தேச சொத்துக்களை விற்பதா..? எதிர்கட்சிகள் போர்க்கோலம்..!

ச.அருணாசலம்

அரசாங்க சொத்துக்களையெல்லாம் தங்கள் ஆத்மார்த்த நண்பர்களுக்கு அள்ளி எடுத்து தந்து கொண்டுள்ளது பாஜக அரசு. தேசீய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் -பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு கொடுப்பதன் மூலம்-திரட்டப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிராக இன்று தமிழக சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஒன்றிய அரசின் சமூக விரோத செயல்பாடுகளை யார் தடுப்பது,எப்படி எதிர்ப்பது என இந்தியாவே திகைத்து நிற்கையில். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழகம் எந்த வகையில் எல்லாம் பாதிக்க வாய்ப்புள்ளது என செல்வ பெருந்தகை தெளிவாக விளக்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ”பொதுச்சொத்துக்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது. அது தேசத்தின் ஆணி வேராகும். பொதுதுறை நிறுவனங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மிக சமீபத்தில் தான் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் தமிழக விவசாயிகள் நலனை விட்டுகொடுக்க முடியாது என பேசினார். அடுத்ததாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவது குறித்த தெளிவான முடிவை காங்கிரசோடு கைகோர்த்து திமுக பேசியுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காகவே நிதி திரட்டப்படுகிறது, அதற்காகவே இந்த பணமாக்கும் (Monetization) திட்டம் கொண்டுவரப்படுவதாக நிதிஅமைச்சர் அறிவித்தார்.

இதன்மூலம், 2021 முதல் 2025 வரையான நான்காண்டுகளில் ஒன்றிய அரசு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான தேசீய நெடுஞ்சாலை துறை,ரயில்வே துறை, விமான தளங்கள் மற்றும் கண்காணிப்பு துறை, துறைமுகங்கள் , அதன் கண்காணிப்பு துறை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துறை எரி வாயு குழாய் குழுமம்சுரங்கத்துறை ஆகியவற்றின் அடிப்படை கட்டுமான சொத்துக்கள் மற்றும் திட்ட சொத்துக்களை தனியாருக்கு ‘தாரை வார்ப்பதன்’ மூலம் ‘அதிகப்படியான வருமானம்’ ஈட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.  நிதி ஆயோக் கின் செல்லக்குழந்தையான இத்திட்டம் பிரதமர் மோடியின் முத்திரையோடு வெளிவந்துள்ளது!

சரி, எந்தெந்த துறைகளில் இருந்து எவ்வளவு பணம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது?  .

தேசீய நெடுஞ்சாலை-  1.6 லட்சம் கோடி , ரயில்வே  –  1.5 லட்சம் கோடி, மின் பகிரமானம்  45,200 கோடி, மின் உற்பத்தி.  39,832 கோடி, எரிவாயு.   24,462 கோடி,தொலைதொடர்பு.  35,100 கோடி, சேமிப்பு கிடங்குகள்.  28,900 கோடி, கனிமவளம்மற்றும் சுரங்கம் 28,747 கோடி, விமான தளம் மற்றும் நிலையங்கள் 20,782 கோடி,துறைமுகங்கள்   12,828 கோடிவிளையாட்டு அரங்கம் 11,450 கோடி, நகர்ப்புற முக்கிய சொத்துக்கள் 15,000  கோடி  இவ்வாறாக பணம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

 

இது எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் என்ற விஷயத்திற்குள் போகுமுன்னர் , இந்நடவடிக்கை பற்றி மற்றோரின் கருத்து என்ன, குறிப்பாக பிரதான எதிர்கட்சிகாங்கிரஸ் மற்றும் பிற எதிர்கட்சி முதல்வர்கள் என்ன கூறுகின்றனர்?

” நாட்டில் எழுபது ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்துவந்த பொது சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. தனியார் ஏகபோகத்தை ஊக்குவிப்பதாகவே இத்திட்டம் உள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ ,  ” இது மோடியின் சொத்துக்களல்ல, இந்திய மக்களின்-நாட்டின் சொத்து! இது நாடு பற்றிய விவகாரம், பாஜக கட்சி விவகாரமல்ல மோடி தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு” என்று சாடியுள்ளார்.

#  400 ரயில் நிலையங்கள், 90 ரயில் அமைப்புகள்,265 சரக்கு போக்குவரத்து கிடங்குகள்!

#  26,700 கி.மீ நீள நெடுஞ்சாலைகள்!

#  29000 சுற்று கி.மீ உள்ள மின்கடத்தி சொத்துக்கள் ! (power transmission assets)

#  8154  கி.மீ நீள எரிவாயு குழாய் இணைப்புகள்!

#  3950 க.மீ நீள பெட்ரோல் பைப்லைன்ஸ் !

#  6000 மெகாவாட் நீர் மற்றும் சூரியொளி எரிசக்தி சொத்துக்கள்!

#  210,00,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள்!

#  2,86,000 கி.மீ ஃபைபர் கேபிள் மற்றும 15000 டெலிகாம் டவர்கள்!

#  25 விமான நிலையங்கள, 9 துறைமுகங்கள், 2 தேசிய விளையாட்டு அரங்கங்கள்!

இவையெல்லாம்- நமது பலத்தை பறைசாற்றும் பொக்கிஷங்களையெல்லாம்- தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன?

நாங்கள் தனியாருக்கு விற்கவில்லை, அவை அரசிடமே உள்ளது 25 ஆண்டுகள் தனியார் இச்சொத்துகளை வைத்து பணம் பண்ணலாம். ஆனால், சொத்தின் உரிமை அரசிடமே இருக்கப் போகிறது என்று நிர்மலா சீதாராமன் வியாக்கியானம் வேறு அளித்துள்ளார்.

ஒரே உத்தரவில் இந்தியாவின் சக்திவாய்ந்த பொது துறை சொத்துக்களை தனியாரிடம் கொடுப்பதன் மூலம் நாட்டின் மதிப்பை ஜீரோ ஆக்க துடிக்கிறார்கள் மோடியும் நாட்டின் நிதி அமைச்சரும் . இவற்றின் மூலம் வருடம்  ரூ.1,50,000 கோடி குத்தகை பணம் தனியாரிடமிருந்து பெறலாம் என்று கணக்கு போடும் மோடி தற்பொழுது இச்சொத்துக்கள் ஈட்டும் வருட வருமானம் என்ன என்று சொல்லத்  தயாரா?

லாபமெல்லாம் முதலாளிகள் சாப்பிட்ட பின்னர் தேய்ந்து போன சொத்துக்களாக, சக்கையாக பிழியப்பட்ட சொத்துக்களாக குத்தகைக்கு பிறகு ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்படலாம் அல்லது மீண்டும் குத்தகைக்கே விடலாம். இதில் பெருமை என்ன வேண்டிக்கிடக்கிறது? ஏமாற்றப்பட்டவர்கள் இந்திய மக்கள் தானே!

கேந்திர துறை(strategic sectors)  இன்றியமையாத்துறை என்ற எவ்வித பாகுபாடுமின்றி சகட்டுமேனிக்கு அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்தல்என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட பொதுக்கருத்தோ, நிலைப்பாடோ கிடையாது.இவை இந்தியாவில் ஏகபோகத்தை நிலைநாட்டும் செயலன்றி வேறென்ன? தனது கூட்டாளிமுதலாளிகளான அம்பானிக்கும் அதானிக்கும் ரத்தின கம்பளம் விரித்து இந்தியாவை கூறு போட பாதை போடும் வேலையல்லவா?

சந்தை பொருளாதாரம் கோலோச்சும் அமெரிக்கா,பிரிட்டன்,தென் கொரியா போன்ற நாடுகளின் அரசுகள் அவர்கள் நாட்டில் வளர்ந்து வரும் ஏகபோகத்தை கட்டுப்படுத்த போராடுவதைப்பார்த்தும் நாம் பாடம் கற்க வில்லை; மாறாக ஒன்றிய அரசே ஏகபோகத்தை ஊக்குவிக்கும் செயலில் இறங்கியுள்ளது.

உண்மை என்னவென்றால் இந்திய அரசு திவாலா ( Broke)  ஆகிவிட்டது என்பது தான்.

எதனால் இந்த நெருக்கடி? சீராக சென்றுகொண்டிருந்த பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு என்ற மோடியி ன் செயல் நிலைகுலையச் செய்தது, அதனுடன் சேர்ந்து ஜிஎஸ்டி இந்திய பொருளுற்பத்தியையே காலாலிட்டு நசுக்கியது,

150 லட்சம் கோடி ரூபாய் வரியை பெரு முதலாளிகளுக்கு( அம்பானி மற்றும் அதானி போன்றோருக்கு) தள்ளுபடி செய்தது, அதை சரிகட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான அதீத வரிவிதிப்பு ( பெட்ரோல்,டீசல் வரி) போன்ற மோடியின் மேதாவி நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து படுத்துவிட்டது இந்திய பொருளாதாரம்.

இதனாலும் தொடர்ந்து வந்த கோவிட் போன்ற முடக்கங்களினாலும் வாழ்வாதாரங்களை பலிகொடுத்த மக்கள் போதிய வருமானமின்றி தவித்தனர். ஒன்றிய அரசோ அவர்களுக்கு – நாட்டு மக்களுக்கு- உதவ மறுத்ததால் வாங்கும்திறன் குறைந்து , நுகர்வு குறைந்து அதனால் பொருளுற்பத்தி குறைந்து அதன் விளைவாக அரசு வருவாய்  குறைந்தது, அரசின் நிதி பற்றாக்குறை (9.4% of GDP)  பெருகியது அரசின் கடன்சுமையோ ஜிடிபி விழுக்காட்டில் 90% ஆக உயர்ந்தது.

தேள் கொட்டிய திருடன் போல் செய்வதறியாது விழித்த மோடி தனது பாணியில் ரிசர்வ் வங்கியின் இருப்பில் கை வைத்தார் – 170,000/- கோடிரூபாய் ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிடுங்கிக்கொண்டது. பொதுத்துறை நிறுவனங்களின் இருப்பும் சூறையாடப்பட்டது மோடி அரசால்.  இவ்வாறு அரசின் வருவாய் -வரி விதிப்பில்லாத வருவாய் 2014ல் 2.7 விழுக்காடாக இருந்தது. தற்போது 2021ல் 5.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மோடி வித்தைகளினால் இந்திய பொருளாதாரம் சிதைந்த நிலையில் , அரசு நிதி வருமானம் குறைந்து போன நிலையில் ,அரசின் கடன் அதிகரித்த  நிலையில் நிதி பற்றாக்குறை வளர்நத நிலையில் அரசின் செலவினங்களை எதிர்நோக்க எங்கிருந்தாவது பணத்தை புரட்டுவது இன்றியமையாத தேவையாக ஒன்றிய அரசுக்கு மாறிவிட்டது. இதன் விளைவே இந்த பணமாக்குதல் அல்லது காசாக்கும் “திட்டம்” (National monetisation Pipeline- N M P) அறிவிக்கப்படுகிறது.

இந்த ‘காசாக்கும் தந்திரம்’ இரண்டுங்கெட்டான் நடவடிக்கை  . இது , அவர்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை தராது. கண்ணை விற்று சித்திரம் வாங்கிய செயலை ஒத்தது ! அதனால் தான் ஆர் எஸ் எஸ் சார்பு தொழிற்சங்கமான பி எம் எஸ் BMS  கூட இந்நடவடிக்கையை முழு மூச்சாக எதிர்ப்பதுடன்  போராட்டத்தில் இறங்குகிறது.

இதனால் அரசு வருவாய் பெருகப்போவதில்லை. அரசிற்கு எதிர்பார்த்த வருவாய் இதனால் வரப்போவதில்லை, புத்துணர்ச்சியும் தொழில் நுட்பமும் ஆறாக பெருகப்போவதில்லை , வளர்ச்சியும், ஆனந்தமும் மக்கள் வாழ்க்கையில் ஏற்படப்போவதில்லை, ஆனால் அடிமாட்டு விலைக்கு இந்திய மக்களின் சொத்துக்கள் வாரி வழங்கப்பட உள்ளன.இதனால், குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாக இந்தியப் பொருளாதாரம் சிதைக்கப்படுவது உறுதி.

மோடி அரசின் செயல் நாட்டையும் நாட்டு மக்களையும் இருண்ட காலத்தை நோக்கி இழுத்துச்செல்கிறது . பொது சொத்துக்களை தங்களது லாப வேட்டைக்கு ஆளாக்க துடிக்கும் அம்பானிகளும் அதானிகளும் அதற்கு கொடுக்கின்ற விலை பிச்சை காசுதான். ஆமாம், அவர்கள் அரசிற்கு தரப்போவது அரசின் மதிப்பில் (6 லட்சம் கோடி) ஐந்தில் ஒரு பகுதி கூட கிடையாது. மக்கள் அடையப்போகும் துன்பங்களோ ஏராளம்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம் 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time