போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க பிரஸ் கவுன்சில் தீர்வாகுமா..?

-சாவித்திரி கண்ணன்

யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களாக வரலாம்! அவர்களுக்கு பொது நலன் சார்ந்த நோக்கம்  வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனை. ஆனால், பத்திரிகையாளர் என்பதையே ஒரு அதிகாரமாகவும், தரகு வேலையாகவும், பிடுங்கி தின்னும் பிழைப்பாகவும் பயன்படுத்துவர்கள் இத் துறையில் பெருகி வருவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தானது. அந்த வகையில் பிரஸ் கவுன்சில் இதற்கெல்லாம் தீர்வாக அமையுமா என்று பார்க்க வேண்டும்.

போலி பத்திரிகையாளர்களை களை எடுக்க, பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் புற்றீசல் போல அமைப்புகள் தோன்றுவதற்கு முற்றுபுள்ளி வைக்க, அங்கீகாரமுள்ள பத்திரிகையாளார் அமைப்புகளில் முறையாக தேர்தலை நடத்த ‘பிரஸ் கவுன்சில்’ என்ற அமைப்பை மூன்று மாதங்களுக்குள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில்  அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. .

இது பத்திரிகையாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமையை தடுப்பதை போல உள்ளது. பத்தாயிரம் பிரதிகளுக்கு குறைவாக விற்பனையாகும் பத்திரிகைகளையோ, அதில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களையோ பிரஸ்கவுன்சில் அங்கீகரிக்காது என்பதும் விவாத பொருளாகியுள்ளது.

குறிப்பாக நாற்பதாண்டுகால மூத்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார்.

”பத்திரிக்கையாளர் சங்கம் பத்திரிக்கை ஊழியர்களின் உரிமை காக்க அமைக்கப்படுபவை. ஒரு தொழிலுக்கு ஏழு பேர் இருந்தால் சங்கம் வைத்துக் கொள்ள முடியும் என்பது தொழிலாளர் நலச் சட்டத்தின் பிரதானப் பகுதி. அந்த சட்டமே பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கும் பொருந்தக்கூடியது. சங்கங்கள் பதிவு என்பது தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே பொது விதி. இதில் பிரஸ் கவுன்சில் தலையிடக் கூடாது’’ என்பதாக ஜேம்ஸை போன்ற சிலர் வாதம் வைக்கின்றனர்.

நல்லது ஏழு பேர் சேர்ந்தால் ஒரு சங்கம் உருவாக்கி கொள்ளலாம் தான். ஆனால், அந்த ஏழு பேரும் சம்பந்தப்பட்ட துறையில் இயங்குபவர்களா..? இல்லையா..?அவர்கள் எந்த பத்திரிகைகளில் என்ன பொறுப்பில் உள்ளனர் போன்றவற்றை சரியாக உறுதிபடுத்த தொழிலாளர் நலத்துறைக்கு போதுமான அனுபவமோ, நேரமோ இருப்பதில்லை. இன்னும் பலர் சொசைட்டி ஆக்டில் பத்திரிகையாளர் அமைப்புகளை பதிவு செய்துள்ளனர். பத்திரிகைதுறையில் இல்லாதவர்களும் கூட பத்திரிகையாளர் பெயரில் சங்கங்களை, அமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றனர். சமூக விரோத செயல்களை செய்பவர்களுக்கு இந்த பத்திரிகையாளர் அமைப்புகள் தரும் அடையாள அட்டைகள் ஒரு பாதுகாப்பு கேடயமாக ஆகிவிடுகிறது. அவர்களில் சிலர் சில நூறு பிரதிகள் மட்டும் பத்திரிகைகளை அச்சடித்துக் கொண்டு அதை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், எம்.எல்.ஏ ஹாஸ்டல்களிலும் விநியோகித்துவிட்டு பத்திரிகையாளர் என்ற ஹோதாவில் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் நெருக்கம் பாராட்டிக் காரியங்களை சாதிக்க ‘ஒரு துருப்பு சீட்டாக’ பத்திரிகைதுறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி, பல பொது நிகழ்வுகளில் அழையாத விருந்தாளியாக தாங்களே வந்து கலந்து கொள்வதோடு, அதை செய்தியாக போடுவதற்கு பணம் தர வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு கெஞ்சுகின்றனர். பணம் தராதவர்களை அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் பொது வெளியில் பத்திரிகையாளர் என்ற உன்னதப் பணிக்கான மாண்பே சிதைகிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டாமா..?

1985 ல் பத்திரிகை துறைக்கு வந்தேன். இருபது,முப்பது வருடங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் என்றால், பொது மக்களிடம் வெளிப்பட்ட மதிப்பும், மரியாதையும் மட்டுமின்றி ஒருவித கிரேசும் இன்றைக்கு மறைந்து போய்விட்டது. பத்திரிகையாளர்களுக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பெரும் தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் என பலரிடமும் நெருங்க வாய்ப்பிருந்தாலும், எல்லா இடங்களிலும் தாமரை இலைத் தண்ணீரைப் போல உறவுகளை மிக எச்சரிக்கையோடு பேணுவோம். பணத்தாசைக்கோ, அதிகார ஆசைக்கோ ஆட்படாத மனநிலையோடு வலம் வருவோம்.

பத்திரிகை துறை என்பது சரியான தகவல்களை மக்களுக்கு கொண்டு போகக் கூடிய கடமையை செய்யும் ஒரு துறை அவ்வளவு தான்! சில சமயங்களில் அது மக்களுக்கும் அரசின் நிர்வாகத்திற்கும் ஒரு பாலமாக உள்ளது! எனவே அரசை – அதிகாரமிக்க நிர்வாகத்தை – நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத மக்களின் பிரதிநிதியாக பத்திரிகையாளன் தன்னை உணர வேண்டும். அவர்களின் குரலாக வெளிப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்திற்கு மேல் வேறு எண்ணமில்லாமல் தான் என்னைப் போன்றவர்கள் இதழியல் துறைக்கு வந்தோம்.

ஆனால், தற்போது பத்திரிகை துறையில் மிகத் தவறானவர்கள் அதிகம் பேர் புற்றீசல் போல வந்துவிட்டதால் அதை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. இல்லையென்றால், பத்திரிகை துறை மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து தளங்களையும் இது பாதிக்கும்.

அடையாள அட்டை, தினசரி பத்திரிகை நிருபர்களுக்கும், போட்டோ கிராபர்களுக்கும் தான் தேவைப்படும். ஆனால், பின்னர் அது பருவ இதழ்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது! நான் நான்கு வருடம் இந்த அடையாள அட்டை வழங்கும் கமிட்டியில் இருந்தேன். அப்போது குழந்தைகள் பத்திரிகை, மகளிர் பத்திரிகை, இலக்கிய இதழ் ஆகியவற்றுக்கு இவை எந்த விதத்திலும் அவசியமில்லை என வலியுறுத்தினேன். அத்துடன் எப்போதோ வந்து நின்று போன பத்திரிகைக்கும் இந்த அடையாள அட்டை கேட்பார்கள். அதையும் கண்டுபிடித்து கறாராக நிராகரித்தேன். பயன்படுத்த அவசியமில்லாதவன் கையில் கத்தியை தரக் கூடாது. தந்தால் அது ஆபத்தில் தான் முடியும். அது போல அரசின் அடையாள அட்டை அவசியமில்லாதவர் கைகளுக்கு கிடைத்தால், அதை அவர்கள் மிஸ்யூஸ் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

சிறு பத்திரிகைக்கு பிரஸ் கவுன்சில் அங்கீகாரம் தராவிட்டால் தான் என்ன..? அது அதனளவில் தன் வாசகர்களின் ரசனைக்கும், அறிவுக்கும் விருந்தளித்து வாசகர்கள் அங்கீகாரத்துடன் நடந்தால் அதைவிட வேறென்ன வேண்டும்…?

பிரபல பத்திரிகை, பெரிய பத்திரிகை என்பதிலும் கூட மோசமான சமூக விரோத புத்தியுள்ள பத்திரிகையாளர்கள் உண்டு. புகழ் பெற்றுவிட்டதாலேயே ஒரு பத்திரிகையாளர் யோக்கியமானவர் என்று நம்பவும் வழியில்லை. சமூகத்தின் கண்களுக்கு பெரிய பத்திரிகையாளனாக தோற்றம் காட்டுபவர்கள் எல்லாம் நேர்மையாளர்களாக இருந்து விடுவதுமில்லை. ‘நேர்மையாக தோற்றம் காட்டுகின்ற போலிகள்’ அதிகமாக உள்ள துறைகளில் பத்திரிகைதுறை பிரதானமானது. வெளியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் லட்சியம் சார்ந்து இயங்கிய – இயங்கி கொண்டுள்ள – பத்திரிகை உலக ஜாம்பவான்களும் உண்டு!

பத்திரிகை நிர்வாகங்களே இன்று முது கெலும்பில்லாமல், கோழைகளாகவும், சுயநலமுள்ளவர் களாகவும் உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு இவர்கள் கெளரவமான சம்பளமும் தருவதில்லை. அதனால், பத்திரிகையாளர்கள் வெளியில் கையேந்தும் நிலையை இவர்கள் உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ள முடியாது. பத்திரிகை நிர்வாகங்களை கண்காணித்து நியாயமான ஊதியம், பணி பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் கூட பிரஸ் கவுன்சில் உறுதிபடுத்தலாம்.

”பத்திரிகையாளர் கிளப்புகள் மற்றும் சங்கங்கள், அவற்றின் நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்தி ஒப்புதல் அளிக்கும் கடமையும் பத்திரிகை கவுன்சிலுக்கு இருக்க வேண்டும்.”  என்பதையும் வரவேற்போம்.

ஏனெனில், இன்று அங்கீகரமுள்ள பத்திரிகையாளர் அமைப்புகளிலும் கூட முறையாக தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஒரு சிலர் தன்னை நிரந்தரத் தலைவர்களாக, செயலாளர்களாக கருதி அராஜகமாக இயங்கி வருகின்றனர். இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

பிரஸ் கவுன்சில் தலைவராக வரும் ஓய்வு பெற்ற நீதிபதியும், உறுப்பினர்களும் பாரபட்சமில்லாத கறார் தன்மையுடன் மட்டுமின்றி, பத்திரிகை துறை பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே போலி பத்திரிகையாளர்களையும், போலி பத்திரிகையாளர் சங்கங்களையும் களை எடுக்க முடியும்.

”பிரஸ் கவுன்சில் தான் அனைத்தையும் கட்டுப்படுத்தும் கண்காணிக்கும் தண்டனை வழங்கும் என்பது சர்வாதிகாரத்தின் தொனி. ஜனநாயக உரிமைகளை குழி தோண்டி புதைக்கும்.’’ என்பதெல்லாம் மிகைபடுத்தப்பட்ட பயம். நேர்மையாக இயங்கும் பத்திரிகையாளர்களுக்கு இது தேவையற்றது. ஒரு அமைப்பை உருவாக்கும் போது அதற்கு உரிய அதிகாரம் தரப்பட வேண்டும். அதிகாரமில்லாத அமைப்பு பயனற்றதாகிவிடும். அது சர்வாதிகாரமாக செயல்பட்டால், அப்போது அதற்கு எதிராக குரல் தரலாம். நல்லதொரு ஆரம்பத்திற்கு முதலில் வரவேற்பு தருவோம். பிரஸ் கவுன்சில் மட்டுமே அனைத்துக்கும் தீர்வாகிவிடாது. ஆனால், இதுவும் இல்லையென்றால் பத்திரிகை துறை சீரழிவுகள் உச்சத்திற்கு போய்விடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time