பாஜகவின் துவேஷ அரசியலுக்கு ‘செக்’ வைத்த திமுக!

-சாவித்திரி கண்ணன்

காலமாற்றங்கள் சில அரசியல் அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்! தன் அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாமல் திமுகவு இந்து மதம்,கோவில்கள், பக்தி தொடர்பான தன் கடந்த காலத் தோற்றங்களை மாற்றிக் கொண்டு வருகிறது! பாஜகவும், ‘பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை மறுதலித்து, தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது’ என்ற யதார்த்தத்தை உணரத் தொடங்கியுள்ளது..! இந்த மாற்றங்கள் எப்படி சாத்தியமாயின..?

சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  சமூக நீதி தினத்திற்கான அறிவிப்பு அசத்தலானது. துணிச்சலானது. ஏனென்றால்,பெரியாரை ஜென்மப் பகையாகக் கருதும் ஒரு ஆட்சி வலிமையாக மத்தியில் அமைந்திருக்கும் போது, இது போன்ற ஒரு அறிவிப்பை இவ்வளவு விலாவாரியாக, அதுவும் ஒளிவுமறைவற்ற வகையில் உள்ளம் திறந்து, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய பாங்கு சிலிர்க்க வைக்கிறது!

முதல்வர் ஸ்டாலின் பேசியதின் சாராம்சத்தை இங்கே அப்படியே தந்துவிட்டு இந்த விவகாரத்தை அலச நினைக்கிறேன்;

அண்ணாவும், கலைஞரும் உருவான குருகுலம் பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துகளைத் தமிழகத்தில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றுகிறது. இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும்.

அவரால் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழகமே சாட்சி. இந்த விதை பெரியார் போட்ட விதை; அறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார்;  கலைஞர் வளர்த்தார். அதனை மாபெரும் விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.

‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் அதற்காகவே செயல்பட்டார்! அவர் நடத்திய போராட்டங்கள், எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள், இன்னொருவரால் முடியாததாகும்! தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்; தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை,  சுற்றுப்பயணங்கள், மாநாடுகள், போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த அவையையே பத்து நாட்களுக்கு ஒத்திவைத்துப் பேச வேண்டும்.

‘மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்’ – இவை இரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன.

அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூக நீதிக் கதவைத் திறந்து வைத்தது! தமிழகத்துக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.

நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த அவையில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது!

இந்த உணர்வை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள், ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடப்படும். பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்!

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!’

என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.

பெரியார் மறைந்தபோது, ‘பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்’ என்றார் கலைஞர். எனவே, நாம் தொடர்வோம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தன் மூலம் காங்கிரஸ் தலைவர் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும், பாஜக கொண்டாடும்  வல்லபாய் பட்டேலின் தினம் ஒற்றுமை தினமாகவும், ராஜிவ்காந்தி இறந்த தினம் பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும் கொண்டாடப்படுவது போல பெரியாரை சமூக நீதிக்கானவராக நிரந்தரமாக அடையாளப்படுத்திவிட்டார். இதை ஒரு போதும் இனி யாராலும் மாற்ற முடியாது!

பெரியாரைப் பற்றி மிக இழிவான பிம்பங்களை உருவாக்க முயன்ற ஆதிக்க சாதியினரின் கட்சியான பாஜகவின் சட்டமன்றத் தலைவரே இன்று இந்த அறிவிப்பை வரவேற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் என்றால், அது தான் பெரியாரின் உண்மையான சாதனை! நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமல்ல, அரசியலுக்காக பாஜகவில் இருக்கும் பலருக்கும் தெரியும், இந்த தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக பெரியார் செய்துள்ள சேவைகளால் தான் அவர்களுக்கான இந்த முன்னேற்றமும், வாய்ப்புகளும் சாத்தியமாகியுள்ளன என்று!

ஆகவே, பெரியார் வெறுப்பு அரசியலையும், திராவிட இயக்க வெறுப்பு அரசியலையும் முற்றிலும் ஒதுக்கி வைத்தால் தான், இங்கே தமிழகத்தில் பாஜகவே அரசியல் செய்ய முடியும் என்ற புரிதலுக்கு காலம் கடந்தாவது அவர்கள் வந்துள்ளார்கள் என்பதும் நல்லது தான்!

பாஜகவைப் போலவே திமுகவிலும் சில உள்ளீடான மாற்றங்கள் நடந்தேறி வருகின்றன! அது தான், ”இந்து மதத்திற்கோ, அதன் பக்தர்களுக்கோ எதிரான கட்சியல்ல திமுக”என நிருபிக்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டுள்ளது! கடந்த காலங்களில் கலைஞர் வாய் தவறி சில நேரங்களில் பேசியது போல பேசிவிடாமல், மிகுந்த பக்குவத்துடன் ஸ்டாலின் இந்து மதவிவகாரங்களை கையாள்கிறார். அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை தமிழக பாஜகவால் எதிர்க்க முடியாமல் போனது. அப்படி எதிர்த்திருந்தால் அது பிராமணர்களுக்கான கட்சி என்ற முத்திரை அதன் மீது ஆழமாக விழுந்திருக்கும்! அதன்பிறகு அனைத்து சாதியினராலும் கைகழுவப்பட்ட கட்சியாகி இருக்கும். ஆக, பாஜகவே பெரியாரின் நோக்கத்தை ஏற்க வேண்டிய சூழலை உருவாக்கியதில் ஸ்டாலினின் பக்குவமிக்க அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

திமுகவிடம் ஏற்பட்டுள்ள இன்னுமொரு வரலாற்று திருப்பம் உள்ள மாற்றம் என்னவென்றால், இது வரையிலான எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இந்து அற நிலையத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கோயில்கள் சீரமைப்பு, கவனிப்பாரற்ற கோயில்களில் பூஜை, அர்சகர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் ஆகியவற்றை வழங்கி வருவதோடு, கோவில் சொத்துகளை மீட்பதில் சமரசமற்று இயங்கி வருவதாகும். இதில் அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பதையும் உணரமுடிகிறது!

இதன் மூலம் இனி இந்து மதத்தின் எதிரியாக திமுகவை சித்தரித்த பாஜகவின் அரசியல் வியூகம் அர்த்தமற்றதாக்கப்பட்டது என்பது கூட முக்கியமல்ல, இந்துக்களை மத வெறியர்களாக்கும் அதன் கெடு நோக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகும்! அதே நேரத்தில் இந்து மதம் தொடர்பான அதீத ஈடுபாட்டில் காலப்போக்கில் திமுக கரைந்துவிடாமல் தன்னை தற்காத்துக் கொள்வது ஒரு சவாலாகிவிடக் கூடும்!

வாழ்க சமூக நல்லிணக்கம்!  பாஜக இனிமேலாவது மத நோக்கங்களை மட்டுமே கையில் எடுத்து போராடாமல் மக்கள் நலனுக்கு பாடுபட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதும் நல்லது தானே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time