நேரு மட்டுமா காணவில்லை..? வரலாறே காணாமலடிக்கப்படுகிறது..!

-சாவித்திரி கண்ணன்

என்ன பெரிசா நடந்துவிட்டது..? ஜவகர்லால் நேரு புகைப்படம் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் முதல் வரிசையில் இடம் பெறவில்லை..! அவ்வளவு தானே…? இதுக்கே இப்படி குதித்தால் எப்படி.? இன்னும் மகாத்மா காந்தியை விட்டு வைச்சிருக்கோம்..அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..? வீரசாவர்க்கர் போன்ற மகான்கள் வரிசையில் காந்திக்கும் இடம் தரப்பட்ட பெருந்தன்மையை போற்ற வேண்டாமா? பாட புத்தகங்களில் ரவீந்திரநாத் தாகூரையே காலி பண்ணியாச்சு..இன்னும் என்னென்னவோ இருக்கே..!

இந்த ரீதியில் தான் பாஜக அரசு பயணப்பட்டுக் கொண்டுள்ளது..!

இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் என்பது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்! ஐ.சி.எச்.ஆர்., எனப்படும், இந்த கவுன்சில் ஒரு சிறப்பு போஸ்டரை 75 வது சுதந்திர தின நினைவாக வெளியிட்டது. அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், அம்பேத்கர், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், மதன் மோகன் மாளவியா, வீர் சாவர்க்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திர போராட்டத்தின் முன்னணித் தலைவரும், காந்தியின் பிரதான தளபதியும், முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் அதில் இடம்பெறவில்லை.

”காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று சூளுரைத்துள்ள பாஜகவினர், தற்போது நேரு இல்லாத சுதந்திர போராட்ட வரலாறை உருவாக்கப் பார்க்கின்றனர்.


இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது குறித்து, ஐ.சி.எச்.ஆர்.,  நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் ”நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்யவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதல் போஸ்டர்.வரும் நாட்களில் இதேபோல் பல போஸ்டர்கள் வெளியிடப்பட உள்ளன. அவற்றில் நேருவின் புகைப்படம் இடம்பெறும். எனவே இதை சர்ச்சையாக்க நினைப்பது தேவையற்றது..”என கூறியுள்ளார்.

அதாவது, ”ஜவகர்லால் நேரு முதல் வரிசையில் வைக்கத்தக்கவர் அல்ல, இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசைத் தலைவர்களில் அவர் வரலாம். அதற்குள் அவசரப்படுகிறீர்களே” என்கிறார். இந்திய வரலாற்றை எழுதும் நாம் எதிர்த்த பிரிட்டிஷாரே கூட இந்திய விடுதலை போராட்டத்தில் ஜவகர்லால் நேருவின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறைத்து மதிப்பிடவில்லை! ஆனால், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கொத்தடிமை சேவகம் செய்த சிற்றரசர்கள், பண்ணையார்கள் வழி வந்த மரபான பாஜகவினர், நேரு மீது எவ்வளவு வன்மம் வைத்திருந்தால் இவ்வாறு அவரை புறக்கணிப்பர்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நேரு மட்டுமல்ல, மெளலானா அபுல்கலாம் ஆசாத், ராம் மனோகர் லோகியா என எத்தனையெத்தனையோ காந்தியத் தளபதிகளை காலி பண்ணி வருகின்றனர்! இவை இந்திய வரலாற்றுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.

இந்த இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் என்பது உண்மையான, நேர்மையான வரலாற்று அறிஞர்களால் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அது பாஜக ஆட்சியிலோ உலக பிராமணர் சங்கத் தலைவர் எம்.ஆர்.ஷர்மா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்த்தானத்தின் பி.என்.சாஸ்திரி ஆகியோரால் வழி நடத்தப்படுகிறது. மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றவுடன் ஒய்.சுதர்சன் ராவ் என்பவரை இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் பொறுப்புக்கு கொண்டு வந்தார்.தற்போது இதன் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ பின்னணி கொண்டவர்களே. இவர்கள் அனைவரும் தற்போது என்ன மாதிரியான நூல்களை எழுதி கொண்டுவருகிறார்கள் என்பது தனிக் கதை. அதை அவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத் கைகளால் வெளியிட்டு புளகாங்கிதமடைகின்றனர் என்பது தான் கவனிக்க வேண்டியதாகும்!

இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் சுதர்சன் ராவ் ஒரு முறை, ‘’இந்திய வரலாற்றை எழுத நாம் ஆய்வுகளையோ, ஆவணங்களையோ, கல்வெட்டுக்களையோ நம்பி இருக்க வேண்டியதில்லை. நமது ஹிந்து புராணங்களே போதுமானது’’ என்று பகிரங்கமாக பேசினார். பள்ளி, கல்லூரி பாடதிட்டங்களில் வேதங்கள், உப நிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்களை சேர்க்கவும் வழி சமைத்தார். இதைத் தொடர்ந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியதை நாம் அறிவோம்!

என்.சி.ஆர்.டி வரலாற்று பாடதிட்டத்தில் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்தக் கூடாது என்று 100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்று அறிஞர்கள் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதியதை மறக்க  முடியாது! குறிப்பாக ரோமிலா தாப்பர், முகுல்கேசவன் மற்றும் டெல்லி, பஞ்சாப், டொராண்டோ மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதி கண்டித்தனர்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், உத்திரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேச பள்ளிப் பாட புத்தங்களில் இருந்த ரவீந்திரநாத் தாகூரையே காணாமலாக்கிவிட்டனர். அவர் தான் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர். அவரையே புறக்கணித்தாயிற்று! மாபெரும் சுதந்திரப் போராட்டத் தளபதியும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகவும் இருந்து இந்தியாவின் தரமான உயர்கல்வித்துறைக்கு அடித்தளமிட்ட அபுல்கலாம் ஆசாத்தையே அப்புறப்படுத்திவிட்டோம். அப்புறம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரையும் காலி செய்து விட்டார்கள். அவரது பிறந்த நாளைத் தானே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்..? இது எப்படி சாத்தியமாகும்..? என்றால், சாத்தியப்படுத்திவிட்டார்கள்! அதற்கு தான் தீனநாத் பாத்ரா என்ற வரலாற்று ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

”இராமர் பாலம் இயற்கையாகவே உருவானதா..? அல்லது செயற்கையாக கட்டப்பட்டதா..?” என்பது குறித்த பிரம்மாண்ட ஆராய்ச்சிகளில் பல கோடிகள் செலவழிக்கப்பட்டது.

இன்றைக்கு ஜவகர்லால் நேரு புறக்கணிக்கப்பட்டதற்காக நாம் குரல் கொடுக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் மகாத்மா காந்தியே கூட காணாமல் போகலாம். அல்லது கடைசி வரிசைக்கு தள்ளப்படலாம். இன்னும் பல ஆண்டுகள் இவர்களை ஆளவிட்டால், ராமரும், கிருஷ்ணரும் இந்த கலியுகத்தில் பிறப்பெடுத்து வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார்கள்! அவர்கள் விட்ட அம்புகளாலும், அஸ்திரங்களாலும் தான் பிரிட்டிஷார் ஓட்டம்பிடித்தனர், அப்போது பாரத மாதா வானத்தில் இருந்து பூமாரிப் பொழிந்தாள்!’’ என்று கூட வரலாற்றை மாற்றி எழுதிவிடுவார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time