பறிபோகும் இராணுவ தளவாட ஆலைகள்! பலியாகும் ஜனநாயக உரிமைகள்!

-பீட்டர் துரைராஜ்

இந்திய ராணுவத்திற்கானவற்றை உற்பத்தி செய்யும் ஆவடி டேங்க் தொழிற்சாலை உள்ளிட்ட 41 ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது பாஜக அரசு. இதை தொழிலாளர்கள் எதிர்த்து போராடினால் சிறை தண்டனை, அவர்களை ஆதரிப்போருக்கும் சிறை தண்டனையாம்! 75 ஆண்டு கால சுதந்திர இந்தியா கட்டிக் காப்பாற்றிய தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்ட ஏழே நிமிடத்தில் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு! இதன் படுபாதகங்களை பார்ப்போமா..?

ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில்  ஒன்றிய அரசு ‘அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைச் சட்டத்தை’ (Essential Defence Services Act 2021)  எந்தவித விவாதமும் இன்றி, நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி உள்ளது.

220  ஆண்டுகளாக இந்திய அரசின் கீழ் , பல்வேறு  பாதுகாப்புத்துறை ஆலைகள் உள்ளன. ஒன்றிய அரசு இவைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை விசாரணையின்றி வேலைநீக்கம் செய்யவும், சிறையில் அடைக்கவும் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகம் இருந்த கல்கத்தாவில் ஓடும் ஹூக்ளி நதியின் கரையில் 220 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பாதுகாப்புத்துறை ஆலை உருவானது. முதலாவது, இரண்டாவது உலகப் போர்களின் தேவையை முன்னிட்டு  மேலும் பல பாதுகாப்புத்துறை தளவாட ஆலைகளை பிரிட்டிஷ் அரசு உருவாக்கியது.

வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறியபோது, அதாவது 1947 ம் வருடம்,  17 பாதுகாப்புத்துறை ஆலைகள் இருந்தன. அவை மென்மேலும் வளர்ந்து, இப்போது  , இந்தியா முழுவதும் ஆவடி, அரவங்காடு, திருச்சி போன்ற  இடங்களில், 65,000 ஏக்கர் பரப்பளவில்  41 ஆலைகள்  உள்ளன. இதன் சொத்து மதிப்பு இரண்டு இலட்சம்  கோடி ரூபாய்களாகும். இவைகளில் 3.80 இலடசம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு   நமது ஊழியர்கள் இருக்கின்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி ஆயுதங்கள், தளவாடங்கள், பாதுகாப்பு கவசங்கள், இராணுவ உடைகள் போன்ற இராணுவத்திற்கு தொடர்புடைய பலவிதமான பொருட்களை தயாரித்து வருகிறார்கள். இதனால் இராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவை பயன்பெறுகின்றன. இதில் விஜயந்தா டாங்கிகள் போன்றவை உற்பத்தி ஆயின. அன்றைய சோவியத் யூனியனும், இப்போதைய  இரஷ்யாவும்  இந்த ஆலைகளுக்கு தமது தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன. இந்த ஆலைகளில் உள்ள சிவிலியன் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை உள்ளது. தொழிற் தகராறு சட்டப்படி வேலை நிறுத்த உரிமையும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் கடந்த காலங்களில் பல வேலைநிறுத்தங்களை  நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆலைகளை வசப்படுத்தி,  இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்ற எண்ணம் அதானி,  அம்பானி, ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களுக்கு நீண்டகாலமாகவே உண்டு. எனவே அரசுத்துறை வசம் இருக்கும் இந்த ஆலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, அதன் மூலமாக தனியாரை கொண்டுவர வேண்டும் என்பது அரசினுடைய திட்டம். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட முயற்சி நடந்த போது பாராளுமன்ற நிலைக்குழு இதற்கு எதிராக பரிந்துரை செய்துள்ளது. ‘பாதுகாப்புத்துறை ஆலைகள் தனியார்மயமாக்கப்படாது, கார்ப்பரேஷனாக மாற்றப்பட மாட்டாது ‘ என்ற உறுதி மொழி பாராளுமன்றத்தில் பலமுறை தெரிவிக்கப்பட்டது. முதல்  கொரோனா வந்த,  பொது முடக்க காலத்தில் இந்த ஆலைகள் இரவும், பகலும் செயல்பட்டு,  மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு , கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி,   மருத்துவமனைக் கட்டில், வெண்டிலேடர் போன்றவைகளை உற்பத்தி செய்து நன்மதிப்பையும் பெற்றன. இத்தகைய ஆலைகளை  அமைக்கும்போதே, அந்தப் பகுதிகளில்  பள்ளி, மருத்துவமனை, சமுதாயக் கூடம், கடைகள்  போன்றவைகளை நிறுவப்பட்டு அவைகளை பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  இவைகளினால் அரசுக்கும், பொதுமக்களுக்கும்  இலாபம்தானே ஒழிய நட்டம் ஏதும் இல்லை.

மோடி,  2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற போது , முதல் நூறு நாளில் இந்த பாதுகாப்பு ஆலைகளை 41 கார்ப்பரேஷன்களாக மாற்றுவதாக அறிவித்தார். இது பாஜகாவின் வேலைத்திட்டமாக இருந்தது.

” வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்படும். நீர் மூழ்கி கப்பல், போரிடும் விமானங்கள் போன்ற தளவாடங்களை இந்திய முதலாளிகள் உற்பத்தி செய்யலாம். அதற்கு அரசு அனுமதி அளிக்கலாம். இதுபோன்ற சவால் தரும் பணிகளை, தேவை இருக்கும் பணிகளைச் செய்ய தனியார் நிறுவனங்கள் தயராக இல்லை. மாறாக ஏற்கனவே உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசங்கமே வெற்றிகரமாக நடத்திவரும் ஆலைகளை தனியாருக்கு கொடுக்க முயல்கிறது. இதற்காக ஏற்கனவே 400 தனியார் நிறுவனங்களுக்கு பாஜக அரசு லைசென்ஸ் வழங்கியுள்ளது ” என்கிறார் அகில இந்திய பாதுகாப்புத்துறை சம்மேளன பொதுச் செயலாளரான ஸ்ரீ குமார். பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ், இடதுசாரி, பாஜக கட்சிகளின்  ஆதரவு பெற்ற மூன்று சம்மேளனங்களுமே பாதுகாப்புத்துறை ஆலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் முயற்சியை எதிர்க்கின்றன.

இந்த நிலையில் 41 பாதுகாப்பு ஆலைகளை 7 கார்ப்பரேஷன்களாக ஜூன் மாதம்  ஆறாம் நாள்  அரசு மாற்றிவிட்டது. 63,000 தொழிலாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கு பணிபுரிய வேண்டும். அதன் பின்பு அவர்கள் கார்ப்பரேஷன் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்தும்,  தங்களது பணி நிலைமைகள் மாறுவதை எதிர்த்தும், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்காகவும், நாட்டினுடைய சொத்துகளை பாதுகாக்க வேண்டியும் மூன்று சம்மேளனங்களும் ஜூலை 26 ம் நாள் முதல்  வேலைநிறுத்தம் செய்ய அறிவிப்பு கொடுத்தன. இதனை தடுக்க ஜூன் 30ம் நாள் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசு. பிறகு, இந்த அவசரச் சட்டத்தை,  சட்டமாகவும் ஆகஸ்டு மாதம் 3 ம் நாள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்டப்படி ஒரு தொழிலாளி வேலைநிறுத்தம் செய்தால், விசாரணை இன்றி வேலைநீக்கம் செய்யலாம்.  ஓராண்டு சிறைத் தண்டனை தரலாம். வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுபவர்களை இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கலாம். வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு நிதி உதவி அளித்தாலும்  தண்டனை உண்டு. வேலை நிறுத்தம் செய்யப் போகிறார் எனச் சந்தேகித்து, காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்கிறது இந்தச் சட்டம்!  இதில் கைதானால் பிணையில் வரமுடியாதாம். இப்படியாக குற்றவியல் நடைமுறைச் சட்டப் பாதுகாப்புகளும் மீறப்பட்டுள்ளன. போலிசுக்கு நீதிபதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

” இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. ஒன்றுகூடுவதும்,  போராடுவதும்  அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள  உரிமைகள். இப்போது நடைமுறையில் இருக்கும் தொழிற் தகராறு சட்டத்திலும், தொழிலாளர்கள்  வேலைநிறுத்தம் செய்ய வழிவகை உள்ளது. வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்தால், தொழிலாளர் அலுவலர் சமரச பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். ஒரு நூற்றாண்டு கால வேலைநிறுத்த உரிமையை இந்தச் சட்டம் தடை செய்கிறது ” என்றார்  மூத்த தொழி்ற்சங்கத் தலைவர்  ஸ்ரீ குமார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் பத்து மத்திய தொழிற்சங்கங்களும் ‘வெள்ளையனே வெளியேறு’ நாளான ஆகஸ்டு 9 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. பொதுவாக ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, அது ஏற்கனவே இருப்பதைவிட மேம்பட்டதாக இருக்கும். ஆனால் இது தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் பிற்போக்கான சட்டமாக உள்ளது.

வேலைநிறுத்தம் செய்வது  ஜனநாயக உரிமையாக உலகெங்கிலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலக தொழிலாளர் அமைப்பில் (ILO) அது உருவான காலம் முதலே (1919), இந்தியா உறுப்பினராக உள்ளது. இது   தொழிலாளர், வேலை அளிப்போர், அரசு என மூவரும் சேர்ந்த கூட்டு அமைப்பு. இதில் ஏற்படும் கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான்  உலக நாடுகள் தொழிலாளர்களுக்கான  சட்டங்களை இயற்றி வருகின்றன.  கூட்டுப் பேர உரிமை, சங்கம் வைக்கும் உரிமை என்பது உலக தொழிலாளர் அமைப்பின் (  ILO)  இணக்கவிதிகளாகும். அதன்படி அரசுப் பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சங்கம் வைக்கும் உரிமை உண்டு. இருக்கின்ற உரிமைகளை மேலும் பறிக்கும் அத்தியாவசியப் பாதுகாப்புச்  சேவைச் சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எதிர்த்து ஏஐடியுசி, சிஐடியு மத்திய தொழிற்சங்கங்கள் உலக தொழிலாளர் அமைப்பிடம் முறையிட்டுள்ளன. அதன்மீது இந்திய அரசிடம் விளக்கம் உலகத் தொழிலாளர் அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது. இந்தச் சட்டம் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. “எந்த தொழிற்சங்கமும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை ” என்றார் ஸ்ரீ குமார்.

‘பாதுகாப்பு சேவை பாதிக்கிறது’ என்று சொல்லி,  தேவைப்பட்டால் தபால், துறைமுகம் போன்ற மற்ற துறைகளுக்கும் இந்திய அரசு இதனை விரிவாக்கம் செய்யலாம். இந்தச் சட்டம் அமலாகும் காலத்தில் தொழிற் தகராறு சட்டத்தினை  பயன்படுத்த முடியாது. உலக தொழிலாளர் அமைப்பின் இணக்க விதிகள், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒன்று சேரும் உரிமை, வெள்ளையர் காலத்தில் உருவான தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் கிடைக்கும் சமரச  பேச்சுவார்த்தை   போன்றவைகளுக்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளது. இப்படிப்பட்ட முக்கியமான சட்டத்தை  ஏழு நிமிடத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ” இது நமது ஜனநாயக நெறிமுறைகளின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.’’என்கிறார் ஸ்ரீ குமார். இந்த சட்டத்தை எதிர்த்து உலக தொழிற்சங்க சம்மேளனமும் கருத்து தெரிவித்து உள்ளது.

”ஜனநாயகத்தை வலிமைப் படுத்தும், முற்போக்கான சட்டங்களை இயற்றினால் இந்திய அரசுக்குப் பெருமை. மாறாக தொழிலாளர்களை  அடிமைகளாக்கும் ஒரு சட்டத்தை; நூறாண்டுகள்  பின்னோக்கிச் செல்லும் ஒரு சட்டத்தை மோடி அரசு இயற்றியுள்ளது. ” தொலைபேசித்துறை கார்பரேஷனாக மாற்றப்பட்டபிறகு, அதில் 10 கோடி சந்தாதாரர்கள் இருந்தும்  அதில் பணியாற்றிய 80,000 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் அனுப்பப்பட்டனர். அந்த நிலை எங்களுக்கு ஏற்படாதா ?”  என்கிறார் ஸ்ரீ குமார்.

பெற்றோர்களிடம் கோபம் கொண்டு  ‘சாப்பிட மாட்டேன்’  என்று அடம் பிடித்து தனக்கு வேண்டியதைக் கேட்கும் பிள்ளைகளை நாம் பார்ப்பது வழக்கம்தான். அடம் பிடிக்கும் பிள்ளைகளை வெளியில் துரத்தும் பெற்றோரை நாம் கண்டதில்லை. அது  போல,  தொழிலாளர்கள்  தங்களுடைய உரிமைகளைக் கேட்பதும், அதற்காக போராட்டம் நடத்துவதும், தேவைப்பட்டால் வேலை செய்ய மறுப்பதும் ஒரு உரிமைதான்.

நாட்டின் சொத்துகளை பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்க, வேலைநீக்கம், சிறைதண்டனை  என்ற கொடுமையான சட்டத்தை இயற்றி உள்ளது பாஜக அரசு! விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில தனியார்கள் கொழுத்து, திளைக்க ஒட்டுமொத்த தேச பாதுகாப்பையும் பலி கொடுக்க துணிந்துவிட்டது பாஜக அரசு.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time