தலிபான்களின் எழுச்சி விடுதலையா..? வீழ்ச்சியா? – யமுனா ராஜேந்திரன்

- பீட்டர் துரைராஜ்

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து,  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஒரு கலந்துரையாடலை, சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த  நிகழ்ச்சியில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் பேசினார். அந்த கலந்துரையாடலை கேள்வி, பதில் வடிவில் இங்கே தந்துள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து இருக்கும் தலிபான்கள் நல்லாட்சியைத் தருவோம் என்று கூறுகிறார்களே..?

தலிபான்கள் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருந்தது. பெண்கள் பொது வாழ்க்கைக்கு, பல்கலைக்கழகங்களுக்கு, வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதித்தார்கள். இவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் கருத்தியல்ரீதியாக மாறிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. பதிமூன்று வயது பெண் குழந்தைகளை முல்லாக்களுக்ககு (மதகுருக்களுக்கு)  திருமணம் செய்வித்த கொடுமையெல்லாம் அங்கு நடந்தது. இஸ்லாமிய முறைப்படி ஆட்சி என்ற பெயரில் முல்லாக்கள்  ஆட்சி செய்வார்கள். குரானுக்கு ஐம்பது மௌல்விகள் ஐம்பது விதமாக விளக்கம் சொல்லுவார்கள். ஆனால் பெண்களுக்கான உரிமையை யார் தருவார்கள் ?  சர்வதேச அழுத்தம் காரணமாக தாங்கள் நல்ல ஆட்சியைத் தருவோம் என்று தலிபான்கள் சொல்லலாம். போகப்போகத்தான் பார்க்க வேண்டும். சக மனிதனை எப்படி நடத்துகிறார்கள் என்பதும் முக்கியம். இப்போது கூட வீடு, வீடாகச் சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்களே !

ஆப்கானிஸ்தானில்   திடீரென்று அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

கடந்த ஆண்டு, அதாவது 2020 ல் கத்தார் நாட்டுத் தலைநகரான தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் தனது படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கு பெற்றிருந்தனர். ஆனால் ஆப்கான் அரசு சார்பாக யாரும் பங்குபெறவில்லை.  அப்போது ஏற்பட்ட       ஒப்பந்தத்தின்  அடிப்படையில்தான் இப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது படைகளை விலக்கிக் கொண்டுள்ளார். அதில் நேட்டோ படைகளும் உள்ளன. ஆனால் அமெரிக்க அதிபர் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், திரும்பப் பெற்றுக் கொண்ட முறையையும் விமர்சிக்கிறார்கள். மூன்று இலட்சம் படைகள் இருபது ஆண்டுகளாக ஆப்கன் அரசுக்கு ஆதரவாக அங்கு இருந்தது. திடீரென்று அங்கிருந்து வெளியேறியதன் மூலம் அமெரிக்கா அதனை கைகழுவி விட்டது.இது அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள படுதோல்விதான். இந்தியாவும் அமெரிக்காவை ஆதரித்து வந்தது. இரத்தக் களறி வேண்டாம் என்பதால்  தான் வெளியேறிவிட்டதாக, அமெரிக்கா ஆதரவோடு ஆப்கான் நாட்டின் தலைவராக இருந்து UAE ல் குடியேறிய,  அதன் தலைவர் அஷ்ரப் கனி  கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பத்து சத மக்களே கல்வி பெற்றவர்கள். 30 சத மக்களே நகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். 70 சத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.  பின் லேடன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்து, ஆப்கானிஸ்தான் வந்த தலைவர்தான்.

சோவியத் யூனியனும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்ததே !

சோவியத் யூனியனில் உஸ்பெக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் என்ற இரண்டு மாநிலங்கள் இருந்தன. அதில் முஸ்லிம்கள் அதிகம். அந்த இனத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர். அவர்கள் ஐந்து சத எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களின் நலன் காக்க வேண்டும் என்ற எண்ணம் சோவியத் யூனியனுக்கு இருந்தது ஒரு காரணம். அதனால்தான் சோவியத் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.

அது மட்டுமின்றி, அமெரிக்கா ஈரானில் ஷா மன்னனின் ஆட்சியை நிறுவியபின்பு,  ஆப்கானிஸ்தானுக்கு குறி வைத்து இருந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்த படித்த இளைஞர்கள் மார்க்சிய அமைப்பை நிறுவி,  விவசாயிகள் கிளர்ச்சியை நடத்தி இருந்தார்கள். இந்த  நிலையில்  அமெரிக்கத் தலையீட்டைத் தவிர்க்கவே சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் 1979 ஆம் ஆண்டில் நுழைந்தது. 1989 வரை அங்கு இருந்தது. ஆப்கானிய தேசியம் மேல் எழுந்த நிலையிலும், சோவியத் படைகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இருந்த சோவியத் எதிர்ப்பு மன நிலையாலும் அந்த அரசு கவிழ்ந்தது.  ஆப்கானிஸ்தானில்  சோவியத் யூனியன் ஆதரவோடு  இருந்த அரசில்  தொழிற்சங்க உரிமைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் பொதுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒருவேளை அமெரிக்க ஆதரவோடு இருந்த,  முகாஜூதீன்கள் அதனை எதிர்க்காமல் இருந்திருந்தால் அது கம்யூனிச அரசாக நிலைபெற்றிருக்கும்.

இப்போது  கம்யூனிஸ்டுகள்  அங்கு இல்லையா ?

யமுனா : உலகெங்கிலும் ஜனநாயகத்தை காப்பதற்காக நடக்கும் போர்களில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்தான். தெற்கு ஏமனில் சோசலிச குடியரசை உருவாக்கியதில் கம்யூனிஸ்டுகளுக்கு பங்கு உண்டு். ஈரானில் ஷா அரசை
கவிழ்த்தில் இடதுசாரிகள் முன்னணியில் இருந்தார்கள். அதே போல ஈராக் அதிபர் சதாம் ஹீசேனுக்கு ஆதரவாக மற்ற ஜனநாயக சக்திகளோடு சேர்ந்து போராடினார்கள். ஆனால் சதாம் ஹுசேன் நிலைபெற்றதும் கம்யூனிஸ்டு கட்சியைத் தடை செய்தார். இதே போலத்தான் சாதாரண மக்களால் எகிப்து நாட்டில்  ஜனநாயக உரிமைகளுக்காக  நடந்த அரபுப் புரட்சியில் முன்னணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், அது வெற்றி பெற்ற பின்பு புறக்கணிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நாம் புறவயமாகத்தான் அணுக வேண்டும். நல்லவன் கெட்டவன் என்று ஒரு வரியில் யாரையும் சொல்ல முடியாது. அதேபோலத்தான் நாம் ஆப்கன் நிகழ்வையும் காண வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இருந்த முகாஜுதீன்களுக்கும், இப்போது இருக்கும் தலிபான்களுக்கும் என்ன வேறுபாடு ?

1989 முதல் 1992 வரை ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவோடு இருந்த இடதுசாரி அரசை முகாஜிதீன்கள்   எதிர்த்துப் போராடினார்கள். முழுக்க  உள்ளூர் மக்கள். கஞ்சாப் பயிர்தான் அவர்களுக்கு நிதி ஆதாரமாக இருந்தது. இதனால்தான் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் முகாஜூதீன்களை எதிர்த்தார்கள்.

இப்போதுள்ள தலிபானுக்கு வெளிநாட்டுத் தலைமை உள்ளது. அதன் கோட்பாட்டுத் தந்தையாக பின்லேடன் இருந்தார். ஆப்கானிஸ்தானில் 70 சத பெரும்பான்மையானவர்கள் பஸ்தூன் இன மக்கள். ஸூன்னி பிரிவை சேர்ந்த இவர்கள் தலைமையில்தான் தலிபான் உள்ளது. அங்குள்ள ஹசாரா என்ற இனக்குழு சிறுபான்மையாகும். இவர்களைப் போல ஷியா பிரிவினரும், இஸ்மாயிகள் பிரிவினரும் சிறுபான்மையினரே. இவர்கள் கடந்த காலத்தில் தாலிபான்களால் மிக கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். எனவே சிறுபான்மை இனக்குழுவினருக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும், முழுக்க முழுக்க தங்கள் நாடுகளின் நலனை உத்தேசித்தே ஆப்கானில் ஒரு பொம்மை அரசை நிறுவி இருந்தார்கள். 2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப்பிறகு அமெரிக்கா இந்த பொம்மை அரசை, தலிபான்களுக்கு எதிராக நிறுவியது. ஆப்கன் மக்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. சோவியத் யூனியன் இல்லாத ஒரு சூழலில் அமெரிக்கா தன்னிச்சையாக பல நடவடிக்கைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிராக எடுத்து வருகிறது. ஜனநாயக சக்திகள் எழுச்சிப் பெறுவதன்  மூலமாகத்தான்  மாற்றங்கள் வரும்.

இப்போதுள்ள ஆப்கனின் தலிபான் ஆட்சிக்கு யாரெல்லாம் ஆதரவு அளிப்பார்கள் ?

பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். ரஷ்யாவும் ஆதரவு அளிக்கும். சீனாவானது,  வியாபார ரீதியிலும், அரசியல்ரீதியிலும்  அமெரிக்காவிற்கு  எதிராக இருப்பதால் சீனாவும், ஆப்கானிஸ்தானிற்கு ஆதரவு அளிக்கும். சீனாவில். ஒல்கோர் என்ற இன முஸ்லிம் இன மக்கள் உள்ளனர். அவர்கள்  மசூதிகளில் வழிபடும் உரிமை போன்ற மத உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபானின் தூதுக்குழு சீனா சென்றுள்ளது. அந்த தலிபான் குழுவிடம், சீன நாட்டு ஒல்கோர் இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான் அரசுக்கு ஆதரவு அளிக்கும். சோவியத் யூனியன் இருந்த வரையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் வணிக நலன், சுயநலம் போன்றவைகளின் அடிப்படையில்தான் முடிவெடுக்கிறார்கள்.

தலிபான்களுக்கு எதிராக அங்குள்ள மக்களின் எழுச்சி இருக்கும் ?

1979 க்கு முன்பாகவே, ஆப்கானிஸ்தானில் உள்ள விவசாயிகளின் நியாயமான கூலிக்காக போராடினார்கள். பெண்களுக்கு உரிமைகள் இருந்தன. எனவே மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் தலிபான்கள் வசம் இப்போது ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா ஏற்கனவே தந்த ஆயுதங்கள், முகாஜூதீன்களிடமிருந்து பறித்துக் கொண்ட ஆயுதங்கள், இப்போது அரசுப் படையிடமிருந்து பறித்துக் கொண்ட ஆயுதங்கள் என ஏராளமாக உள்ளன. சாதாரணமாக எதிர்குரல் எழுப்புவர்களை தெருவில் கல்லால் அடிப்பது, கைது செய்வது என்ற நடவடிக்கைகள் இருக்கும்போது மக்கள் என்ன செய்வார்கள் ? ஒரு சில இடங்களில் தலிபான்களின்  தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்து,  எதிர்ப்பியக்கங்கள் உருவாகியுள்ளன. பெண்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். நிலமைகளை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

தலிபான்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய வீரர்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறதே..?

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் அனைவருமே மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காவர்கள் என்று சொல்ல முடியாது. தலிபான்கள் ஆண்களும், பெண்களும் ஒரு சேரக் கல்விச்சாலையில் படிக்கக் கூடாது என தடை விதித்தவர்கள்தானே. 2001 ல் அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அதற்கு காரணமான அல்கொய்தாவை அழிக்க ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஊடுருவி தனது பொம்மை அரசை நிறுவியது. இப்போது பெண்களின் உரிமைகள் என கூச்சலிடும் மேற்குலக பத்திரிகைகள், கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவோடு இருந்த அரசில் பெண்கள் உரிமைகளை உறுதி செய்ததா ? தலிபான்கள் அமெரிக்காவிடமிருந்து நிதி வாங்கியவர்கள்தானே ! சௌதி அரசு அமெரிக்காவுடன் இணைந்து தரகு முதலாளித்துவத்தில் ஈடுபட்டதுதானே ?  தலிபான்கள் உரிமைக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கவில்லையே.

சோவியத் யூனியனை எதிர்த்த முகாஜூதீன்களுக்கும், அமெரிக்காவை எதிர்த்த தலிபான்களுக்கும் என்ன வித்தியாசம் ?

முகாஜூதீன்கள் முழுக்க, முழுக்க உள்ளூர் ஆப்கன் மக்கள். ஆனால் தலிபான்களில் வெளிநாட்டுத் தலைமையும் உண்டு. அல் கொய்தா தலைவராக இருந்த  பின் லேடன் சௌதியிலிருந்து அங்கு வந்தவர்தானே.  உலகெங்கும் இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டார்கள்.

இங்குள்ள முஸ்லிம்கள் தலிபான்களை ஆதரிப்பார்களா ?

இந்தியாவில் தீட்டு, தீண்டாமை, சாதி, மதப் பாகுபாடுகள் போன்ற பார்ப்பனக் கருத்தியலை தனது சித்தாந்தமாக கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த பெரும்பான்மை வாதத்திற்கு பலியான மக்கள்தான் இங்கு பாஜகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதே போலத்தான்  பெரும்பான்மை மக்கள் ஆதரவு என்று தலிபான்களும் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களது குடியுரிமைக்குப் போராடி வருகிறார்கள். தங்கள் வழிபாட்டு உரிமைக்கும், ஏன் வாழ்வுரிமைக்குமே போராடி வருகிறார்கள். இர்பான் ஹபீப் போன்ற வரலாற்று அறிஞர்கள்,  நசிருதீன் ஷா, கைபி ஆஸ்மி, சப்தர் ஹாஸ்மி போன்ற எண்ணற்ற இஸ்லாமிய கலைஞர்கள் முற்போக்கான நிலையெடுத்து வருகிறார்கள். எனவே, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள்,  தலிபான்களை ஆதரிப்பார்கள் என நான் எண்ணவில்லை.

உரிமைகளை மறுக்கும் எந்த அரசாக இருந்தாலும், அதனை எதிர்த்து மக்கள் போராடுவார்கள். ஈரானில் மத அடிப்படையில் இருந்த ஷா மன்னனை இதே மக்கள்தானே தூக்கி எறிந்தார்கள்.  இப்போது சமீபத்தில் நடந்த அரபுப் புரட்சியை எடுத்துக்கொள்வோம். எகிப்து நாட்டில் சாலை ஓரத்தில் கடை வைத்திருந்த ஒரு தள்ளுவண்டிகாரரை ஒரு நகராட்சி அதிகாரி அப்புறப்படுத்தினார். அவமானம் தாங்காமல் அந்த கடைக்காரர் தன்னை எரித்துக்கொண்டார். இதனை எதிர்த்து பல அரபு நாடுகள், தங்கள், தங்கள் நாடுகளில் போராடினார்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிதானே !

துருக்கி ஒரு இசுலாமிய நாடுதான்.அங்கு பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறதே. உலக அளவில் சிறந்த சினிமாக்கள் துருக்கியிலிருந்து வெளிவருகின்றன. எனவே இஸ்லாமிய நாடு என்பதால் பிற்போக்குத்தனமானது என நாம் எண்ண வேண்டியதில்லை. மேற்குலக நாடுகளில் நிறவெறி என்ற பிற்போக்குத் தன்மை நிலவுவதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா ! தலிபான்களை வளர்த்து விட்டது அமெரிக்காதானே ! நடக்கின்ற விளைவுகளில் அமெரிக்காவிற்கு பொறுப்பு இல்லையா ?  ஆப்கானிஸ்தானில் மதம் என்பதைவிடவும் இனரீதியான பாகுபாடுதான் அங்கு அதிகம்.

தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம்.  கொரானா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சக மனிதனுக்காக பணியாற்றிய, எண்ணற்ற முஸ்லிம்களை  நாம் அறிவோமே.  இதற்கு குரானும் ஒரு காரணமாக இருக்கலாம். குரான் அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்து வடிவம் : பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time