இன்னுமா பாஜகவின் பாதந்தாங்கிகளாக அதிமுகவினர்..!

- சாவித்திரி கண்ணன்

நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது.

”விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண்  சட்டங்களும் விவசாய வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உகந்ததாக இல்லை. அவை ரத்து செய்யப்பட வேண்டும் என, இந்த சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்”.என்று அதிமுகவிற்கு வேண்டுகோள் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதிமுக இதை இப்போதும் ஏற்க தயங்கினால் எப்படி..?

பன்னீர்செல்வம் என்னென்னவோ ஜால்சாப்பு சொல்கிறார். ”இது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்துங்கள். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது..” என்றெல்லாம் கூறி சமாளிக்க பார்த்தார்.

‘தன்னை விவசாயி என பிரகடனம்’செய்து வேஷம் கட்டிய பழனிச்சாமியோ, இன்று சபைக்கே வராமல் ஊருக்கு ஓடிவிட்டார். முன்பாவது முதலமைச்சர் என்ற ஹோதாவில் அந்த சட்டத்தை ஆதரித்து வந்தார். ஆனால்,தற்போது இந்த சட்டத்தை இன்னும் ஆதரிக்கிறோம் என்றால், சொந்த ஊர் மக்கள் முகத்தில் விழிக்கக் கூட முடியாது என முன்கூட்டியே கணித்த எடப்பாடி உடனே எகிறி ஓட்டம் பிடித்துவிட்டார் ஊருக்கு!

இது போன்ற சிக்கலான விஷயங்களை எப்போதும் எதிர்கொள்வதில் பழனிச்சாமி ஒரு பயந்தாங்கொள்ளி தான்! நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு செல்லாதீர்கள். உங்கள் பதவி பறிபோகும், அவர் ராசியில்லாதவர் என்று யாரோ ஒரு முட்டாள் சொல்ல, அப்போதும் இது போல் ஊருக்கு ஓடிவிட்டார். பன்னீர் தான் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதே போல இன்று சட்டசபையில் விவசாயிகள் விரோத வேளாண் மசோதாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பன்னீர் செல்வம் பதுங்கியும்,வெதும்பியும் பல்வேறு நவரசங்களை வெளிப்படுத்தினார்.

சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் நால்வர் முதலில் வெளிநடப்பு செய்தனர். அவர்களோடு சேர்ந்து செல்லமுடியாமல் தடுமாறிய ஓ.பன்னீர் செல்வம், ”இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்றும், ”அவசர கதியில் முடிவெடுக்கக் கூடாது.  சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.” என்று தீர்மானத்திற்கே தடையாக தன் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார்!

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் துரைமுருகன் , ”ஆட்சியில் இருக்கும்போது வேளாண் சட்டங்களின் சாதக, பாதகங்களை கேட்க எத்தனை கடிதம் எழுதினீர்கள் என கேள்வி எழுப்பினார். வேளாண் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என கூறும் நீங்கள் சட்டத்தை எதிர்த்து ஏன் தீர்மானம் கொண்டுவரவில்லை.இப்போதாவது ஆதரிக்கலாமே’’ என்றார்.முதல்வர் ஸ்டாலினும், ”அதிமுகவினர் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும்’’ என வேண்டுகோள் வைத்தார்.

ஆனால்,ஒ.பன்னீர் செல்வமோ, ”அவை முன்னவருக்கு என் நிலைபாடு என்னவென்று தெரியும். தீர்மானத்தை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இயலாத நிலையில் இருக்கிறேன்” எனக் கூறிவிட்டு , “நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு” என்று சிவாஜிகணேசன் படத்தின் பாடல் வரிகளை பாடினார். இத்துடன் மற்றொரு சிவாஜி படப் பாடலையும் பாடி இருக்கலாம். ”உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை’’ இது இன்னும் சரியாக இருந்திருக்கும்! சந்தர்ப்பவாத சாகஸ அரசியலில் சாதனை செய்து வரும் அதிமுக இந்த ரீதியில் செயல்பட்டால் மக்களிடம் முற்றிலும் செல்வாக்கு இழந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்!

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் துல்லியமாக தோலுரித்து போட்டுவிட்டார். அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கு தரப்படுகிறது;

”கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு எழுச்சிமிகு போராட்டம் நிகழ்ந்தது கிடையாது. இவ்வளவு காலம் நீடித்ததில்லை எனும் சொல்லத்தக்க அளவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசின் மரியாதை இதுதானா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்து நிற்கிறது. இந்தச் சூழலில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நம் நாட்டில் வைத்துள்ளோம். இதன் நோக்கத்தையும் செயல்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு, இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயத்துக்கு, எந்த மாநில அரசோடும் கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது. அதனால்தான்  நிராகரிக்கிறோம்.

இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன. கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைக்கப்படுகிறது. இதனால்தான் இந்த மூன்று சட்டங்கங்களியும் நிராகரிக்கிறோம்.

இந்த மூன்று சட்டங்களும் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் எதிரானவைதான். விவசாயிகள் இந்த நாட்டிலிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நெற்றி வியர்வையைச் சிந்தி தாம் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.

ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை என்பதைக் குறைந்தபட்ச வார்த்தைக்குக்கூட பேசாத சட்டங்கள்தான் இந்த மூன்று சட்டங்களும். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக  சட்டம் 2020, பல ஆண்டுகளாக விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில், பெரும் பங்காற்றிவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நோக்கத்தைக் குறைக்கிறது. மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு இது பெருமளவிலே வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் இந்தச் சட்டத்தினால் மாநில விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பது உறுதியாகிறது.

இரண்டாவதாக, விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. இந்தச் சட்டம் தனியார் கூட்டாண்மை நிறுவனங்களை மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து விடுவிப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது . இந்தச் சட்டத்தினால் லாபகரமான விலையை, விவசாயிகள் பெற முடியாத நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல், தங்கள் நில உடைமை உரிமைகள் பறிபோகும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது விவசாயிகளை விட விளைபொருட்களை வாங்கும் தனியாருக்கே சாதகமாக இருக்கும்.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தடுக்கவும் இச்சட்டத்தின் கீழ் வழியில்லை. இச்சட்டம் விளைபொருளைக் கொள்முதல் செய்யும் தனியாருக்கே சாதகமாக இருக்கும்.

மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. இதன்படி விளைபொருட்கள் சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும். விளைபொருட்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காது. ஆனால், சந்தையில் செயற்கையான விலையேற்றம் ஏற்படும். இந்த சட்டம் மூலம் விவசாயிகள் எவ்விதப் பயனையும் அடையப்போவதில்லை.

இப்படி இந்த மூன்று சட்டங்களுமே வேளாண்மைக்கு எதிரானதாகவும், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்குப் பாதகமானதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த அரசு விவசாயிகளின் நலன்களை  பாதுகாத்திடவும், வேளாண்மைப் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்துள்ள மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும், ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருந்தால் கடந்த கால பாவங்களுக்கான சிறிய பிராயச்சித்தமாக அது அமைந்திருக்கும். ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தன்னிச்சையாகைந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தார். ஆனால், பாமக அன்புமணியோ ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நைசாக அவையில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அதே சமயம் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாமக தற்போது இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது! காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைகட்சி..என பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் போது அதிமுக மட்டும் பாஜகவின் பாதந்தாங்கியாக இன்னும் தொடர்வது வரலாற்று பிழையாகும்!

அன்று ஆட்சி அதிகாரம் நிலைப்பதற்காக பாஜகவை ஆதரித்தார்கள், புரிந்து கொள்ள முடிந்தது! ஆனால், காலமெல்லாம் இனியும் நாங்கள் உங்கள் கொத்தடிமை எனத் தொடர்ந்தால் கட்சி நிலைக்காதே..!

”அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு..? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு..?” என்று உங்களைப் பார்த்து  எம்.ஜி.ஆர் படப்பாடலை பாடி மக்கள் கேட்கும் காலம் வந்துவிட்டது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time