அமெரிக்க அரசியலும், இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்றும்!

- ச.அருணாச்சலம்

உள் நாட்டு தேசபக்த குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததே அன்றும், இன்றுமாக ஆப்கானில் தொடர்ந்து அந்நியத் தலையீடுகளுக்கு வழிவகுக்கிறது…!

பல்லாண்டு காலம் தனக்கு அரசியல் கூட்டாளியாக இருந்த தாலிபான்களை, நெஞ்சார்ந்த நண்பனாகப் பாவித்த தலிபான்களை அமெரிக்கா 2001ம் ஆண்டு குண்டுவீசி தாக்கி படையெடுத்து, ஆப்கனை ஆக்கிரமித்து,  தாலிபன் ஆட்சியை ஏன் அகற்றியது?

மதரசா பள்ளியில் பயின்ற மாணவர்களாக  அரசியல் பயணத்தை துவக்கிய தலிபான்கள் கறுப்பு வண்ணம் தரித்தவர்களாக, “ஷரியா ” சட்டத்தை அமுலாக்குவதில் கடுமையானவர்களாக, பெண்களை அடக்கி ஒடுக்குவதில் உச்சமாக விளங்கினார்கள். ஆனால்,அவர்கள் ஆப்கான் மண்ணைத் தீவிரமாக நேசித்தார்கள்!

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு தலிபான்கள் காரணமில்லை.

2001ம் ஆண்டு செபடம்பர் மாதம் 11ம் நாள் அமெரிக்க விமானங்களை கடத்தி,  நியூயார்க் மாநகரில் வானளாவ நெடிதுயர்ந்து நின்ற உலக வர்த்தக நிறுவனம் அமைந்துள்ள இரட்டை கோபுரங்களை விமானங்கள் மூலம் மோதி தகர்த்தனர் அல் கொய்தா அமைப்பினர். நம்ப முடியாத, இந்த பயங்கரத்தை தொலைக்காட்சிகளில் கண்ட அமெரிக்க மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

ஆப்கானிஸ்தான் இத்தாக்குதலை நடத்தவுமில்லை, திட்டமிடவுமில்லை, சதி செய்யவுமில்லை, அதற்காக பயிற்சியும் செய்யவில்லை, பணமும் செலவழிக்கவில்லை! அவர்களுக்கும் 9/11 தாக்குதலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் அப்போது ஒசாமா பின் லேடன் இருந்தது உண்மை! ஒரு பயிற்சி முகாமை நடத்தியதும் உண்மை. ஆனால், தெளிவான திட்டமிடலும், துல்லியமான தயாரிப்பும், மிகச்சிறந்த தொழில் நுட்பமும்  நிரம்பப் பெற்ற இத்தாக்குதல் நடவடிக்கை பெரும் பொருட் செலவழித்தும், சமயோஜிதமாகவும் கடுமையான பயிற்சி பெற்றும் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் தலிபான்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதே உண்மை. இது வேறு ரகம்! உயர்ந்த தொழில்நுட்பம்! திறன் வாய்ந்த செயலாக்கம்!!

இச்சதி முழுவதும் பாகிஸ்தானிலும், ஜெர்மனியிலும் பின்னவலையாக தீட்டப்பட்டு அல் கொய்தாவைச்சார்ந்த காலீதுஷேக் முகம்மது என்பவரால் முன்னின்று நடத்தப்பட்டது. இதே  கருத்தை தான் 9/11  குறித்து ஆராய்ந்த அமெரிக்க விசாரணைக்கமிஷனும் தனது அறிக்கையில் கூறுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் தனது அறிக்கையில்  ” ஜெர்மனியில் உள்ள சதிகாரர்களில் ஒருவனான ஜக்காரியா எஸ்ஸாபர் என்பவன் தான் தகவல்களை பின் லேடனுக்கும் மற்றவர்கட்குபரிமாறும் “கூரியர்” வேலை செய்தான் ” என்று குறிப்பிட்டுள்ளது. இவனே , தாக்குதல் தேதியை ஜெர்மனியிலிருந்து ஆப்கானிஸ்தான் பறந்து சென்று பின் லேடனுக்கு தெரிவித்தான் என்று மேலும் குறிப்பிடுகிறது. இந்த மோசமான தாக்குதலுக்கு ஆப்கானிய தலிபான் அரசு ஒரு டாலர் கூட செலவழிக்கவில்லை என்பது அமெரிக்க சி ஐ ஏ வுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.

ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா , புளோரிடா மாகாணம் பறந்து சென்ற சதிகாரர்கள் அங்கு தங்கி , தங்களது கடைசி கட்ட நடவடிக்கைகளை துல்லியமாக திட்டமிடுகின்றனர்.

முகம்மது அடா தலைமையில் அவர்கள் விமானி (பைலட்) பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர்; தேர்ச்சி பெற்று , விமானம் ஓட்ட லைசன்சும் பெறுகின்றனர்! சதிச்செயலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 19 நபர்களில் 15 பேர் சவூதி அரேபியர்,2 பேர்யுஏஇ (துபாய்) யைச்சேர்ந்தவர்களாவர். ஒருவர் எகிப்து நாட்டவர், மற்றொருவர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவராவார்.  ஒருவர் கூட ஆப்கானியர்கள் இல்லை!!சதிச்செயலுக்கு தேவைப்பட்ட பணத்தை  ஒசாமா பின் லேடன் தன்னுடைய சொந்தநிதியில் இருந்தும் ரீகன் காலத்தில் (சோவியத்துக்கு எதிராக ஆட்களை திரட்டவும், போரிடவும் ) அமெரிக்கா கொடுத்த நிதியிலிருந்தும் எடுத்துக்  கொடுத்தார்!

அமெரிக்க ஆட்சியாளர்களால் பாலூட்டி வளர்க்கப்பட்ட ஒசாமா  பின் லேடன் அமெரிக்கா மீது ஏன் பாய வேண்டும்?

முஸ்லீம் பழமைவாதத்தையும், பயங்கரவாத்த்தையும் தூண்டி தன்னுடைய அரசியல் நோக்கத்தை – சோவியத் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளை தனிமைப்படுத்தி நிர்மூலமாக்கும் நோக்கத்தை- நிறைவேற்றி கொண்டது அமெரிக்கா. அதற்காக சவூதி அராபியாவின் சன்னி வஹாபிஸத்தையும் தட்டிக்கொடுத்து வளர்த்தது.

அமெரிக்காவினால் ஊட்டம் பெற்ற தீவிரவாதம் நாளடைவில் 1988ல்’ அல் கொய்தா’ ( the Base or Foundation என்பது பொருள் )   என்ற சர்வதேச தீவிரவாத அமைப்பாக உருப்பெற்றது.

ஒசாமா பின் லேடன் மற்றும் அப்துல்லா அஜாம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம் இளைஞர்களை , இஸ்லாமிய நிலப்பரப்பையும் , மதத்தையும் காப்பாற்றும் புனிதப்போரில் பங்கெடுக்க, அறைகூவல் விட்டு அழைத்தது.

இதனூடே அமெரிக்க அதிபர் G H W புஷ் ( இவர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை) ஈராக் (குவைத்) போரில் மூக்கை நுழைக்க அமெரிக்க படைகளை அனுப்பினார். அப்படைகள் சவூதி அரேபியாவில் அதிக நாட்கள் தங்கியிருந்தனர் . அவர்கள் அடித்த கூத்தும், கும்மாளமும், குடியும், குடித்தனமும் ஒசாமாவை வெகு ஆழமாக பாதித்தது.

அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பத்திரிக்கையான ‘ தி கார்டியன்’ க்கு, ஒசாமா பின் லேடன் அளித்த பேட்டியில், ” நாங்கள் ஆண் மக்கள், இப்பிரபஞ்சத்தில் அமைந்த மேன்மையான இஸ்லாம் வீட்டை பாதுகாக்கத்துணிந்த முஸ்லீம்மக்கள், புனித காஃபாவை நாங்கள் எங்களது உயிரைக் கொடுத்தாவது பாதுகாப்போம். இஸ்லாமிய நிலப்பரப்பை நாசகாரர்களிடமிருந்து விடுவிப்போம்” என்று கூறினார்.

9/11 தாக்குதல் நடக்க சில மாதங்கள் முன்பு அமெரிக்க நாட்டு மக்களுக்கு அனுப்பிய பகிரங்க கடிதத்தில்  பின் வருமாறு குறிப்பிட்டார்.

“உங்களுடைய படைகள் எங்கள் நாடுகளை ஆக்கிரமித்தள்ளன, எமது நாடுகள் நெடுகிலும் உங்களது ராணுவ தளங்களை நிறுவியுள்ளீர்கள்; எங்கள் பூமியை நீங்கள் மாசு படுத்துகிறீர்கள் , எங்கள்  புனிதத்தை கெடுக்கிறீர்கள், இதெல்லாம் யூதர்களை பாதுகாக்க நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள்..”

அமெரிக்காவை தாக்குவதற்கு காரணமே மேற்கூறிய அமெரிக்க நடவடிக்கைகள்தான் என திரும்பத்திரும்ப ஒசாமா பின் லேடன் கூறியுள்ளார்.

ஒசாமா தாக்க்கூடும் என்ற புரிதல் அனைத்து அமெரிக்க தலைவர்களுக்கும்- பில் கிளின்டன், அல்  கோர், ஜார்ஜ் புஷ்,  டிக் செனே மற்றும் கனடலீசா ரைஸ் போன்ற தலைவர்களுக்கு இருந்தாலும் அதை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஏதும் செய்யாத அமெரிக்க தலைமைகளை என்ன சொல்வது? அமெரிக்க உளவு நிறுவனங்களின் தோல்வியையும்,செய்த குளறுபடியையும் என்னவென்பது என்று அங்கலாய்க்கிறார் ‘தாம் ஹார்ட்மான்” (Thom Hartmann)  என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர்.

அடாவடித்தனமான 9/11 தாக்குதல் அமெரிக்காவின் மூக்கை உடைத்து, உலகில் பெருந்தலைக்குனிவை அவமானத்தை அமெரிகாவிற்கு ஏற்படுத்தியது.

கோபத்தில் முகஞ்சிவந்த அமெரிக்க அரசு பழி வாங்க துடித்தது!

சதித்திட்டம் தீட்டப்பட்ட இடமான ஜெர்மனியை தாக்க முடியுமா அல்லது புளோரிடா மாகாணத்தை நொறுக்க முடியுமா? சரி பாகிஸ்தானைத் தான் பதம் பார்க்க முடியுமா?

அல்லது நிதி கொடுத்துதவிய சவூதி அரேபியாவை தாக்க முடிந்ததா?

செப்டம்பர் மாதம் 2001ல் நடந்த இத்தாக்குதல்  நடக்கவிருக்கும் 2004 தேர்தலில் ஜார்ஜ் புஷ் மற்றும் டிக் செனே இணைக்கு மேலும் பல சிக்கல்களை உருவாக்கியது. ஏற்கனவே 2000 தேர்தலில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் உதவியால் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷிற்கு 2004 தேர்தலிலாவது அதிக வாக்குகள் பெற்று நேர்மையாக பதவியில் அமர வேண்டும் என்று எண்ணம் இருந்தது.

இந்த தாக்குதல் தன்னுடைய ஆட்சியையே கேலிப்பொருளாக ஆக்கிவிட்டது கண்டு பொறுமினார். தாக்குதல் நடத்துவதன் மூலமே, அமெரிக்க மக்களின் கோபத்தை தணிக்க இயலும், தனது மறு தேர்தல் கனவும் பலிக்கும்  என்ற கணக்கு போட்ட புஷ் , ஆப்கான் தான் காரணம் என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார். பயங்கரவாதம் மீதான போர்  ஆப்கானிஸ்தானத்தின் மீது தொடுக்கப்பட்டது.

அப்பொழுது  உலகிலேயே இரண்டாவது ஏழை நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது.

தனிநபர்  வருமானமோ 2 டாலருக்கும் குறைவாக இருந்தது.

செயலற்ற ராணுவத்தை கொண்ட ஆப்கானிஸ்தான், நாடுமுழுவதும் ஆளுமையில்லாத தலிபான் அரசு  ‘இப்படி ஊருக்கு இழைத்த ஆண்டியாக’ இருந்த ஆப்கானிஸ்தான் உலகின் பராக்கிரமம் வாய்ந்த அமெரிக்க படைகளால் தாக்கப்பட்டது விந்தையா அல்லது அவலமா?

இந்தயுத்தத்தின் மூன்றாவது நாளே “ஒசாமா பின் லேடனை பிடித்து நாங்கள் ஒப்படைக்கிறோம் ” என்று பகிரங்கமாக அறிவித்தனர் தலிபான் ஆட்சியாளர்கள். ஆனால் அதை நிராகரித்தது புஷ் அரசாங்கம். இதை 2001 அக்டோபர் மாதம் 15ந்தேதியிட்ட” வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிக்கை ” Bush rejects Taliban Offer on Bin Laden”  என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது.

புஷ்ஷுக்கும், டிக்செனவுக்கும் தேவைப்பட்டதெல்லாம் அமெரிக்க படைவலிமையை பறைசாற்றும் ஒரு பழிவாங்கும் யுத்தம் மட்டுமே. பிரச்சினைக்கு தீர்வல்ல! திருப்பியடிக்க திராணியற்றவன்மீதான யுத்தத்தில் பலியானது அப்பாவி பொது மக்களே அன்றி பின் லேடனல்ல. ஆனால் 2004ல் புஷ் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் என்பது வரலாறு.

மூன்று வார குண்டு வீச்சு மற்றும் யுத்த முடிவில் தாலிபான்வீழ்ந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கியது. ஆம் அடுத்த இருபது ஆண்டுகளாக தொடரப்போகும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அன்று தொடங்கியது!

இன்று பத்திரிக்கைகளில் முன்னிறுத்தப்படும் செய்திகளும் கேட்கப்படும் கேள்விகளும் நாம், இன்னும்   பாடங்களை சரியாக கற்றுக் கொள்ளவில்லையோ என எண்ணத்தூண்டுகிறது.

ஏனெனில், நாம் இப்பொழுதும் கேட்கிற கேள்வி ‘ அமெரிக்கா வெளியேறுவதால் ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிடாதா?’ என்பதுதானே!

இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியல்லவா? 20 ஆண்டுகளாக ஆப்கானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா என்ன செய்தது இதுநாள்வரை?

ஜனநாயகம் வேறூன்ற ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? அம்மக்கள வாழ்க்கைதரம் உயர வளர்ச்சி திட்டங்கள் ஏதும் தீட்டி நிறைவேற்றினரா?

நாட்டின் உள்கட்டமைப்பும், திறமையான, மக்கள் நலன் சார்ந்த ராணுவத்தையும் பேணி வளர்த்தனரா? ஜனநாயக அமைப்புகளையும், உரிமைகளையும் ஆப்கன் மக்களுக்கு கண்ணிலாவது காட்டினார்களா?

மக்கள், சமூகம் மற்றும் நாடு இம்மூன்றின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் ஏதும் செய்யாத அமெரிக்கா இன்னும் எத்துனை ஆண்டுகள் அங்கு இருக்க முடியும்?

எத்தனை “நன்மைகள்” செய்தாலும் அந்நியர் ஆளுவது என்ன நீதி? என்று கேட்க தோன்றவில்லையா? உலகெங்கிலும் நடக்கும் அந்நிய ஆக்கிரமிப்புகளும், உரிமை மறுப்புமே பிரச்சினையின் ஆணிவேர்களாகும் .

உலகில் அமைதியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் தான் நமது இலக்கு என்றால், அதை அடைய நமக்கு படைத்தளங்களும்,யுத்த விமானங்களும், ஆளில்லா விமானங்களும் தேவையில்லையே!

நாடுகளும் , மக்கள் சமூகங்களும் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பதே சாலச் சிறந்தது. தற்போதும் ஆப்கானில் உள் நாட்டு யுத்தம் உக்கிரமாக நடக்கிறது. பஞ்ச்ஷீர் மாகாணப் படைகளுடன் நீடித்த யுத்தம் நடந்து கொண்டுள்ளது. உள்ளுரில் உள்ள ஹக்கானி உள்ளிட்ட சிறுபான்மை போராளிக்குழுக்களின் பங்களிப்பை கொண்ட ஆட்சியா அல்லது சன்னி பஷ்தூன்கள் மட்டுமே கொண்ட ஆட்சியா? என தெரியவில்லை. தலிபான்கள் அனைவரையும் அரவணைத்து ஆட்சி அமைக்க தவறும்பட்சத்தில் அ நாவசியமான அந்நியத் தலையீடுகளுக்கு அவர்களே சிவப்பு கம்பளம் விரித்தது போல ஆகிவிடும்!

கட்டுரையாளர்;ச.அருணாச்சலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time