150 வது பிறந்த நாளிலாவது வ.உ.சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாய், தூய தொண்டுக்கு அடையாளம் திகழ்ந்தவர் வ.உ.சி! லட்சியவாதிகள் வாழ்நாள் முழுதும் வறுமையிலும், துன்பத்திலும் உழல்வதும், சந்தர்ப்பவாதிகள் பதவி, பணம், அதிகாரம் என சுகபோகம் பெறுவதும் இன்றல்ல, நேற்றல்ல..தொடர்கதை தான் என்பதற்கு வ.உ.சியே மாபெரும் உதாரணம்!
செல்வ குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்கள் உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக அவர் பெற்ற பரிசுகளே துன்பங்களும்,வறுமையும்!
தமிழ்நாட்டின் முதல் மக்கள் தலைவர் மட்டுமல்ல, மாபெரும் தியாகி, தமிழ் அறிஞர் என்ற பெருமைக்குரிய சிதம்பரனாரை அன்றைக்கு காங்கிரஸில் இருந்த சுயநலத் தலைமைகள் ஒதுக்கி வைத்தன!
அவரது இறப்புக்கு பிறகு முற்றிலும் மறக்கப்பட்டிருந்த சிதம்பரனாரை தமிழ் சமூகத்திற்கு சரியாக அடையாளம் காட்டியவர் ம.பொ.சி தான்! கப்பலோட்டிய தமிழன் என்று நூல் எழுதியும், மேடைதோறும் வ.உ.சியை பேசியும் அவரது புகழை மீட்டெடுத்தார் ம.பொ.சி! இதன் தாக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சின்ன அண்ணாமலை அவர்கள் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவிடம் ஓயாமல் வ.உ.சியை பற்றியே பேசி வந்ததன் விளைவாக கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற விதையை பந்துலு மனதில் விதைத்தார். அந்தப் படத்தில் வ.உ.சியாகவே வாழ்ந்து தமிழர்கள் மனதில் வ.உ.சியை நீங்கா இடம் பெறச் செய்தார் சிவாஜி.
தண்ணீர் விட்டோ, வளர்த்தோம்’ என்ற தேசிய கீதத்தில் ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் / நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ’ என்று மனம் நொந்து பாடினான், முண்டாசுக் கவிஞன் பாரதி. பாரதி குறிப்பிட்ட அந்த நூலோன், சான்றோன், வழக்கறிஞர், தொழிலாளர் தலைவர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்றைக்கு சுவாசிக்கும் இந்த சுதந்திரக் காற்று ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்தது விடவில்லை. வ.உ.சி போன்ற பெருமக்கள் சிறைக் கொட்டடியில் அடைந்த துயரங்கள் எத்தனை, எத்தனையோ!
வ.உ.சி பிறந்த ஓட்டப்பிடாரத்தில் சரியான ஆங்கிலப் பள்ளி இல்லை என்ற காரணத்திற்காக, தனது இல்லத்திலேயே ஆங்கிலப் பள்ளியை அமைத்தவர், அவரது தந்தை உலகநாதன். அவரும் புகழ்பெற்ற வழக்கறிஞர். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற குடும்பத்தில் பிறந்த வ.உ.சி, பாரதத் தாயின் விடுதலை என்ற வீர சுதந்திரத்தை வேண்டி நின்றார்; வேறு எந்த நினைவும் இல்லாமல் ஒரே சிந்தனையுடன் வாழ்ந்தார்.
எங்கெல்லாம் அடக்குமுறை தலை காட்டுகிறதோ, அங்கெல்லாம் மும்மூர்த்திகளாக, திரிசூல முனைகளாக வ.உ.சி, பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் குரல் ஓங்கி ஒலித்தது. இவர்கள் பற்ற வைத்த சுதந்திரக் கனலின் வெம்மையைத் தாங்க முடியாமல், வெள்ளை அரசு கடுமையான தண்டனைகளை விதித்தது; கடுங்காவல் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை என்று அடக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போனது.
‘வ.உ.சியின் எலும்புக் கூடும் ராஜ துரோகமானது’ என்று வெள்ளை நீதிபதி பின்ஹே, தேசத் துரோக குற்றம் சாட்டுகிறார். வ.உ.சி சிறைப்பறவை ஆக இருப்பதே தன் நலனுக்கு உகந்தது என்று காட்டாட்சி நடத்தியது வெள்ளை அரசு.
நாட்டு விடுதலைக்கும், தாய்மொழித் தமிழுக்கும் இடையறாது தொண்டு ஆற்றியவர் என்று தான் வ.உ.சியை பலருக்கு தெரியும்.ஆனால்.அவர், தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றுக்கு விளக்க உரை எழுதியவர். சிவஞானபோதகம் நூலுக்கு மதிப்புரை எழுதியவர் என்ற வகையில் தமிழுக்கும் வளம் சேர்த்தவர்.
கோரல் மில் தொழிலாளர்கள், விதிமுறைகளை மீறிய பணிச் சுமைகளால் அவதியுற்ற போது, போராட்டக் களத்தில் தலைமை தாங்கி உரிமைகளை மீட்டெடுத்தார். ‘வழக்கறிஞராக இருப்பதால்தானே இந்த வஉசி பொருள் ஈட்டுகிறார், ஈட்டிய பொருளை விடுதலை வேட்கையை வளர்த்தெடுக்கப் பயன்படுத்துகிறார், எனவே இந்த வழக்கறிஞர் பணிக்கான சன்னம் என்ற அடையாளத்தை ரத்து செய்து அவர் வழக்கறிஞர் தொழிலை தொடர முடியாமல் முடக்கியது,பிரிட்டிஷ் அரசு!
வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராய்ப் பரிமளித்தவர் வ.உ.சி; சகஜானந்தர்,விருதுநகர் ராமையா உள்ளிட்ட தலித் தோழர்களை தம் சுற்றம் சூழ் நட்பாக உள் வாங்கிக் கொண்டவர்!வ.உ.சியின் கப்பல் முயற்சிக்கு அன்றைய இஸ்லாமிய தனவந்தர்கள் கைகொடுத்தனர் என்ற அளவுக்கு சமய நல்லிணக்கம் பேணியவர்! வெள்ளை ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் அளவுக்கு தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் கப்பல் ஓட்டிய தமிழன், வ.உ.சி. சதிகாரர்களின் சூழ்ச்சியால், அந்த நிறுவனத்தினை நலிவுறச் செய்து, நயவஞ்சகமாக வ.உ.சியின் சுதேசிக் கனவை கலைத்துப் போட்டது, வெள்ளை அரசு.
மாடாய் உழைத்தான் என்பார்கள்; வ.உ.சி மாடாகவே உழைக்க வைக்கப்பட்டார். கோவை சிறையில் மாட்டுக்குப் பதிலாக செக்கு இயந்திரத்தில் பூட்டப்பட்டார். சணல் இயந்திரத்தின் சக்கரத்தை கைத் தோல், உரிய, உரிய சுற்றினார். கண்ணனூர் சிறை, கோவை சிறை என்று சிறைச்சாலை, சிறைச்சாலையாக வ.உ.சியின் வாழ்க்கைத் துணைவியார் மீனாட்சி அம்மையார் காத்துக் கிடந்தார். அத்தனை அடக்குமுறைகளையும் அனுபவித்துவிட்டு வெளியே வந்தவரை வரவேற்க வந்தவர்களின் எண்ணிக்கை கை விரல்களுக்குள் அடங்கிவிடும்.
‘உப்புக்கும், புளிக்கும் என்னை அலையவிடாதே, சக்தி’ என்று வேண்டினான் பாரதி. வ.உ.சி, தன் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிட, அரிசி விற்றார், எண்ணெய் விற்றார், மண்ணெண்ணெய் விற்றார். செல்வச் சீமானாக வாழ்ந்த அவர் சென்னை மாநகரத் தெருக்களில் வறுமையோடு போராடினார்.
‘சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி’
என்ற பாரதியின் பாட்டு வரிகளை உண்மையாக்கிய மக்கள் வாழ்ந்த காலம், அது.
நாட்டுக்காக உழைத்தவனுக்கு வறுமையைப் பரிசளிக்கும் நிலை அந்தக் காலங்களிலும் இருந்திருக்கிறது; இன்றைக்கும் அந்த காட்சிதான் தொடர்கிறது. மோடி வித்தை காட்டுவோரிடமே அடங்கிக் கிடக்கும் மனோபாவத்திலிருந்து எப்போது நாம் வெளியே வரப் போகிறோம்?
சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட வ.உ.சி, தான் இறக்கும் தருவாயில் தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடச் சொல்லிக் கேட்கவில்லை; பாரதியின் விடுதலை எழுச்சிப் பாடல்களை பாடச் சொன்னார்; அவற்றைக் கேட்டபடியே மண்ணுலகில் இருந்தது மறைந்தார். தாய்நாட்டின் விடுதலைக்கான, கணக்கிலடங்காக் கனவுகளோடு காற்றில் கரைந்தார்.
Also read
விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிர் நீத்த பெருமக்களின் பல கனவுகள், கனவுகளாகவே இருக்கின்றன. அந்தக் கனவுகளை நனவுகள் ஆக்கும் நற்பணிகளில் நம்மை மறு அர்ப்பணிப்பு செய்ய, வ.உ.சியின் நினைவே நம்மை வழி நடத்தும்.
வாழும் காலத்தில் வறுமையில் உழன்ற இந்த மாமனிதரை, இன்றைக்காவது – காலம் கடந்தாவது தமிழக அரசு உரிய மரியாதை செலுத்துகிறது என்ற அளவில், நமது பாராட்டுகள். மறக்க முடியாத மனிதர், மறக்கக் கூடாத தமிழர், வ.உ.சி புகழ் ஓங்குக!
கட்டுரையாளர் ;பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காந்திய மக்கள் இயக்கம்.
தொடர்புக்கு: 98410 20258
Leave a Reply