையின் தொடக்கம் முதல் ஓய்வு வரை மற்றும்  ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முடியும் வரை தன் அனுபவங்களை எழுத்தாக பதிவு செய்து சுயசரிதையாக வெளிவந்து இருக்கும் புத்தகம் தான்  “என் கடமை” ஊழல் ஒழிக! நக்கீரன் பப்ளிகேஷன்  வெளியீட்டு உள்ளது.

தொடக்கத்திலேயே முகத்தில் அடிப்பது போல் வாசகத்தை முன்வைக்கிறார். நம் நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் ஊழல் செய்வது வழக்கமாகிவிட்டார்கள். அப்படி ஊழல் செய்து  நீதிமன்றம் மூலம் தண்டனை பெறும் அரசியல்வாதிகளை கொண்டாடுவதும், கடவுளாக பூஜிப்பதும், தலைவராக ஏற்றுக் கொள்வது, நினைவகம் அமைப்பது, சிலைகள் வைப்பது  போன்றவை மக்கள் ஆட்சிக்கு அவமானமாகும். அது நீதிக்கு தண்டனை ஆகும் என்று தொடங்குகிறார்.

புத்தகத்தின் பெரும்பகுதி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றிய செய்திகள் உள்ளன. மிக நுணுக்கமாக பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குத்தான் மிக முக்கியம் என்றாலும் நல்லம நாயுடு ஈடுபட்ட அனைத்து வழக்குகளும் முக்கியமானவையே. தேனீ மாவட்டம் குப்பிநாயக்கம்பட்டியில் பிறந்து பள்ளி படிப்பு, கல்லுரி படிப்பு முடித்து ஒரே நேரத்தில் வங்கி, இரயில்வே, காவல்துறை மூன்று துறைகளில் இருந்து பணியில் சேர்வதற்கு ஆணை வந்தது. பெற்றோர்கள் விருப்பத்தின் பெயரில் காவல்துறை பணியில் சேருகிறார்.

கொடூரமான பண்ணையார்!

எந்த வழக்கு என்றாலும் பாதிப்பு அடைந்தவர்களின் பக்கம் நின்று வழக்கை விசாரித்து தண்டனை பெற்று தந்து உள்ளார் என்பது பெரியகுளம் பகுதியில் நிலவிய பண்ணையார் அடிமை முறை வழக்கே சாட்சியாகும்.

அந்த ஊரில் இருந்த பண்ணையார் தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களை மதிப்பதே இல்லை அவ்வப்பொழுது அடித்து வெளுத்து வாங்குவதும் உண்டு. அவர் உறவுக்காரர் பாராளுமன்ற உறுப்பினர் என்று கெத்தும் சேர்ந்து கொண்டது.

ஒரு நாள் பண்ணையாரிடம் அடிவாங்கிய தொழிலாளி அவர் மனைவியுடன், 8 வயது சிறுவனும் போலீஸ் நிலையத்திற்கு வந்து நல்லம நாயுடுவிடம் புகார் தெரிவிக்கின்றனர். காயம் மிக சிறியதாக இருந்ததால் பண்ணையாரை அழைத்து எச்சரித்து அனுப்புகிறார். அதற்கே அதிக கூச்சல் போட்டு கத்தி கொண்டு இருந்தார் பண்ணையார்.

சில நாட்கள் கழிந்து மீண்டும் தொழிலாளி பலமாக தாக்கப்பட்டார். மீண்டும் புகார். இந்த முறை நல்லம நாயுடு அவரை மருத்துவமனையில் சேர்த்து பிறகு பண்ணையார் வீட்டிற்கு சென்று கைது செய்து நடந்தே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கடைசி வரை அந்த வழக்கை கவனித்து பண்ணையாருக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். எந்த சிபாரிசுக்கும் இடம் கொடுக்கவில்லை.

இதே முறையத்தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலும் கடைபிடித்து உள்ளார்.

சிறையில் எரிமலையான ஜெயலலிதா!

சிறையில் இருந்த ஜெயலலிதாவை விசாரிக்க நல்லம நாயுடு சென்றபொழுது எடுத்தவுடன் ஜெயலலிதா மிக கோபமாக பேசினார். எரிமையாக வெடித்தார்!

”நான் மட்டும்தான் சொத்து சேர்கிறேனா? மற்ற தலைவர்கள் சேர்க்கவில்லையா? ஏன் என்னை மட்டும் விசாரணை செய்கிறீர்கள்?’’ என்று சீறினார். நான் பொறுமையாக அவரிடம் சொன்னேன். ”இந்த அரசு உங்கள் மீது இருக்கும் வழக்கை விசாரிக்க என்னை நியமித்து உள்ளது. அடுத்து நீங்கள் ஆட்சிக்கு வந்து அவர்கள் மீது வழக்கு போட்டு என்னை விசாரிக்க சொன்னால் இப்பொழுது எப்படி விசாரிக்கிறேனோ அப்படியே தான் விசாரிப்பேன்’’ என்று சொன்னவுடன் ஜெயலலிதா கொஞ்சம் அமைதியானர்.

முதன்முதலில் சுப்பிரமணி சாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தான் போலீஸ் அதிகாரி லத்திகாசரனை இந்த வழக்கிற்கு தலைமையாக நியமித்தது. ஒரு நாள் லத்திகா சரண் என்னை தொடர்பு கொண்டு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இணையுமாறு கூறினார். அப்படித்தான் இந்த வழக்கில் வந்தேனே தவிர திமுக என்னை நியமிக்கவிலல்லை. பிறகுதான் இந்த வழக்கில்  திமுக அரசு இணைகிறது. ஆனால் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திமுக தான் என்னை இயக்குகிறது என்று குற்றம் சுமத்தினர்.

ஜெயலலிதா தண்டனை பெற்றதற்கு நேர்மையாக பணி செய்த நல்லம நாயுடு காரணமென்றாலும், ஜெயலலிதா முதல் ஆட்சியில்(1991-1996) நல்லம நாயுடுவை எப்படி நடத்தினார் என்று தெரிந்து கொண்டால் ஆச்சரியமாக இருக்கும்.

நல்லம நாயுடுவுக்கு தங்க பதக்கம்!

தன் ஆட்சி காலத்தில் ஜெயலலிதா பரிந்துரையில் நல்லம்ம நாயுடு செய்த சீரிய பணிக்கு தமிழக ஆளுநரின் தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டு குடியரசு தலைவரின் சுதந்திர தினத்திற்கான மிகச் சீரிய பணிக்கான காவல்துறை பதக்கம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எனக்கு பரிந்துரைத்தார்.

1994ஆம் ஆண்டு கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு ஜெயலலிதா கொடுத்தார்.இப்படி எனக்கு நன்மைகளை செய்தவர் ஜெயலலிதா! இப்படி நன்மைகளை செய்தவரின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வழக்கப்பட்டது.

புத்தகத்தில் ஜெயலலிதா வழக்கு மட்டுமே அதிக பக்கங்களை எடுத்து கொண்டு இருப்பதால் அந்த வழக்கை எளிதாக கடந்து செல்ல முடியாததாக இருக்கிறது.

புத்தகத்தை படிக்கும்பொழுது சில எளிமையான கேள்விகள் தோன்றுகிறது.

வருமானத்தைக் காட்டாமல் சொத்து குவித்தார்

சிறிய நிறுவனங்கள் கூட தாங்கள் செய்யும் பண பரிமாற்றங்களை ஒன்றுக்கு இரண்டு முறை ஆடிட்டரை கலந்து ஆலோசித்து செய்வார்கள். ஆனால் நாட்டின் முதல்வர் எந்த முறையான வருமானமும் இல்லாத பணத்தை ரொக்கமாக தன் வங்கி கணக்கில் செலுத்தி  வந்தது மிக ஆச்சரியமே. இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையே இருந்தது.  இது எப்படி ஜெயலலிதாவின்  ஆடிட்டருக்கு தெரியாமல் போனது.

இப்படித் தொடர்ந்து தன் இந்தியன் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இது தான் மிக பெரிய தவறாக போகிறது என்று ஜெயலலிதாவுக்கே தெரியவில்லை. இதில் சசிகலாவும் அடக்கம்.

எளிமையாயாக அனைவரும் தெரிந்து கொள்ளும் அளவு ஜெயலலிதா செய்த தவறுகள் என்று கீழ் உள்ளவற்றை குறிப்பிடலாம்.

முதன் முதலாக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு முன்பு ஜெயலலிதா,சசிகலா பெயரில் இருந்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி ஆகும். 12வங்கி கணக்கு, 3 நிறுவனங்கள்  வைத்து இருந்தார்கள். இவ்வளவுதான் பதவிக்கு முன்பு.

பதவி ஏற்ற அடுத்த மாதமே போயஸ் கார்டன் வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு மனையை வாங்குகிறார்கள். அதற்கு அடுத்த மாதமே மன்னார்குடியில் சசிகலா ஒரு கட்டடம் வாங்குகிறார். ஒரே நாளிலேயே 10 நிறுவனங்களை பதிவு செய்தார்கள்.

இப்படியாக ஆட்சி முடிவில் 12 வங்கி கணக்கு 50 வங்கி கணக்காக மாறுகிறது. 3 நிறுவனங்கள் 32 நிறுவனங்களாக மாறுகிறது. 22 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காலி மனைகள் வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கிய ஒரு கட்டடம்தான் இசைஅமைப்பாளர் கங்கை அமரனின் பையனுர் பண்ணை வீடு. 2 கோடி மதிப்புள்ள இடத்தை கங்கை அமரனை மிரட்டி, வெறும் 13 லட்சத்திற்கு வாங்கி உள்ளனர்!கொட நாடு பங்களாவும் இப்படி அடாவடியாக வாங்கப்பட்டது!

ஆதாரங்களை கடினமாக தேடி எடுக்கும் சூழலை ஜெயலலிதா போலீசுக்கு வைக்கவில்லை. அனைத்து தவறுகளுக்கான ஆதாரங்களையும் சுலபமாக கிடைக்கும்படியே சொத்து சேர்த்து வந்து உள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இளவரசி மகன் சிறுவன் விவேக் பெயரிலும் கணக்கு தொடங்கி 6 லட்சம், 9 லட்சம் என்று இரண்டு முறை செலுத்தி வந்து உள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்…?

இப்படி வங்கியில் செலுத்தி வந்த ரசீதை நல்லம நாயுடு பெறுவதற்கு வங்கி மேலாளர் தகுந்த ஒத்துழைப்பு தரவில்லை. அதற்கு தனியாக ஆட்கள் போட்டு ரசீதுகளைத் தேடவேண்டும். எங்களிடம் அதற்கான ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்று காலம்தாழ்த்தி வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் நல்லம நாயுடு தானே தேடி எடுத்து கொள்கிறேன் என்று மிகுந்த சிரமத்துடன் அந்த பணியைச் செய்து அனைத்து ரசீதுகளையும் எடுத்து முறையாக மேலாளர் கையெப்பம் இட்டு எடுத்தேன் என்று இரண்டு வரியில் புத்தகத்தில் எழுதி செல்கிறார். உண்மையில் வங்கி பணி தெரியாதவர்கள் ஒரு ரசீதை எடுப்பதே கடினம். ஆனால் அனைத்தையும் தேடி எடுத்து உள்ளார்.

நண்பனான அதிகாரிகளே  எதிராக மாறினார்கள்!

சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய இடத்தை ஒன்றை குறிப்பிடவேண்டும். திமுக ஆட்சியில் சாட்சி சொன்ன நபர்கள் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்தவுடன் பிறழ்சாட்சியாகி விட்டார்கள். வழக்கு வலுவிழந்து கொண்டுவந்தது. அதுவரை என்னுடைய சாட்சியத்தை பதிவு செய்யவிடாமல் எதிர்தரப்பினர் காலம்தாழ்த்தி கொண்டே வந்தார்கள். ஒரு கட்டத்தில் வழக்கு ஜெயலலிதாவிற்கு சாதகமாக சென்று விடுதலையை நோக்கி சென்றுவிட்டது. அதை ஜெயலலிதா வக்கீல் இந்த வருடம்  ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக இந்த தீர்ப்பை கொடுப்பேன் என்று குறிப்பிட்டார்.

அப்படியான சூழலில் என்னை அழைத்தார்கள் சாட்சி சொல்ல! அப்பொழுது நான் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தேன்.  வழக்கில் என்னுடன் பணிபுரிந்த  அதிகாரிக்கு  அதற்கான ஒப்புதல் கடிதத்தை நான் கொடுக்கவில்லை என்று அந்த  நண்பரே மாற்றி சொல்லி இருந்தார். ஆவணங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு ஜெயலலிதா வக்கீல்கள் பலமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். நீதிபதியிடம் வலியுறுத்தி சொன்னேன். என் நினைவில் இருந்து சிலவற்றை மட்டுமே சொல்ல முடியும். ஏற்கனவே  நான் சேகரித்து வைத்து இருந்த ஆவணங்களை பார்த்தால் மட்டுமே முழுமையாக சாட்சி சொல்ல முடியும் என்று உறுதியாக நின்றேன். ஆவணங்களை பார்க்க நீதிபதி  ஒரு நாள் அனுமதி வழங்கினார்.

நான் பணிபுரிந்த அலுவலகத்தில் என்னையே அதற்கு அனுமதிக்காமல் தடுத்தனர்! நாள் முழுவதும் காத்திருந்து திரும்பிவந்தேன். அங்கிருந்த எனக்கு நன்கு தெரிந்த அதிகாரி ஏற்கனவே இந்த வழக்கு தோற்கடிக்கப்பட்டுவிட்டது, உங்களுடைய முயற்சி வீண் என்று குறிப்பிட்டார். என்னுடன் பணிபுரிந்த அதிகாரிக்கு கடிதம் கொடுத்தது நன்றாக நினைவில் உள்ளது. எப்படியும் நீதிமன்ற கோப்புகளில் அவை இருக்க வேண்டும் என்று மறுநாள் நீதிமன்றம் சென்றேன். சாட்சி கூண்டில் நின்று  கோப்புகளை வரவைத்து அந்த கடிதத்தை எடுத்து தந்தேன் என்கிறார். .

சன்டிவி வெளியேற்றம்

ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டை சோதனை செய்தபொழுது சன் டிவி அதை படம் எடுக்க உள்ளே வந்தார்கள். அவர்களை வெளியேறுமாறு சொன்னேன். ஆனால், அதிகார தொனியில் வம்பு செய்தார்கள். பலவந்தமாக அப்புறப்படுத்தப்படுவீர்கள் என்று எச்சரித்தேன். பிறகு தான் வெளியேறினார்கள். இப்படி ஆளும் திமுக அரசு ஆதரவு பெற்ற தொலைக்காட்சிக்கு அனுமதி கொடுக்காமல் விசாரணை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆட்சி மாறி அதிமுக வருகிறது.

நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகிறது. ஒரு வழியாக வழக்கு கர்நாடாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு ஆச்சாரியா என்ற வழக்கறிஞ்சர் நியமிக்கப்பட்டார். நேர்மையானவர். ஆனால் இங்கு இங்கு எனக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள் அனைத்தும் ஆச்சரியாவுக்கும் கொடுத்தார்கள் ஆச்சாரியா ஒரு கட்டத்தில் விரக்தியாக இந்த வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இவ்வளவு தடைகள் ஏற்படுத்தி இன்னல்கள் கொடுத்தும் ஜெயலலிதா தண்டனை பெற்றார்.  இதற்கு நல்லம நாயுடுவுக்கு அடுத்து முக்கியமானவர்கள் ஆச்சாரியா, நீதிபதி குன்ஹா ஆகும்.

சர்க்காரியா கமிஷன் முழவதும் பதிவு செய்யவில்லை!

புத்தகத்தில் ஜெயலலிதா வழக்கு பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் திமுக மீது சர்க்காரியா கமிஷன் விசாரித்த வழக்கிலும்  நல்லம நாயுடு விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். அந்த வழக்கு பற்றி கொடுத்த அறிக்கையில் ஊழல் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சர்க்காரியா அறிக்கை சமர்பித்தார் என்று கூறுகிறார். ஆனால், அந்த வழக்கு எப்படி சென்றது, ஆதாரம் இல்லை என்றாலும் ஊழல் நடந்து உள்ளதா?  சிறு தவறு கூட இல்லையென்றால் எப்படி விசாரணை கமிஷன் அமைத்தார்கள் என்று கேள்விகளுக்கான பதில்கள் இல்லை. சர்காரியா கமிஷன் தொடர்பான நல்லம்ம நாயுடுவின் அனுபவங்கள் ஏனோ தவிர்க்கப்பட்டுள்ளன!

இன்றுவரை அறிவியல் முறைப்படி ஊழல் செய்தார்கள் என்று குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நல்லம நாயுடுவை தவிர  வேறு யாரும் தெளிவாக விவரிக்க முடியாது.  அவையும் பதிவு செய்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும்.

காமராஜர் பெருந்தன்மை!

1965 ல் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக காமராஜர் சுற்றுபயணம் செய்ய தொடங்கினார். அப்படி நிலக்கோட்டை என்ற ஊரில்  ஓர் வாரம் தங்கி சுற்றுப்பயணம் செய்தார். அதற்கு என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தார்கள். ஒரு நாள் இரவு காமராஜர் என்னை அழைத்தார்.

கூடவே இருக்கிறீர்கள் இப்பொழுது தேர்தல் வந்தால் மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்று கேட்டார். நான் சிறிது தயங்கினேன். உண்மையை சொல்லுங்கள் என்று காமராஜர் கேட்டார். தேர்தல் வந்தால் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொன்னேன். உடனே அருகில் இருந்த கக்கன் வேகமாக என்னை அடிப்பது போல்  வந்தார். என்னைத் திட்டினார்.  ”இவரை போன்றவர்களை பணியில் சேர்த்ததே தப்பு ’’என்று கக்கன் கூறினார். உடனே காமராஜர் கக்கனை தடுத்து ”அவர் சொன்னதில் என்ன தப்பு இருக்கு. நாமும்தான் தினமும் கிராமங்களுக்கு சென்று வருகிறோம். அவர் இருக்கும் உண்மையைத்தான் சொல்கிறார்.’’ என்றார் காமராஜர்! அவர் சொன்னதை கேட்டு நிம்மதியாக உணர்ந்தேன். அறையை விட்டு வெளியே வந்தேன்.

இந்த விஷயம் என்னுடைய ஆய்வாளருக்கு தெரிந்துவிட்டது. அன்று இரவே எனக்கு பதிலாக வேறு ஒரு உதவி ஆய்வாளறை நியமித்து என்னை விடுவிப்பதாக சொன்னார்கள்! ‘சரி’ என காமராஜரிடம் விடை பெற்றுக் கொள்ளப் போனேன். காமராஜர் பதறிப் போனார். ”இது கக்கன் செய்த வேலையா.. ’’ என்று கக்கனை கடிந்து கொண்டார். ”நீங்கள் தான் என்னுடன் இருக்க வேண்டும். புதியவரை போகச் சொல்லுங்கள்’’ என்று காமராஜர் சொன்னார். பெருந்தலைவர் என்ற வாசகம் காமராஜருக்கு மிக பொருத்தமே.

உண்மையை காமராஜர் அப்படியே ஏற்று கொண்டார் ஆனால் ஜெயலலிதா ?

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில்  சாட்சி சொல்லி கொண்டு இருந்த நேரத்தில்தான் ஒரு கொடுமை நடந்தது. முன்பு அறிவிக்கப்பட்டு வழங்காமல் இருந்த தமிழக ஆளுநர் பதக்கத்தை ஜெயலலிதா வழங்குவார் அதற்கான பயிற்சி அணிவகுப்பில் கலந்து கொள்ள வருமாறு கடிதம் ஒன்று எனக்கு வந்தது. அங்கு சென்றேன்.

எனக்கு நன்கு தெரிந்த ,பழகிய அதிகாரிகள் யாரும் என்னிடம் பேசவில்லை. உதாசினப்படுத்தப்பட்டேன். அங்கு இருந்த நேரத்தில் வீட்டிற்கு என் மனைவிக்கு ஒரு அதிகாரி போன் செய்து ஜெயலலிதாவிடம் பதக்கம் வாங்கும் நாள் அன்று அவர் வரவேண்டாம் என்று சொல்லியுள்ளார். நான் வீட்டிற்கு சென்ற பிறகு என் மனைவி இதை சொன்னார். பிறகு எனக்கே போன் செய்து சொன்னார்கள்.

ஒரு நாள் வீட்டிற்கே வந்து  பதக்கத்தை கொடுத்தார்கள் இதை நான் அணிவிக்கப்போவதில்லை என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தேன். என்கிறார் நல்லம்ம.

இந்த புத்தகம் நல்லம நாயுடு வாழ்க்கை வரலாறாக இல்லை!

புத்தகத்தில் பெரும்பகுதி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விவரங்களே இருப்பதால் படித்து முடித்தால் இந்த புத்தகம் நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறு போன்று இல்லை ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் டைரி என்ற எண்ணமே தோன்றுகிறது.

ஜெயலலிதா வழக்கு என்பது முக்கியம்தான் அதற்காக ஒருவரின் வாழ்க்கை வரலாறு நூலில் அவரின் மற்ற பகுதிகளை குறைத்து ஒரு விஷயத்தை மட்டுமே பெரிதுபடுத்தி இருப்பது எந்த நேரமும் அவரது வாழ்க்கை நீதி மன்றத்தில் இருந்தே கழிந்தது போன்ற உணர்வே கொடுக்கிறது.

ஜெயலலிதா வழக்கை மட்டுமே எழுதியிராமல் நல்லம நாயுடு வரலாறை இன்னும் விரிவுபடுத்தி இருக்கலாம்.

மூன்று வருடங்கள் முன்பு ஒரு நாள் காலை வேளையில் நல்லம நாயுடு  வீடு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளேன். அன்றைய பேச்சின் இடையில், ’’நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தித்தில்தான் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று குறிப்பிட்டார். போலீஸ் வேலையில் அதிக மன உளைச்சல் ஏற்பட்டது, உடல் நலிவடைந்தது, அதிக மிரட்டல், வீட்டில் குண்டு வீச்சு, துறை ரீதியாக புறக்கணிப்பு, வாங்கவேண்டிய பதகத்திற்கு நீங்கள் வர வேண்டாம் என்ற அவமானம்படுத்தியது இத்தனையும் ஒரே ஒரு வழக்கு எனக்கு கொடுத்தது. அது ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்காகும்’’ என்று குறிப்பிட்டார். இந்த புத்தகம்படித்த போது அவர் பேசியது நெஞ்சில் நிழலாடியது!

இந்த நூல் சற்று அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புத்தகத்தில் சில இடத்தில் வருடங்கள் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது, நிறைய எழுத்து பிழைகள், எண்கள் தவறு, தேவையில்லாத இல்லாத இடத்தில் புள்ளி, கமா போன்றவை வருகிறது.

புத்தக பதிப்பாளர் கொடுக்கும் பதிப்புரையிலேயே 11வது பக்கத்தில் தொடங்கும்  பிழைகள் அப்படியே புத்தகம் முழுவதும் தொடர்கிறது. உச்சமாக சொத்துகுவிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு 2014 கொடுக்கப்பட்டது, ஆனால் புத்தகத்தில் 1914 என்றும், உச்சநீதிமன்றம் 2017 கொடுத்த தீர்ப்பை 1917 என்றும் 139 பக்கத்தில் அச்சாகி உள்ளது.

அப்போதெல்லாம் வங்கியில் 2 லட்சம் மேற்பட்டு தொகையை ரொக்கமாக செலுத்தக்கூடாது என்ற விதி இருந்தது அதை பக்கம் 64ல். இருபது ஆயிரம் என்று கொடுத்து உள்ளனர்.  பக்கம் 65ல் இருக்கும் எண்களை கூட்டினால் 721360 என்று வருகிறது ஆனால் 851320 என்று அச்சாகி உள்ளது.

பக்கம் 213ல் வருடம் 1996 பதிலாக 19960 என்று வருகிறது. இப்படி நிறைய பிழைகள் இருப்பதால் அடுத்த பதிப்பில் இவையெல்லாம் களைந்து வந்தால் படிக்கும் வேகம் தடைபடாமல் செல்லும்.வரலாற்று ஆவணமாக கருதப்படக் கூடிய இந்த நூல் அடுத்த பதிப்பில் சரி செய்யப்படும் என நம்புகிறோம்.

இந்த நாட்டில் ஒரே ஒருநேர்மையான அதிகாரி இருந்தாலும், அவரால்  இந்த நமக்கு ஆபத்து என்பது போலவே அரசியல்வாதிகள் இவரை நடத்தி உள்ளனர். ஆனால், அரசு தரும் சம்பளத்தை மட்டுமே கடைசிவரை பெற்று, சிறிதும் நேர்மை தவறாமல்  கண்ணியமாக வேலையில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நல்லம்ம நாயுடு  புதியதாக போலீஸ் பணியில் சேர்பவர்களுக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷான இருப்பார் என்பதில் ஐயமில்லை!

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்

விலை: 225.00

Ph – 044-43993029

நூல் விமர்சனம்; செழியன் ஜானகிராமன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time