தலைமுறை இடைவெளியை அதிகப்படுத்தும் தகவல் தொழில் நுட்பங்கள்!

- பீட்டர் துரைராஜ்

Home – ஆண்ட்ராய்டு போனைச் சுற்றி ஒரு குடும்பக் கதை!

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதலையும், அன்னியோனியத்தையும் எப்படி கையாள்கிறோம் என்ற சுய பரிசீலனைக்கு நம்மை இந்தப் படம் கொண்டு செல்கிறது! தங்கள் சுய நலத்தை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் இளம் தலைமுறையும், சகிப்புத் தன்மையுடன் அன்பை வெளிப்படுத்தும் முந்தைய தலைமுறையும் மிக இயல்பாக வெளிப்படுகின்றனர் இந்த குடும்பக் கதையில்!

Home என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளிவந்துள்ள படம். அமேசான் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் ஒரு  குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. கதாநாயகன், மனைவி,  தந்தை, இரண்டு மகன்கள் உள்ள குடும்பத்தில் கதை  நடக்கிறது.

எளிமையான காட்சிப்படுத்தலை, நாம்  மலையாளப்படங்களில் பார்க்க முடியும். இந்தப் படமும் அப்படிப்பட்டதுதான். பழைய மலையாளப்படங்களில்,  துணை நடிகராக இது வரை அறியப்பட்டிருந்த  இந்திரன்ஸ் இதில் கதாநாயகன். அசத்தலான நடிப்பு. அவரது நடிப்பின் உச்சம் தென்படுகிறது! இரண்டு வளர்ந்த பையன்களுக்கு அப்பாவான பாத்திரம். ஏறக்குறைய படம் முழுவதுமே ஒரு வீட்டில் நடக்கிறது. படத்திற்கு குறைவாகவே செலவாகியிருக்கும்.

உடல் நலம் சரியில்லாத அப்பா தரையில் சிறுநீர் கழித்துவிட, அதை இந்திரன்ஸ் சுத்தம் செய்வதில் கதை தொடங்குகிறது.  கதையில் அவரது பெயர் ஆலிவர் ட்விஸ்ட். ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்ற அவரது தந்தை வைத்த பெயராக இருக்கலாம். இது ஒரு ஆங்கில நாவலின் பெயர்.

ஒரு காலத்தில் வீடியோ கடை வைத்திருந்த ஆலிவர் டிவிஸ்டுக்கு ஆண்ட்ராய்டு போன் மீது ஆசை இருக்கிறது. வீட்டில் செய்தித்தாளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கிறார். மொபைல் போன் கடையில் விலை விசாரிக்கிறார். அவரது நண்பர், அமெரிக்காவில் இருக்கும் தனது மகளின்  முகம் பார்த்து போனில் பேசும்போது வியக்கிறார். கிட்டத்தட்ட அறுபது வயதான ஒருவர்,  ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துவதை எதிர் கொள்ளும்  தர்மசங்கடங்களை  மெல்லிய நகைச்சுவையோடு விளக்கி இருக்கிறார் இயக்குநரான ரோஜின் தாமஸ். படத்திற்கான கதையையும் அவர்தான் எழுதியுள்ளார்.

கதாநாயகனின்  மூத்த மகன் சினிமாப் பட இயக்குநர். ஒரு வெற்றிப்படம் கொடுத்த மிதப்பில் வாழ்பவன். அடுத்த படத்திற்கான பணத்தையும் வாங்கிவிட்டான். கதையும் ஏறக்குறைய தயாராகி விட்டது. ஆனால் உச்சக்கட்டம் வரவில்லை. ஒரு பக்கம் தயாரிப்பாளர் நெருக்கடி; இன்னொரு புறம்  கதாநாயகனுக்கு கதை பிடிக்க வேண்டும். கதை எழுதவேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு வருகிறான். கதை அமையவில்லை.

இந்த நேரத்தில் அவனுக்கு  உதவிசெய்ய, அன்புகாட்ட விரும்பும் தந்தையை அவன் சரிவர புரிந்துகொள்ளவில்லை. அன்பை வெளிக்காட்டுவதை செல்போன் தடை செய்கிறது. எந்த நேரமும் செல்போனிலேயே இருக்கிறான். அப்பாவோடு, அம்மாவோடு பேச முடியவில்லை. தன் காதலியின் அப்பாவை பெரிய ஆளுமையாக நினைத்து அவரது நூலைப் படிக்கும் அவனுக்கு, தன் அப்பா சிறு வயதில் செய்த சாகசங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த சின்னஞ்சிறிய சம்பவங்கள்தான் கதையை இழுத்துச் செல்கிறது. இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. தந்தையாக இருந்தால் இந்த சிரமங்களை எதிர்கொண்டிருப்பீர்கள்; மகனாக அல்லது மகளாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப், முகநூல் குறித்து பெருமிதம் கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது என முடிவு கட்டியிருப்பீர்கள். ஒரு காலத்தில் வீடியோ கடை வைத்திருந்தவரால் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்த முடியாதா என்ன ? இதை புரிந்து கொள்ளாததுதான் அவரின் பலவீனம் ஆகிறது.

எப்படி இருந்தாலும் எந்தப் பெற்றோரும் புதிய மாடல் போனை தனது மகனுக்கு அல்லது மகளுக்குத்தானே முதலில் வாங்கி தருகிறார்கள். மகன்கள் பயன்படுத்திய போன்தானே பெற்றோருக்கு கிடைக்கிறது. எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்கள்தான்  இதில் கதையாக, கோர்வையாக வருகிறது. இதுவே  கதைக்கான சிக்கலாகவும் மாறுகிறது. வெற்றிப் படம் கொடுத்த மகனுக்கு, சினிமா நடிகரோடு மனஸ்தாபம் வர இந்த ஆண்ட்ராய்டு போன் காரணமாகிறது.

மகனை  நல்ல பாத்திரம், கெட்ட பாத்திரம் என்று ஒரு வரியில் சொல்ல முடியுமா என்ன !   இயக்குநரான அவனுக்கு தன் காதலிக்கு, ஒரு சௌகரியமான மனநிலையைக் (comfort zone)  கொடுக்கமுடியவில்லை. ஏனெனில் அவனது மனோபாவம் அவன்  கற்றுக்கொள்வதைத் தடுக்கிறது. இந்தக் குறையைச் சுட்டிக்காட்ட ஒருவர் தேவைப்படுவாரோ !

இயக்குநராக ஸ்ரீ நாத் பாசி நடித்திருக்கிறார்.

நிறைய வாய்ப்பு இல்லை என்றாலும் தீபா தாமஸ், காதலியாக நடித்துள்ளார்.  கவலைப்படும்  மனநிலையை, தனது முகபாவத்தில்  நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படம் 2 மணிநேரம் 38 நிமிடம் ஓடுகிறது. நேரத்தை குறைத்து இருக்கலாம். கதை எதை நோக்கிச் செல்கிறது என்று  இடைவேளை வரை பிடிபடவில்லை. மெதுவாகச் செல்கிறது. ஆனாலும் இறுதி பாகமும் உச்சக் கட்டமும், முடிவும்   மானிடநேசம் எவ்வளவு இயல்பானது, உயர்வானது என்பதைச்  சொல்லுகிறது. இந்திரன்ஸ் – க்கு இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது மகன் யூ டியூப் சேனல் நடத்துகிறான்.தேநீர் குடித்த குவளைகளைக் கூட கழுவும் இடத்தில் போடாதவன். அவனது அம்மாதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது அப்பா; ஆனால் அவன் அதை தனது சாதனையாக யூ டியூப் சேனலில் காட்டுகிறான். இது போன்ற போலித்தனங்களை, கதை  ஆங்காங்கே சுட்டிக் காட்டிக்கொண்டே போகிறது.

இந்தப் படத்துக்கான கதையை விவரிப்பது கடினம். ஏனெனில் இதில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் நுட்பமானவை. மீண்டும் இந்தப் படத்தைப்  பார்க்கும்போது, மேலும் சில பரிமாணங்கள் தென்படலாம். இத்தகைய படங்கள் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்; சமுதாயத்தையும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.

பட விமர்சனம் ; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time