அடையாள அரசியலா..? அர்த்தமுள்ள முன்னெடுப்பா..?

-சாவித்திரி கண்ணன்

எப்போதோ அமைக்கப் பட்டிருக்க வேண்டியது! என்றோ கொண்டாடப்பட்டு இருக்க வேண்டியவர்! என்றென்றும் நாம் நினைவில் வைத்து பின்பற்றத் தக்க முன்னோடி அயோத்திதாசருக்கு தற்போது தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க போவதாக அறிவித்து உள்ளது!

தமிழ் நாட்டின் மாபெரும் பகுத்தறிவு சிந்தனையாளர், புரட்சியாளர்,மானுட தர்மத்திற்காக வாழ்ந்தவர், மனு தர்மத்தை எதிர்த்த தீரர். முன்னோடி பத்திரிகையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மிக, மிக காலதாமதமாக தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது என்றாலும், இப்போதாவது – அவரது 175 பிறந்த ஆண்டிலாவது சாத்தியப்பட்டுள்ளது – என்பதில் – மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையான பேரறிஞர்கள் காலம் கடந்தேனும் உணரப்படுவார்கள் என்பதற்கு திருவள்ளுவரும், திருக்குறளுமே அத்தாட்சி! திருவள்ளுவரையும், திருக்குறளையும் இருட்டடிக்க தமிழகத்தில் நடந்த முயற்சிகள் கொஞ்சமா..? நஞ்சமா..?அயோத்திதாசருக்கும் அந்த இருட்டடிப்பு இன்று வரை இருக்கிறது.

”பெரியாரே, என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அவர் சொன்னதைத் தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதி, மதமே தடை எனச் சொன்னவர் அவர். மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்.” என இன்று முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்து, 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175- வது பிறந்த ஆண்டின் நினைவாக, அவரது அறிவை வணங்கும் விதமாக வட சென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும்… என பெருமை பொங்க கூறியுள்ளது மிகச் சரியானதே!

இன்றைய தினம் சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் அயோத்திதாசர் பற்றிய ஒரு தெளிவான பார்வை இந்த அரசுக்கு இருப்பதை சரியாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

”புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என்று சொன்ன அயோதித்தாசரின் சிந்தனையும் இரவு பகலற்ற ஒளியாக இந்தச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்”

“தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாச பண்டிதர். 1891-ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1891-ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை ஆகும்.

பூர்வீக சாதி, பேதமற்றவர்கள் திராவிடர்கள் என அழைத்தவர் அவர். அதனால்தான், தமிழன், திராவிடம் என இரு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தினார் எனக் குறிப்பிட்டேன். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றலைக் கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர். அவரது தாத்தா கந்தப்பன், தன்னிடமிருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை எல்லீஸிடம் கொடுத்து திருக்குறளை அச்சுப் பதிப்பாகக் கொண்டுவந்ததை நினைக்கும்போது, குறளுக்கு அவர் குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.”

இவ்வாறாக சிறப்பாகவே பண்டிதரை போற்றியுள்ளார் ஸ்டாலின். முந்தைய கலைஞர் அரசு அயோத்திதாசருக்கு தபால் தலை வரக் காரணமானது. ‘தமிழன்’ இதழின் நூற்றாண்டை தமிழக அரசின் விழாவாக 2007 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

”இந்திய வரலாறு என்பது பெளத்தத்திற்கும், ஆரியத்திற்கும் இடையிலான போராட்டமும், இழப்புகளும், இழிவுகளுமின்றி வேறல்ல..” என்றவர் தான் அயோத்தி தாசர்! அயோத்திதாசர் ஒரு சுய சிந்தனையாளர். நடைமுறை பழக்க, வழக்கங்களில் இருந்து மாறுப்பட்டு மனித குல மேம்பாட்டிற்காக சிந்தித்தவர்.

அயோத்திதாசரும், அவரது சிந்தனைகளும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு சென்று சேர வேண்டும். அதனால் அமைக்கப்படும் மணி மண்டபத்தில் அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் மட்டுமின்றி அவர் குறித்த ஆராய்ச்சி நூல்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும். கூடவே ஒரு கருத்தரங்க அறையும் மணிமண்டப வளாகத்தில் நிறுவிட வேண்டும். வெறுமனே சிலைகள், மணி மண்டபங்கள் என்ற அடையாள அரசியல் பலன் தராது. அவரது சிந்தனைகளை உள்வாங்கி நம்மை அர்த்தமுள்ள செயல்திட்டத்தை நோக்கி நகர்த்தக் கூடியதாக அவரது மணிமண்டபம் நிறுவப்பட்ட வேண்டும். இவை எல்லாம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், ‘இந்த அறிவிப்பு ஓட்டு அரசியலுக்கானதா..? உள்ளார்ந்த ஈடுப்பாட்டுடன் வெளியிடப்பட்டதா,,?’ என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time