பின்லேடனையும், தலிபான்களையும் எதற்காக வளர்த்தது அமெரிக்கா..?

ச.அருணாசலம்

வல்லரசுகளின் கல்லறை ஆப்கானிஸ்தான் (பகுதி 1)

வரலாறு நெடுக அடுத்தடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வரவேற்று, அவர்களுக்கு கல்லறை எழுப்பி வருகிறது ஆப்கானிஸ்தான்! எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பின்லேடனையும், தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா.., தான் விரித்த வலையில் தானே சிக்குண்ட கதையை பார்ப்போமா..?

அமெரிக்க படைகளின் கடைசி விமானம் ,தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு கிளம்பியவுடன் தலிபான் படையினர் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  “இன்று ஆப்கான் நாடு அந்நியர் அனைவரையும் வெளியேற்றி சுதந்திர காற்றை சுவைக்கிறது”  என்று கொண்டாடத் துவங்கினர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா, பல்லாயிரங்கோடி டாலர்களை வாரியிறைத்தும், பல உயிர்களை பலி கொடுத்தும் இறுதியில் தங்கள் எண்ணமும் நோக்கமும் நிறைவேறாமலே ஆப்கனை விட்டு வெளியேறியது.

அமெரிக்காவின் இத்தகைய பின்வாங்கலை கண்டித்து, அது ஏற்படுத்தும் “விளைவுகளை” நினைத்து நீலிக்கண்ணீர் விடும் மேற்கத்திய நாட்டு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஏன் இந்திய ஆளும்தரப்பினரும் “அனாதை போல்” ஆகிவிட்ட ஆப்கன் மக்களுக்காக கண்ணீர் வடித்து பச்சாதாபம் படுகின்றனர்.

இந்த பச்சாதாபமும், நீலிக்கண்ணீரும் நியாயமானதா? தாலிபான்கள் கூறுவது போல் இப்பொழுதுதான் ஆப்கானம் முழுமையான சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறதா?

சரித்திரத்தை சற்று பின்னோக்கிசென்று உற்று நோக்கினால் , நாம் அறிவது ஆப்கானிஸ்தான்  முற்றிலும் நிலப்பரப்புகளினால் சூழப்பட்ட சிறிய நாடு ஆனால் வீரியமிகுந்த நாடு. ஆம், சாம்ராஜ்யங்களின் கல்லறை -Graveyard of Empires-  என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்பட்ட நாடு. அந்நியர்களால் ஆளப்பட முடியாத நாடு. பஷ்தூனியர்கள் பெருமளவும் மற்றும் தாஜிக் இனத்தினர்,ஹசாரா மற்றும் உஸ்பெக் இன மக்களை கொண்டது ஆப்கானிஸ்தான்.

மன்னராட்சியில் இருந்து முழுமையான விடுதலை  அடைந்த ஆண்டு 1978 ஆகும் . ஊடகங்கள் மறந்து போனாலும் அல்லது சொல்ல மறுத்தாலும் வரலாற்று உண்மையை மறைக்க முடியுமா?  ஆம், ஆப்கான் நாட்டு சர்வாதிகார முகம்மது தாவூதின் (ஆப்கான நாட்டு மன்னர் ஜாகிர் ஷாவின் மைத்துனர்) கொடுங்கோலாட்சி 1978ம் ஆண்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டது. அந்த விடுதலை இயக்கத்திற்கு ஆப்கன் ஜனநாயக மக்கள் கட்சி  – Peoples Democratic Party of Afganistan PDPA- தலைமைதாங்கி நடத்தி வெற்றி கண்டது.

மன்னராட்சியை வீழ்த்தி , முற்போக்கு எண்ணங்கொண்ட, மதச்சார்பு  இல்லாத சீர்திருத்த ஆட்சியை ஏற்படுத்தியது ஆப்கன் ஜனநாயக மக்கள் கட்சி.  பெண்களுக்கும் ,சிறுபான்மையினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு முழு சுதந்திரமும் , கல்வியும் சட்டபூர்வமாக்கப்பட்டன. அடிப்படை மருத்துவ சேவை இலவசமாக்கப்பட்டது. அனைவருக்கும்  கல்வி என்ற மாபெரும் இயக்கம் நடந்தேறியது.

அதன் விளைவாக 1980களின் இறுதியால் பல்கலைகழக மாணவர்களில் 50% பெண்களாகவும், அரசு ஆசிரியர்களில் 70% பேர் பெண்களாகவும் இருந்தனர். அதுமட்டுமல்ல, மொத்த மருத்துவர்களில் 40% விழுக்காடு பெண் மருத்துவர்கள் என்பது நம்மை பிரமிக்க வைக்கும் தகவலாகும்; அரசு வேலைகளிலும் பெண்களின் பங்கு 30% விழுக்காட்டிற்கும் மேலிருந்ததாக ஆப்கானிய மகளிர் அமைப்பு கூறுகிறது.

இவ்வாறு முற்போக்காக செயல்படும் அரசை எதிர்க்க முஸ்லீம் மத முல்லாக்களும்,பழங்குடி தலைவர்களும் கஞ்சா உற்பத்தியில் உண்டு கொழுத்த தாதாக்களும் முயற்சிகள் மேற்கொண்டனர் . அதேசமயம் மத்திய ஆசியாவில் தங்களது செல்வாக்கு ஆப்கன் அரசின் சோவியத் நட்பால் தொலைந்துவிடுமோ என்று அமெரிக்கா பிரிட்டன் ஆகிய மேலை நாடுகள் கவலை கொண்டன.

பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் ஆக இருந்த  கர்சன் பிரபு ,” உலகை ஆளத் துடிப்பர்க்கு உலகமே ஒரு தாயக்கட்டு போன்றது  ,நாடுகளோ அதிலுள்ள காய்கள்;  ஆள வேண்டுமெனில்,  காய்களை (நாடுகளை) வைத்தே ஆட்டம் நடக்க வேண்டும்” என்று  1898ல் கூறினார் . அவர் ஆப்கானிஸ்தானை மனதில் வைத்தே இக்கருத்தை  அன்று தெரிவித்தார் .அதே நிலையை நூறாண்டுகள் கழித்து அமெரிக்காவும் பிரிட்டனும் இப்பொழுது  காட்டுவது வேடிக்கை மட்டுமல்ல உண்மையுங்கூட!

சோவியத் யூனியனை நிலைகுலையச்செய்து வீழ்த்த ஆப்கானிஸ்தானத்தை பகடைக்காயாகபயன்படுத்த காபூலில் இருந்த அமெரிக்க தூதரகம் ரகசிய திட்டம தீட்டியது. “முற்போக்காக ஆட்சி நடத்தும் பி.டி.பி.ஏ ஆப்கன் ஜனநாயக மக்கள் கட்சியின் ஆட்சியை தூக்கியடிப்பதன் மூலமே நமது செலவாக்கை மத்திய ஆசியாவில் நிலைநாட்ட முடியும், சோவியத் ரஷ்யாவை மண்ணை கவ்வ வைக்க முடியும் . அதற்காக முஸ்லீம் பழமைவாதிகளையும், கஞ்சா வியாபார தாதாக்களையும் அரவணைத்து செல்வது அவசியம்” என்ற தாக்கீதை வாஷிங்டன் டி.சிக்கு (அமெரிக்க தலைநகர்) காபூல் தூதரகம் அனுப்பியது.

 

அன்றைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் 1979 ஜூலை 3ம் நாள் ,அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் ஏன் அமெரிக்க நாடாளுமன்ற அவையான காங்கிரஸுக்கும் தெரியாமல் மறைமுக திட்டம் ஒன்றைதீட்ட  உத்தரவிட்டார்ஆபரேஷன் சைகளோன் என்று பெயரிடப்பட்ட ரகசிய திட்டத்தின் நோக்கம் ஆப்கன்  அரசை (பிடிபிஏ அரசு)  கவிழ்ப்பதுதான் இதற்காக 500 மில்லியன் டாலர் ஒதுக்கி கார்ட்டர் உத்தரவிட்டார்.

முஸ்லீம் பழமைவாதிகளை ஒன்று திரட்டவும், அவர்களை போருக்கு தயார்படுத்தவும், ஆப்கானிஸ்தான் முஸ்லீம்  பழமை வெறியர்களையும், கஞ்சா வியாபாரிகளான ஆயுதந்தாங்கிய தாதா கும்பல்களையும் ஓரணியில் திரட்டவும், ஆப்கன் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியமானவர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் ஒதுக்கப்பட்ட டாலர்கள் பெரிதும் உதவியது! வாட்டர் கேட் ஊழலை அம்பலப்படுத்தி, அமெரிக்க அதிபர் நிக்சனை பதவி விலகச்செய்த இரண்டு புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவரான பாப் உட்வேர்ட்,

சுமார் 70 மில்லியன் டாலர்கள் கையூட்டு (லஞ்சம்) கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது” என்று ஆபரேஷன் சைகளோன் சரித்திரம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

முஸ்லீம் நாடுகளெங்கிலும் இந்த போருக்கு ஆட்கள் தேடப்பட்டு சேர்க்கப்பட்டனர், நியூயார்க் மாநகர் அருகில் இருக்கும் புரூக்ளீன் இஸ்லாமிக் கல்லூரியில் இருந்தும் இளைஞர்கள், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அப்படி அக்கல்லூரியில் இருந்து சேர்க்கப்பட்டவர்களில் ஒருவரே ஒசாமா பின் லேடன். ஆம், சவுதியில் இருந்து அமெரிக்கா வந்து பொறியியல் பயின்ற ஒசாமா பின்லேடன் . அமெரிக்கா திரட்டிய முஸ்லீம் புனிதப் போராளிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.ஆப்கானிஸ்தானில் பழமைவாதிகளையும், மத வெறியர்களையும், கஞ்சா வியாபார தாதாக்களையும் பணம் கொடுத்தும், ஆடம்பர சொகுசு உதவிகள் செய்தும் அமெரிக்கா ரகசிய போருக்காக திரட்டியது, முஸ்லீம் மத்த்திற்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி முஸ்லீம் மத அடிப்படைவாதிகளான தாலிபான்களையும் இந்த கூட்டத்தில் அமெரிக்கா இணைத்தது. ஆனால் மதம், ஷாரியா போன்ற விவகாரங்களில் கறாரும் கண்டிப்பும் நிறைந்த தலிபான்கள் பழமை விரும்பிகள் மட்டுமல்ல பெண்கள் சுதந்திரத்தை மறுப்பவர்கள்.

ஆனால் போதை பழக்கத்திற்கெதிரானவர்கள், கஞ்சா வியாபாரம் மற்றும் திருடுதல் கொள்ளை போன்ற செயல்களுக்கும் எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் உண்மையில் மதராஸா மாணவர்களே. பெண் சுதந்திரத்தை எதிர்ப்பதில் மட்டுமே இவர்கள் ஒற்றுமையாய் இருந்தனர். மற்றெல்லா விவகாரங்களிலும் நார்தன் அலையன்ஸ் என்றழைக்கப்படும்  வடக்கத்தி கூட்டணியில் ஒற்றுமையைவிட குழப்பமே என்றும் மேலோங்கியிருந்தது.

இப்படி திரட்டப்பட்ட கூட்டத்திற்கு ஆயுதப்பயிற்சியும், போர் தந்திரமும் கற்றுக் கொடுக்க அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான்மண்ணில் ஐஎஸ்ஐ,சிஐஏ, மற்றும் எம் 16 ஆகிய மூன்று  அமைப்பினரும் இக் கும்பலுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும்,  பணமும் கொடுத்து தயாராக்கி  ஆப்கானிஸ்தானில் நுழைத்து விட்டனர்.

கலகத்தையும் கலவரத்தையும் கட்டவிழ்த்துவிட்ட இந்த கூட்டணிக்கு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஆதரவளித்தன. பிடிபிஏ ஆப்கன் அரசுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் ஆரம்பத்தில் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தாலும் நாளடைவில் தனது பரம வைரிகள் ஆப்கனில் கூடி ஸ்டிரிங்கர் ஏவுகணைகள் வீசிய பொழுது சோவியத் ரஷ்யா மிகப்பெரிய தவறொன்றை ஆப்கன் நாட்டிற்குள் சோவியத் படைகளை அனுப்பும் தவறை- இழைத்தது.

எதிர்பார்த்தபடியே ஆப்கானிஸ்தான் என்ற புதைகுழியில் சிக்கிய ரஷ்யாவை வீழ்த்த அமெரிக்காவும் மற்றும் மேற்கத்திய நாடுகளும் முஜைஹுதீன் கும்பலை பயன்படுத்தின.தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டன . சோவியத் யூனியன் ஆட்டங்கண்டு நொறுங்க ஆரம்பித்தது;

சோவியத் படைகள் பேரிழப்புகளுக்கிடையே ஆப்கனை விட்டு 1989ல் வெளியேறியது.

ஆனால், மத்திய ஆசியா மற்றும் அரபு நாடுகளில் முஸ்லீம் தீவிரவாதமும், பழமைவாதமும் அமெரிக்காவின் தூண்டுதலாலும்,ஊக்கத்தாலும் பெரும் பொருளுதவியினாலும் வேறூன்ற ஆரம்பித்தன. அதன் விளைவுகளை அமெரிக்கா அனுபவிக்க ஆரம்பித்தது, அடுத்துவந்த சில  ஆண்டுகளில்!

சோவியத் படைகள் பின்வாங்கிய பின்பும் ஆப்கானிய மக்கள் குடியரசு முகமது நஜீபுல்லா தலைமையில் மூன்றாண்டுகள் அதாவது 1992 வரைநீடித்தது. பல்வேறு தேசிய இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த முஜைஹூதீன் கும்பலை சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும் அரபு எமிரேட்டுகளும் வற்புறுத்தி ஷூரா என்ற ஒருங்கிணைந்த கவுன்சிலை ஆப்கானிஸ்தானை வழி நடத்த உருவாக்கினர் . இந்த  கவுன்சிலின் ஓரு அங்கமாக விளங்கிய தாலிபான்கள் மற்ற கும்பல்களை பலவீனப்படுத்தி முதன்மை ஸ்தானத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதற்கு பெரிதும் உதவியவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ISI உளவு நிறுவனம் ஆகும் , பின்புலத்தில் இருந்தது அமெரிக்க அரசு.

அமெரிக்க ஆட்சியாளர்களுடன்  (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டையும் சேர்ந்த அதிபர்களுடன்) நெருக்கமாக இருந்த தாலிபான்கள் ஒசாமா பின் லேடன் உடனும்  நெருக்கமாக இருந்தனர் மூவரும் கூட்டாளிகள்தானே!

பாக் உதவியடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்டை 1996ல் ஏற்படுத்தி தன்னை அதன் தலைமையாக  அறிவித்துக் கொண்ட தாலிபான்களை முதலில் அங்கீகாரம் செய்த நாடுகள் மூன்று தான்! அவை பாகிஸ்தான்,சவுதி அரேபியா, யுஏஇ என்ற அரபு எமிரேட்( துபாய்) இவர்களுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரி அமெரிக்கா. இவர்களின் ஆசியுடன் தாலிபான்களின் மத வெறிக் கொடுமைகள் ஆப்கானிஸ்தானில்  நிறைவேற்றப்பட்டன,

பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் மறுக்கபட்டு அடக்கப்பட்டனர். இப்பொழுது தாலிபான்களை வசைபாடுகிற மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இதே தாலிபான்களுடன் கூடிக்குலாவி கும்மாளமிடவில்லையா அன்று?

வினை விதைத்தவன் வினை அறுக்கும் காலமும் வந்தது!

– தொடர்ச்சி அடுத்த பகுதியில்..

கட்டுரை: ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time