இந்திய சமூகத்தில் 90 லட்சம் அடிமைகள் இருந்துள்ளனர்..!

த. நீதிராஜன்

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது.

சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற சில பிரிவினர் மற்றவர்கள் பார்வையிலேயே படக்கூடாது. அதனால் இரவில் மட்டுமே நடமாட வேண்டும். சில பிரிவினர் மற்ற பிரிவு மனிதர்களின் அருகிலேயே வரக்கூடாது.

பஞ்சமர்களின் இன்றைய வாரிசுகளே தலித்துகள். அத்தகைய பாராமை, அணுகாமை கொடுமைகள் தற்போது நீர்த்துப் போய்விட்டன. தீண்டாமை மிஞ்சி நிற்கிறது. அதை ஒழிக்க முயன்றால் வன்கொடுமை பேயாட்டம் போடுகிறது.

தலித்துகள் வரலாற்றின் எல்லா காலகட்டத்திலும் அடிமைத்தனத்தில்  அழுந்திக்கிடக்கவில்லை. சில   கால கட்டங்களில் அவர்கள் புகழ்மிக்க முறையில் வாழ்ந்ததாக ஆய்வுகள் உள்ளன. உதாரணமாக, களப்பிரர் காலம் சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு முன்பிருந்தே விவசாய வரிவருவாய்தான் அரசின் முக்கிய வருமானம். பெரும்பாலும் இன்றைய தலித் மக்களுடைய முன்னோர்களின் உழைப்பின் மூலம் செழித்த விவசாய பலன்களை பறித்துதான் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் வாழ்ந்தன. அதனால்தான் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கலெக்டர்கள் -(வரி வசூலிப்பவர்கள்) – எனப் பெயர் வந்தது.

1830ல் சேலம் மாவட்ட கலெக்டருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ‘‘திருச்சி மாவட்டத்தில் இருந்து பத்து கொத்தடிமைகள் தப்பித்து சேலம் மாவட்டத்துக்குள்ளே வந்துள்ளார்கள். அவர்களது எஜமான் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார். விவசாயம் நின்றால் அரசின் வருவாய் பாதிக்கப்படும். எனவே அவர்களை பிடித்து இங்கே அனுப்பவும்” என்று அதில் இருக்கிறது. அடிமைப்படுத்தல் என்பது அப்போது அரசாங்க அளவிலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

THE LAW AND CUSTOM OF SLAVERY IN BRITISH INDIA எனும் நூலை வில்லியம் ஆதாம் என்பவர் 1840-ல் வெளியிட்டுள்ளார். 15 வகையான இந்திய அடிமைகளை அவர் பட்டியலிடுகிறார். மாவட்ட கலெக்டர்களின் அறிவிப்புகளை தொகுத்து அவர் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 90 லட்சம் அடிமைகள் இருந்ததாக ஒரு முடிவுக்கு வருகிறார்.

இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் அடிமை முறை முடிவுக்கு வந்ததன் தொடர்ச்சியாக  இந்திய அடிமை முறை ஒழிப்புச்சட்டத்தை கிழக்கிந்திய கம்பெனி 1843 – ஏப்ரல் 7 அன்று அறிவித்தது.  அந்த சட்டத்தின்படி  நிலத்தை விற்கும்போது நிலத்தில் அடிமைகளாக உள்ள தலித்துகளுக்கும் விலை வைத்து விற்பது  இனி சட்ட விரோதம் என்ற நிலை ஏற்பட்டது.  மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் குற்றவியல் சட்டம் முன்னாள் அடிமைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அடிமை எனது சொத்து. அவரைக்கொல்வது எனது உரிமை என்ற நிலை முடிவுக்கு வந்தது. இந்த அடிமை  முறைமை ஒழிப்பு அறிவிப்பு இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு திருவிழாவே.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தலித் மக்கள் நிலை பற்றிய விவாதம் விரிவடைந்தது. இங்கிலாந்தில் இருந்து 1928- ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தது. தலித் மக்கள் மீது அன்றைய தமிழகம்  உள்ளிட்டு பல இடங்களில் நடத்தப்பட்ட வன்கொடுமைகளை பற்றி டாக்டர் அம்பேத்கர் சைமன் கமிஷனிடம் மனு அளித்தார்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆணையர் ஜே.எச்.ஹட்டன் 1931 – ல் ஒன்பது வரையறைகளை வைத்து  தீண்டத்தகாத சாதிகளை பட்டியலிட்டார். இங்கிலாந்து அரசாங்கம் உருவாக்கிய இந்திய சட்டம் 1935 – ல் தான் பட்டியல் சாதியினர் என்ற சொல் முதலில் இருந்தது.

சுதந்திர இந்தியாவில் தலித்துகள் 1,108 சாதிகளாக இருந்தனர்.2011- ல் 1208 சாதிகளாக அதிகரித்துள்ளனர். 577 பழங்குடி இனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன என்கிறது இன்னொரு பட்டியல். தலித்துகளும் பழங்குடிகளும் இணைந்தால் இந்திய மக்களில் கால்வாசிப்பேருக்கும் மேல். இந்த வரையறைகளும் எண்ணிக்கையும் துல்லியமானதல்ல.குற்றப் பரம்பரை இனக்குழுக்களாக ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்ட 198 இனக் குழுக்களில் பல இன்னமும் நலிந்த நிலையில் திரிசங்கு நரகத்தில் உள்ளன.

சுதந்திர இந்தியாவில் தலித் – பழங்குடி மக்களை மனதில் கொண்டுதான் 1955- ம் ஆண்டில் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.  அதனை நடைமுறைப்படுத்துவற்கான விதிகளை உருவாக்க 20 ஆண்டுகள் ஆகின.  1977- ல் தான் விதிகள்  உருவாகின என்பது அதன் அமலாக்கத்தின் தன்மையை காட்டுகிறது.

சுதந்திர இந்தியா தந்த உற்சாகத்தால் தலித்துகள் நிமிர முயன்றபோது அவர்கள் மீது  1957ல் தமிழகத்தில்  நடந்த முதுகுளத்தூர் படுகொலைகள் போல வன்கொடுமைத் தாக்குதல்கள் நாடு முழுவதும் நடந்தன. தலித் மக்களின் மேம்பாட்டுக்காக எல்.இளையபெருமாள்  தலைமையில் 1965- ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி 1969- ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. அது வெளியிடப்படவே இல்லை.

வன்கொடுமைகளை தனியாக கண்காணிக்க அமைப்புகளை உருவாக்கும் நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது. தலித் மக்கள் மீதான கொலை, பாலியல் பலாத்காரம், தீவைப்பு, படுகாயம் ஆகியவற்றை  கண்காணிக்க்கும் அமைப்பு 1974- ல் தொடங்கப்பட்டது. இதே நோக்கத்தோடு பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்கும் அமைப்பு 1981- ல் தொடங்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில்தான் வன்கொடுமைகள் புரிந்தோரை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை கண்காணிப்பது என்ற விவாதம் நடந்துள்ளது. ஏதோ ஒரு சிலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்  வன்கொடுமைகளை மட்டுமே கணக்கில் கொண்ட ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்காளானது அரசு.

வன்கொடுமைகளை மட்டுமே தண்டிக்கும் வகையிலான ஒரு தனியான சட்டமாக 1989- ல் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் [வன்கொடுமைகள் தடுப்பு] சட்டம்  உருவானது. அது கருவிலேயே பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. அது கள்ளிப்பாலுக்கும் தப்பி பிழைத்த வீராங்கனை.

அந்த தடுப்பு சட்டம்தான் வன்கொடுமை என்றால் என்ன என்பதை முதன்முதலாக வரையறை செய்தது. ஆறாண்டுகளாக தயார் செய்து 1995- ல் அதற்கு விதிகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிகளால்தான் கொஞ்சமாக அரசு நிர்வாகம் அசைந்து கொடுத்தது.

அந்த சட்டத்தை உருவாக்கிய சிற்பியாக பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளார். அவர் வன்கொடுமைகளை நவீன சமூகத்தின் வெளிப்பாடுகள் என்கிறார்.

ஒரு வருடத்தின் குறிப்பிட்ட  பருவகாலப்பகுதியில் அதிகமான உழைப்பு விவசாயத்திற்கு தேவைப்படும். அந்த கணக்கில்  உழைப்பாளர் கூட்டத்தை சேமிப்பு பட்டாளமாக, வைத்திருக்க வேண்டிய தேவையை இந்திய விவசாயத்தின் சூழ்நிலைமைகள் ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்திய சாதிமுறையின் வடிவத்துக்கும், நோக்கத்துக்கும் இந்த சூழ்நிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

 

தீண்டப்படாத சாதிகளை அப்படியே அந்த நிலையிலேயே வைத்திருப்பதை இந்திய சாதி அமைப்பு முறை உறுதி செய்கிறது. இத்தகைய நோக்கத்துக்காக கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு செயல்பாட்டு அமைப்பாக சாதி அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

சாதி அமைப்புமுறை எவ்வாறு இருக்கிறது என்று அவர் விளக்கும் போது,

#  சாதிமுறை தீண்டாமை எனும் பட்டியல் சாதியினருக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக கடும் பாதிப்பை உருவாக்கி இன்று வரை தொடர்கிறது.

#  விவசாயத்துக்கும் இன்ன பிற வேலைகளுக்குமான உழைப்பை பெறுவதற்காக, அடிநிலை சாதிகளை கட்டாயப்படுத்தி, கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் கருவியாக, தீண்டாமையுடன் கூடிய சாதி முறை பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறது.

#  சாதிமுறையை ஒழுங்குப்படுத்துகிற கருவியான தீண்டாமையும், அதன் திறனும்  பலவீனமடைந்துள்ள இந்த நவீன காலப் பின்னணியில் சாதிமுறையின் தத்துவத்தையும், அதன் உளவியலையும் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கிறபோது ,வன்கொடுமைகள் எனும் ஆயுதம் கையில் எடுக்கப்படுகிறது.

கடந்த 150 ஆண்டுகளாக சீர்திருத்த வாதிகள், தேசியவாதிகள், புரட்சிகர இயக்கங்கள் மற்றும் அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் தலித்துகளிடம்  விழிப்புணர்வை படிப்படியாக ஏற்படுத்தி உள்ளன. இந்த தாக்கத்தின் காரணமாக, இந்திய சாதி அமைப்பு முறையில் தங்களுக்கான இடத்தை ஏற்க தலித்துகள் மறுக்கின்றனர்.

இந்த பிரச்சனைக்கு வர்க்க பரிணாமம் உண்டு.  பாதிக்கப்பட்ட குத்தகை விவசாயிகளுக்காகவும், விவசாய கூலிகளுக்காகவும் நிலச்சீர்திருத்த இயக்கத்தினால் நடந்த, தெலுங்கானா, புன்னப்புரா வயலார் தெபாகா இயக்கங்கள், தஞ்சாவூர் போன்ற இடங்களில் நடந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

உயர் சாதிகளில் இருந்தும், சமீப காலமாக, சொந்தநிலம் வைத்துள்ள இடைச்சாதிகளில் இருந்தும்  உருவான ஆதிக்க வர்க்கங்களுக்கு தலித்துகள் மீதான தங்களது கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படித்தான் வன்கொடுமைகள் என்பவை 1950களில் விரிவான முறையில் முதன் முதலாக தோன்றின. இதை தலித்துகள் எதிர்த்த போது வெறித்தனமான வன்கொடுமைகள் வேகம் பெற்றன’’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலான அனுபவம் பற்றிய  ஒரு ஆவணத்தின் படி,

1995 முதல் 2010 வரையிலான 15 ஆண்டு கால கட்டத்தில் ஏறத்தாழ இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் வன்கொடுமைகள் நடந்துள்ளன.

1995 லிருந்து 2010 காலகட்டத்தில் அகில இந்திய அளவில் காவல் நிலையத்தில் தலித்துகள் 4,71,717 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பழங்குடி மக்கள் 86,386 வழக்குகளை கொடுத்துள்ளனர். வன்கொடுமை வழக்குகள் காவல்நிலையங்களில் வந்து பதிவு செய்யப்படுவது என்பதே பெரிய விசயம். இப்படி வந்து பதிந்தவைதான் மேலே சொன்னதன் மொத்த எண்ணிக்கையான 5,58,103 வழக்குகள்.

அப்படி காவல்நிலையத்தில் வந்து பதிவாகிற வழக்குகள் எல்லாமே வன்கொடுமை சட்டத்தில் போடப்பட்டு விடுவதில்லை. உதாரணமாக, 2010 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் 34,127 வன்கொடுமை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11,682 தான் வன்கொடுமை சட்டத்தில் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 34.2% ஆகும்.

வன்கொடுமைகள் செய்தவர்கள் நீதிமன்ற தண்டனை பெறுவது என்பது  மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது, அது  0.5 சதவீதத்தில் இருந்து 8 `சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் 5.2% பேரே தண்டனை பெறுகின்றனர்.

அவற்றில் வாச்சாத்தி வன்கொடுமைகளை எதிர்த்து போராடிய பழங்குடி மக்களுக்கு தலைமையேற்று இருபதாண்டு காலம் விடாப்பிடியாக போராடி மார்க்சிஸ்ட் கட்சியும், மலை வாழ்மக்கள் சங்கமும் பெற்று தந்த நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால், பொதுவாக குற்றஞ்சாட்டப்பட்டவர் தப்பித்துவிடுகிற சூழல்தான் இன்னமும் நீடிக்கிறது. எனவே, இந்த சட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற முழக்கமும் முயற்சியும் இன்று நாட்டில் காணப்படுகிறது.

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989ன் பிரிவு 14ன் கீழ், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தின் வடக்கு, வடமேற்கு, மேற்கு மாவட்டங்களில் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆனால், அங்கெல்லாம் சிறப்பு நீதிமன்றங்களோ, சிறப்பு காவல் நிலையங்களோ அமைக்கப்படவில்லை.

இந்த பின்னணியில் பத்திரிகையாளர் விஸ்வநாதனின் கட்டுரைகள்  சாதி சமூகத்தின் செயல்பாட்டையும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையையும் நம்முன்னே படம்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

கட்டுரையாளர்; த.நீதிராஜன் (பத்திரிகையாளர்,பதிப்பாளர்)

‘தலித் மக்கள் மீதான வன்முறை’ – ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்தி கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் எஸ்.விஸ்வநாதன் எழுதியுள்ளதை தமிழாக்கம் செய்து, த.நீதிராஜன் எழுதிய மொழிபெயர்ப்பாளர் முன்னுரையே மேற்படி கட்டுரையாகும்!

சவுத் விஷன் புக்ஸ்

சென்னை-600091

9445318520

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time