சசிகலா விடுதலையும்,சில கேள்விகளும்!

-சாவித்திரி கண்ணன்

ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கும் பாஜக திட்டத்தின் ஒரு அம்சமாகத் தான் சசிகலா ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். ஆட்சி காலம் முடியும் தருவாயில் வரவுள்ள தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்கும்,அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் ஒன்றுபடுவதற்குமான சசிகலா தேவை என பாஜக கருதுவதாகத் தெரிவதால்….சட்டம், நீதி என எதையும்…பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் அது எப்படி தொடர்ந்து மீறிவருகிறது என அலசுகிறது இந்தக் கட்டுரை!

# ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா,ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கைதாகவில்லை!கட்சி தலைவியாக முடிசூட்டிக் கொண்டு, கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முதல்வராக முடிசூட்டிக் கொள்ள முயற்சித்த நிலையில் கைதானார்! சசிகலாவின் கைது அப்போது மக்களால் பரவலாக வரவேற்கப்பட்டது! காரணம்,ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவின் பங்கு இருக்கலாம் என மக்கள் சந்தேகப்பட்டனர்.அத்துடன் ஜெயலலிதாவால் அது வரை எந்த பதவியும் கொடுக்காமல் வைக்கப்பட்டிருந்த சசிகலா,ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வராக வேகம் காட்டியதை மக்கள் விரும்பவில்லை!இதை சாதகமாக்கிக் கொண்டது பாஜக அரசு! சசிகலாவின் தலையீடு இல்லாத அதிமுக ஆட்சியை பாஜக விரும்பியது.

# பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் தரப்பட்டதும்,அவர் ஷாப்பிங் சென்று வருமளவுக்கு உரிமை பெற்று இருந்ததும்,எந்த நேரமும் அவரை விசிட்டர்கள் சந்திக்கும்படியான நிலைமைகள் இருந்ததையும் கர்நாடக டி.ஐ.ஜி ரூபா அம்பலப்படுத்தினார். அதற்காக சசிகலா கூடுதல் டிஜிபி சத்ய நாராயணாவிற்கு ரூபாய் இரண்டு கோடி கொடுத்ததையும் ரூபா அம்பலப்படுத்தினார்.இது விசாரணையிலும் உறுதிபடுத்தப்பட்டது. ஆனால், இது வரை சசிகலா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியாயப்படி இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிந்திருக்க வேண்டும்!

# இதைக் காரணம் காட்டி பாஜக சசிகலாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியதாக தான் தெரிகிறது. இத்தனைக்குப் பிறகும் நன்நடத்தை விதிகளின்படி சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உண்டு என ஊடகங்கள் எப்படி எழுதுகின்றன என்று தெரியவில்லை! ஆக,ஒரு குற்றத்திற்கான தண்டனையும்,மன்னிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் லாப, நஷ்ட கணக்கை பொறுத்தது என்ற புதிய நீதியை பாஜக எழுதி வருகிறது! அதற்குதக்க ஊடகங்களும் ’லாபி’ செய்கின்றன!

# ஜெயிலுக்குள் இருந்த நிலையிலேயே, சசிகலாவால் போயஸ்கார்டனில் மிகப் பெரிய பங்களா கட்டமுடிகிறது என்றால்,அதற்குரிய பல்வேறு அனுமதி சான்றிதழ்களை தந்து தமிழக அரசும் ஒத்துழைத்து வருகிறது என்று தான் அர்த்தம்! இவ்வளவு பெரிய பங்களாவை கட்டமுடிந்த சசிகலா ஏன் பத்துகோடி அபராதத்தை கட்டமுன் வரவில்லை என்பது கேள்வியாக்கப்படவில்லை! அபராதம் விதித்து நான்காண்டுகள் கழித்து கட்டும் நிலையில் அதற்கு வட்டி உண்டா? எனத் தெரியவில்லை.

# சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான மிடாஸ் மதுபான தொழிற்சாலைக்கு டாஸ்மாக் மூலம் தொடர்ச்சியாக அதிக ஆர்டர்கள் தமிழக அரசால் கொடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

# சசிககலா குடும்பத்திற்கு சொந்தமான பல இடங்களில் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றியது மத்திய அரசின் சிபிஐ. ஆனால்,இன்று வரை அதற்கான நடவடிக்கை எதுவுமில்லை என்றால், இதை எப்படி புரிந்து கொள்வது?

# மிகச் சமீபத்தில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி பெறுமானமுள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின! இது என்ன டீலிங்?

# பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சசிகலா விடுதலையில் வெளிப்படையாக அக்கரை காட்டிப் பேசிவருகிறார்.தினகரைப் புகழ்கிறார்.தினகரனுமே கூட பல கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்தாலும் வெளியில் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

# இந்த நாட்டில் பண பலம்,ஆட்பலம்,எதையும் எதிர்கொள்ளும் தைரியம் ஆகியவை இருந்தால் போதும் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும் ஆளும் அதிகாரவர்க்கம் அவர்களோடு கைகுலுக்கத் தயங்காது என்பது மீண்டும்,மீண்டும் நிருபணமாகிறது என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time