ஆசிரியர்களின் சம்பளத்தை திருடும் தனியார் கல்லூரிகள்.!

-மாயோன்

கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..!

திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து  படிப்படியாக குறைக்கப்பட்டு  இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு   பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது.

இதுபோன்ற வருவாய் இழப்பால்   ஒரு கல்லூரி ஆசிரியர் வருவாய் ஈட்ட  பனையேறும் தொழிலில் ஈடுபட்டு,  தவறி விழுந்து இறந்து போன சோகத்தை நாடு அறியும்‌.

இது போன்ற நிகழ்வுகள்   அனவரையும் உலுக்கியுள்ள நிலையில், தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய களம் கண்டனர் ஏ.பி. அருண்கண்ணன்கிஷோர்குமார்சூரியபிரகாஷ் ஆகியோர்.

இருவரும் நண்பர்கள். அருண்கண்ணன், லயோலா கல்லூரி ‘லைவ் ‘நிறுவனத்தின் இயக்குநர். கிஷோர் குமார் சூரியபிரகாஷ் அமெரிக்காவில் உள்ள மகாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர்.

தங்களுடைய  களப் பணிகள் மற்றும் ஆய்வு முடிவுகள் குறித்து நண்பர்கள் இருவரும் நம்முடைய “அறம் இணையதள இதழுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

“கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்ட ஊரடங்கு  “திடீர்”என  அறிவிக்கப்பட்டபோது தினக்கூலி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக முடங்கிப் போயிற்று. சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர், சேப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும்  குடிசை வாசிகள் சிலருக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்தோம். அவர்களில்  வேலை இழந்த 70 சதவீதம் பேர் கந்து வட்டி, மற்றும் தண்டலுக்கு பணம் வாங்கி துன்பப்பட்டனர்!

கொரோனா முதல் அலையின் போது தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதி  அப்பகுதியில் கணிசமான  மக்களுக்கு கிடைக்கவில்லை.

முறைசாரா மக்களின் வாழ்க்கை நிலை குறித்து அப்போது ஓர் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டோம்.

அதே போல தனியார் கல்லூரி ஆசிரியர்கள் குறித்து ஒரு கள ஆய்வை மேற்கொள்ளத் தோன்றியது. அந்த அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்தில் 14 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின்போது 194 தனியார் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களிடம் பேசினோம்.

இவர்கள் அனைவரும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்.

எங்களுடைய கணக்கெடுப்பில் பங்கேற்ற 194 ஆசிரியர்களில் 137 பேர் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டி உள்ள தகுதிகளை (பிஎச்டி அல்லது நெட் ) பெற்றவர்கள்).

இவர்களில் 72 சதவீத ஆசிரியர்கள் மாதம் ரூ 25 ஆயிரத்துக்கும் குறைவாகவும் 5.1 சதவீதம்பேர் ரூ 10 ஆயிரத்துக்கும் குறைவாகவும் சம்பளம் பெறுவதாக தெரிவித்தனர்.

பிஎச்டி படிக்கும் ஒருவருக்கு மாத உதவித் தொகையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது ரூபாய் 32.000 ஆகும். மத்திய அரசின் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி உதவி பேராசிரியர்களுக்கான ஆரம்பகட்ட மாத சம்பளம் ரூ 76, 809 ஆகும்.இதற்கும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கு முள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ளதைப் போன்றதாகும்.

கொரோனா ஊரடங்கின் விளைவாக பல துறைகள் கடுமையாக பாதிக்கப் பட்டாலும், கல்வித்துறை வருமானத்தை தக்க வைத்துக் கொண்டது என்றே சொல்லலாம். தனியார் கல்லூரிகளும், பள்ளிகளும் இணைய வழிக் கல்வி முறைக்கு உடனடியாக தங்களை  மாற்றிக் கொண்டுவிட்டன.

இணையவழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து முழு கல்வி கட்டணத்தை வசூலித்து விட்டன.

தனியார் கல்லூரிகளில் பெரும்பாலானவை ஆசிரியர்களை சக்கையாக பிழிந்து வேலை வாங்குகின்றன.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, அவர்களிடமிருந்து கட்டணத்தையும் வசூலித்து வாங்கச் சொல்கின்றன.

இதன் காரணமாக ஒரு தனியார் கல்லூரியின் வருமானத்தை எங்களால் கணக்கிட முடிந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு  முன்பு மாணவர்களிடமிருந்து கட்டணமாக அந்தக் கல்லூரிக்கு கிடைத்தது ரூ 10 கோடி. தொற்றுக்குப் பிறகும் ரூபாய் 9 கோடி வசூலாகியுள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ 3 கோடி கொடுக்க வேண்டும். ஆனால் வருவாய் குறைந்ததை காரணம் காட்டி பாதி சம்பளம் தான் கொடுத்துள்ளனர்.  கல்லூரியில் வகுப்புகள் செயல்படாததால் மற்ற பராமரிப்பு செலவுகள் பெரிதாக எதுவும் இல்லை. அப்போதும் கூட அந்த நிர்வாகம் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டுள்ளது. இதை “ஒரு வகையான திருட்டு” என்றே சொல்லலாம். ஆசிரியர்களின் சம்பளப் பணத்தை அந்த கல்லூரி முதலாளிகள் திருடியுள்ளனர். இதுபோல பல கல்லூரி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அநீதி இழைத்ததை அறியமுடிந்தது.

ஒருபக்கம் சம்பள குறைப்பு இருக்க, இன்னொருபுறம் வேலை நீக்கமும் நடைபெற்றுள்ளது. நாங்கள் சந்தித்த ஆசிரியர்களில் 7 சதவீதம் பேர் வேலை நீக்கத்துக்கு ஆளானதாக தெரிவித்தனர். அதிகம் சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களை குறிவைத்து வேலையில் இருந்து தூக்கியுள்ளனர். இதிலிருந்து தனியார் கல்லூரி நிர்வாகிகளின் “அடிப்படை நோக்கம் பணம்” தான் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

தனியார் கல்லூரி ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர். கணக்கெடுத்த 194 ஆசிரியர்களில் 132 பேர் தொலைபேசி, கணினி ,மற்றும் ஹெட்போன் போன்ற கருவிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை தங்களது சொந்த செலவிலேயே வாங்கியதாக தெரிவித்தனர்.

இணைய வசதியின்மை, இடப்பற்றாக்குறை, தரமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமை போன்ற காரணங்களால் இணைய வழி கற்பித்தலில் பெரும் சிரமம் இருந்ததாகவும் இதன் விளைவாக மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் 107 ஆசிரியர்கள் தெரிவித்தனர். வருகிற வருமானமும் போய்விடக்கூடாது என்பதற்காக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இணைய வழி கற்பித்தல் சேவையை செய்துள்ளனர்.

இத்தகைய சூழலில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பெற்றது சம்பளக் குறைப்பு என்ற தண்டனை!

194 ஆசிரியர்களில் 65 பேர் மட்டுமே கடந்த கல்வியாண்டில் முதல் ஆறு மாதத்தில் முழு சம்பளம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மே ஜூன் ஆகிய 3 மாதமும் 10 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. வீட்டு வாடகை ,மளிகை பொருட்கள் ,குழந்தைகளின் கல்விக்கட்டணம் சஆகியவற்றுக்கு அவர்கள் எங்கே போவார்கள்? என கல்லூரி நிர்வாகங்கள் கொஞ்சங்கூட யோசிக்கவில்லை.

இதனால் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வட்டிக்கு பணம் வாங்கி  வாழ்க்கையை நடத்துகின்றனர். பகுதி நேர வேலையாக  உணவு மற்றும் பல் பொருட்கள் வினியோகிக்கும் வேலையை செய்கின்றனர்.

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள மொத்த கல்லூரிகளில் 65% கல்லூரிகள் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகள் ஆகும்.

இந்த புள்ளி விவர அடிப்படையில் இருந்து  உற்று நோக்கினால் இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக உள்ளது என்பதை உணர முடியும். இந்தப் போக்கிலேயே இதை அனுமதித்தால் மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும்.

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்காக  2018-ஆம் ஆண்டில் கேரள அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு நாளொன்றுக்கு  ரூபாய் 1,750 வீதம் மாதத்திற்கு 43, 750-ம் யுஜிசி -ன் தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 1,600 வீதம் மாதம் 40 ஆயிரம் அடிப்படை சம்பளமாக தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோன்ற சட்டத்தினை தமிழக அரசும் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1976 -ஐ மறுபரிசீலனை செய்து, இந்த காலச் சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும்.தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடல்நல காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு ,பணி பாதுகாப்பு போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

தகவல் தொடர்பு  நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு முறையிடுவதற்கு தொழிலாளர்  ஆணையம் உள்ளது போல தனியார்  கல்லூரிஆசிரியர்களுக்கென்று  ஒரு அமைப்பு வேண்டும்.  எனவே இவர்களின் நலனை பாதுகாக்க,கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் பிராந்திய கல்லூரி கல்வி இணை இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்த உரிய சட்டம் வேண்டும்.

இந்த ஆய்வு மூலமாக தமிழக அரசு உடனடியாக செய்யவேண்டியதாவது:

# தனியார் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளப் பிடித்தம் முழுவதும் திருப்பி அளிக்க வேண்டும்.

# நியாயமே  இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

# இணையவழி கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் செய்த செலவை ஏற்க வேண்டும்.

அரசு  கல்லூரிகள் மற்றும் அரசுஉதவி பெறும் கல்லூரிகளை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக தனியார் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களை கணக்கிட்டு, ஒழுங்கு படுத்துவதற்காக ஒரு நிபுணர் குழுவை அரசு நியமிக்க வேண்டும். தனியார் கல்லூரிகள் தொடர்பான பல வழக்குகளில் நீதியரசர் சந்துரு ,அரிபரந்தாமன் போன்றோர் வழங்கியுள்ள தீர்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

காமராஜர் ஆட்சியை பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக கூறமுடியும். முதல் இரண்டு முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்த உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அவை அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உயர்கல்வி துறை வளர்ச்சியில் அது ஒரு பொற்காலம் ஆகும். அதன்பிறகு புற்றீசல்கள் போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகியுள்ளன. அவற்றை தொடங்கியவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் வணிக நோக்கு கொண்டவர்கள். இதன் விளைவாக கல்வி கற்றலில் எண்ணிக்கை இங்கு பெருகி இருந்தாலும் தரமான கல்வி கிடைத்ததா என்பதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

குறைந்த சம்பளம்,அதிக வேலைப்பளு, மன உளைச்சல், பணி பாதுகாப்பின்மை இப்படியான நிலையில் ஆசிரிய சமூகத்தை அழுத்தி வைத்தால் அவர்களிடம் இருந்து நிறைவான திறனை எப்படி எதிர்பார்க்க முடியும்.?

அவர்களால் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க முடியுமா?

இது நீரு பூத்த நெருப்பு.சமூகத்தில் புகைந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை. அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக உருவாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.!” இவ்வாறு அவர்கள் கூறினர்.

இப்பிரச்சினை தொடர்பாக சென்னை பல்கலைக்கழக தமிழ் துறையின் முன்னாள் தலைவர், பேராசிரியர் வீ. அரசு தெரிவித்த கருத்து:

” தமிழக அரசின் உயர் கல்வித் துறையில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிறைய இடங்கள் காலியாக உள்ளன.  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  தலைமையிலான புதிய அரசிடமிருந்து இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பு இருக்கிறது.

பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் 2,000 நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடர்ந்து உயர் கல்வி துறைக்கும் இது போன்ற அறிவிப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

1990 களின் இறுதியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது  பள்ளிக் கல்வித் துறையில் ஒரு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்தனர். கல்லூரிகளுக்கும் இதே போன்ற அமைப்பை உருவாக்கி ஆசிரியர் தேர்வு நடைபெற்றது.

அந்த அணுகுமுறையால்  சிறந்த ஆசிரியர்கள் பலர் உயர்கல்வித் துறைக்கு கிடைத்தனர். என்னிடம் பயின்ற மாணவர்கள் பலர் அந்த சமயத்தில் கல்லூரி ஆசிரியர்களாக நியமனம் பெற்று, இப்போது  சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

2001இல்  ஜெயலலிதா அம்மையார்  மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட  அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

ஓர் ஆசிரியர் அப்பணியை விரும்பி செய்பவராக இருத்தல் வேண்டும். வாசிப்பதில் பேரார்வம் பெற்றிருத்தல் மிகவும் அவசியம். தனித்திறமை கொண்டவராக, மாணவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்ததொரு கல்வி அவர்களுக்கு கிடைக்கும் வகையில், வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டும்.

2006 -ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் தேர்வுமுறையை கைவிட்டு ,  பணிக்கால அனுபவ அடிப்படையில்  தேர்வு செய்தனர். இந்த அணுகுமுறை உரிய பலனைத் தரவில்லை.

பழையபடி ஒரு வாரியம் அமைத்து, ஆசிரியர்களை தேர்வு செய்வதே சிறந்த வழிமுறையாக இருக்கும் என்பது கடந்த கால அனுபவம் தரும் பாடமாகும்.

2013 க்கு பிறகு , அதிமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு நிலையான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையை கைவிட்டனர். அதற்கு பதிலாக கௌரவ ஆசிரியர்களை ஆயிரக்கணக்கில் தேர்வு செய்தனர். கல்லூரி முதல்வர்கள் பலர் தங்களுக்கு வேண்டியவர்களை சேர்த்தனர்.

இப்படிப்பட்ட தேர்வு முறையால்  தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பார்களா?. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பழைய முறைப்படி தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து , பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நடத்தப்படும் விதம் கொரோனா காலத்தில் அம்பலத்திற்கு வந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் அமைப்பாக AICTE  உள்ளது.  தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தவும்  சட்டம் உள்ள போதிலும், காலமாற்றத்திற்கு ஏற்ப   புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும். அதில் தனியார் கல்லூரி ஆசிரியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து, பணி மற்றும் சமூக பாதுகாப்பை   உறுதிபடுத்த வேண்டும். இதன் விளைவால்  மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்’’ என்றார் பேராசிரியர் வீ. அரசு.

கட்டுரையாளர்; மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time